Nov 2, 2013

2 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை

 

முன்குறிப்பு: இந்தப்பதிவு முகநூல் நண்பர் மதுரனுக்கு சமர்ப்பிக்கப் படுகிறது. கிட்டத்தட்ட இந்த தொடர்பதிவையே கைவிடும் நிலையில் இருந்த என்னை மறுபடியும் எழுத உற்சாகப்படுத்தியது அவர் தான். அவ்வளவு எளிதாக நீங்களும் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. அனுபவியுங்கள்..

டைம் ட்ராவல் என்பது சாத்தியமே என்று பெரிய பெரிய இயற்பியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்றவர்கள் இதற்கென பல இயற்பியல் விதிகளையும், வழிமுறைகளையும் சொல்லியுள்ளனர். ஆனால் எதுவுமே இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எல்லாம் தியரி அளவிலேயே இருக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் டைம் ட்ராவல் சாத்தியமே இல்லை என்றும் அதற்கான காரணங்களையும் பட்டியலிடுகின்றனர். அந்தக் காரணங்களில் டைம் ட்ராவலால் ஏற்படும் முரண்பாடுகளை அதாவது பேரடாக்ஸ் (Paradox) விளக்குகின்றனர். இப்படி பல முரண்பாடுகள் இருப்பதால் டைம் ட்ராவல் சாத்தியமற்றது எனக் கூறுகின்றனர். டைம் ட்ராவலை ஆதரிக்கும் இயற்பியலாளர்கள் அதற்கும் பதில் வைத்துள்ளனர். எப்படியெல்லாம் இந்த முரண்பாடுகளைத் தவிர்க்கலாம் என்று வழிமுறைகளையும் வகுத்துள்ளனர்.

வெறும் டைம் ட்ராவல் என்றால் அதில் எந்தவொரு சுவாரசியமும் இருக்காது. அருண் 2013ல் இருந்து 2050க்கு சென்றான். அங்கே அமெரிக்க ஜனாதிபதி ஆண்டிச்சாமியைச் சந்தித்தான். அங்கிருந்து பிறகு 1940க்கு சென்றான். அங்கே காந்தியைச் சந்தித்தான். பிறகு மீண்டும் 2013க்கு வந்துவிட்டான் என்று கதை கூறினால் ரொம்பவே போரடிக்கும். அப்படி டைம் ட்ராவல் பண்ணியதால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வந்தன அவற்றை அருண் எப்படி சமாளித்தான் என்று கூறினால் தான் சுவாரசியம் வரும். அப்படி ஹாலிவுட் திரைப்படங்களும் பேரடாக்சை மையப்படுத்திதான் வருகின்றன. அதனால் இன்றைய பதிவில் ஒருசில பேரடாக்சை பார்த்துவிட்டு கூடவே அதற்குண்டான உதாரணப் படங்களையும் பார்த்துவிடலாம்.

1.Grandfather Paradox:

இந்த பாராடாக்ஸ் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். முக்கால்வாசி டைம் ட்ராவல் படங்களில் இந்தப் பிரச்சனையை மையமாக வைத்துதான் கதை நகரும். இந்த பாரடாக்ஸ், ஒருவன் டைம் ட்ராவல் மூலம் கடந்த காலத்துக்கு சென்று தனது தாத்தாவையே கொல்ல முடியுமா ? இதன் மூலம் எழுகின்ற கேள்விகள் எண்ணற்றவை. 

2013ல் அருண் என்று ஒரு பையன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு அவனுடைய தாத்தாவை சுத்தமாகப் பிடிக்காது. வாய்ப்பு கிடைத்தால் கொல்லக்கூடத் தயங்க மாட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவனுடைய தாத்தா அவன் பிறக்கும் முன்பே 1990ல் இறந்துவிட்டார். இதனால் தன் கையாலயே அவரைக் கொல்லவேண்டும் என்று வெறியில் இருக்கிற அருண் டைம் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து 1950க்கு செல்கிறான். அப்போது தாத்தாவுக்கு கல்யாணமே ஆகியிருக்கவில்லை. அந்த சமயத்தில் சிறுவயது தாத்தாவை அருண் தான் கொண்டு சென்ற துப்பாக்கியின் மூலமாக சுட்டுக் கொன்றுவிடுகிறான். பிறகு திரும்பி 2013க்கே வந்துவிடுகிறான்.

இப்போது இதில் எழும் சந்தேகங்களைப் பாருங்கள். அருண் தாத்தாவைக் கொன்றுவிட்டால் அவர் இறந்துவிடுவார். அதனால் அவரால் திருமணம் செய்துகொள்ள முடியாது. குழந்தைகள் எதுவும் பிறக்க முடியாது. அப்படி இருக்கும்போது அருணைப் பெற்ற அப்பாவும் பிறக்க வாய்ப்பு இல்லை. அருணுடைய அப்பாவே பிறக்க வாய்ப்பில்லாத போது அருண் பிறப்பதற்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை. அருணே இந்த உலகத்தில் இல்லாதபோது அவனுக்கு எப்படி அவனுடைய தாத்தாவின் மேல் வெறுப்பு வரும். எப்படி கடந்தகாலத்துக்கு செல்லமுடியும். இல்லாத அருணால் இறந்த காலத்துக்கு சென்று தாத்தாவைக் கொல்ல முடியாததால் தாத்தா உயிருடன் இருப்பார். அருணின் அப்பாவைப் பெற்றெடுப்பார். அருண் பிறப்பான். தாத்தா மேல் வெறுப்பு வரும். திரும்பி பழையபடி முதலில் இருந்து கதையை சொல்லவேண்டி வரும்.

இப்படி இந்தக்குழப்பம் வருவதால் கடந்த காலத்துக்கு பயணிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒரு விடயம் என்று ஒரு சாரார் கூறிவருகின்றனர். இதற்கு அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்து எப்படியெல்லாம் இந்த முரண்பாட்டைத் தடுக்கலாம் அல்லது தடுக்கப்படுகிறது என்று கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு பதிலைச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் ஆளாளுக்கு ஒரு தியரியை யோசித்து, இப்படித்தான் நடக்க வாய்ப்பிருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்தால் ஒவ்வொன்றிற்கும் ஒரு பதிவு வேண்டும். அப்படி எழுதினால் ஓடிவிடுவீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, பாரடாக்சை தவிர்க்கும் ஒருசில வழிமுறைகளை மட்டும் காண்போம்.


*Novikov self-consistency principle - இந்தக் கருத்துப்படி அருண் கடந்த காலத்துக்குப் போய் பண்ணுகிற அத்தனை விடயங்களும் வரலாற்றில் முன்பே இடம்பெற்றவை தான். அதாவது அருண் டைம்ட்ராவல் பண்ணுவதற்கும் முன்பே இவையெல்லாம் நடந்துவிட்டன. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் விதி என்று கூறலாம். அருண் கடந்தகாலத்துக்குப் போயே தீருவான். அவன் அங்கு நடத்த வேண்டிய செயல்கள் அத்தனையும் நடக்கும். அதனால் ஏற்படுகின்ற மாற்றங்களும் முன்பே நடந்த ஒரு விடயமாகத்தான் இருக்கும். இந்த தியரிபடி அருணால் அவனது தாத்தாவைக் கொல்லவே முடியாது. அவன் துப்பாக்கியை எடுத்து சுடும்போது ட்ரிக்கர் வேலை செய்யாமல் இருந்திருக்கலாம். குறி தப்பி இருக்கலாம். ஏதாவது நடந்து அவன் தாத்தா உயிரோடு தப்பியிருந்திருப்பார். அப்பொழுதுதானே அருண் பிறக்க முடியும். ஆனால் இந்த தியரிப்படி இந்த பாரடாக்சை வேண்டுமானால் தடுக்கமுடியும். Bootstrap paradox என்ற மற்றொரு பாரடாக்சை ஏற்படுத்தக் காரணமாகிவிடும். அதைப்பற்றிப் பிறகு பார்ப்போம்.

*Multiple universes - இந்த தியரிப்படி அருண் கடந்தகாலத்துக்கு செல்லும்போதே வேறொரு யுனிவெர்சுக்குள்தான் போவான். தாத்தாவைக் கொன்றாலும் அருணுக்கு எதுவும் ஆகாது. ஏன் என்றால் அவன் கொல்லுவது பேரலல் யுனிவெர்சில் இருக்கும் தாத்தாவைத் தான். அப்படிக் கொன்றது மூலமாக அந்த பேரலல் யுனிவெர்சில் பிறக்கப்போகும் அருண் பிறக்க மாட்டான். ஆனால் ஒரிஜினல் அருணுக்கு எதுவும் ஆகாது. அந்த பேரலல் யுனிவெர்ஸ், அருண் என்று ஒருவன் இருந்ததையே அறியாமல் வழக்கம்போல இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால் இதில் உள்ள சிக்கல், பேரலல் யுனிவெர்சில் உள்ள அருண் திரும்பி பத்திரமாகத் தன்னுடைய யுனிவெர்சுக்கு வரமுடியுமா என்பதே!! அதே போல அருண் செய்கிற ஒவ்வொரு மாற்றங்களுக்கும் ஒரு யுனிவெர்ஸ் உருவாகும் என்றால் கோடிக்கணக்கான யுனிவெர்ஸ்கள் உருவாக வாய்ப்புண்டு. அதையெல்லாம் யோசித்துக் கொண்டே சென்றால் இன்னும் குழப்பங்களே மிஞ்சும்.

*Destruction resolution - இந்த தியரிப்படி அருண் தன்நுடைய தாத்தாவைக் கொன்றுவிட்டால் அருணும் அழிந்துவிடுவான். அவனுடன் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களும் அழிந்துவிடும். அவனும், அவன் தாத்தா வரையிலான பரம்பரையும் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும். ஆனால் இங்கே ஒரு கேள்வி எழும் ? அப்படி அருண் தன்னுடைய தாத்தாவைக் கொன்றுவிட்டால் அவன் பிறக்கவே முடியாதே. பிறகு எப்படி அவன் கடந்தகாலத்துக்கு சென்று தாத்தாவைக் கொல்ல முடியும் ? என்று கேட்டால் அதற்கு அவனுடைய தாத்தா வேறு ஏதாவது காரணம் மூலமாக இறந்திருப்பார் என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கின்றனர். இன்னும் துருவித் துருவி நுட்பமாகக் கேள்விகள் கேட்டால், அப்படி இந்த மாதிரி பேரடாக்ஸ் ஏற்பட்டால் அது ஏற்பட்ட யுனிவர்சே அழிந்துவிடும் என்று கூறுகின்றனர். அருண் தன்னுடைய தாத்தாவைக் கொல்லும்போது, தான் அழிவதற்கான சூழ்நிலையை அவனே ஏற்படுத்தி விடுகிறான். அதனால் அவன் உட்பட அந்த யுனிவெர்சே அழிந்துவிடும் என்று கூறுகின்றனர்.

இதைத் தவிர, இந்த க்ராண்ட்ஃபாதர் பேரடாக்சை தடுப்பதற்கு இன்னும் ஏராளமான வழிமுறைகள் வைத்துள்ளனர். அவற்றில் இவை மூன்று மட்டுமே முக்கியமானவை என்பதால் மற்றவற்றை உங்கள் தேடுதலுக்கே விட்டு விடுகிறேன்.

 

இப்போது இந்த பேரடாக்சை மையமாக வைத்து வந்துள்ள ஒரு படத்தை உதாரணமாகப் பார்ப்போம். எல்லோருக்கும் மிக நன்றாகத் தெரிந்த ஒரு உதாரணம் Back to the future series. இந்தப்படத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அதேபோல இந்தப்படத்தைப் பிடிக்காது என்று கூறுபவர்களும் இருக்க முடியாது. டைம் ட்ராவலை மையமாக வைத்து வந்து வசூலில் சக்கைப்போடு போட்ட அட்டகாசமான அட்வெஞ்சரஸ் சீரிஸ் இது. பாமர ரசிகர்களுக்கும்(!!) புரியும் வகையில், மிகச் சுலபமான க்ராண்ட்ஃபாதர் பேரடாக்சை பிரச்சனையாக வைத்துக்கொண்டு டைம் ட்ராவலில் சுவாரசியத்தைக் கூட்டி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது என்றால் மிகையாகாது. டைம் ட்ராவலில் அதற்கு பிறகு பல சிக்கலான பேரடாக்சுகள் பற்றிய படங்கள் வந்துவிட்டாலும் அவை எல்லாவற்றிற்கும் முன்னோடியாய் அமைந்தது இந்தப் படங்களே.

மார்டி மெக்ஃப்ளை என்பவன் 1985லிருந்து டைம் ட்ராவல் மூலமாக 1955க்கு செல்கின்றான். அப்போது அவனுடைய அம்மா, அப்பாவிற்கு திருமணமே ஆகியிருக்கவில்லை. அங்கு ஒரு கார்விபத்தில் சிக்கவிருந்த அவனுடைய சிறுவயது அப்பாவைக் காப்பாற்றுகிறான். ஆனால் கார் அவன்மீது மோதிவிடுகிறது. மோதிய கார் அவனுடைய அம்மாவின் அப்பாவுக்கு (தாத்தா) சொந்தமானது. அடிபட்டதால் மார்டியை வீட்டுக்கு எடுத்துச்செல்கிறார். அங்கே அவனுக்குப் பணிவிடை செய்கிற அவனுடைய அம்மாவிற்கு, அவன் மீதே காதல்வர பிரச்சனை ஆரம்பிக்கிறது. நியதிப்படி அவனுடைய அம்மாவும், உண்மையான அப்பாவும் திருமணம் செய்துகொண்டால்தான் அவன் பிறக்க முடியும். ஆனால் அவனுடைய அம்மா அவன் மீது காதல்கொண்டதால் அவனும், அவனுடைய சகோதர,சகோதர்களும் பிறப்பதற்கான வாய்ப்பு குறைகிறது. இது க்ராண்ட்ஃபாதர் பாரடாக்சின் மாறுவடிவம். அதன்படி ஒருவேளை அவனுடைய அம்மா அவனையே திருமணம் செய்தால் அவன் பிறக்க வாய்ப்பில்லாமல் போய்விடுமல்லவா ?

மார்டி டைம் ட்ராவல் செய்யாமலிருந்தால் அவனுடைய அப்பா தான் அந்த விபத்தில் சிக்கியிருப்பார். அதன்மூலம் அவர்கள் காதல்வயப்பட்டு திருமணம் செய்திருப்பார்கள். ஆனால் மார்டி டைம்ட்ராவல் செய்து சம்பவங்களை மாற்றிவிட்டதால் பேரடாக்சை ஏற்படுத்தி விட்டான். அதிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி மீண்டும் தன்னுடைய அம்மாவை தன்னுடைய அப்பாவின்மீது காதல்கொள்ள வைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளே மீதிப்படம். இதில் இந்த பேரடாக்சிற்கான வழிமுறைகளாக Novikov self-consistency principle, Destruction resolution இரண்டையுமே உபயோகப்படுத்தி இருப்பார்கள்.

கதைப்படி மார்டி மெக்ஃப்ளை டைம்ட்ராவல் செய்வதும், அவனுடைய அம்மா, அப்பா காதலில் விழுவதற்கு உதவி செய்வதும் முன்பே நடந்த ஒரு விஷயமாகத்தான் காட்டப்படும். இது இரண்டாம் பாகம் பார்க்கையில் தெரிய வரும். அதேபோல அப்படி அவனது பெற்றோரைக் காதலில் விழவைக்கும் முயற்சி பலிக்காமல் போய்விட்டால் அவனும், அவனது சகோதரர்களும் மறைந்துவிடுவார்கள் என்பதும் சொல்லப்பட்டிருக்கும். ஆக இரண்டு வழிமுறைகளையுமே வைத்து அற்புதமான ஃபேமிலி என்டர்டெயினரைக் கொடுத்திருப்பார்கள். முதலிரண்டு பாகங்களும் பட்டையைக் கிளப்பும். மூன்றாம் பாகம் மட்டும் சற்றே போரடிக்கும். அதுவும் முதலிரண்டு பாகங்களோடு கம்பேர் செய்யும்போதுதான். மற்றபடி அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.

இந்தப்படம் உட்பட முக்கால்வாசி டைம்ட்ராவல் படங்களில் இந்த பேரடாக்ஸ் கையாளப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் பின்னாடி ஒவ்வொரு படமாக விரிவாகப் பார்க்கையில் பார்த்துக்கொள்ளலாம். இந்தப்பதிவில் இந்த ஒரு பேரடாக்ஸ் மட்டும்தான் விரிவாகப் பார்க்க முடிந்தது. அடுத்த பதிவில் Bootstrap paradox என்ற மற்றொரு பேரடாக்சை விரிவாகப் பார்க்கலாம்.

இதுவரை, கடந்தகாலத்திற்கு பயணம் செய்வது முடியாத காரியம் என்று கூறப்படுவதற்குக் காரணம், அப்படி பயணம் செய்யமுடிந்தால் இந்நேரம் எதிர்காலத்திலிருந்து யாராவது வந்திருக்கவேண்டும். அப்படி யாரும் இதுவரை வரவில்லை என்று ஒரு சாரார் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அப்படி சொல்பவர்களுக்கு நச்சென்று ஒரு ஆதாரத்தை எடுத்துக் காண்பித்து "இதோ நீங்கள் கேட்ட எதிர்காலத்திலிருந்து பயணித்து கடந்தகாலத்துக்கு வந்த ஒருவரின் வீடியோ ஆதாரம். இப்போது என்ன சொல்கிறீர்கள் ?" என்று கேட்டால் எப்படி இருக்கும். அதுவும் அந்த வீடியோ ஆதாரம் ஒரு பிரபலமான திரைப்படம் என்றால் எப்படி இருக்கும் ? அப்படி உண்மையிலேயே ஒரு ஆதாரம் இருக்கிறது. அது என்னவென்று யோசித்துக்கொண்டே கூகுளாண்டவரை சரணடையுங்கள். அடுத்த பதிவில் அந்த ஆதாரம் பற்றியும் விரிவாகக் காண்போம்.

20 comments:

  1. அப்படி என்னங்க உங்களுக்கு அருணோட கோபம்...? (யாரு அருண்?)... க்ராண்ட்பாதர் பரடாக்ஸ்... அருமை! இன்னும் கொஞ்சம் டீப்பா போயிருந்தா கத கந்தல் ஆகியிருக்கும். சட்டுபுட்டுனு அடுத்த பதிவையும் ஏத்திடுங்க... காரணம் இந்த மாதிரி மண்டை குழம்புற விடயங்கள் காலந்தாழ்த்தி போடுவதால் மக்களுக்கு புரியுறது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இதோ இந்த வார இறுதிக்குள் அடுத்த பதிவையும் போட்டு விடுகிறேன் அண்ணா.. :) :)

      Delete
  2. தொடர்ந்து எழுதுங்க ,எந்த நிலையிலும் சோர்வடைந்து நிறுத்திடாதீங்க,நாளை யாராவது படம் பார்த்துட்டு தேடுகையில் இந்த கட்டுரை படிக்க கிடைச்சா,அட நாம் பார்த்து வியந்ததை இவர் முன்னமே எழுதிருக்காரேன்னு தேடி படிப்பாங்க.

    ReplyDelete
    Replies
    1. நீங்க இதேமாதிரி ஒவ்வொரு முறை வந்து உற்சாகப்படுத்தும்போதும் பக்கு பக்குனே இருக்கு.. இன்னும் நல்லா எழுதனுமே நல்ல விஷயங்களை எழுதனுமேனு தோணுது..!!
      மிக்க நன்றிண்ணா..!!

      Delete
  3. Replies
    1. நன்றி. மீண்டும் வருக.

      Delete
  4. Best one machi ... Nee ellam nalla varuva nu yaru machi sonnadhu ..
    Nalla vandhutta da .. nalla vandhutta ..

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி.. தேங்க்ஸ் மச்சி.. :)

      Delete
  5. இதுதான் போலி விஞ்ஞானம். நடக்க முடியாதவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து நேரத்தையும் பணத்தையும் வீண் பண்ணுவது இப்படித்தான்.

    ReplyDelete
    Replies
    1. நேற்றைக்கு சாத்தியமில்லைனு நினைச்ச பல விஷயங்கள் இன்னைக்கு அறிவியலால் சாத்தியமாகி இருக்கு. அதே மாதிரி இதுவும் நாளைக்கு சாத்தியமாகலாம். சுவாரசியம் கருதி இங்கே டெக்னிகல் விஷயங்களைத் தவிர்த்து விட்டேன். மற்றபடி பல ஆராய்ச்சிகள் டைம் ட்ராவல் பற்றி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இது வீண் ஆராய்ச்சி இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா..!!

      Delete
  6. Well done Brother, very detailed research. Plz publish sequels of this article as soon as possible..

    ReplyDelete
    Replies
    1. Thank you bro, Will post next part very soon.

      Thanks for the visit and comment bro.. :)

      Delete
  7. Time travel to the past has not been justified in (mathematical) theory. Hawkins, Einstein and other physicists have put forward the theoretical possibility of time travel to the FUTURE (by travelling in higher speed or moving near a highly gravitational object) only.

    What I think is, travel to the past would be theoretically impossible bcz of the paradoxes u have mentioned above. Actually, for the grandfather paradox to work, one doesn't have to kill his/her grandfather. According to butterfly effect, whatever u do in the past may produce drastic effects in the presence. This includes all activities: walking disturbs the objects on the floor, moving disturbs the air, even ones presence/existence blocks the light rays that cud have been travelling there. These may seem tiny, but may cause drastic effects after decades in the presence. So, this means, one cannot travel to past, exist in past or even observe the past (as even observation causes a change in the environment) to avoid this paradox. But parallel universe (quantum worlds) theory seems a good alternative to this.

    ReplyDelete
    Replies
    1. Thanks for the visit and comment bro..!!

      Yes. I totally agree with you. Time Travel to the past is not possible, until the concept of parallel universe comes. Even though what i think is, it'll be so much complicated. Coz as you described, for each and every change the time traveller do in the past, it'll create a parallel universe which makes it more complicated. It's totally chaos. So I think we can see the past like a cinema but can't change it.

      Thanks for your knowledge sharing. It's greatly appreciated. Thank you once again. :)

      Delete
  8. மிக விறுவிறுப்பாக இருந்தது தல , நல்ல வேலை இன்னைக்கு படிப்பதால் அடுத்த பகுதி இருக்கு அங்க போயினே இருக்கேன், அப்புறம் அருண் எப்படி இங்கனு நீங்க சொன்னது கிக்கி பிக்கி :) ;)

    ReplyDelete
    Replies
    1. நீங்க மறுத்தாலும் அருண் கேரக்டர் பேரு வந்தது உங்க கதைலருந்து தான்..ஹிஹி.. :)

      Delete
  9. இப்பதான் படிச்சன் மண்ட காயுது...

    ReplyDelete
    Replies
    1. இதுக்கேவா..??!! மண்ட காஞ்சு முடியப் பிச்சுக்கற அளவுக்குலாம் பாரடாக்ஸ் இருக்கு தல..!!

      Delete
  10. \\அங்கு ஒரு கார்விபத்தில் சிக்கவிருந்த அவனுடைய சிறுவயது அம்மாவைக் காப்பாற்றுகிறான்\\
    actually marty avanoda appa,vathan accidentla irunthu kappathuva

    ReplyDelete
    Replies
    1. அட.. ஆமாம்பா.. சரியா நெத்திப்பொட்டுல அடிச்ச மாதிரி எடுத்துக்காட்டிட்டீங்க.. பாத்து ரொம்ப நாளாச்சா அதான் மறந்துபோய் மாத்திட்டேன்..!! இப்போ சரி பண்ணிட்டேன் பாருங்க..

      மிக்க நன்றி தவறை சுட்டிக் காட்டியதற்கு.. :)

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *