Feb 27, 2014

7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை


முந்தைய பகுதி
அடுத்த பகுதி

டிஸ்கி 1 : ஏதாவது வேலை இருந்தால் அதை முடித்துவிட்டு ரிலாக்சாக வந்து இதைப் படிக்கவும். ஆல்ரெடி டென்சனில் இருந்துகொண்டு இதைப்படித்தால் மேற்கொண்டு டென்சன் அதிகமாகும் என்று எச்சரிக்கப்படுகிறது.

டிஸ்கி 2 : அதிகம் யோசிக்க வேண்டியிருக்கும் என்பதால் மூளை வெந்து ஃப்ரை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் கூடுதல் எச்சரிக்கையுடன், அருகிலேயே, ஒரு பாட்டில் தண்ணீருடன் அமர்ந்து படிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தப்பகுதியில் நாம், டைம் ட்ராவல் க்ளாசிக் கதையொன்றைப் பார்க்கப் போகிறோம். 1959ல் வெளிவந்த "All You Zombies" என்ற இந்தச் சிறுகதையை எழுதியவர் பிரபல சயின்ஸ் பிக்சன் எழுத்தாளர் Robert A. Heinlein. அவர் யார்  ?என்ன ? என்ற விவரத்தை விக்கியைப் பார்த்து அறிந்துகொள்க. அந்தச் சிறுகதையை இங்கே க்ளிக்கி டவுன்லோட் பண்ணிக்கொள்ளலாம். சிறுகதை தான் என்பதால் அதை ஒருமுறை படித்துவிட்டு, பதிவைத் தொடர்வது நலம்.

ஓக்கே ரெடியா ? ஜூட்.. 1..2...3.. ஸ்டார்ட்..,

கதைச்சுருக்கம் :

இடம் - பாப்'ஸ் ப்ளேஸ் பார், நியூயார்க் (Pop's Place, NYC)
நாள் - நவம்பர் 7, 1970
நேரம் - இரவு 10:17

ஒரு பாரில் வயதான பார்டெண்டர் ஒருவர் பிராந்தி க்ளாசைப் பாலிஷ் போட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் வாயிலாகக் கதை சொல்லப்படுகிறது. அப்போது அங்கே "Unmarried Mother" என்று சொல்லப்படும் 25 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் வருகிறான். அங்கே வந்து மது அருந்துகிறான். வயதான பார்டெண்டர் அவனிடம் பேச்சுக்கொடுக்கிறார். அவன் ஒப்புதல் வாக்குமூலக் கதைகளை எழுதுகிற ஒரு எழுத்தாளர். அவனுடைய எழுத்துக்களில் ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து யோசிக்கின்ற தன்மை இருக்கிறதே அது எப்படி என்று அந்த பார்டெண்டர் அவனிடம் கேட்கிறார்.

"அதற்கான காரணத்தை நான் உன்னிடம் சொன்னாலும் நீ என்னை நம்பமாட்டாய்" என்று சந்தேகத்தோடு தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான் அவன். தன்னுடைய தாய்-தந்தை யாரென்றே தெரியாத ஒரு bastard ஆக, தான் வளர்ந்ததைக் குறிப்பிடுகிறான். 1945ல் க்ளீவ்லேண்டில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில், தான் ஒருமாதக் குழந்தையாக இருக்கும்போது கொண்டுவந்து விடப்பட்டதாகக் கூறுகிறான்.

அந்தக்குழந்தையின் பெயர் ஜேன். அது ஒரு பெண்குழந்தை. அதாவது அவன் பிறந்தபோது ஒரு பெண்ணாகப் பிறந்தவன். ஜேன் பார்ப்பதற்கு அழகாக இல்லாமல், குதிரை முகம், தெத்துப்பல், தட்டையான மார்பு, நேரான முடி என அசிங்கமாக இருந்ததால் யாராலும் தத்தெடுக்கப்படவில்லை. அதனால் W.E.N.C.H.E.S. (Women's Emergency National Corps, Hospitality and Entertainment Section) என்ற அமைப்பில் சேருவதுதான் அவளது நோக்கமாக இருந்தது. 21 வயதான பின்புதான் அதில் சேரமுடியும் என்பதால் அதற்காகத் தன்னைத் தயார் செய்கிறாள். 18 வயதானபோது ஒரு குடும்பத்தால் வேலைக்காரி போலத் தத்தெடுக்கப்பட்டு, அந்த வீட்டில் வேலை செய்கிறாள். பகலில் வீட்டுவேலையையும், இரவில் படிப்பையும் தொடர்கிறாள்.

அப்போதுதான் ஜேன் ஒரு ஆளைச் சந்திக்கிறாள். 100 டாலர் பில்களுடன் இருந்த அவன், அவளிடம் அன்பாக நடந்துகொள்கிறான். பிறந்தது முதலே தன்னுடன் இப்படி யாரும் அன்பாகப் பழகியதில்லை என்பதால் ஜேன், அவனுடன் காதலாகப் பழகுகிறாள். இருவரும் ஒரு தனிமையான சமயத்தில் கும்தலக்கடி ஜல்சா பண்ணிவிடுகிறார்கள். அதற்குப்பிறகு அந்த 100 டாலர் பில் ஆள் காணாமல் போய்விடுகிறான். ஜேன் எவ்வளவோ தேடியும் அவனை மறுபடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிறகு தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிற ஜேன் மறுபடியும் அந்த அமைப்பில் சேருவதற்கான முயற்சிகளைத் தொடர்கிறாள். அந்த சமயத்தில் தான் அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. அவளால் வேலை செய்ய முடிந்தவரையில் அந்த வீட்டில் தங்கவைக்கப்படுகிறாள். சிலகாலம் கழித்து, அவளால் வேலை செய்யமுடியாத நிலையில் அங்கிருந்து துரத்தியடிக்கப்படுகிறாள். அங்கிருந்து பழைய ஆசிரமத்துக்கே திரும்புகிறாள். ஆனால் அங்கே மறுபடியும் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.

கடைசியில் ஒரு தொண்டு நிறுவனம் அவளை ஏற்றுக்கொள்கிறது. வயதானவர்களின் மத்தியில் அவள் கவனிக்கப்படுகிறாள். 10 மாதம் முடிந்தபின்பு, அவளுக்குப் பிரசவம் ஆகிறது. ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் இங்கே தான் அவளுக்கு உண்மையான பிரச்சனை ஆரம்பிக்கிறது. அவளுக்குப் பிரசவம் பார்த்த டாக்டர், அவளுக்கு ஆண்-பெண் இருபால் உறுப்புகளும் இருப்பதைக் கவனிக்கிறார். அவளின் கர்ப்பப்பையிலிருந்துப் பெண் குழந்தையை எடுத்தவுடன், அவளின் பெண்பால் உறுப்புகளை அகற்றிவிடுகிறார். இனிமேல் அவளுக்கு அவை தேவையில்லை, ஒரு ஆணாக மாறி வாழ்க்கையைத் தொடரலாம் என்ற முடிவுக்கு வருகிறார்.

ஆபரேஷன் முடிந்து மயக்கத்திலிருந்து எழுகிற ஜேனுக்கு, அவள் ஆணாக மாறிய செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. தன்னுடைய குழந்தைக்குத் தாயாக இருந்த அவள், இப்போது ஆணாக மாறியதால் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைக்கிறாள். (இந்த இடத்திலிருந்து ஜேனை அவன் என்று அழைக்கலாம்). பிறகு ஒரு மாதம் வரை அந்தக் குழந்தையை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறான். ஒரு மாதத்திற்குப் பிறகு அந்தக்குழந்தை எப்படியோ மர்மமான முறையில் காணாமல் போய்விடுகிறது.

இப்படித் தன் முழுக்கதையையும் அவன் அந்த பார்டெண்டரிடம் சொல்கிறான். இந்தக்கதையைக் கேட்ட பார்டெண்டர் அவன்மேல் பரிதாபம் கொள்கிறார். "அந்தக்குழந்தையை அதற்குப் பிறகு கண்டுபிடிக்கவே முடியவில்லையா ?" என்று கேட்கிறார்.

"இல்லை. போலிசால் எந்த ஒரு தடயத்தையும் கண்டுபிடிக்க முடியலை. யாரோ ஒரு வயசான ஆள் வந்து, நான் அந்தக்குழந்தையோட மாமானு சொல்லி நர்ச ஏமாத்தி தூக்கிட்டுப் போயிட்டான். எனக்கென்னமோ குழந்தையைக் கடத்திட்டுப் போனது அதோட அப்பானு தான் தோணுது" என்று பதில் சொல்கிறான் அவன்.

குழந்தை காணாமல் போனபிறகு, 11 மாதங்கள் அந்த இடத்திலேயே தங்கி, மேலும் 3 ஆபரேஷன்களைச் செய்துகொண்டதாகக் கூறுகிறான். 4 மாதங்களில் தாடியெல்லாம் வளர்த்து முழுமையான ஆணாக மாறிவிட்டதையும் சொல்கிறான். அதனாலேயே அவனால் WENCHES இல் சேரமுடியாமல் போன சோகத்தையும் பகிர்ந்துகொள்கிறான். அதற்குப் பிறகு நியூயார்க் வந்து பப்ளிக் ஸ்டெனோகிராபராக ஆனதாகவும், கையெழுத்துப் பிரதிகள் எழுதி எழுத்தாளராக ஆனதாகவும் கூறுகிறான்.

மொத்தக்கதையையும் கேட்ட பார்டெண்டர், தான் அவனுக்கு ஒரு உதவி செய்யமுடியும் என்று கூறுகிறார். அவன் குழந்தையினுடைய தந்தையைக் கண்டுபிடித்துக்கொடுக்க முடியும் என்று கூறுகிறார். குழப்பத்தில் ஆழ்கிற அவன் தனக்கு ஏன் அவர் உதவிசெய்யவேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அந்த பார்டெண்டர், தான் அவனுக்கு இந்த உதவியைச் செய்தால், பதிலுக்கு அவன் தனக்கு ஒரு உதவி செய்யவேண்டும் என்று கேட்கிறார். அப்படிச் செய்தால் நல்ல வேலை, நல்ல சம்பளம் தருவதாகக் கூறுகிறார். அத்துடன் செலவு செய்ய ஏகப்பட்ட பணமும், நல்ல அட்வெஞ்சர் வாழ்க்கையும் கிடைக்கும் என்றும் கூறுகிறார்.

அப்போது நேரம் இரவு 11 மணி ஆகிறது. பிறகு அந்த பார்டெண்டர் அவனை அழைத்துக்கொண்டு பாரிலுள்ள ஒரு ரகசிய அறைக்குச் செல்கிறார். அங்கே ஒரு பாக்ஸ் இருக்கிறது. அதிலிருந்து ஒரு வலையை எடுத்து இருவரின் மேலும் போர்த்துகிறார். அவன் இது என்ன என்று கேட்பதற்குப் புன்னகையுடன் பதில் சொல்கிறார்.

"இதுதான் டைம் மெஷின்". அங்கிருந்து 1963க்கு இருவரும் செல்கின்றனர்.

இடம் - ஒஹையோ அபெக்ஸ் பில்டிங், க்ளீவ்லேண்ட்
நாள் - ஏப்ரல் 3, 1963
நேரம் - காலை 10:30

அவன் நம்பாமல் அவரையே பார்க்க, அவர் "வெளியே பார்.. இது நியூயார்க் மாதிரியா தெரிகிறது ? நவம்பர் மாதம் போலவா காட்சியளிக்கிறது ?" என்று கேட்கிறார். பதிலை எதிர்பாராமல், அவனிடம் 100 டாலர்களைக் கொடுக்கிறார் அந்த பார்டெண்டர். "நீ தேடி வந்தவன் இந்த ஊரில் தான் இருக்கிறான். தேடிக்கண்டுபிடித்துக்கொள். அதற்குள் நான் ஒரு இடத்திற்குப் போகவேண்டியிருக்கிறது. போய்விட்டு வருகிறேன்" என்று கூறியபடி அவனை அந்த ரூமிலிருந்து வெளியே கூட்டிக்கொண்டுபோய் விட்டுவிடுகிறார். பிறகு அங்கிருந்து மறுபடியும் அந்த வலையை எடுத்து போர்த்திக்கொள்கிறார். 1964க்குச் செல்வதற்கு டைம் மெஷினில் செட் பண்ணுகிறார்.

இடம் - அபெக்ஸ் பில்டிங், க்ளீவ்லேண்ட்
நாள் - மார்ச் 10, 1964
நேரம் - மாலை 07:10

அந்த ரூமை விட்டு வெளியே வருகிற பார்டெண்டர் அந்தக்காலத்து பணத்தை எடுத்துக்கொள்கிறார். கோட் மாட்டிக்கொண்டு, தலையில் குல்லா ஒன்றை அணிந்துகொள்கிறார். அங்கிருந்து ஒரு டாக்சியைப் பிடித்து ஹாஸ்பிட்டலுக்குச் செல்கிறார். அங்கே இருக்கும் நர்சை ஏமாற்ற 20 நிமிடங்கள் ஆகிறது. அதன்பிறகு உள்ளே சென்று அந்தப் பெண்குழந்தையை எடுத்துக்கொண்டு (கடத்திக்கொண்டு) மீண்டும் அபெக்ஸ் பில்டிங்குக்கே வருகிறார். இந்தமுறை 1945க்குச் செல்ல முடிவெடுக்கிறார். ஆனால் 1945ல் அபெக்ஸ் பில்டிங் கட்டப்படவே இல்லை என்பதால், டைம் மெஷினில் செட்டிங்கை மாற்றி ஒரு மோட்டலுக்குச் செல்லுமாறு வடிவமைக்கிறார்.

இடம் - ஸ்கை வியூ மோட்டல், க்ளீவ்லேண்ட்
நாள் - செப்டம்பர் 20, 1945
நேரம் - நள்ளிரவு 01:00

அந்த மோட்டலின் அறை, க்ரகோரி ஜான்சன் வாரன், ஓஹையோ என்ற பெயரில் முன்பே புக் செய்யப்பட்டிருக்கிறது. பார்டெண்டரும், அந்தப் பெண்குழந்தையும் அங்கே வந்திறங்குகிறார்கள். அந்தப் பெண்குழந்தைக்கு ஜேன் என்று பெயரிடுகிறார். ஒரு அட்டைப்பெட்டியில் அவளை வைத்துக்கொண்டு, காரில் ஒரு அனாதை ஆசிரமத்துக்குச் செல்கிறார். யாருமே இல்லாத அந்த ஆசிரமத்தின் முன்வாசலில், அந்த அட்டைப்பெட்டியை வைத்துவிட்டு, இரண்டு தெரு தள்ளி இருக்கும் சர்வீஸ் ஸ்டேஷனுக்குச் செல்கிறார். அங்கிருந்து ஆசிரமத்துக்கு போன் செய்து தகவல் சொல்லிவிட்டு மறுபடியும் காரில் அந்த ஆசிரமத்துக்கு விரைகிறார். அட்டைப்பெட்டியிலிருக்கும் குழந்தை உள்ளே எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்துவிட்டு, மனத்திருப்தியுடன் மோட்டல் அறைக்குத் திரும்புகிறார். அங்கிருந்து 1963க்கு, அபெக்ஸ் பில்டிங் செல்வதற்கு செட் செய்கிறார்.

இடம் - அபெக்ஸ் பில்டிங், க்ளீவ்லேண்ட்
நாள் - ஏப்ரல் 24, 1963
நேரம் - இரவு 10:00

தற்போது கிட்டத்தட்ட 18 வயதிருக்கும் ஜேனைத் தேடிப்போகிறார் பார்டெண்டர். ஒரு தெருவின் கடைசியில் ஜேனும், அங்கே இவர் இறக்கிவிட்ட "Unmarried Mother" எழுத்தாளனும் காதலுடன் முத்தமிட்டுக்கொள்வதைப் பார்க்கிறார். பிறகு ஜேன் சென்றவுடன், அந்த எழுத்தாளன் அந்த தெருவில் நடந்து வருகிறான். அவனருகில் செல்கிற பார்டெண்டர் "நீ வந்த வேலை முடிந்துவிட்டது" என்று சொல்கிறார். அவரை மறுபடியும் பார்க்கிற அவன் அதிர்ச்சியில், "நீயா" என்றவாறு உறைகிறான்.

"ஆம். நானேதான். இப்போ உனக்கு எல்லாமே தெரிஞ்சுருக்கனுமே. உன்னைக் காதலிச்சு, உனக்குக் குழந்தையைக் கொடுத்துட்டு காணாமல் போனவன் யார்னு தெரியுதா ? நல்லா யோசிச்சா நீ யார்ங்கறதும் உனக்கு புரியும். இன்னும் நல்லா மூளையைக் கசக்கி யோசிச்சா, உனக்குப் பிறந்த குழந்தை யார்னு தெரியும். நான் யார்னும் தெரியும்" என்று மர்மமாகப் பேசுகிறார். எதற்குமே பதில் சொல்லாமல் அதிர்ச்சியில் உறைகிற அவனை இழுத்துக்கொண்டு மறுபடியும் அபெக்ஸ் பில்டிங்க் செல்கிறார். அங்கேயிருந்து இருவரும் 1985க்குத் தாவுகின்றனர்.

இடம் - சப் ராக்கிஸ் தலைமையகம் (Sub Rockies Base)
நாள் - ஆகஸ்ட் 1, 1985
நேரம் - இரவு 11:00

அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் சார்ஜண்டை எழுப்பி எழுத்தாளனுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்கச் சொல்கிறார். மாத்திரை கொடுத்து தூங்கவைக்கும்படி சொல்கிறார். காலையில் எழுந்தவுடன், அவனை இந்த டைம் மெஷின் அமைப்பில் வேலையில் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறார். மறுபேச்சுப் பேசாமல் சொன்ன வேலையைச் செய்கிறான் அந்த சார்ஜண்ட். "என்ன பெயர்" என்று சார்ஜண்ட் கேட்க அதற்கு அந்த பார்டெண்டர், புன்னகையுடன் பதில் கூறுகிறார். "ஓ..ஹ்ம்ம்.. நடக்கட்டும்" என்று மர்மமாகச் சிரிக்கிறான் அந்த சார்ஜண்ட்.

எதுவுமே புரியாமல் முழிக்கும் எழுத்தாளனிடம் "இனிமே உனக்கு எந்த தொந்தரவும் கிடையாது. காலையில் நீ எழுந்திருக்கும் போது அருமையான வேலை ஒன்னு உனக்காகக் காத்திருக்கும். இதுவரை எந்த ஒரு மனிதனும் செய்யாத வேலை. அதையும் நீ நல்லா செய்வே. இந்த அமைப்பில் பெரிய ஆளா வருவே. எனக்குத் தெரியும்" என்று ஆறுதல் கூறுகிறார் பார்டெண்டர். அதை ஆமோதிக்கும் சார்ஜண்டும் "ஆமா கவலைப்படாதே. 1917ல பிறந்த நான் இன்னும் இளமையா இருக்கேன் பாத்தியா. இன்னும் வாழ்க்கையை ஜாலியா வாழ்ந்துகிட்டிருக்கேன்" என்று கூறுகிறார். பிறகு அங்கிருந்து டைம் மெஷின் ரூமுக்குச் செல்கிற பார்டெண்டர் எல்லா செட்டிங்கையும் பூச்சியத்திற்கு மாற்றுகிறார்.

இடம் - பாப்'ஸ் ப்ளேஸ் பார், நியூயார்க் (Pop's Place, NYC)
நாள் - நவம்பர் 7, 1970
நேரம் - இரவு 11:01

முதல் சீனில் பார்டெண்டரும் எழுத்தாளனும் 1963க்குக் கிளம்பிச் சென்றதுக்கு ஒரு நிமிடம் பின்பாக வந்து சேருகிறார் பார்டெண்டர். அந்த ரூமிலிருந்து பாருக்குச் செல்கிறார். அங்கே ஒரு கஸ்டமர் "I'm My Own Grandpaw!" என்ற விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறார். விளையாடும் நேரம் தொடர்பாக, பார்டெண்டரின் அசிஸ்டண்டுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார் அந்த கஸ்டமர். அதைப் பார்க்கும் பார்டெண்டர் அவரை இன்னும் கொஞ்ச நேரம் விளையாட விடுமாறு சொல்கிறார்.

பிறகு, வழக்கத்துக்கு மாறாக ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே பாரை மூடுகிறார். தான் ஒரு நீண்ட விடுமுறையில் செல்ல இருப்பதாக, மேனேஜருக்கு ஒரு கடிதம் எழுதி அதை கல்லாப்பெட்டியில் வைக்கிறார். பிறகு டைம் மெஷின் ரூமுக்குச் செல்லும் அவர் அங்கிருந்து 1993க்குச் செல்கிறார்.

இடம் - சப் ராக்கிஸ் அன்னெக்ஸ் தலைமையகம் (Sub Rockies Annex-HQ Temporal DOL)
நாள் - ஜனவரி 12, 1993
நேரம் - இரவு 10:00

டியூட்டி ஆபிசரிடம் சென்று தகவல்கள் சொல்லிவிட்டு தன்னுடைய குவார்ட்டர்சுக்குச் செல்கிறார் பார்டெண்டர். ஒரு மது பாட்டிலை எடுத்துக் குடித்துக்கொண்டே தன்னுடைய ரிப்போர்ட்டை எழுதுகிறார். ரிப்போர்ட்டில் இதுவரை வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 40 பேரும் ஓக்கே என்று எழுதுகிறார். தானும் அந்த 40 பேரில் ஒருவன் என்பதையும் நமக்குச் சொல்கிறார். பிறகு பலவாறான சிந்தனைகளுடன் படுக்கையில் படுத்துக்கொள்கிறார். (கதையின் கடைசி வரிகள் அப்படியே ஆங்கிலத்தில்)

I know where I came from -- but where did you all zombies come from?
I felt a headache coming on, but a headache powder is one thing I do not take. I did once - and you all went away.
So I crawled into bed and whistled out the light.
You aren't really there at all. There isn't anybody but me -Jane-here alone in the dark.
I miss you dreadfully!

-கதைச்சுருக்கம் முடிந்தது-

பி.கு:
1.கதையில் வரும் பாரடாக்ஸ்கள் பற்றி அடுத்த பதிவில் விவாதிப்போம்.
2.கதை புரியாவிட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை. அதையும் இன்னும் தெளிவாகப் புரியும்படி, விளக்கப்படங்களுடன் அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

அடுத்த பகுதி
தொடரும்-

22 comments:

  1. ஆர்வத்தில் இப்பொழுதே படித்தேன் எனக்கு புரிந்தவரை அவன் தான் எல்லாமும் என்று புரிகிறது ... அவனை அவனே தேடுகிறான் விடையும் தெரிந்து கொண்டான் ரைட்டா தல

    ReplyDelete
    Replies
    1. கரெக்டு கரெக்டு மெரட்டு மெரட்டு.. :)

      Delete
  2. எனக்கு இந்த கதை ஓரே குழப்பமான இருக்கு. ஆனா இது மட்டும் நல்லா புரிஞ்சது /*இருவரும் ஒரு தனிமையான சமயத்தில் கும்தலக்கடி ஜல்சா பண்ணிவிடுகிறார்கள்*/

    ReplyDelete
    Replies
    1. யோவ்.. நீயெல்லாம் நல்லா வருவய்யா.. :) :) :P

      Delete
  3. பீயுடிபுள் புல்ஷிட் :P

    ReplyDelete
  4. இப்போ தான் பாஸ் படிச்சேன்.. உங்க உழைப்புக்கு சலுட்.. தொடர்ந்து கலக்குங்க.. என்னை போல சைலன்ட் ரீடர்ஸ் நிறைய இருப்பாங்க.. ஸோ மிஸ் பண்ணாமல் எழுதுங்க.. கீப் கோயிங்..

    ReplyDelete
  5. டவுண்லோட் பண்ணிக்கிட்டேன். அடுத்த பதிவு வருவதற்குள் படித்துவிட்டு வருகிறேன். :)
    * டைம் ட்ராவல் படங்களா இல்லை கதைகளைப் பற்றிய தொடரா? இந்தக் கதையும் படமாக வரவிருப்பதாக விக்கியில் பார்த்தேன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல,

      இந்தத் தொடர் - முதல்ல டைம் ட்ராவல் படங்களப்பத்தி பேசலாம்னு தான் ஆரம்பிச்சது. அப்றம் அதுவே திக்குத்திசை தெரியாம எப்டியெப்டியோ ஓடிக்கிட்டிருக்கு.

      இந்தக்கதை இப்போதான் படமா எடுத்துக்கிட்டிருக்காங்கனு நானும் கேள்விப்பட்டேன். இது ஒரு சிறுகதை தான். இதை அப்டியே எடுக்காம, மூலக்கதையா மட்டும் வச்சுக்கிட்டு, வேற மாதிரி மாடர்னா மாத்தி திரைக்கதை எழுதி எடுத்தா, கண்டிப்பா சூப்பரா இருக்கும். பாக்கலாம் என்ன பண்றாய்ங்கன்னு..!!

      வருகைக்கு மிக்க நன்றி தல..!!

      Delete
  6. Enga boss adutha paguthi. More interesting.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாசம் ரொம்ப வொர்க். ப்ளாக் பக்கமே வர முடியலை பாஸ். கூடிய சீக்கிரத்தில அடுத்த பகுதி போடறதுக்கு முயற்சி பண்றேன்.
      உங்க வருகைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.. :)

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Boss thodarnthu eluthunga...
    i am most waiting....
    Athukula vera thodaruku poitinga....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா தல..!! கொஞ்சம் ரெஸ்ட்டு விட்டு மறுபடியும் தொடரலாம்னு தான் இந்த கேப்.. கொஞ்ச நாள்ல மறுபடியும் தொடரும் :)
      உங்க ஆர்வத்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  9. super'ana post.''frequency'' film pathieum ,pottu irukalam

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.
      ஃப்ரீக்வன்சி எனக்கு மிகப்பிடித்த டைம் ட்ராவல் படம்.
      இனிவரும் பகுதிகளில் போட முயற்சிக்கிறேன்.

      Delete
  10. இந்த தொடர் பாத்துதான் டைம் டிராவல் படங்கள் பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன் அதனால பெஸ்ட் டைம் டிராவல் படங்கள் பத்தியும் சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா ப்ரோ.. அடுத்தடுத்த பதிவுகள்ல பிரபலமான படங்களைப் பத்திப் பாக்கலாம்.

      Delete
  11. Hi,

    I have shared your calculation of "Yugam" in my FB.. it is really nice.

    ReplyDelete
  12. ஜீ கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு டைம் டிராவல் படம் பார்த்தேன் அதன் பெயர் "லூபர்(looper)",நீங்க அந்த படத்த பாத்து இருந்தீங்கான தயவு செய்து அதன் விமர்சனம் எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்....

    ReplyDelete
  13. predestination 2014 time travel best movie .. same this story please watch all time travel liker.....

    ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *