புளிப்பு மிட்டாய் என்று ஒரு மிட்டாய் ரகம் உண்டு. நான் பள்ளியில் படித்த காலத்தில் ஒரு மிட்டாய் வெறும் 5 பைசா தான். அதை 5 பைசா மிட்டாய் என்றும் கூறுவார்கள். இப்போது 50 பைசாவாக இருக்கலாம். அதன் தனித்தன்மையே அதன் சுவை தான். வாயில் வைத்தால் முழுவதுமாகக் கரைந்து, காலியாகும்வரையிலும் அதன் சுவை நம்மை அப்படியே மெய்மறக்கச் செய்யும். தொடர்ந்து ஒரு 2, 3 மிட்டாய்களைச் சாப்பிடும் வரையிலும் அந்தச் சுவை அப்படியே இருக்கும். அதன் பிறகு 4வது மிட்டாயை எடுத்துச் சாப்பிடும்போது லைட்டாக நாக்கு உப்புக்கரிக்கத் தொடங்கும். சுவை குறையும். 5வது மிட்டாயைச் சாப்பிடவே முடியாது. அதையும் மீறிச் சாப்பிட்டால் நாக்கு ரணமாகி, உணர்ச்சிகளை இழக்கத் தொடங்கும். குணமாவதற்கு சில பல மணி நேரங்கள் வரை ஆகும்.
எதற்கு இந்த மிட்டாய்க் கதை என்றால் சில படங்களும் அப்படித்தான். படம் ஆரம்பிக்கும்போது அட என்னமாதிரி ஒரு கான்செப்ட் என்று வியந்துபோய் பார்க்க ஆரம்பித்தால், கான்செப்ட் முடிந்து ஒருசில காட்சிகளிலேயே அதன் தரம் பல்லிளித்துவிடும். படு சொதப்பலான படமாக எடுத்து நம்மைச் சோதித்துவிடுவார்கள். இதற்கு இன்னும் நல்ல உவமை சொல்ல வேண்டுமென்றால் சமையலைச் சொல்லலாம். நல்ல ருசியுடன் சமைத்துவிட்டு ஏனோதானோ என பரிமாறினால் அது வேஸ்ட் தானே. நல்ல கான்செப்டுகளை வைத்து சொதப்பல் படங்களை எடுப்பதற்குப் பதில், சுமாரான கான்செப்டுகளை வைத்து சூப்பர் படம் எடுத்துவிட்டுப் போகலாம்.
நேற்று Upside Down(2012) என்ற படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த எண்ணம் தோன்றியது. சரி இந்தப்படத்தைப் பற்றி மட்டும் ஒரு சிறிய பதிவை எழுதி, கொஞ்சம் புலம்பிவிட்டு முடித்துக்கொள்ளலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் விதி உங்களைச் சும்மா விடுகிறதா பாருங்கள். நான் இதுவரை பார்த்துள்ள சூப்பர் கான்செப்ட் பட் சொதப்பல் படங்களைப் பற்றி மினி தொடர் ஒன்றை எழுதலாம் என்ற யோசனையை என் மூளையில் பதித்துவிட்டுப் போனதால், இதோ மினி தொடர் ஆரம்பம்,
1.Upside Down (2012):
படத்தின் போஸ்டரே படத்தின் கதையைச் சொல்லும். எவ்வளவு க்ரியேட்டிவிட்டி பாருங்கள். அதாவது இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் ட்வின் ப்ளானட்ஸ் என்ற இரட்டை உலகங்கள் இருக்கின்றன. இரண்டும் மிக மிக அருகில் ஒன்றை ஒன்று ஒட்டாமல் வலம் வருகின்றன. இரண்டு உலகத்துக்கும் இடையேயான இடைவெளி மிகமிகக் குறுகியது. இந்த இரண்டு உலகங்களிலும் செயல்படும் புவி ஈர்ப்பு விசை வித்தியாசமானது. அதாவது இரட்டைப் புவியீர்ப்பு விசை இரண்டு உலகங்களிலும் இருக்கும். புவியீர்ப்பு விசை எப்படி இங்கே செயல்படுகிறது என்பதற்கு 3 புவியீர்ப்பு விதிகளைச் சொல்கிறார்கள்.
1.ஒவ்வொரு பொருளும், அந்தப் பொருளின் உலகத்தைச் சேர்ந்த புவியீர்ப்பு விசையினால் மட்டுமே ஈர்க்கப்படும். மற்ற உலகத்தின் புவியீர்ப்பு விசை அந்தப் பொருளின்மீது செயல்படாது.
2.ஒரு உலகைச் சேர்ந்த பொருளை அடுத்த உலகத்துக்கு எடுத்துச் சென்றால், அது அங்கே இன்வெர்ஸ் மேட்டர் (Inverse Matter) என்றழைக்கப்படும். ஒரு உலகைச் சேர்ந்த பொருளின் எடையை, ஒரு இன்வெர்ஸ் மேட்டரின் (மற்றொரு உலகைச் சேர்ந்த பொருள்) எடையைக் கொண்டு ஈடு செய்ய முடியும்.
3.இன்வெர்ஸ் பொருளோடு நேரடித் தொடர்பில் உள்ள பொருள், சிறிது நேரத்தில் எரியத்தொடங்கும்.
இந்த விதிகளை இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு, இரண்டு உலகங்களுக்கும் மேல் உலகம், கீழ் உலகம் எனப்பெயர் வைத்துக்கொள்வோம். கீழ் உலகத்தில் நயன்தாரா இருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். கீழ் உலகத்தின் புவியீர்ப்பு விசையினால் அவள் கீழ் உலகத்தின் மேற்பரப்பில் ஒட்டி வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அதேபோல மேல் உலகத்தில் ஆண்டிச்சாமி (எ) கில்லாடிரங்கா என்கிற இளைஞன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். இரண்டு பேரும் ஒவ்வொருவருக்கு மேல் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அதாவது இரண்டு பேருமே மேல்நோக்கிப் பார்த்தால், ஒருவருக்கு மற்றொருவர் தலைகீழாகத் தெரிவர்.
இதில் கீழ் உலகத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு மேல் உலகத்தைச் சேர்ந்த கில்லாடிரங்காவைப் பார்த்தவுடன் உடனே மையல் (அப்டின்னா என்னாங்க) வந்துவிடுகிறது. எப்படியாவது அவனைப் பார்த்து சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் எப்படியோ அங்கே சென்றுவிடுகிறாள். அங்கே சென்றாலும் அவள் கீழ் உலகத்தின் ஈர்ப்புவிசையால் தான் ஈர்க்கப்படுவாள். மேல் உலகத்தின் ஈர்ப்பு விசை அவளை ஒன்றும் செய்யாது. அதெப்படி அவள் கீழ் உலகத்தைச் சேர்ந்தவள் தான் என்பது அந்த உலகங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பது போன்ற லாஜிக் கேள்விகளைக் கேட்டால் ஏதோ புளிப்பு மிட்டாயைப் பறிகொடுத்த அப்பாவிச் சிறுவன் போல, இயக்குனர் பேந்தப் பேந்த விழிக்கிறார்.
சரி போனால் போகிறது. இது ஒரு ஃபேண்டசி திரைப்படம். அதனால் நமது லாஜிக் கேள்விகளையெல்லாம் மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு கான்செப்டுக்குள் நுழைவோம். அப்படி மேல் உலகத்துச் சென்ற நயன்தாரா அந்த உலகத்தைச் சேர்ந்த புயியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டால் தானே அந்த உலகத்தில் வாழ முடியும். அதற்கு ஒரு ட்ரிக் இருக்கிறது. அந்த உலகத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு வெயிட்டான பொருளை அவள்மீது வைத்துவிட்டால் அவள் அந்த உலகத்தை நோக்கி இழுக்கப்படுவாள்.
உதாரணத்திற்கு, நயன்தாரா 70 கிலோ எடை என்று வைத்துக்கொள்வோம். அது கீழ் உலகத்தின் புவியீர்ப்பு விசை அவளின்மீது செயல்படுவதால் அவளுக்குக் கிடைத்த எடை. அதேபோல மேல் உலகத்தைச் சேர்ந்த ஒரு இரும்புக்கட்டியின் எடை 100 கிலோ என்று வைத்துக்கொள்வோம். அது மேல் உலகத்தின் புவியீர்ப்பு விசை அந்தக்கட்டியின் மீது செயல்படுவதால் கிடைத்த எடை. இப்போது நயன்தாராவின் தலையில் அந்தக்கட்டியைத் தூக்கி வைத்துவிட்டால் என்னாகும் ?
நயன்தாராவின் எடையைவிட அந்த இரும்புக் கட்டியின் எடை அதிகமாக இருப்பதால் அவள் மேல் உலகத்தை நோக்கி ஈர்க்கப்படுவாள். அதாவது அந்தக்கட்டியின் மீது மேலுலகம் செலுத்தும் புவியீர்ப்பு விசையானது, நயன்தாராவின் மீது கீழுலகம் செலுத்தும் புவியீர்ப்பு விசையை விட அதிகமாக இருப்பதால், இரும்புக்கட்டி மேல் உலகத்தின் மேற்பரப்பை நோக்கி இழுக்கப்படும். அது நயன்தாராவின் தலையில் இருப்பதால் அவளும் சேர்ந்து இழுக்கப்படுவாள்.
ஆனால் நயன்தாரா மேல் உலகத்தில் கில்லாடிரங்காவைத் தேடி அலையும்போது, தலையில் ஒரு பெரிய இரும்புக்கட்டியுடன் அலைந்தால் பார்க்கிறவர்கள் ஒருமாதிரி நினைக்கமாட்டார்கள்? அதற்காக அந்த இரும்புக்கட்டியை ஒரு ஜெர்கின் மாதிரி செய்து அதை அணிந்துகொண்டு, அதற்கு மேல் சாதாரண உடையை அணிந்துகொண்டால் யாருக்கும் எதுவும் தெரியாது அல்லவா ? அப்படியே செய்துகொண்டு கில்லாடியைத்தேடி அலைகிறாள் நயன்தாரா.
இங்கேதான் மூன்றாவது விதி முக்கியத்துவம் பெறுகிறது. மேல் உலகத்தைப் பொறுத்தவரையில், நயன்தாரா ஒரு இன்வெர்ஸ் மேட்டர். அதாவது மற்றொரு உலகத்திலிருந்து வந்த ஒரு ஆப்ஜெக்ட். ஆனால் இரும்புக்கட்டி அந்த உலகத்தில் இருக்கும் ஒரு ஆப்ஜெக்ட். இரண்டும் இணைந்த சில மணி நேரங்களில் தீப்பிடித்து எரியத்தொடங்கும். அதனால் சில மணி நேரங்களுக்குள் தேடிக் கண்டுபிடித்தேயாக வேண்டிய கட்டாயத்தில், நயன்தாரா கில்லாடியைத் தேடி அலைகிறாள்.
கடைசியில் ஒருவழியாக வெயிலில் அலைந்து திரிந்து கில்லாடிரங்காவைத் தேடிக்கண்டுபிடித்து விட்டாள். தன்னை ஏற்றுக்கொள்ளும்படி அவன் முன்னாடி நின்று தன் காதலை வெளிப்படுத்துகிறாள். வெயிலில் மேக்கப் எல்லாம் கலைந்து, பார்ப்பதற்கு கோரமாகக் காட்சியளிக்கும் நயன்தாராவை கில்லாடிரங்காவுக்குப் பிடிக்கவில்லை. "நீ எனக்கு ஈடானவள் இல்லை. எனக்கு ஆல்ரெடி ஃபிகர் செட் ஆகிவிட்டது. இதோ ஓவியா தான் எனது லேட்டஸ்ட் செட்டப்" என்றுகூறி நயன்தாராவின் மனதை சுக்குநூறாக உடைத்துவிடுகிறான்.
காதல் தோல்வியடைந்த நயன்தாரா வேறுவழியே இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். தான் உடுத்தியிருக்கும் இரும்பு ஜெர்கினைக் கழட்டி எறிகிறாள். அதை எறிந்தவுடன் கீழ் உலகத்தின் ஈர்ப்பு விசை அவளை வேகமாக ஈர்க்க, கீழ் உலகத்திலுள்ள ஒரு பாறையின் மீது மோதி உயிரை விடுகிறாள். அவ்வளவுதான். கதை முடிந்தது. (கதையில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையே. கற்பனை அல்ல. கதையைப் படித்துத் தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது. :))
சீரியசாக, மேலே சொன்ன கான்செப்ட் எவ்வளவு அருமையான கான்செப்ட். இதை வைத்து எவ்வளவு அருமையான படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் படம் ஏனொதானொவென்று சப்பையாக முடிகிறது. மேலே சொன்ன கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்தால் அதுதான் ஒரிஜினல் படத்தின் கதை. அதாவது ஹீரோ கீழ் உலகத்தைச் சேர்ந்தவன். ஹீரோயின் மேல் உலகத்தைச் சேர்ந்தவள். இருவரும் சிறுவர்களாக இருக்கும்போதே ஒரு மலையுச்சியில் சந்தித்துக் கொள்கின்றனர். அதன்மூலம் இருவருக்கும் காதல் மலர்கிறது.
பொருளாதார அடிப்படையில் மேல் உலகம் பணக்காரர்கள் வாழும் உலகமாகவும், கீழ் உலகம் ஏழைகள் வாழும் உலகமாகவும் இருக்கிறது. கீழ் உலகத்திலுள்ள கனிம/எண்ணை வளங்களை மேல் உலகம் அபகரித்துக்கொள்கிறது. அதற்காக ட்ரான்ஸ்வேர்ல்ட் என்ற கம்பெனியை உருவாக்கி வைத்துள்ளது. அதன் தலைமையிடத்திலுள்ள கட்டிடம் ஒன்றுதான் இரண்டு உலகங்களையும் இணைக்கும் ஒரே கருவியாகச் செயல்படுகிறது. அதாவது அந்தக்கட்டிடத்தின் அடிப்பாகம் கீழ் உலகத்திலும், மேல்பாகம் மேலுலகத்திலும் அமைந்திருக்கும். கீழுலகத்திலிருந்து -10,-9... என ஆரம்பிக்கும் அந்தக்கட்டிடத்தின் ஃப்ளோர்கள், 0வில் போய் முடியும். அதுதான் இரண்டு உலகங்களுக்கும் செண்டர் பாயிண்ட். அதன்பிறகு 1,2,.. என்று ஆரம்பிக்கும் ஃப்ளோர்கள் மேலுலகத்தின் தரைத்தளத்தில் போய் முடியும்.
மேலுலகம் அந்தக் கம்பெனியின் மூலம், கீழ் உலகத்தின் ஆயில் வளங்களைக் கொள்ளையடித்து மின்சாரம் தயாரிக்கிறது. அந்தக்கம்பெனியில் வேலை பார்ப்பதற்கு கீழ் உலகத்தின் ஆட்களையே நியமிக்கிறது. அதன்மூலம் மேலுலகம் ஆளும் வர்க்கமாகவும், கீழுலகம் அடிமை வர்க்கமாகவும் மாறுகிறது. ஒரு உலகத்திலிருந்து மற்றொரு உலகத்துக்கு செல்வது தண்டனைக்குரிய குற்றமாகிறது.
இந்த நிலையில் தான் படத்தின் ஹீரோ தனது கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான். சிறுவயதில் இருவரும் மலையுச்சியில் சந்திக்கும்போது காவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு பிரிகின்றனர். அதில் ஹீரோயினின் தலை மலையுச்சியிலுள்ள பாறையில் மோதி காயமடைகிறாள். அதன்பிறகு ஹீரோயினைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்காத ஹீரோ பல வருடங்கள் கழித்து டிவியில் அவளைப் பார்க்கிறான். அவள் இன்னும் உயிரோடு இருப்பதைப் பார்த்து சந்தோஷமடைந்து, அவளை சந்திப்பதற்காக மேல் உலகம் செல்ல முடிவெடுக்கிறான். அதற்காக ட்ரான்ஸ்வேர்ல்டு கம்பெனியில் வேலைக்குச் சேருகிறான்.
அவன் ஹீரோயினைப் பார்த்தானா ? அம்னீசியாவால் பாதிக்கப்பட்ட ஹீரோயினுக்கு ஹீரோவை ஞாபகம் வந்ததா ? அவர்கள் எப்படி சேர்ந்தார்கள் என்பதை உப்புச் சப்பில்லாமல் தேமேவென முடிக்கிறார்கள்.
படத்தில் கவர்ந்த முதல் விஷயம் ஒளிப்பதிவும், ப்ரடக்சன் டிசைனும் தான். அடாடா. இரண்டு உலகங்களையும் காண்பிப்பதில் ஏகத்துக்கும் மெனக்கெட்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவு கண்ணில் எடுத்து ஒத்தி வைத்துக்கொள்ளலாம் போல அவ்வளவு அருமையாக இருந்தது. ஸ்டன்னிங் விசுவல்ஸ். அதற்காகவேனும் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
படம் முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகும், நமக்கு இந்த உலகம் ஒருமாதிரி தலைகீழாக எல்லாம் குழப்பமாகத் தெரிவதே படத்தின் சாதனை. மிதப்பது போலவும் தோன்றும். அத்தனைக்கும் ஒளிப்பதிவாளரும், ஆர்ட் டைரக்டரும் தான் காரணம். இந்த மாதிரி பொட்டன்ஷியல் உள்ள ஒரு கான்செப்டை வைத்து, அருமையான ஒரு அட்வெஞ்சர் படத்தையோ அல்லது ஆக்சன் படத்தையோ கொடுத்திருக்கலாம். ஆனால் இயக்குனர் ஒரு ரொமான்டிக் ட்ராமாவோடு திருப்தியடைந்து நம்மை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குகிறார்.
படத்தில் சில புத்திசாலித்தனமான காட்சிகளும் இல்லாமலில்லை. உதாரணத்திற்கு ஹீரோ, மேல் உலகத்துக்கு சென்றிருக்கும் போது (நான் முன்பு சொன்ன இரும்பு ஜெர்கின் அணிந்துகொண்டு) ஒரு பாத்ரூமிற்குள் சென்று நம்பர் ஒன் போவார். அவரும், அவர் சார்ந்த பொருட்களும் இன்வெர்ஸ் மேட்டர் என்பதால் கீழுலகத்தின் புவியீர்ப்பு விசைக்குதான் அவை கட்டுப்படும். அவருடைய சிறுநீர் தலைகீழாக மேற்சுவரை நோக்கி விழும். அதாவது காலிலிருந்து (எக்ஸாக்டா வேறதான் சொல்லனும்) தலைக்கு மேலாக சென்று மேற்சுவரில் விழும். ஃபன்னியான சீன் அது.
அதேபோல ஃப்ளோர் ஜீரோவில் வரும் காட்சிகள் அனைத்தும் அற்புதம். எப்படி இந்தக் காட்சிகளையெல்லாம் படமாக்கினார்கள் என்ற ஆர்வம் கண்டிப்பாகப் படம் பார்க்கும் அனைவருக்கும் வரும். அதெல்லாமே அருகருகே போடப்பட்ட இரண்டு செட்களை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள். பின்பு எடிட்டிங்கின்போது இரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டன. க்ரீன் ஸ்க்ரீன் டெக்னாலஜி மூலம் பல காட்சிகளை எடுத்திருக்கின்றனர். ஆனாலும் மனதைக் கவரும் வகையில் காட்சியமைப்பு இருக்கும்.
அதேபோல லாஜிக் மிஸ்டேக்குகள் படம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. எனக்குத் தோன்றிய முதல் டவுட் என்ன தெரியுமா ? படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் சேர்ந்து கட்டியணைப்பது போல பல காட்சிகள் வரும். மேட்டரும், இன்வெர்ஸ் மேட்டரும் ஒன்று சேர்ந்தால் எரியும் என்ற மூன்றாவது விதி எங்கே போனது என்ற சந்தேகத்துக்கு படம் முழுவதும் விடையே இல்லை. அதற்குப் பதிலாக ஹீரோயின் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி மேலும் அதிர்ச்சியையே அளித்தனர்.
இன்னும் பல கோக்குமாக்கான கேள்விகளெல்லாம் தோன்றியது. அவற்றையெல்லாம் சொன்னால் இது 18+ பதிவாகிவிடும் என்பதால் இத்துடன் முடித்துக்கொள்வோம். படத்தை நீங்களும் பார்த்து, ஐயகோ இவ்வளவு அருமையான கான்சப்ட் வீணாகிவிட்டதே என்ற ஆதங்கத்தைப் பெறுங்கள்.
படத்தைப் பார்த்தவுடன் முடிந்தால் இந்த ஷார்ட் அனிமேஷன் படத்தையும் பார்த்துவிடுங்கள். மொத்தம் 10 நிமிடம் தான். ஹார்ட் டச்சிங் அனிமேஷன். Upside Down படத்தின் கான்செப்டிற்கும் இந்த அனிமேஷன் படத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.
Upside Down (2012) - Two worlds. One future.
பி.கு:
1.அடுத்த பதிவிலிருந்து, ஒரு பதிவுக்கு 2 அல்லது 3 படங்கள் வரை அலசுவோம்.
2.இது என் சொந்தக்கருத்து மட்டுமே. உங்களுக்குப் படம் பிடித்திருந்து மாற்றுக்கருத்து இருந்தால் வரவேற்கிறேன்.
3.இந்தப்பதிவில் இந்தப்படம் பற்றிய கமெண்டுகளை மட்டுமே இடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்த பகுதி
அடுத்த பகுதி
தொடரும்-
I also have some doubts .. adha sonna idhu 18+ comment aaidum .. so sollala ..
ReplyDeleteஎனக்கு நீ என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுருச்சி மச்சி. ஆனா அத இங்கே சொன்னா 18+ ரிப்ளை ஆயிரும்.. அதனால சொல்லல.. :P :)
Deleteசினிமா கிழவிக்குக் கூட தற்கொலை செய்து கொள்பவர்கள் உண்டு... ஹா... ஹா... மிட்டாய்க் கதை நல்ல சுவை... ஹிஹி...
ReplyDeleteஒரு சேஞ்சுக்காகத்தான் கதையை அப்டி மாத்தி சொன்னேன். எத்தினி நாளைக்கு தான் ஹீரோ சாகறது..!!
Deleteவருகைக்கு மிக்க நன்றி தலைவரே..!!
அப்படியே மேட்ரிக்ஸ் 2,3.. etc பற்றியும் சொல்லிடுங்க. இல்லன்னா 1st part மெகா ஹிட்டாகி மத்ததெல்லாம் மொக்கையான திரைப்படங்கள் னு ஒரு தொடர் எழுதலாம்...
ReplyDeleteஉங்க ஐடியாவுக்கு ஆயுசு 100..!! ஆக்சுவலா இதோ இந்தப்பதிவுல இந்த ஐடியாவ ஆல்ரெடி சொல்லியிருந்தேன்..
Deletehttp://killadiranga.blogspot.com/2013/11/3-blood-and-icecream-trilogy-worlds-end.html
சரி.. வேணாம்... பாவம் படிக்கிறவங்கனு விட்டுட்டேன்..ஹிஹி..!!
கில்லாடி ரங்கா கில்லாடி தனமா தன்னை உள்நுழைத்த விதம் சூப்பர் படம் பார்க்கலை ப்ரோ பார்ப்போம்
ReplyDeleteஹிஹி.. சும்மா ஒரு பீலிங்க்சு தல..வேறொன்னுமில்ல..!! படம் பாருங்க.. ஒருதடவை பாக்கலாம்.. !!
Deleteஅடுத்த பாகமும் படிச்சுட்டேன்... பை தி பை, இந்த பதிவின் கடைசியில் இருக்கும் ""அடுத்த பகுதி""க்கு அடுத்த பதிவுக்கான லிங்க் கொடுங்க... இல்லேன்னா, அடுத்த பதிவை படிக்க முடியாம மக்கள் ஏங்குவாங்க...
ReplyDeleteஞாபகப்படுத்துனதுக்கு மிக்க நன்றி தல.. மறந்தேபோனேன்.. இப்போ லிங்க் கொடுத்திட்டேன்.. :)
DeleteAnna time travel series next part eppo
ReplyDeleteஅத விட்டு ரெண்டு வருஷம் ஆச்சி...!! :) :) இருந்தாலும் மறுபடியும் ரீபூட் பண்ண முயற்சி பண்றேன்..!!
Delete