Apr 8, 2014

Flash Forward (2009-10) - TV Series


பதிவிற்குள் போவதற்கு முன்பாக சில விஷயங்கள்,
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் இந்தப் பதிவை எழுதுகிறேன். வேலை அதிகமாக இருந்தது அதனால் நேரமே கிடைக்கவில்லை எனப் பொய் சொல்ல மாட்டேன். நேரம் இருந்தது. ஆனால் பதிவு எழுதத்தான் தோணவில்லை. வெறுமனே வெள்ளிக்கிழமை விமர்சனங்கள் எழுதுவதால் என்ன புண்ணியம் என்று ஒரு பிரபலப் பதிவர் (ரொம்பவே பிரபலமான மாஸ்டர் பதிவர்) கேள்வி கேட்டதால், அதற்கு பதில் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நிலையில் மற்றொரு பிரபலப் பதிவர் (இவர் ஏகத்துக்கும் பிரபலமான பெங்களூர்ப் பதிவர்) வேறு, ஜாலிக்காக எழுதாமல் இன்ஃபார்மேடிக்கா எழுதுங்கள் என அறிவுரை கூறி என் அறிவுக்கண்ணைத் திறந்துவிட்டார். அதனால் இனிமேல் நமது தளத்தில் வரும் பதிவுகளில் கூடிய சீக்கிரமே சில பல மாற்றங்கள் வரப்போகிறது. Wait and see..!!

சயின்ஸ் பிக்சன் எனக்குப் பிடித்த ஜானர் என்பது, தொடர்ந்து நமது தளத்தைப் படித்துவரும் ஒருசில நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். சமீப காலமாக எந்த ஒரு சீரிசிலும் கமிட் ஆகாமல், படங்கள் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் ஏதாவது சீரிஸ் பார்க்கலாம் என்று தோன்றியது. ஏதாவது ஒரு சீரிசைப் பார்க்க ஆரம்பித்து விட்டால், அதனை முழுமையாகப் பார்த்து முடிக்காமல் வேறு எதையும் பார்க்கத் தோணாது. அதனால் குறைவான எபிசோடுகள் உள்ள மினி சீரிஸ் ஏதாவது பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். எனக்குப் பிடித்த சயின்ஸ் பிக்சன் ஜானரில் தேடியபோது இந்த சீரிஸ் அகப்பட்டது.

ஒரு எபிசோடுக்கு 45 நிமிடம். மொத்தம் 22 எபிசோடுகள். ஒரே சீசன் மட்டுமே. அதில் முதல் எபிசோடின் முதல் 15 நிமிடங்களுக்குள் நடக்கும் கதையை மட்டும் இங்கே சொல்கிறேன்.

மக்கள் எல்லோருக்குமே அவர்களது எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால் தான் ஜோசியத்தில் ஆரம்பித்து, கால்பந்துபோட்டியில் எந்த அணி ஜெயிக்கும் என்பதை ஆக்டோபசிடம் கேட்பது வரை பல விஷயங்கள் பிரபலமாக இருக்கின்றன. எங்கேயாவது பெரியளவில் விபத்துக்கள் நிகழ்ந்தால், 'இப்படி நடக்குமென்று எனக்கு ஏற்கனவே தெரியும், எனது ஞானப்பார்வையில் நான் கண்டேன்' என ஒருசிலர் கதைகட்டுவதும் தெரிந்த விஷயமே. ஜோசியம் பார்த்து நல்ல எதிர்காலம் அமையப்போவதாகத் தெரிந்தால் சந்தோஷம் தான். அதுவே கெட்ட விஷயமாக இருந்தால் ?? எப்படி இருந்தாலும் நமது எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சிப்பது, நமக்கு நல்லது கிடையாது. சரி அதற்கும் இந்த சீரிசிற்கும் என்ன சம்பந்தம். உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது எதிர்காலம் தெரிந்தால் என்னவாகும் ?

