Jan 10, 2014

6 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை - About Time (2013) 18+


முந்தைய பகுதி
அடுத்த பகுதி

போன பகுதியில் சொல்லியிருந்தது போல இந்தப்பகுதியில் ஒரு பிரபலமான டைம் ட்ராவல் கதையைப்பற்றிப் பார்க்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சமீபத்தில் ஒரு டைம் ட்ராவல் படம் பார்த்திருந்ததால் அதைப்பற்றி முதலில் சொல்லிவிடலாம் என்றுதான் இந்தப்பதிவு. அடுத்த பகுதியில் அந்தக்கதை விரிவாக வரும். இந்தப்பகுதியில் நான் பார்த்த அந்த டைம் ட்ராவல் படம்.

படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு ஒரு சில விஷயங்களைப் பார்ப்போம். உங்களுக்கு நீங்கள் நினைத்தபோதெல்லாம் டைம் ட்ராவல் செய்து, இறந்தகாலத்துக்கு செல்லும் சக்தி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கண்ணை மூடிக்கொண்டு இரண்டு நாட்கள் பின்னே செல்ல வேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் உங்களால் டைம் ட்ராவல் செய்துவிட முடியும். அந்த மாதிரி ஒரு சக்தி இருக்கிறது என்றால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் ?

என்ன வேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம் இல்லையா ? நாம் எந்தத் தவறு செய்தாலும் அதைத் திருத்திக்கொள்ளலாம். வாழ்க்கையே நமது கையில் என்றாகிவிடும். நமக்கு பிடித்த மாதிரி நமது வாழ்க்கையை நாமே செதுக்கிக்கொள்ளலாம். ஆனால் இங்கேதான் ஒரு ட்விஸ்ட்டு இருக்கிறது. உங்களுக்கு இறந்தகாலத்துக்கு மட்டுமே செல்லும் வாய்ப்புண்டு. எதிர்காலத்துக்கு செல்ல முடியாது. அப்படியென்றால் சில பிரச்சனைகள் உருவாக வாய்ப்பிருக்குமில்லையா ?

இறந்தகாலத்துக்கு மட்டும் செல்ல முடிகிற டைம் ட்ராவல் சக்தியை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் ? உங்கள் காதலியை சந்தோஷப்படுத்தலாம். எப்படி ? உதாரணத்துக்கு, உங்கள் காதலிக்கோ அல்லது பெண் தோழிக்கோ பிறந்த நாள் வருகிறது. அவளுக்குப் பிறந்த நாள் பரிசு கொடுத்து அசத்தலாம் என்ற யோசனையில், ப்ளூ கலர் அவளுக்குப் பிடிக்குமே என்று அலைந்து திரிந்து அந்தக் கலரில் அட்டகாசமான சுடிதார் ஒன்றை எடுத்துக்கொடுக்கிறீர்கள். காஸ்ட்லியான அந்த சுடிதாரைப் பார்த்த உடனேயே, ஏதோ ஷேவிங் செட் வாங்கிப் பரிசளித்தது போல ஒரு பார்வையை வீசி, "இந்த கலர்ல ஏண்டா வாங்குனே.. எனக்கு பிங்க் தான் புடிக்கும்னு உனக்கு தெரியாதா" என்று கோவப்படுகிறாள். அடாடா இந்தச் சுடிதாரின் கலரால் எனக்கு கிடைக்க வேண்டிய அத்தனை முத்தங்களும் பாழாகி விட்டதே என்று ஃபீல் பண்ணுகிறீர்கள்.

உடனே என்ன செய்யலாம். இறந்தகாலத்துக்குப் பயணம் செய்து, ப்ளூ கலருக்குப் பதில் கண்ணைப் பறிக்கும் பிங்க் கலரில் ஒரு சுடிதாரை எடுத்து வந்து, காதலிக்குப் பரிசு கொடுத்து அவளை அசத்தலாம். அவளும், 'தனது மனதை அப்படியே புரிந்துவைத்திருக்கிறானே' என்று பரிதாபப்பட்டு உங்களுக்கு ஒன்றிரண்டு முத்தங்களை வீசி எறியலாம். அதைப் பொறுக்கிக்கொண்டு சந்தோஷப்படுவதும், அல்லது மேற்கொண்டு தொடர்ந்து முன்னேறுவதும் அவரவர்களின் திறமை.

நீங்கள் இறந்தகாலத்துக்கு சென்றிருக்கும்போது இறந்தகாலத்தில் என்ன வயதில் இருந்தீர்களோ அந்த வயதுக்கு நீங்கள் மாறிவிடுவீர்கள். அதாவது ஒரே ஒரு ஆள் தான் இருப்பீர்கள். உங்களுடையே வேறு ஒரு வெர்ஷன் என்று ஒன்று இருக்காது. நீங்கள் பிறந்த நாள் வரை மட்டுமே உங்களால் பின்னோக்கி பயணம் செய்ய முடியும். அதேபோல நீங்களாக நினைத்தால் ஒழிய உங்களை மரணம் நெருங்க முடியாது. 81 வயதில் தான் உங்களுக்கு சாவு என்றால் 80 வயது வரை வாழ்கிறீர்கள். அதற்குப் பிறகு இறந்தகாலத்துக்குப் பயணம் செய்து 1 வயதுக்கு வந்துவிட்டால் மீண்டும் 80 வருடங்கள் வரை வாழலாம். இப்படியே உங்களுக்குப் போரடிக்கும் வரை வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் ஒரே ஒரு சங்கடம் உங்களால் உங்களுடைய காலத்தை விட்டு வெளியே போக முடியாது. 1990-2070 வரை உங்களுடைய வாழ்க்கை என்றால் நீங்கள் அதற்குள் தான் வாழ முடியும்.

இந்த மாதிரி வேறு என்னவெல்லாம் செய்யலாம். நீங்கள் என்னைப்போல ரொமான்டிக்கான(!?) ஆளாக இல்லாமல் (கெட்ட வார்த்தையில் கமெண்டுகள் போடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை என்று இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்) கொஞ்சம் டெரரான ஆளாக இருந்தால், வேறு சில வேலைகளையும் பார்க்கலாம். உங்களுக்கு அனுஷ்கா என்றால் ரொம்பப் பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம். எப்படியோ அனுஷ்காவின் வீட்டை மோப்பம் பிடித்து அவள் வீட்டிற்கே சென்று விடுகிறீர்கள். அவள் அங்கே தனது அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறாள்.

நீங்கள் போனவுடனேயே செக்யூரிட்டி ஆட்களைக் கொன்றுவிட்டு வீட்டில் உள்ள மற்ற அனைவரையும் படுகொலை செய்கிறீர்கள். பிறகு அனுஷ்காவின் ரூமிற்குள் நுழைந்து அவளின் அனுமதி இல்லாமலே கதறக் கதற... அவளிடம் மொக்கை போடுகிறீர்கள். ஹப்பாடா அவளிடம் மொக்கை போட்டு அவளை அழ வைத்தாயிற்று என்ற சந்தோஷத்தில் கொஞ்ச நேரம் திளைக்கிறீர்கள். பிறகு உங்களுக்கே உங்கள் மேல் வெறுப்பு வந்தவுடன் திரும்பி நல்ல பிள்ளையாக இறந்த காலத்துக்குச் சென்று விடலாம். நீங்கள் அனுஷ்காவிடம் மொக்கை போட்டது யாருக்கும் தெரியாது. ஏன் அவளுக்கே தெரியாது. (யேய்.. யாருப்பா அது.. பேசிட்டே இருக்கறப்ப லேப்டாப்பை குத்தினது.. லேப்டாப் போச்சா.. மொக்கை போட்டதைத்தான் டெரர் வேலையா சொன்னேன். நீங்களா வேற ஏதும் நினைச்சிக்கிட்டா நான் என்னா பண்ண முடியும்)


இன்னும் ஏகப்பட்ட வேலைகள் செய்ய முடியும். அதையெல்லாம் உங்கள் கற்பனைக்கே விட்டுவிட்டு இப்போது படத்திற்குள் நுழைவோம். படத்தில் டைம் ட்ராவல் இருந்தாலும் அது கதை நகர்வதற்கு மட்டுமே உபயோகப்படுகிறது. மையக்கருத்து வேறு. மெதுவாகச் செல்லும் ஃபீல் குட் படங்களின் வரிசையில் வரக்கூடிய படம் இது. நம் ஊர் விக்ரமன் போல அந்த ஊருக்கு இயக்குனர் ரிச்சர்ட் கர்ட்டிஸ் (Richard Curtis). எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ரேஞ்சிற்கு பாடல்களும் இருக்கும். எப்போதுமே மெதுவாக நகரக்கூடிய, வில்லன்களே இல்லாத அமைதியான கதைக்களம் தான் இவரது பாணி. அதில் கொஞ்சம் கூட மாற்றமே இல்லாமல் வந்திருக்கும் படம் தான் இந்தப்படமும்.

டிம் - காதலிப்பதற்காக தனக்கேத்த பெண்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் 21 வயதுப்பையன். ஈரேழு உலகங்களில் தேடினாலும் கிடைக்காத நல்ல அம்மா-அப்பா. ஒரே ஒரு தங்கை என்று ஃபீல் குட் படங்களுக்கேயுரிய டிபிகல் அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம். பையன் கொஞ்சம் சுமார் மூஞ்சி குமாராக இருப்பதால் அவ்வளவு எளிதாக பொண்ணு செட்டாக மாட்டேன்கிறது. டிம்-க்கு 21 வயது பூர்த்தியடையும்போது அவனது அப்பா அவனிடம் ஒரு குடும்ப ரகசியத்தைக் கூறுகிறார். அதாவது அவரது குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு இறந்தகாலத்துக்கு பயணிக்கக்கூடிய சக்தி இருப்பதாகக் கூறுகிறார். ஒரு இருட்டான அறையினுள் சென்று கண்களையும், கைகளையும் மூடிக்கொண்டு செல்லவேண்டிய காலத்தை மனதில் நினைத்துக்கொண்டால் அங்கே சென்றுவிட முடியும் என்று கூறுகிறார்.

முதலில் அதை நம்ப மறுக்கும் டிம், பின்பு தானே ஒரு தடவை முயற்சி செய்து அது உண்மைதான் என்று தெரிந்தவுடன் அதிர்ச்சிக்குள்ளாகுகிறான். பிறகு அதை வைத்து தனக்கு ஒரு காதலியைத் தேட முயற்சி செய்கிறான். அந்த முயற்சியில் அவன் வெற்றி பெற்றானா ? அதே சக்தியால் அவனுக்கு என்னென்ன பிரச்சனைகள் வந்தது ? என்பதைப் படம் பார்த்து கதை சொல்.

டைம் ட்ராவலை மையப்படுத்தி ஒரு அழகான காதல் + ஃபீல்குட் படம் தர முயன்றிருக்கிறார்கள். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். படத்தைப் பாதி பார்த்துக்கொண்டிருக்கும் போதே எனக்கு வேறு இரண்டு படங்களும் ஞாபகத்துக்கு வந்தன. Midnight in Paris (2011), The Time Traveler's Wife (2009) இந்த இரண்டு படங்களும் கூட டைம் ட்ராவலை மையப்படுத்தி வந்த ரொமான்டிக் படங்கள் தான். இத்துடன் சேர்த்து எனக்கு மிகப்பிடித்த ரொமான்டிக் படமான  The Notebook (2004) படமும் ஞாபகத்துக்கு வந்தது. முதலிரண்டு படங்களாவது டைம் ட்ராவல் கான்சப்டில் ஒத்துப்போவதால் ஞாபகத்துக்கு வந்தது. நோட்புக் படம் ஏன் ஞாபகத்துக்கு வந்தது என்று யோசிக்கும்போது தான் அந்த ஒற்றுமை விளங்கியது.

இந்த நான்கு படங்களிலுமே ஹீரோயின் Rachel Anne McAdams ஒருவரேதான். கன்னத்தில் குழிவிழச் சிரிக்கும் இந்த அழகுப்பெண்ணுக்கு இப்போது 35 வயதாகிவிட்டதால் கன்னத்தில் டொக்கு விழுந்து  சற்று டொங்கன் போலக் காட்சியளிக்கிறார், இருந்தாலும் மனதைக்கவரவே செய்கிறார். இவரில்லையெனில் இந்தப்படம் நான் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே. வெகுளிப்பெண், லூசு ஜெனிலியா மாதிரியான கேரக்டர்களைத் தேடி தேடி நடிக்கும் ரேச்சல் இந்தப்படத்திலும் அதே லூசு ஜெனிலியாவாகத்தான் நடித்திருக்கிறார்.

சில பல காட்சிகளில் சில பல மறைவிடங்களைக் காட்டி நம்மை குதூகலப்படுத்தவும் அவர் தவறவில்லை. டிம்முக்கும் இவருக்கும் திருமணமாகும் சீனில் சர்ச் பேக்ரவுண்டில், பளீரெனெ சிவப்பு நிற உடையில் பார்த்தபோது ஏதோ ஒரு ஏஞ்சலைப் (அஞ்சலை இல்ல.. ஏஞ்சல்) பார்ப்பது போலத்தான் தோன்றியது. இந்தப்படத்தின் போஸ்டரில் மேலே இருக்கும் படத்தில் நீங்கள் பார்க்கும் அதே உடைதான். அம்மிணிக்கு 35வயது என்று அவரே சத்தியம் செய்து சொன்னால் தான் உண்டு.ஹ்ம்ம்..!!

அடுத்து வழக்கம்போல ஃபிகர் செட்டாகாத ஒரு அட்டுப் பையன் டிம். அந்த கேரக்டரில் நடித்திருக்கும் Domhnall Gleeson-க்கு உண்மையில் 32 வயதாகிறதாம். பார்த்தால் 10ம் வகுப்பு மாணவன் போலவே தோற்றமளிக்கிறார். வயது முதிர்ச்சியே தெரியாததால் சில காட்சிகளில் 'துள்ளுவதோ இளமை படத்தின் க்ளைமாக்சில் வரும் ஆர்மி ஆபிசர் தனுஷ்' மாதிரி காட்சியளிக்கிறார். மற்றபடி பெண்களைக் கவர முயற்சி செய்து சொதப்பும் சீன்களில் நம்மை (அட்லீஸ்ட் என்னை) அப்படியே பிரதிபலித்து ரசிக்க வைக்கிறார்.

படத்தில் ஒரு ரகளையான, ஜாலியான காட்சி ஒன்று உண்டு. அதைச் சொன்னால் படத்தை உடனடியாகத் தரவிறக்கிவிடுவீர்கள். டிம்மும், அவனது காதலி மேரியும் தங்களது முதல் டேட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருப்பார்கள். மேரிக்கு டிம்மை மிகவும் பிடித்துப்போனதால் அவனுடன் உறவுகொள்ள விரும்புவாள். முன்னப்பின்ன பழக்கமில்லாத டிம் சற்றே தயக்கத்துடன் ஒத்துக்கொண்டு ஒத்துழைப்பான். முதல் முறையாதலால் அவனுக்கு மிகவும் பிடித்துப்போய்விடும். அதனால் மறுபடியும் அடுத்த தடவைக்கு அவளிடம் கேட்க கூச்சப்பட்டுக்கொண்டு, உறவுகொள்ள ஆரம்பித்ததுக்கு முன்பான இறந்த காலத்துக்கு சென்றுவிடுவான்.

மறுபடியும் முதலில் இருந்து ஜெகஜ்ஜாலம் தான். இப்படியே மூன்றுமுறை கில்லாடித்தனத்தில் ஈடுபட்டு களைப்பாகப் படுத்திருப்பான். அவனுக்குதான் அது மூன்றுமுறை. ஆனால் அவளுக்கு அது ஒருமுறைதானே. அதனால் அவள் அவனிடம் "ஒரு நல்ல ஆரோக்கியமான பையன் இப்படி ஒருதடவையிலேயே சோர்ந்துவிடலாமா" என்று கேட்பாள் பாருங்கள். பையனுக்கு எப்படி இருந்திருக்கும் ? காதலும் காமமும் கலந்த அந்த அருமையான சீனை ரசிப்பதற்காகவேனும் படத்தைக் கண்டு மகிழுங்கள்.

மொத்தத்தில் படம் ஒரு அருமையான விக்ரமன் டைப் ஃபீல்குட் படம். அருமையான ரொமான்டிக் படம். மெதுவாகச் சென்றாலும் அலுக்காமல் சென்றதால் கண்டிப்பாகப் பார்க்கலாம். படம் இப்படி ஜாலியாகச் சென்றாலும் கடைசியில் ஒரு முக்கியமான கருத்தை அழுந்தச் சொல்லிவிட்டுச் செல்கிறது. அந்த கருத்து புரியும்போது படம் உங்களுக்கு இன்னும் பிடித்துப்போகும். படம் பார்த்துவிட்டு உங்கள் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான் என் வாழ்க்கையில் அந்த பாலிசியை முன்பிருந்தே கடைப்பிடித்து வருகிறேன். இந்த உலகத்துக்குத் தேவையான முக்கியமான கருத்து அது. அப்படி என்ன கருத்து அது என்பதை நான் இங்கே சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும். அதனால் கண்டிப்பாகப் படத்தைக் கண்டு ரசித்துத் தெரிந்துகொள்ளுங்கள். படம் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.

About Time (2013) - A new funny film about love. With a bit of time travel.

பி.கு:
1.இந்தப்படத்தின் டைம் ட்ராவல் அம்சங்களைப் பற்றியும், சுவாரசியங்களையும் சொல்லாமல் விட்டிருக்கிறேன். அதையும் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
2.அடுத்த பகுதியில் அந்த ஃபேமசான டைம் ட்ராவல் கதையைப் பற்றி கண்டிப்பாகப் பார்த்துவிடுவோம்.

முந்தைய பகுதி
அடுத்த பகுதி
தொடரும்-

6 comments:

  1. படத்தால் வாழ்வில் மாற்றங்கள் நிகழும் என்பது வியப்பு தான்... சுவாரஸ்யமான விமர்சனம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி..!! :)

      Delete
  2. விமர்சனம் நல்லா இருந்தது. << படம் பார்த்துவிட்டு உங்கள் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை >> ஜோசியர் மாதிரியே பேசறீங்களே.. இந்தப் படமென்ன பரிகாரமா.. பார்த்தால் மாற்றங்கள் நிகழ. சஸ்பென்ஸ் எல்லாம் வைக்காம விஷயத்தை சொல்லுங்க தம்பி.

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா.. பரிகாரமா.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல தல.. இந்தப்படம் நல்ல ஃபீல்குட் படம். நல்ல கருத்தை கடைசியில சொல்லிருக்காங்க. அதனால தான் இதப்பாத்துட்டு மாற்றங்கள் நிகழலாம்னு சொன்னேன். மத்தபடி வேற ஒன்னியும் இல்ல தல.

      அந்தக் கருத்த ஒரே வரியில சொல்லனும்னா - நமக்கு இருக்கறது ஒரே ஒரு வாழ்க்கை தான். அத சந்தோஷமா வாழ்ந்துட்டுப் போவோமே.

      Delete
  3. சர்வநிச்சயமாக ஒரு ரொமான்டிக் ஃபீல்குட் மூவி.
    இதோ இப்ப தான் பாத்துட்டு வந்தன்... வாவ் அட்டகாசம்.. ரொம்ப நாளைக்கு பிறகு இப்‌டியொரு படம் ரொம்ப நன்றி.
    முடிஞ்சா the lake house பாருங்க (பாத்திருப்பிங்கன்னு நெனக்கிறன்)

    ReplyDelete
    Replies
    1. இல்ல தல.. இன்னும் the lake house பாக்கல.. பாத்துருவோம்

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *