சிலவேளைகளில் எதிர்பார்த்துக் காத்திருந்து பார்க்கும் படங்கள் நம்மை ஏமாற்றுவதுண்டு. சிலசமயம் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் பார்க்கும் படங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் இன்று நாம் பார்க்க இருக்கும் படம்.
என்னுடைய ஹார்ட் டிஸ்க்கில், பார்க்காத ஆங்கிலப்படங்கள் மட்டுமே கிட்டத்தட்ட 1000க்கும் மேல் உள்ளது. அத்தனையும் ஒரே ஃபோல்டரில் வைத்துள்ளேன். புதிதாக ஏதாவது படம் பார்க்க வேண்டும் என்று தோன்றினால், எந்தப்படத்தைப் பார்ப்பது என்று செலக்ட் செய்வதற்கே அரை மணி நேரம் ஆகிவிடும். அதற்காக Media Management Softwareகளில் ஃபேமசான XBMC-யை உபயோகித்து வருகிறேன். இந்த சாஃப்ட்வேர் நமது ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து படங்களின் தகவல்களையும், ஆன்லைனிலிருந்து டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு, அந்த தகவல்களின் அடிப்படையில் நாம் தேடுவதற்கு உதவிசெய்யும். டைரக்டர் வாரியாக, வருடம் வாரியாக, ஜானர் வாரியாக என இன்னும் பலப்பல வாரியாக நாம் படங்களைத் தேடலாம். ஆக்சன் படம் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் இந்த சாஃப்ட்வேரில் போய் ஜானர் (genre) வகையில் ஆக்சன் பட்டனைக் க்ளிக் செய்தால், நம் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அத்தனை ஆக்சன் படங்களையும் பட்டியலிடும். அத்தோடு அந்தப்படங்களைப் பற்றிய அத்தனை விவரங்களையும் காட்டும். அந்த லிஸ்டில் நாம் இன்னும் சில ஃபில்டர்களைக் (உதாரணத்திற்கு ரேட்டிங்க் 7-9 தான் இருக்க வேண்டும். மொழி ஆங்கிலமாக இருக்க வேண்டும் & etc) கொடுத்து நமக்கு வேண்டிய படத்தை செலக்ட் பண்ணிப் பார்க்க ஆரம்பிக்கலாம்.
எப்போதும் நான், இந்த முறையில் தான் படத்தை செலக்ட் செய்து, பார்க்க ஆரம்பிப்பேன். ஆனால் இந்தப்படம் அப்படி எந்தவித விவரமும் தெரியாமல், எதேச்சையாக ஹார்ட் டிஸ்க்கில் உலாவிக்கொண்டிருந்தபோது பார்த்து போட்ட படம். படம் எதைப்பற்றியது, என்ன ஜானர் என்ற எந்த விவரமும் தெரியாமல் பார்த்தேன். படம் என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.
இதுவரை எவ்வளவோ கொடூரமான படங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். A Serbian Film படத்தை நான் காலேஜில் படிக்கும்போதே என் நண்பர்கள் மூலமாகப் பார்த்திருக்கிறேன். மறுபடியும் பார்க்க முடியாதபடிக்குக் கொடூரமான காட்சிகள் நிறைந்தது அந்தப்படம். ஆனால் பல நண்பர்களுக்கு அந்தப்படத்தின் குறிப்பிட்ட காட்சிகளைப் போட்டுக்காட்டி, 'பாத்தியா.. எவ்ளோ கொடூரமா இருக்கு' என்று சொல்லியே நானும் அதைப் பல தடவைகள் பார்த்துவிட்டேன். அப்போதெல்லாம் ஒருவித அருவருப்பு தவிர வேறு எந்த சொரணையும் இல்லாமல் ஜாலியாகப் பார்த்தேன். எந்தவித சைக்கோத்தனமும் ஏற்படவில்லை. அதைப்போல பல ஹாரர் படங்களையும், தடைசெய்யப்பட்ட படங்களையும் பார்த்திருக்கிறேன். எந்தப்படமும் என்னை அந்தளவுக்கு பாதித்ததே கிடையாது. அல்லது மிதமான பாதிப்பு மட்டுமே.
ஆனால் முதன்முறையாக இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு மனசு பதறி, என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டேன். படம் பார்த்து அதன் சோகத்தில் அழுதது என்று பார்த்தால் பல படங்கள் இருக்கின்றன. ஆனால் படம் பார்த்து பல மணி நேரங்களாகியும், பல நாட்களாகியும் அதன் சோகம் மனதை வாட்டிக்கொண்டே இருப்பது வெகுசில படங்களுக்குத்தான். இந்தப்படம் அந்தவகையைச் சேர்ந்தது. இந்தப்படம் ஒன்றும், மேலே சொல்லப்பட்ட படங்களைப் போல கொடூரமான படமோ அல்லது ஹாரர் படமோ இல்லை. சாதாரண க்ரைம், ட்ராமா படம். அதேபோல கதையின் சோகம் ரசிகர்களை அழவைத்துவிட வேண்டும் என்றெண்ணி எடுக்கப்பட்ட படமும் அல்ல. (Seven Pounds அம்மாதிரி ப்ளான் பண்ணி எடுக்கப்பட்ட படம்)
இந்தக்கதை 1965ல், அமெரிக்காவில் உள்ள இண்டியானா ஸ்டேட்டில் நடந்த உண்மைக்கதை. அதனை அப்படியே யதார்த்தமாகத் திரையில் காட்டியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
டிஸ்கி : படம் குழந்தைகள் மேல் திணிக்கப்படும் வன்முறையைப் (Both physical and sexual abuse) பற்றியது. அதனால் இளகிய மனம் படைத்தவர்கள், இதயக்கோளாறு உள்ளவர்கள், குழந்தைகள் படம் பார்ப்பதைத் தவிர்க்கவும். இதற்குமேல் படிப்பதையும் தவிர்க்கவும்.
டிஸ்கி : படம் குழந்தைகள் மேல் திணிக்கப்படும் வன்முறையைப் (Both physical and sexual abuse) பற்றியது. அதனால் இளகிய மனம் படைத்தவர்கள், இதயக்கோளாறு உள்ளவர்கள், குழந்தைகள் படம் பார்ப்பதைத் தவிர்க்கவும். இதற்குமேல் படிப்பதையும் தவிர்க்கவும்.
படத்தின் கதையைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் சில விஷயங்கள். 2007ல் இந்திய அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலமாக சர்வே எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை ஒருமுறை படித்துவிட்டு தொடர்ந்தால் நான் சொல்ல வரும் விஷயத்தின் வீரியம் சற்றேனும் புரியக்கூடும்.
அந்த அறிக்கையிலுள்ள சர்வே 2005ம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதனை முழுவதும் படிக்க நேரமில்லாதவர்களுக்காக, அறிக்கையின் சில முக்கியமான அம்சங்களை மட்டும் இங்கே கூறுகிறேன்.
- இந்தியாவிலுள்ள மூன்றில் இரண்டு குழந்தைகள் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்படுகின்றனர். அதிலும் ஆண் குழந்தைகள் அதிகமாக துன்புறுத்தப்படுகின்றனர்.
- 88% குழந்தைகள் பெற்றோர்களால் துன்புறுத்தப்படுகின்றனர்.
- 62% குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுகின்றனர்.
- 50% குழந்தைகள் வாரத்தில் 7 நாட்களும் வேலை பார்க்கின்றனர்.
- 53% குழந்தைகள் ஒருதடவையோ அல்லது அதற்குமேலோ பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர்.
- அதில் 5.69% குழந்தைகள் நேரடியாகப் பாலியலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
- தெருக்களில் அனாதையாக விடப்பட்ட குழந்தைகள், வேலை பார்க்கும் குழந்தைகள், நிறுவனங்களில் உள்ள குழந்தைகள் போன்றோர் மீதுதான் அதிகபட்சமான பாலியல் தூண்டல் நடந்திருக்கிறது.
- பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோரில் 50% பேர், அந்தக்குழந்தைகளுக்கு நெருங்கிய உறவினராகவோ, குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவராகவோ, பொறுப்பானவராகவோ தான் இருந்திருக்கிறார்கள்.
- 2005ம் ஆண்டில் மட்டும் குழந்தைகளைக் கற்பழித்த வழக்குகள் மொத்தம் 4026. இது ஒவ்வொரு ஆண்டும் 13%க்கு மேல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. (இப்போதைய நிலை அதைவிட மோசமாகத்தான் இருக்கும்)
இதைவிட இன்னும் மோசமான பல உண்மைகள் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கின்றன. படிக்கவே வாய்கூசுகிறது. அத்தனையும் எங்கேயோ வேறு ஒரு நாட்டில் நடப்பவை அல்ல. இந்தியத் திருநாட்டில் நடப்பவை. தமிழ்நாட்டில் நடப்பவை. நமது ஊரில், நமது தெருவில், ஏன் நம் வீட்டிலேயே கூட நடந்தாலும் நடக்கலாம். குழந்தைகளுக்கெதிரான வன்முறை நம் நாட்டில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்றாற்போல நம் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது.
அப்படி உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்ட 16 வயதுப்பெண் குழந்தையைப் பற்றிய படமே இது. 1965ம் ஆண்டில் உண்மையிலேயே நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படத்தை எடுத்துள்ளனர். கோர்ட்டில் நடந்த வழக்கை வைத்து அப்படியே எடுத்துள்ளதால், கிட்டத்தட்ட 100% படத்தில் காணும் அத்தனை காட்சிகளும் உண்மைச் சம்பவங்களே.
படத்தின் கதையைப் பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை. அதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் ஒரு 16 வயதுப் பெண்குழந்தை துன்புறுத்தப்படுவதைப் பார்க்கப்போகிறோம் என்பதை நினைவில் வைத்து, தயாராகிக்கொண்டு பார்ப்பது நல்லது.
![]() |
Sylvia Likens (Real picture) |
Sylvia Likens என்ற அந்த 16 வயதுப்பெண்ணின் கேரக்டரில் நடித்த நடிகை Ellen Page அதகளம் பண்ணியிருக்கிறார். உண்மையில் இந்தப்படத்தில் நடிக்கையில் அவருக்கு வயது 20. ஆனால் பார்ப்பதற்கு 16 வயதுப்பெண் போலவே இருப்பார். அதற்காக நிறைய நாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளார். Ellen Page மெலிந்துகொண்டே போவதைக் கவனித்த இயக்குனர், சாப்பிடுகிறாயா இல்லையா என்று கேட்டுள்ளார். அதற்கு Ellen Page "இல்லை. Sylvia விற்கு மட்டும் சாப்பாடு கிடைத்ததா என்ன?" என்று பதில் கூறியுள்ளார். அதே உணர்வையும், சோர்வான நிலையையும் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஷூட்டிங் நடந்த பல நாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தாராம்.
அதேபோல, நடிகர்கள் அனைவரும், உண்மையில் சில்வியாவிற்கு என்ன நடந்தது, அவள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டாள் என்பதை உணரவேண்டும் என்பதற்காக, படம் க்ரோனாலஜிகல் ஆர்டரில் எடுக்கப்பட்டது. அதாவது படத்தின் காட்சிகள் எந்த வரிசையில் வருகிறதோ, அதே வரிசையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
Sylvia வைத் துன்புறுத்தும் Gertrude Baniszewski என்ற பெண்மணியாக Catherine Keener என்ற நடிகை நடித்துள்ளார். நம்மை வெறுப்பின் உச்சிக்கே அழைத்துச்சென்று அவளை நம் கையாலேயே கொல்ல வேண்டும் என்றளவுக்கு கோபத்தை வரவழைப்பதில் வெற்றிபெற்றுள்ளார். முதலில் இம்மாதிரியான கேரக்டரில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி முடியாது என்று மறுத்துள்ளார். பிறகு இந்தக்கதை அவரது மனதை விட்டு நீங்க மறுத்ததால் மறுபடியும் இயக்குனரைச் சந்தித்து நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.
படம் முழுவதும் இந்தப்பெண்மணி மட்டுமல்லாமல் வேறு சில குழந்தைகளும், சிறுவர்களும் கூட சில்வியாவைத் துன்புறுத்துகின்றனர். அதுதான் கொடுமையின் உச்சகட்டம். ஆரம்பிக்கும்போது அமைதியாக ஆரம்பிக்கும் படம், நேரம் செல்லச்செல்ல நம்மைப் பதறவைக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் நம் நெஞ்சுத்துடிப்பு அதிகரிப்பதை நம்மால் உணரமுடியும். அடுத்து அந்தக்குழந்தையை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்யப்போகிறார்களோ என்று மனம் பதறுவதைக் கண்கூடாக உணரலாம். நாம் பார்த்துக்கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு 16 வயதுப் பெண்ணுக்கு நடந்த சம்பவங்கள்தான் என்பதை உணரும்போது மனசு முழுக்க பாரம் ஏறிவிடுகிறது. எப்படியோ மிகவும் கஷ்டப்பட்டு தான் படத்தை முழுதாகப் பார்த்து முடித்தேன்.
தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட போது, படம் கொடுத்த உணர்வுகளைத் தாங்க முடியாமல் பலர் பாதியிலேயே வெளியேறிவிட்டனராம். படத்தில் அந்தளவுக்கு கொடூரமான காட்சிகள் ஏதும் இல்லையென்றாலும், நம்மை அந்தளவுக்கு உணரவைத்திருக்கிறார் இயக்குனர். அதிலும் எப்படியாவது அந்தக்குழந்தை அங்கிருந்து தப்பித்துப்போகக் கூடாதா என்று நம்மை ஏங்கவைத்திருப்பார்.
![]() |
Ellen Page (Actress) |
ஒரு உண்மைக்கதையை எடுக்கும்போது டாகுமெண்டரியாக எடுக்கப்பட்டுவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆனால் இந்தப்படத்தில் அருமையான திரைக்கதை மூலம் அதைத் தவிர்த்து நல்ல படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர். படம் நான்-லீனியரில் கோர்ட் காட்சிகள், ஃப்ளாஷ்பேக் காட்சிகள் என மாறிமாறி வரும். ப்ரில்லியண்ட்டான திரைக்கதை அமைப்பு. ஒருசில மோசமான டார்ச்சர்களை காட்சியாகக் காண்பிக்காமல், கோர்ட்டில் சாட்சி சொல்வது போலக் காண்பித்திருப்பார் இயக்குனர். அதன்மூலம் நமக்கு கிடைக்கவேண்டிய ஃபீல் இன்னும் அதிகமாகும். அப்படி திரைக்கதையைச் செதுக்கி எடுத்திருக்கிறார். படம் முழுவதும் அந்த மூட் அப்படியே மெயின்டெயின் ஆகும் விதத்தில் அற்புதமான திரைக்கதை மற்றும் இயக்கம்.
ஆரம்பத்தில் வரும் மென்மையான இசையும், டார்ச்சர் காட்சிகளில் நம்மைப் பதற்றத்திற்கு உள்ளாக்கும் இசையும் அற்புதம். 1965ல் படம் நடப்பதால் அந்தக்காலத்தை அப்படியே நம் கண்முன்னால் காட்ட ஒளிப்பதிவு ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. படம் பார்த்து கிட்டத்தட்ட 3 வாரங்கள் ஆகிவிட்டது. இன்னும் சில்வியாவும் அவள் அனுபவித்த கொடுமைகளும் என் மனதை விட்டு அகலவேயில்லை. அந்த பாரம் மனதை அழுத்திக்கொண்டே இருக்கிறது.
படத்தில் காட்டப்படும் டார்ச்சர் காட்சிகள் உண்மையில் நடந்தவற்றைவிட மிக மிகக் குறைவாகத்தான் காட்டப்பட்டதாம். உண்மையில் நடந்த சம்பவங்கள் இதைவிட அதிகமாக, கொடூரமானதாக இருந்ததாம். ஆனால் அனைவரும் இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும், விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக டார்ச்சர் காட்சிகளின் கொடூரத்தைக் கம்மி பண்ணியிருக்கிறார்கள்.
இது ஏதோ அமெரிக்காவின் ஏதோ ஒரு மூலையில் 1965ல் நடந்த ஒரு சம்பவம் தானே என்று பத்தோடு பதினொன்றாக நினைத்துக்கொண்டு போக முடியவில்லை. ஏதேனும் ஒருவகையில் நம் வீட்டுக் குழந்தைகளும் இம்மாதிரியான வன்முறைகளுக்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது. வரும்முன் காப்பதே நல்லது. குழந்தைகள் விஷயத்தில் எப்போதுமே எக்ஸ்ட்ரா அக்கறையுடன், கவனிப்புடன் நடந்துகொள்ளவேண்டும். உடல்ரீதியாகவோ பாலியல் ரீதியாகவோ துன்புறுத்தப்படும் குழந்தைகளின் மனநிலை வெகுவாக பாதிக்கப்படும். வாழ்க்கையே கசந்துபோகக்கூடிய வாய்ப்பெல்லாம் இருக்கிறது. அதனால் அரும்பாடுபட்டு, பெற்றுவளர்த்த குழந்தையை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்கு, பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இந்தப்படம் அமையும்.
படம் பார்த்துவிட்டு உண்மைச்சம்பவத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம். அதேபோல இந்தியாவில் குழந்தைகளுக்கென ஒரு ஹெல்ப்லைன் இருக்கிறது. இது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது என்று தெரியவில்லை. இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் உள்ள எந்தக்குழந்தையும், என்ன பிரச்சனை என்றாலும் இந்த நம்பரைத் தொடர்புகொண்டு பேசலாம். மேலும் அதிக தகவல்களுக்கு இந்த லிங்கைக் க்ளிக் பண்ணிப்பார்க்கவும். இந்தத்தகவலை உங்களுக்குத் தெரிந்த குழந்தைகள் (உங்கள் குழந்தைகளுக்கே கூட) எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.
இந்தச் சம்பவத்தைப் பற்றிய அதிக விவரங்களுக்கு கீழ்க்கண்ட யூட்யூப் லிங்குகளைக் காணுங்கள். (நன்றி: பரத்)
1.The Story of Sylvia Marie Likens
2.WIBC news report 1985 Gertrude Baniszewski Sylvia Likens
3.Unknown Facts About An American Crime
4.DEADLY WOMEN - BORN BAD PT. 1 - GERTRUDE BANISZEWSKI
இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு இணையத்தில் இதுசம்பந்தமாக தேடிக்கொண்டிருந்தபோதுதான் இன்னொரு படத்தைப் பற்றியும் தெரியவந்தது. அதாவது இதே உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு கற்பனையாக ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள். The Girl Next Door (2007) என்ற அந்தப்படத்தின் கதையும் இதேதான் என்றாலும், நிறைய கற்பனைக் காட்சிகள் மிகுந்த படம். ஆனால் உண்மையில் சில்வியா அனுபவித்த டார்ச்சர்களை அப்படியே திரையில் காட்டியிருப்பதால் An American Crime படத்தைவிட இன்னும் கொடூரமான படமாக இது இருக்கிறது. ஆனால் சரியான ஃபீலைக் கொடுத்த படம் என்றால் அது An American Crime தான். முடிந்தால் The Girl Next Door (2007) படத்தைப் பற்றியும் விரிவாக வேறொரு பதிவில் பார்க்கலாம். இதே பெயரில் The Girl Next Door 2004-ல் ஒரு பாடாவதி டீனேஜ் படம் வந்திருப்பதால் நெட்டில் தேடும்போது வருடத்தையும் சேர்த்துத் தேடுங்கள்.
நம் சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் அவலத்தை அப்படியே காட்டியிருக்கும் படம் என்ற காரணத்துக்காக கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது. இருந்தாலும் ஒரு 16 வயதுப்பெண் டார்ச்சர் செய்யப்படுவதைப் பார்க்க முடியாது என்று நினைப்பவர்கள் கண்டிப்பாகப் படம் பார்ப்பதைத் தவிர்க்கவும். இந்தப்படம் பார்த்துவிட்டு இதன் கொடூரம் உங்களைத் தாக்கவில்லை எனில் The Girl Next Door (2007) படத்தையும் பார்த்துவிடுங்கள்.
An American Crime (2007) - The true story of a shocking crime and a secret that wouldn't keep.
அருமையான.. விமர்சனம்! அந்திச்சாமி.
ReplyDeleteஅருமையான.. நன்றிகள்! அண்ணே.
Deleteமிக அருமையான படம். பார்த்து விட்டு பல நாட்கள் நெஞ்சை விட்டு விலக மறுத்த படம்.. விமர்சனம் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.. அதிலும் அந்த க்ளைமாக்ஸ்.. அப்பாடா என்று பெருமூச்சு விட வைத்து சுத்தியலில் ஓங்கி தலையில் அறைந்தது போல் இருந்தது!
ReplyDeleteஅனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். க்ளைமாக்சில் நீங்கள் சொல்லுவது போலவே நானும் ஏமாந்துதான் போனேன். ஒருவழியா தப்பிச்சாச்சுனு நினச்சு மனசாற இருக்கும்போது, இதயத்தையே கிழிச்சாப்ல அந்த சீன் வரும்.. எனக்கு கடந்த 3 வாரங்களா இந்தப்படம் தான் தலைக்குள்ள இருக்குது.. போக மாட்டேங்குது..!
Deleteவிரிவான அலசல்..நன்றி.
ReplyDeleteநன்றி அண்ணே..!!
Delete// அதற்காக Media Management Softwareகளில் ஃபேமசான XBMC-யை உபயோகித்து வருகிறேன். //
ReplyDeleteஇதுமாதிரி ஒரு சாஃப்ட்வேரைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். ரெண்டு டவுட்.
1. ஃப்ரீ சாஃப்ட்வேரா?
2. இது எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க்கில் இருக்கும் படத்தையும் கணக்கில் கொள்ளுமா?
சூப்பர்... தோ ஆன்சரு..
Delete1.ஆமா
2. கொள்ளும்
ஃபேஸ்புக் வாங்க.. பிரிச்சி மேஞ்சிரலாம்.. :)
நானும் இது போல சாப்ட்வேரை தான் தேடிகிட்டு இருக்கேன் என்கிட்டயும் டேபிள் மேட் இருக்கு.. ச்சே ஹார்ட் டிஸ்க் இருக்கு ஆயிரம் படங்களுக்கு மேல்.
Deleteமுப்பது நிமிஷம் எந்தப்படம் பாக்குறதுன்னு எனக்கும் அதே ப்ராப்ளம்
நான் டொராண்டில் டவுன்லோட் பண்றதால படத்தோட பேரு (File Name) கொஞ்சம் மிக்ஸ்சிங்கோட வரும் அதையும் இந்த சாப்ட்வேர் கண்டுபிடிக்குமா ?
அங்கே தான் ஒரு சின்ன சிக்கல்.. பெரும்பாலும் கிடைக்கற ரிசல்ட்ஸ் கரெக்டா தான் இருக்கும். ஆனா சில சமயங்கள்ல தப்பா வந்துரக்கூடிய சான்ஸ் இருக்கு. அப்டி தப்பா வர்ற படங்களை மட்டும் மறுபடியும் கரெக்ட் பேரு கொடுத்து மாத்திக்கலாம்..
Deleteஃபேஸ்புக்ல இன்பாக்ஸ் வாங்க. இன்னும் டீட்டெயிலா பேசலாம்.
அருமையான விமர்சனம்>>>> தல
ReplyDeleteநன்றி தல.. :)
Deleteஒரு திரைபடத்தின் விமர்சனம் என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளாமல் குழந்தைகள் மேல் திணிக்கப்படும் வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்ற சமுக அக்கறையோடு எழுதியிருக்கும் உங்களை பாராட்டுகிறேன்..
ReplyDeleteவிமர்சனம் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல தல.. இந்தப்படம் பாத்திட்டு கடந்த 3 வாரமா ரொம்பவே டிஸ்டர்ப் ஆயிருச்சி. சரி எல்லோருக்கும் தெரியப்படுத்துவோம். அது மூலமா கொஞ்ச பேருக்காவது விழிப்புணர்வு வரட்டுமேங்கற நப்பாசை தான் காரணம்.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..!!
விமர்சனம் நல்லாவே பண்ணுறீங்க படம் பார்க்கலை...
ReplyDeleteநன்றி. படம் பாருங்க
Deleteவலைச்சரம் மூலம் முதல் வருகை! சினிமா ரசிகர்களுக்கான சிறந்த தளமாக உள்ளது! பாராட்டுக்கள்! பல புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன்! நன்றி!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) மீண்டும் வருக
Deleteவணக்கம்
ReplyDeleteவலைச்சரம் மூலம் தங்களின் தளத்தை அறிந்தேன் நல்ல திரைப்பார்வை. இனிஎன்வருகை தொடரும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி :) தொடர்ந்து வருக :)
Delete-நன்றி-
-அன்புடன்-
-ஆண்டிச்சாமி-