அக்டோபர் 6, 2009. வழக்கம்போல உலகம் இயங்கத்தொடங்குகிறது. மார்க் பென்ஃபார்டு ஒரு FBI ஸ்பெஷல் ஏஜண்ட். அவனது பார்ட்னர் டிமிட்ரி நோவா. மார்க்கின் மனைவி ஒலிவியா பென்ஃபார்டு ஒரு சர்ஜன் டாக்டர். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. எப்போதும் போல காலையில் எழுந்து, கிளம்பி ஆபிஸ் வருகிற மார்க், அவனது பார்ட்னர் டிமிட்ரியுடன் சேர்ந்து ஒரு டெரரிஸ்ட் க்ரூப்பை வேவு பார்க்கக் கிளம்புகிறான். ஒரு பெண் உட்பட மூன்று டெரரிஸ்ட்கள் ஒரு காரில் ஏறிச் செல்ல, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களைப் பின்தொடர்கின்றனர் மார்க்கும் டிமிட்ரியும். அப்போது தான் அந்த சம்பவம் நடக்கின்றது.

காரை ஓட்டிக்கொண்டிருக்கிற மார்க் திடீரென சுயநினைவை இழக்கிறான். சரியாக 2 நிமிடம் 17 நொடிகளுக்குப் பிறகு சுயநினைவு திரும்புகிறது. எழுந்து பார்த்தால் கார் விபத்திற்குள்ளாகி இருக்கிறது. அவனது கார் மட்டுமல்லாமல் அந்த ரோட்டில் போய்க்கொண்டிருந்த அத்தனை கார்களுமே விபத்திற்குள்ளாகி இருக்கின்றன. அவன் மட்டுமல்லாமல் அனைவருமே அந்த 2 நிமிடம் 17 நொடிகளுக்கு சுய நினைவை இழந்தது அப்போதுதான் அவனுக்குத் தெரிய வருகிறது. விபத்தில் சிக்கிய கார்கள் வெடித்துச் சிதறுகின்றன. ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று ஒரு கட்டிடத்தில் மோதிச் சிதறுகின்றது. ஊர் முழுவதும் விபத்துக்கள் நிகழ்ந்து கோரமாகக் காட்சியளிக்கிறது.


அந்த ஊர் மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் அந்த குறிப்பிட்ட 2 நிமிடம் 17 நொடிகளுக்கு சுய நினைவை இழந்துள்ளது (Blackout) தெரியவருகிறது. இதனால் பல மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். ஏகப்பட்ட சேதாரங்கள் ஏற்படுகிறது.

உடனடியாக ஆபிஸ் திரும்புகிற மார்க் & டிமிட்ரி இந்த ப்ளாக்கவுட் எதனால் ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்கின்றனர். அனைத்து FBI ஏஜண்டுகளும் கூடி யோசிக்கும்போது தான் அந்த உண்மை புலப்படுகிறது. சுய நினைவை இழந்த அந்த 2 நிமிடம் 17 நொடிகளுக்கு, மக்கள் அனைவருக்கும் அவர்களது எதிர்காலம், கனவு போலத் தெரிந்துள்ளது. சரியாக 6 மாதம் கழித்து ஏப்ரல் 29, 2010 இரவு 10 மணிக்கு ஒவ்வொருவரும் என்ன பண்ணிக்கொண்டிருப்பர் என்ற காட்சி ஒவ்வொருவருக்கும் கனவுபோலத் தெரிந்துள்ளது.

மார்க் பென்ஃபார்டு ஏப்ரல் 29, 2010 அன்று இரவு 10 மணிக்கு ஆபிசில் இந்த ப்ளாக்கவுட்டைப் பற்றிய விசாரணை அறையில் தீவிரமாக ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிறான். கையில் மதுபாட்டில் இருக்கிறது. அப்போது முகமூடி அணிந்த ஒருசிலர் துப்பாக்கிகளோடு அவனைக் கொல்வதற்காக வந்துகொண்டிருக்கின்றனர். அத்தோடு அவனது எதிர்காலப்பார்வை முடிகிறது.

அதேபோல அவனது மனைவி டாக்டர் ஒலிவியா, இதுவரைப் பார்த்தேயிராத ஒரு மூன்றாவது மனிதனோடு படுக்கையில் இருப்பதாக எதிர்காலப் பார்வையில் தெரிகிறது.

ஏஜண்ட் டிமிட்ரிக்கு எந்தவொரு எதிர்காலப் பார்வையும் தெரியவில்லை. சுய நினைவை இழந்த அந்த 2 நிமிடங்கள் 17 நொடிகளுக்கு அவனுக்கு எந்தவொரு நினைவும் இல்லை. எந்தக் கனவும் இல்லை. அதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். அவன் 6 மாதங்களுக்குப் பிறகு உயிரோடு இருக்கப்போவதில்லை.

இதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான எதிர்காலப் பார்வை கிடைக்க, அனைவரும் குழம்புகின்றனர். இந்த க்ளோபல் ப்ளாக்கவுட்டை யார் நிகழ்த்தியது ? அல்லது எது நிகழ்த்தியது ? அதற்கான காரணம் என்ன ? மார்க் எதற்காக மது குடித்துக்கொண்டிருந்தான் ? அவனை யார், எதற்காக கொல்ல வருகின்றனர் ? அவனது மனைவி ஏன் இன்னொருவருடன் படுக்கையில் இருந்தாள் ? டிமிட்ரி உயிர் பிழைத்தானா இல்லையா ? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் மீதி எபிசோடுகள்.

ஒவ்வொரு எபிசோடும் மிகுந்த சஸ்பென்சோடு செல்வதால், 22 எபிசோடுகளும் போகிற வேகமே தெரியாது. நான் 2 நாட்களிலேயே பார்த்து முடித்துவிட்டேன். அவ்வளவு வேகமான திரைக்கதை. கதை முழுவதும் அறிவியலும், ஆக்சனும் பரந்துவிரிந்து கிடக்கிறது. இவ்வளவு அருமையான சீரிசை ஏனோ முதல் சீசனுடன் கேன்சல் செய்துவிட்டார்கள்.

"LOST" சீரிஸ் பார்த்தவர்களுக்கு இந்த சீரிஸ் கண்டிப்பாகப் பிடிக்கும். LOST சீரிசின் மூன்றாவது சீசனை முடிக்கும்போது ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கும். முதலிரண்டு சீசன்கள் வரை, ஃப்ளாஸ்பேக் முறையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் காட்சிகள் வந்துகொண்டிருக்கும்,. அதேபோல 3வது சீசனிலும் காட்சிகள் வர, நாமும் வழக்கம்போல ஃப்ளாஸ்பேக் தானே என சாதாரணமாகப் பார்த்து வந்தால், 3வது சீசன் முடியும் போது ஒரு பெரிய குண்டைத் தூக்கி நம் தலையில் போடுவார்கள். இதுவரை எந்த ஒரு படத்திலும், சீரிசிலும் செய்யாத ஒரு அதிசய திரைக்கதையை அங்கே வைத்திருப்பார்கள். உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக ஃப்ளாஸ்ஃபார்வேர்டு என்ற திரைக்கதை உத்தியைப் பயன்படுத்தி இருப்பார்கள். இந்த உத்தியைக் கனகச்சிதமாக உபயோகித்த ஒரே சீரிஸ் 'LOST' மட்டுமே. அதற்காகவேனும் 'LOST' சீரிசைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். 3வது சீசனுக்குப் பிறகு அங்கே ஒவ்வொரு காட்சியும் ஃப்ளாஸ்ஃபார்வேர்டாக இருக்கும்.

இங்கே Flash Forward சீரிசில், 2 நிமிடம் 17 நொடிகளுக்கு மட்டும் அந்த ஃப்ளாஸ்ஃபார்வேர்டு நடக்கிறது. அதனால் நடப்புகாலத்தில் ஏற்படும் விளைவுகளே மொத்த சீரிசும். இவ்வளவு அருமையான கதையம்சம் உள்ள சீரிசில் குறைகளும் இல்லாமல் இல்லை. சீரிஸ் முழுவதும் ஏகப்பட்ட கேரக்டர்கள் வருகின்றன. அதில் சில கேரக்டர்கள் கதைக்குத் தேவையில்லாமல் தனியாகத் துருத்திக்கொண்டிருக்கின்றன. அதைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம். அதேபோல எபிசோடுகளின் எண்ணிக்கையையும் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். 16 எபிசோடுகளில் முடித்திருந்தால் இன்னும் பர்ஃபெக்டாக இருந்திருக்கும். 

ஒலிவியா கேரக்டரின் முடிவு எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இன்னும் நன்றாக கேரக்டர் ஸ்டடி பண்ணியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த கேரக்டர், சீரிசின் ஆரம்பத்தில் ஒருமாதிரியும், முடியும்போது ஒரு மாதிரியும் நடந்துகொள்கிறது. அப்படியே அந்த கேரக்டரின் குணநலன்கள் மாறினாலும், அதற்குண்டான சரியான காரணம் கதையில் சொல்லப்படவில்லை. அதேபோல ஹீரோ கதாபாத்திரமான ஏஜண்ட் மார்க் பென்ஃபார்டு கேரக்டருக்கு, முக்கியத்துவம் தருகிற வகையில் திரைக்கதையை அமைத்திருக்கலாம். அந்த கேரக்டரை விட, டிமிட்ரி கேரக்டர் சுவாரசியமாக அமைந்ததால் சீரிசுடன் நம்மால் முழுமையாக ஒன்ற முடிவதில்லை.

1999ல் வெளிவந்த, Robert J. Sawyer என்பவர் எழுதிய Flashforward என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த சீரிசின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. திரைக்கதை அமைத்தவர்கள் Brannon Braga & David S. Goyer. டேவிட் கோயர் யார் என்பது தீவிர ஹாலிவுட் சினிமா ரசிகர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். க்ரிஸ்டோபர் நோலனின் பேட்மேன் படங்கள் மூன்றிற்கும் , அவருடன் இணைந்து கதை, திரைக்கதை எழுதியவர். அதுபோக Blade, Blade II, Blade Trinity, Dark City, Jumper, Ghost Rider 2, Man of Steel போன்ற பல படங்களுக்குக் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இந்த சீரிசில் எந்தளவுக்கு சுவாரசியமாகக் கதை சொல்ல முடியுமோ அந்தளவு சொல்லியிருக்கிறார். அவரது திரைக்கதை உங்களுக்குப் பிடிக்குமென்றால் இந்த சீரிசும் கண்டிப்பாகப் பிடிக்கும்.

ஒவ்வொரு எபிசோடு ஆரம்பிக்கும்போதும், அந்த எபிசோடு எப்படி முடியப்போகிறது என்பதைப் பற்றிய சில காட்சிகள் ஆரம்பத்தில் காட்டப்படும். ஆடியன்சான நமக்கு அது ஃப்ளாஸ்ஃபார்வேர்டு மாதிரி. இயக்குனரின் ரசனையோ ரசனை.

வித்தியாசமான கதை பிடிக்குமென்றால் நம்பிப் பாருங்கள். கண்டிப்பாக ஏமாற்றாது. ஆனால் கதை இரண்டாவது சீசனிலும் தொடர்வதுபோல இருப்பதால், சிலபல கேள்விகளுடனும், மர்மங்களுடனுமே முதல் சீசனை முடித்திருப்பார்கள். அதனால் அதற்காகவும் தயாராகிக்கொண்டு பார்க்க ஆரம்பியுங்கள். அதற்கு மேல் பதில்கள் வேண்டுமென்றால் நாவலை தான் படிக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் 2வது சீசனை, முழுக்க முழுக்க நாவலை அடிப்படையாக வைத்து எடுப்பதாக ப்ளான் பண்ணியிருந்தார்களாம். ஆடியன்ஸ் எண்ணிக்கை குறைந்துகொண்டே சென்றதால் முதல் சீசனோடு கேன்சல் செய்துவிட்டார்கள்.


என்னதான் குறைகள் சொன்னாலும் ஒட்டுமொத்தமாக எனக்குப் பிடிக்கவே செய்தது. நல்லதொரு சயின்ஸ்பிக்சன் த்ரில்லர். எனது ரேட்டிங்க் 8/10

Flash Forward - Everyone in the world will get a flash of their own future.

2 comments:

  1. சீரிஸ் இதுவரையில் பார்த்ததே இல்லை, ஆனா நீங்க இதுவரையில் சொல்லி இருப்பதை ஏனும் பார்க்க முயற்சி செய்கிறேன். பிரபலம் ஆகிய பிரபல பதிவருக்கு வாழ்த்துகள் உங்களின் மாற்றங்களை ஆவலுடன் எதிர்நோக்கும் உங்கள் நண்பன்

    ReplyDelete
    Replies
    1. இந்த சீரிஸ் ஹார்ட்கோர் சயின்ஸ்பிக்சன் ரசிகர்களுக்காக மட்டும். :)

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *