Jun 16, 2013

அப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்




“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத்மா தன்னை எவ்வளவு இழக்கிறது. தந்தையைப் பற்றி புரிந்துகொண்டு வாழ்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேருக்கு புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஒருவனுக்கு அப்பாதான் எல்லாம். நான் என் அப்பாவைப் புரிந்துகொள்ளவும், எனக்கு எல்லாவுமாய் என் தந்தை இருந்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளவுமே எத்தனையோ ஆண்டுகள் ஆனது”

இது ‘தவமாய் தவமிருந்து’ படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு வசனம். தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்தே தாய்க்குக் கொடுத்த ஒரு முக்கியத்துவத்தை தந்தைக்குக் கொடுக்க தவறி வந்துள்ளது. தாய்-மகன், தாய்-மகள் சென்டிமென்டையே எப்போதும் உபயோகப்படுத்தி வந்திருக்கிறது. தந்தை-மகள் பாசம் கூட நிறைய படங்களில் சொல்லி இருக்கிறார்கள்(அபியும் நானும்). ஆனால் ஒரு மகனுக்கும் தந்தைக்கும் இடையேயான அன்பை, பாசத்தைச் சொல்லிய படங்கள் மிகவும் குறைவு. அந்த வகையில் தவமாய் தவமிருந்து ஒரு முக்கியத்துவம் வாய்ந்த படம் எனலாம். வாரணம் ஆயிரம், யாரடி நீ மோகினி(முதல் பாதி) என வேறு சில படங்களும் அப்பாவைப் பற்றிப் பேசுவதற்கு இப்படம் ஒரு முன்னோடியாக அமைந்தது.

நம் தமிழ்ச் சமூகத்தில் கூட அப்பா என்றால் கண்டிப்பானவர் என்ற பதமே பதிக்கப்படுகிறது. குழந்தைகள் எல்லோரும் அம்மாவிடம்தான் நெருங்கிப் பழகுகிறார்கள். குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம் தாண்டி, கல்லூரி செல்லும் வயதில் தான் தந்தை நம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறார். அப்போது கூட நிறைய சிக்கல்கள் ஏற்படும். கல்லூரிப் பருவத்தையும் தாண்டி குடும்ப வாழ்க்கையில் ஒருவன் ஈடுபடும் போதுதான் தனது தந்தையை முழுமையாகப் புரிந்து கொள்கிறான். தான் தந்தையாகும் போதுதான் அவனது தந்தையின் அருமையைப் புரிந்து கொள்கிறான்.

என் அப்பா சிறுவயதிலேயே தாயை இழந்தவர். என் தாத்தாவின் வளர்ப்பில் கிராமத்தில் வளர்ந்தவர். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் பணத்தட்டுப்பாடு நிறைந்த சூழ்நிலை. ஒரு நாளைக்கு இருவேளை சாப்பாடு என்பதே அதிகம். அந்த மாதிரி சூழ்நிலையில் மிகுந்த சிரமத்துக்கிடையில்தான் படித்தார். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் படிப்பை மட்டும் அவர் கைவிட வில்லை. படிப்பிலும் மிகுந்த கெட்டிக்காரர். பியூசி முடித்த பிறகு அடுத்ததாக கல்லூரியில் சேர முயற்சி செய்தார். பணம் நிறைய செலவாகும் என்பதால் தனது மற்ற தேவைகளைக் குறைத்துக் கொண்டார்.

B.Sc(Chemistry) 3 வருடங்கள் எவ்வளவு கஷ்டங்களுக்கிடையில் படித்தார் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. தினமும் ஒரு வேளை தான் சாப்பாடு. இரவு தூங்குவதற்கு முன்பு வயிறு நிறைய தண்ணீர் குடித்து விட்டு தூங்குவார். சில நாட்கள் உறவினர் ஒருவரது வீட்டில் இருந்து படிப்பைத் தொடர்ந்தார். ஆனால் உறவினர்கள் மிகவும் கேவலமாக நடத்தியதால் பிறகு அரசு நடத்திய ஒரு விடுதியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். அவரது கல்லூரி வாழ்க்கையில் எந்தளவுக்கு கஷ்டப்பட்டார் என்பதற்கு அவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு அனுப்பிய கடிதங்களே சாட்சி.

“ஒரே ஒரு சட்டை பேன்ட் மட்டுமே துவைத்து துவைத்துப் போடுவதால் கிழியும் நிலையில் இருக்கிறது. கல்லூரியில் ஏளனப்படுத்துகிறார்கள். சாப்பாடு ஒருவேளை மட்டுமே உண்ண முடிகிறது. ஏதோ நண்பர்கள் உதவியால் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். அதுகூட பரவாயில்லை. புத்தகங்கள் இப்போது நூலகத்தில் இருந்து தான் பயன்படுத்துகிறேன். ஆனால் தேவையான நேரத்தில் புத்தகங்கள் இருப்பதில்லை. ஸ்காலர்ஷிப் வந்தால் புத்தகங்கள் வாங்குவதற்கு செலவிடலாம் என்றிருக்கிறேன். அங்கு தாங்களும் தம்பி, பாப்பாவும் (தங்கை) நலமாக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையிலேயே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”

இது மாதிரி ஏராளமான கடிதங்கள் அவர் அனுப்பி இருந்தாலும் இப்போது என்னிடம் இருப்பது இந்த ஒரே ஒரு கடிதம் மட்டுமே. ஒரு மனிதனுக்கு எந்தளவுக்கு படிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் சாப்பாடு, பணம், வெளித்தோற்றம்,உறவினர்களின் ஏளனம் எல்லாவற்றையும் துச்சமாக எண்ணி இந்த சூழ்நிலையிலும் படிக்க ஆசைப்படுவான். என் அப்பா நினைவாக இன்றளவிலும் நான் பத்திரமாக வைத்திருக்கும் அந்தக் கடிதமே அதற்கு சாட்சி. இன்றும்கூட எனக்கு ஏதாவது கஷ்டம் நேரும்போது அந்தக் கடித்தத்தை எடுத்துப் படிப்பேன். மனசுக்கு தெம்பும், உற்சாகமும், நம்பிக்கையையும் கொடுக்கும்.

இவ்வளவு கஷ்டப்பட்டதாலோ என்னவோ என் அப்பா நிறைய பக்குவப் பட்டிருந்தார். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் பெற்றிருந்தார். யாருக்காகவும் தன் தன்மானத்தை விட்டுக் கொடுத்ததே இல்லை. கல்லூரியில் ஒரே ஒரு சட்டை பேன்ட் மட்டுமே போட்டு சென்று ஏளனத்திற்கு ஆளான போதும் கூட தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர். அன்போடு பழகுபவர்கள் யாராக இருந்தாலும் பாசத்தோடு பழகுவார்.

கல்லூரியில் படிக்கும்போது நடந்த ஒரு சம்பவத்தை என் அப்பா என்னிடம் நிறைய தடவை கூறியிருக்கிறார். வெளியூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு ஒரு வேலை காரணமாக இரவு சென்றிருக்கிறார். நேரமாகி விட்டதாலும், ஊருக்குப் புதுசு என்பதாலும் இரவு அந்த ஊர் பஸ் ஸ்டாண்டிலேயே படுத்து உறங்கி விட்டார். காலையில் எழுந்ததும் நல்ல குளிர்பனி. வெறும் சட்டையில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். அப்போது தான் முதல் முறையாக சிகரெட் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாம். உடனே ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்து இழுத்தாராம்.

ஒரு இழு இழுத்தவுடன் அதன் புகை தாங்காமல் இருமியிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம். “ஒரு குளிரைக்கூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. சிகரெட் பிடிக்க சொல்லி வற்புறுத்துகிறது. கேவலம் ஒரு குளிர் என்னை ஆள நினைக்கிறதே, நான் என்ன அவ்வளவு கேவலமானவனா? இந்தக் குளிருக்கும் புகைக்கும் நான் அடிமையாகக் கூடாது. இவைதான் என் அடிமையாக வேண்டும்” என்று சிகரெட்டைத் தூக்கி எறிந்து விட்டாராம். அன்று எறிந்ததுதான். கடைசி வரை அதைத் தொடவே இல்லை. புகை மட்டுமல்ல வேறு எந்த தீய பழக்கங்களுக்கும் ஆளாகவில்லை. எனக்குத் தெரிந்து சூயிங்கம் கூட மென்றதில்லை.

எனது கிராமத்தில் அப்போது படித்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. விவரம் தெரிந்தவர்களும் மிகக் குறைவு. என் கிராமத்தில் படித்த நிறைய பேருக்கு அடுத்ததாக என்ன படிக்க வேண்டும் என்பதே தெரியாது. அந்த வகையில் படிப்பின் உன்னதம் அறிந்த என் அப்பா நிறைய பேருக்கு உதவி இருக்கிறார். வழி காட்டி இருக்கிறார். இன்று அவர்கள் எல்லாரும் நல்ல நிலையில் இருந்து என் அப்பாவை நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும்போது மனம் அவ்வளவு சந்தோஷப் படுகிறது.

கம்யூனிச சிந்தனையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். தொழிலாளித்துவம் பற்றி நிறைய பேசுவார். சமூக மாற்றங்களில் நிறைய அக்கறை காட்டுவார். என் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். ஒரு சாதாரண மனிதனாக இருந்து கொண்டு தன்னால் ஆன மட்டும் பாடுபட்டிருக்கிறார். என் கிராமத்தில் 5ம் வகுப்பு வரையே பள்ளி உண்டு. அதற்கு மேல் படிக்க வேண்டுமானால் 6 கிலோமீட்டர் நடந்து சென்று பக்கத்து ஊராட்சிக்கு செல்ல வேண்டும். அதுவும் இடையில் ஒரு ஆறு வேறு. மழைக்காலங்களில் போக முடியாது. பஸ் வசதியும் கிடையாது. இத்தனை சிரமங்களையும் முன்பே அனுபவித்திருந்த என் அப்பா அவருக்குப் பிறகு இந்த சிரமத்தை யாரும் அடையக் கூடாது என்றெண்ணினார்.

ஊர் மக்களை ஒன்று திரட்டி அந்த ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு அரசை வற்புறுத்துவதற்கு தேவையான முயற்சிகளை எடுத்தார். அதன் பிறகு அந்த 2 கிராமங்களுக்கிடையே பஸ் வசதி செய்து தர சொல்லி போராடினார். கடைசியில் பாலமும் கிடைத்தது. ஒரு மினி பஸ்ஸும் விட்டார்கள். இப்படி நிறைய பொது விஷயங்களில் ஈடுபாட்டுடன் இருந்தார்.

என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் நடந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் ஆனபிறகு தான் நான் பிறந்தேன். 1991 ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் 4ஆம் தேதி. என் அப்பாவுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. நான் பிறந்த அன்று அவர் எந்தளவு மகிழ்ந்திருப்பார் என்பதை அந்த டைரி மூலமாக(வும்) அறிந்து கொண்டேன். ‘என் செல்வன் இன்று பிறந்திருக்கிறான்’ என ஒரு தந்தையின் அந்த கண நேர மகிழ்ச்சியை ஒரு மகன் உணர்ந்தால் எப்படி இருக்கும். அதை நான் உணர்ந்தேன். தெரிந்து கொண்டேன். எப்பேர்ப்பட்ட பாக்கியவான் நான்.

அப்பாவை வெறுப்பவர்கள் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொண்டால் போதும். தான் பிறந்தபோது தன் அப்பா எவ்வாறெல்லாம் மகிழ்ந்திருப்பார். தன்னை எடுத்து எப்படியெல்லாம் கொஞ்சியிருப்பார் என்று நினைத்தாலே அந்த வெறுப்பு மறைந்து ஓடி விடும். இது ஒரு பிரபல எழுத்தாளரின் சிறுகதையில் கூட வரும்.

நான் சின்ன வயதில் இருந்தே அப்பாவைப் பார்த்தே வளர்ந்தேன். பின்னாடி என் அப்பா போலவே வர வேண்டும் என்ற ஆசையோடே வளர்ந்தேன். ஒவ்வொரு குழந்தையின் வளர்ப்பிலும் தந்தை என்ற பந்தம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. என் முதல் ஹீரோ மனதை விட்டு என்றுமே அகலாத ஹீரோ என் அப்பாதான்.

சிறு வயதில் தினமும் இரவு என் அப்பாவிடம் கதை கேட்காவிட்டால் எனக்கு தூக்கமே வராது. அதுவும் சாதாரண ஃபேன்டசி கதைகள் அல்லாமல் கருத்துக்களை உணர்த்தும் சமூகக் கதைகளை சுவாரசியமாகச் சொல்வார். கதை கேட்ட பிறகு அதிலிருந்து நிறைய கேள்விகளையும் கேட்பார். ஒவ்வொரு கதையும் உணர்த்தும் நீதி என்ன என்று என்னுடன் விவாதிப்பார். சாப்பாடு ஊட்டுவார். இரவு என் அப்பா வீட்டுக்கு வர எவ்வளவு நேரமானாலும் தூக்கக் கலக்கத்துடன் காத்திருந்து என் அப்பா கையால் சாப்பாடு ஊட்டச்சொல்லி சாப்பிட்டால் தான் பசியே தீரூம். கடைசி வரை இந்தப் பழக்கம் தொடர்ந்தது.

முதல் நாள் பள்ளிக்கூடம் செல்ல நான் செய்த சேட்டைகள் இன்றும் நினைவில் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்கு போக ஆரம்பித்த பிறகு, வீட்டில் எனக்கு பாடம் நடத்துவார். பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தினாலும் வீட்டில் ஒரு முறை என் அப்பா வாயால் பாடங்களை சொல்லிக் கேட்டால் தான் எனக்கு சந்தோஷமாக இருக்கும். அதுவும் நிறைய சுவாரசியமான விஷயங்களோடு சுவைபட அவர் சொல்லித் தரும் அழகே தனிதான்.

சில சமயங்களில் நேரம் இருக்கும்போது பள்ளிக்கூடத்திற்கும் வருவார். அங்கு வந்து எல்லோருக்கும் சேர்த்து பாடம் எடுப்பார். என் அப்பா பி.எட்.டும் படித்திருந்ததால், பள்ளிக்கூடத்தில் செல்வாக்கு இருப்பதாலும் அவர் வந்து பாடம் நடத்துவதை யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். அப்போது சில சமயம் முந்தின நாள் வீட்டில் எனக்கு நடத்திய அதே பாடத்தை நடத்துவார். கேள்வி கேக்கும்போது, எல்லா விஷயங்களும் எனக்கு ஏற்கனவே தெரியும் ஆதலால், நான் முதல் ஆளாக எழுந்து பதில் கூறுவேன். மற்றவர்களுக்கு பதில் சொல்ல வாய்ப்பு கொடுக்காதலால் ‘முந்திரிக்கொட்டை’ என என்னை திட்டுவார். திட்டுவாரே தவிர அதில் ஒரு பெருமிதம் தான் இருக்கும்.

புத்தக வாசிப்பையும் அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். முதலில் சிறுவர் மலர், கதை புத்தகங்கள் என ஆரம்பித்து பிறகு இலக்கியங்களை அறிமுகப்படுத்தினார். ‘செம்மலர்’ ‘தீக்கதிர்’ போன்றவை வீட்டில் வாங்கப் பட்ட மாத மற்றும் நாளிதழ்கள். மேலாண்மை பொன்னுசாமி, சிவசங்கரி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்றோரை மிகச் சிறு வயதிலேயே அறிமுகப்படுத்தினார். ரஷ்ய இலக்கியங்களையும் வாசிக்க கற்றுக்கொடுத்தார். சேகுவெரோவுக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இடையேயான நட்பை 5ம் வகுப்பு படிக்கும்போதே கதையாக சொல்லியிருக்கிறார். அவ்வளவு பெரிய அமெரிக்காவின் கீழே சின்னஞ்சிறு நாடான க்யூபாவில் இருந்து கொண்டு எப்படி அமெரிக்காவுக்கே பெரிய  தலைவலியை ஏற்படுத்தினர் என்பதை கதை கதையாக சொல்லியிருக்கிறார். ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் போன்ற வார்த்தைகளின் அறிமுகம் அப்போதே எனக்குண்டு. உலகப்போர்கள் பற்றி சொல்லியிருக்கிறார். இன்னும் பல்வேறு விஷயங்கள் பற்றி சொல்லியிருக்கிறார்.

சிறுவயதில் எனக்கு ஓவியம் வரைவதிலும், சிறுகதைகள் எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. நான் வரையும் ஓவியங்களையும், சிறுகதைகளையும் பார்க்கும் மற்றவர்கள் ஏளனமாக சிரிப்பார்கள். ஆனால் என் அப்பா மட்டும் ஒரு நாள் கூட நம்பிக்கை இழக்கும்படி பேசியதில்லை. மற்றவர்களையும் பேச விட மாட்டார். அவர்கள் பேச்சை இனி கேட்காதே என்று அறிவுறுத்துவார். நன்றாக இருக்கிறது இன்னும் நன்றாக வரை என்று உற்சாகப்படுத்துவார். திறமையை வளர்த்துக்கொள்ள நிறைய ஓவியப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். கடைசி வரையிலும் நான் செய்த ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களையும் பெரிதாகப் பாராட்டி என்னை முன்னேற்றப்பாதையில் வழி நடத்தினார்.

5ம் வகுப்பிற்கு பிறகு, என் அப்பாவிற்கு திண்டுக்கல்லில் வனத்துறையில் வேலை கிடைத்ததால் குடும்பத்தோடு அங்கு குடிபெயர்ந்துவிட்டோம். லஞ்சம் மலிந்து கிடக்கிற அந்தத்துறையில், என் அப்பா கடைசி வரை லஞ்சம் வாங்கியதே இல்லை. நேர்மையாகவே இருந்து விட்டார். அப்படிதான் இருக்கவேண்டும் என எங்களிடமும் சொல்லியுள்ளார். நேர்மையான வழியிலேயே குடும்பத்தை முன்னேற்றினார். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த குடும்பத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தினார். நான் பிறந்த பிறகுதான் கஷ்டம் மறைந்தது.

தோளுக்குமேல் வளர்ந்தபிறகு தோழனாகவே நடத்தினார். நானும் அப்பாவும் ஒருவரை ஒருவர் தோழரே என்றெல்லாம் கூப்பிட்டு இருக்கிறோம். சில சமயம் ஜாலியான மூடில் இருக்கும்போது ‘குரு’ என்று அவரின் பேர் சொல்லியும் கூப்பிடுவேன். முற்போக்குவாதியாகவே எங்களை வளர்த்தார். நான் ரொம்ப நாள் கழித்து பிறந்ததால் வீட்டில் அனைவரின் நிர்ப்பந்தத்தின் காரணமாக எனக்கு சாமி பேர் முருகன் பேர் வைத்தார்கள். மற்றபடி என் தங்கைக்கும், தம்பிக்கும் நல்ல தமிழ்ப்பெயர்களையே சூட்டினார். அன்பரசி, தமிழ்ச்செல்வன்.

மூட நம்பிக்கைகளை (கடவுள்,பேய்,பிசாசு மட்டுமல்ல இன்னும் நிறைய) கடுமையாக எதிர்த்தார். எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்று கூறுவார். கூறியதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் செய்தார். கிராமத்தில் இருந்தபோது வேறு சாதியை சேர்ந்த நண்பர்கள் வீட்டில் ஏதேனும் விசேசம் என்றால் மற்ற சாதி ஊர்மக்கள் அந்த வீட்டில் சாப்பிட மாட்டார்கள். ஆனால் என் அப்பா அந்த வேறுபாட்டைக் களைந்து எந்த சாதியாக இருந்தாலும் அது அன்புக்கு முன்னால் வெறும் தூசு தான் என்று சாதியைப் பொருட்படுத்த மாட்டார். எங்களையும் அப்படிதான் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார். பள்ளியில் படிக்கும் சேரி மாணவர்களிடமும், வேறுபாடு காட்டாமல் நட்புடன் பழக வேண்டும் என்று கூறுவார். (இந்தக் காலத்திலும் பள்ளியில் சாதி வேறுபாடு உள்ளதா என சந்தேகமிருந்தால், என் கிராமத்திற்கு நேரில் வந்து பார்க்கவும்)

சில விஷயங்களில் எனக்கும் என் அப்பாவுக்கும் கருத்து மாறுபடும். உதாரணத்திற்கு அவருக்கு ரஜினி படங்கள் பிடிக்காது. ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக என்னை வற்புறுத்தியதே இல்லை. எதனால் தனக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தை மட்டும் சொல்லிவிட்டு முடிவை என்னிடம் விட்டு விடுவார். ரஜினி படங்களில் பெண்களை தவறாக சித்தரிக்கின்றனர். பெண் என்பவள் ஆணுக்கு அடங்காமல் திமிருடன் இருப்பது போலவும், பிறகு படத்தின் இறுதியில் தவறை உணர்ந்து அடங்கிப் போவது போலவும் அமைவது பெண்ணடிமைத்தனத்தை பறை சாற்றுகிறது. அது தவறு. பெண் கேரக்டர்களை இயல்பாக சித்தரிக்கவேண்டும் என்று கூறுவார். இருந்தாலும் ரஜினி படம் பாக்க எனக்கு காசு கொடுத்து அனுப்புவார். ‘சிவாஜி’ படம் பாக்க நிறைய காசு வாங்கிக்கொண்டு நண்பர்களுடன் சென்றது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.

நிறைய படங்களுக்கு நானும் அப்பாவும் மட்டுமே தனியாக சென்றிருக்கிறோம். படங்களைப் பற்றி வீடு வரும் வரையிலும் விவாதிப்போம். நிறைய ஆங்கிலப் படங்களுக்கும் அழைத்து சென்றிருக்கிறார். ‘காதல்’ படம் பார்த்துவிட்டு நிறைய நேரம் விவாதித்தது பசுமையாய் நினைவுக்கு வருகிறது. ‘தவமாய் தவமிருந்து’ இருவரும் சேர்ந்து பார்த்து நெகிழ்ந்தது, இப்போதும் நெகிழ்ச்சியை தருகிறது.

இப்படி சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் இடி விழுந்தது நான் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது. ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அப்பாவை மருத்துவமனையில் சேர்த்து சோதித்துப் பார்த்தபோது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டதாக இடியைத் தூக்கிப் போட்டனர். கிட்டத்தட்ட 3 வருடங்கள் அதனுடனே போராடினார். டோனர் யாரும் கிடைக்க வில்லை. டயாலிசஸ் வாரத்துக்கு 2 முறை பண்ண வேண்டும். ஒரு முறைக்கு 1500 ரூபாய் வரையும் செலவாகும். அதுவும் மதுரைக்குப் போக வேண்டும்.

மாதச்சம்பளம் மட்டுமே வாங்கியதால் பணத்திற்கு தட்டுப்பாடு. மீண்டும் கஷ்டகாலம் ஆரம்பித்தது. இதுவரை சேர்த்து வைத்த பணமெல்லாம் ஆஸ்பத்திரிக்கே செலவானது. மேலும் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை. கம்பீரமாக இருந்த என் அப்பா இந்த சிறுநீரக அரக்கனால் மாறிப் போனார். என் ஹீரோவாக வாழ்ந்த மனிதர், என் கண் முன்னாடியே சிறுகச் சிறுக உருக்குலைந்து போனார். அந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் விடவே இல்லை.

பணக்கஷ்டத்தின் காரணமாக, வாரம் இருமுறை பண்ண வேண்டிய டயாலிசஸ் மாதத்திற்கு ஒரு முறை என்றானது. தான் பிழைப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்று தெரிந்திருந்தும் அதற்காக அவர் வருந்தியதே இல்லை. எங்களுக்கு ஆறுதல் சொல்லுவார். சரியாக மூன்று வருடங்களுக்குப் பிறகு அக்டோபர் 15ம் நாள், 2007 (நான் 12 ம் வகுப்பில் இருந்தேன்) மதியம் 1 மணி அளவில் இம்மண்ணை விட்டு மறைந்தார்.

இறப்பதற்கு முந்தின நாள் கூட என்னிடம் எதிர்கால திட்டங்கள் பற்றிப் பேசினார். என்ன படிப்பது, அதற்கு எவ்வளவு செலவாகும், என்ன பண்ணலாம் என நம்பிக்கையுடன் பேசிக்கொண்டிருந்தார். என் அப்பா எங்களுக்காக சொத்து சேர்த்துவிட்டுப் போகவில்லை என்றாலும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் சூட்சுமத்தை சொல்லிக் கொடுத்து விட்டு போயிருக்கிறார். நம்பிக்கையைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். நல்ல எண்ணங்களைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.

அவர் சொல்லிக்கொடுத்தது தான் அன்பே சிவம். அன்பே கடவுள் இதை அந்தப் படம் வெளிவருவதற்கு பல வருடங்களுக்கு முன்பிருந்தே எங்களுக்கு சொல்லி வந்திருக்கிறார். அன்பைத்தவிர வேறு கடவுள் யாரும் இல்லை என்று. ஆனால் அப்படி ஒருவேளை கடவுள் இருந்தால், அந்தக் கடவுளிடம் ஒன்றே ஒன்றைத்தான் கேட்பேன்.

மீண்டும் ஒரே ஒரு முறை, எப்போதும் போல என் அப்பாவை இறுகக் கட்டியணைத்துக்கொண்டு முத்தம் கொடுத்து அவர் கையால் சாப்பிட வேண்டும். என் நினைவுகளில் அவர் என்றென்றும் இருந்தாலும் இனிமேல் நேரில் பார்க்க முடியாது என்று புத்திக்கு தெரிந்தாலும், மனசு ஏங்குகிறது அவரை ஒரே ஒரு முறை கட்டியணைக்க..!! :(

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..!!

6 comments:

  1. நெகழ்ச்சியான பதிவு. கண் கலங்கி விட்டது. என்னுடைய அப்பாவும் உங்க அப்பாவை போல் தான். தற்போது அவரும் என்னுடன் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. தற்போது அவர்கள் இல்லாவிட்டாலும், அவர்கள் எண்ணங்களை, நினைவுகளை என்றுமே யாராலும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாது. அவை தான் நம்மை வழிநடத்துபவை.

      உங்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பா.

      Delete
  2. அன்பின் தம்பிக்கு,

    உனக்குள்ளே இவ்வளோ சோகம் இருந்தும் , வெளிகாட்டாமல் இருக்கிறாயே...
    உன் தந்தை குலசாமியாய் நின்று உன்னை காப்பார்...

    அன்பு அண்ணன்..
    கணேஷ் குமார் ராஜாராம்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,

      அப்பா இப்போதும் நினைவலைகளாக என்னுடனேயே தான் இருக்கிறார். அவர் பிரிந்து சென்றதாக நினைக்கவே இல்லை. விவரம் தெரிந்தவரை அப்பாவுடன் வாழ்ந்த நாட்களே, எனக்கு ஆயுளுக்கும் போதும். அவர் வாழ்ந்ததில் நூற்றில் 5 பர்சண்டேஜ் வாழ்ந்தாலே என் வாழ்க்கை பூரணத்துவம் அடைந்துவிடும். அதுதான் என் ஆசையும் கூட.

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றிண்ணா..!!

      Delete
  3. அருமை ஆண்டி!! அப்பா என்றுமே, வரவுகள் மட்டுமே விட்டுச்செல்லும் வற்றாத வரக்கிடங்கு!! உனக்கு எல்லாமுமாய் ஆகி நிற்பார்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *