Nov 3, 2013

3 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை



முந்தைய பகுதியில் டைம் ட்ராவல் பாரடாக்ஸ்கள் பற்றிய அறிமுகத்தையும் க்ராண்ட்ஃபாதர் பாராடாக்ஸ் பற்றியும் விரிவாகப் பார்த்தோம். அதைத் தவிர்ப்பது எப்படி என்பதற்கான சில வழிமுறைகளையும் பார்த்தோம். இந்தப்பகுதியில் பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸ் பற்றியும், கடந்த காலத்துக்குப் பயணம் செய்யப்பட்டதற்கான சாட்சியாகக் கூறப்படும் ஒரு ஆதாரத்தைப் பற்றியும் காண்போம்.

2.Bootstrap Paradox:

டைம் ட்ராவல் மூலமாக இல்லாத ஒரு பொருளை புதியதாக உருவாக்க முடியும். இல்லாத பொருளென்றால் அதற்கு தோற்றமும் கிடையாது முடிவும் கிடையாது. என்ன சொல்கிறாய் ? இல்லாத பொருளை எப்படி உருவாக்குவது ? நாம் என்ன கடவுளா என்றால் அதற்கும் சாத்தியம் இருக்கிறது. டைம் ட்ராவல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டால் நாம் கடவுளுக்கு நிகரான ஒரு சக்தியைக் கூடப் பெற முடியும். எப்படி என்று கேட்பவர்களுக்கு இந்த பாரடாக்ஸ் விளக்கம் அளிக்கிறது.

க்ராண்ட்ஃபாதர் பாரடாக்சில் ஒரு டைம் லூப்பைப்(Time Loop) பார்த்தோம். அருண் தாத்தாவைக் கொன்றுவிட்டால் அவன் பிறக்க முடியாது. அவன் பிறக்கமுடியாவிட்டால் கடந்தகாலத்துக்கு சென்று தாத்தாவைக் கொல்ல முடியாது. அதனால் அவன் தாத்தா உயிரோடிருப்பார். அவர் உயிரோடிருப்பதால் அருணும் பிறப்பான். அவன் பிறந்தால் கடந்த காலத்துக்குச் சென்று தாத்தாவைக் கொல்லுவான். கொன்றால் அவன் பிறக்க முடியாது. இப்படி இந்த லூப்பிற்கு முடிவே கிடையாது. அந்த லூப் எப்படி முடியும் என்று நம்மால் கணிக்கவே முடியாது. அப்படி ஒரு முடிவற்ற (Infinite) தொடர்ச்சியாக அந்த லூப் பயணித்துக்கொண்டே இருக்கும். அதுதான் அந்த பாரடாக்சின் முரண்பாடு.

அதேபோல இந்த பாரடாக்சும் ஒரு டைம் லூப்தான். க்ராண்ட்ஃபாதர் பாரடாக்ஸ் ஒரு முடிவற்ற டைம் லூப் என்றால் இது ஒரு க்ளோஸ்டு டைம்லூப் (Closed Time Loop). க்ராண்ட்ஃபாதர் பாரடாக்சில் சம்பந்தப்பட்ட ஆட்கள் என்ன ஆவார்கள் என்று தெரியாது. பூட்ஸ்ட்ராப் பாரடாக்சில் சம்பந்தப்பட்ட ஆட்களோ, பொருட்களோ எப்படி வந்தது என்பதே தெரியாது. அதுதான் இதன் முக்கிய அம்சமே. இந்த கான்சப்டை வைத்தும் நிறைய படங்கள் வந்துள்ளன.


இதைப் புரிந்துகொள்வதற்கு மிக எளிதான உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். அருண் ஒரு ஆராய்ச்சியாளன் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு ஒரு டைம்மெஷினைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம். இரவு பகலாக உழைத்தும் அவனால் ஒரு டைம் மெஷினை டிசைன் செய்ய முடியவில்லை. அப்போது எதிர்காலத்திலிருந்து வயதான அருண் டைம் மெஷின் மூலமாகப் பயணித்து வந்து தற்கால அருணைச் சந்திக்கிறான். தற்கால அருணுக்கு டைம் மெஷினை செய்வதற்கான டிசைன்களையும் ஐடியாக்களையும் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறான். அந்த தகவல்களை மூலமாகக்கொண்டு ஒரு டைம் மெஷினை
செய்கிறான் அருண். பிறகு அதன் மூலம் பயணித்து கடந்த காலத்துக்குச் சென்று கடந்தகால அருணுக்கு அந்த டிசைன்களைக் கொடுத்துவிட்டு வருகிறான்.

இந்த உதாரணத்தில், டைம் லூப்பில் உள்ள அந்த டிசைன் யாரால் உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழும். அதுதான் இந்த பாரடாக்ஸ். அது யாராலும் உருவாக்கப்படவில்லை. அதற்கு ஆரம்பமும் கிடையாது முடிவும் கிடையாது. அந்த லூப்பை விட்டு அதனால் வெளியே வரவும் முடியாது. தற்கால அருணுக்கு(I) எதிர்காலத்திலிருந்து வந்த அருண்(II) மூலம் அந்த டிசைன் கிடைத்தது. அப்படியே நாளாக நாளாக, அருண்(I) அருண்(II) ஆக மாற்றமடைகிறான். பிறகு அருண்(II) கடந்த காலத்துக்குப் பயணம் செய்து அருண்(I)-க்கு அந்த டிசைனைக் கொடுக்கிறான். அப்படியானால் அந்த டிசைன் திடீரென எப்படி உருவாகியது ?

இது கிட்டத்தட்ட "கோழி முதலில் வந்ததா ? முட்டை முதலில் வந்ததா ?" என்பதையொத்த கேள்வி. இதற்கு விடையே கிடையாது. அதற்குத்தான் முதலிலேயே கூறினேன் கடவுளுக்கு இணையான சக்தியெல்லாம் இந்த டைம் ட்ராவல் மூலம் சாத்தியமாகக் கூடிய வாய்ப்பிருக்கிறதென்று. சரி இந்த டிசைன் போன்ற தகவல்களை மட்டும்தான் நம்மால் உருவாக்க முடியுமா என்றால் இல்லை. பொருட்களையும் உருவாக்கலாம். எப்படி ?

அருண் ஒரு டைம் ட்ராவலர் என்று வைத்துக்கொள்வோம். தனியாக வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். திடீரென்று அவனுக்கு ஸ்பூன் தேவைப்படுகிறதென்று வைத்துக்கொள்வோம். வீட்டில் அப்போது ஸ்பூன் இல்லை. உடனே அவன் "சாப்பிட்டு முடித்தபிறகு எதிர்காலத்திலிருந்து வந்து ஒரு ஸ்பூனை கிச்சனில் வைப்பேன்" என்று நினைத்துக்கொள்கிறான். நினைத்த அடுத்த நொடியே கிச்சனுக்கு சென்று பார்த்தால் அங்கே ஒரு ஸ்பூன் இருக்கிறது. அதை வைத்து சாப்பிடுகிறான். சாப்பிட்டு முடித்தபிறகு கடந்த காலத்துக்குப் பயணித்து அதே ஸ்பூனை கிச்சனில் வைத்துவிட்டு திரும்பிவிடுகிறான். இந்த உதாரணத்தில் அந்த ஸ்பூனுக்கு ஆரம்பமும் கிடையாது முடிவும் கிடையாது. எந்த ஃபேக்டரியிலும் அது தயாரிக்கப்படவில்லை.

இந்த பாரடாக்ஸ் வைத்தும் நிறையப் படங்கள் வந்துள்ளன. உதாரணத்திற்கு Somewhere in Time(1980) படத்தைச் சொல்லலாம். இந்தப் படத்தில் 1972ல் ஒரு பாட்டி வந்து கதாநாயகனுக்கு ஒரு கடிகாரத்தைக் கொடுத்து "Come back to me"னு சொல்லிட்டுப் போயிடுது. அந்தப்பாட்டி யார் என்று தேடும்போது 1900களில் பெரிய நாடக நடிகையா இருந்தவள் என்று தெரிந்துகொள்கிறான். அடுத்து 1980ல் கதாநாயகன் ஆழ்ந்த உறக்கத்தின் (self hypnosis) மூலமாக 1912க்கு செல்கிறான். அங்கே அந்த நாடக நடிகையைக் கண்டு அவள் மீது காதல் கொள்கிறான். அந்த கடிகாரத்தையும் அவளிடம் கொடுக்கிறான். அவர்கள் காதல் என்ன ஆனது ? இருவேறு காலங்களைச் சேர்ந்த அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை. இதில் வயதாகின்ற அந்த நடிகை 1972ல் அந்த கடிகாரத்தைக் இளம் கதாநாயகனுக்குக் கொடுக்கிறாள்.


இந்த உதாரணத்தில் அந்த கடிகாரம் எங்கிருந்து உருவாகியது என்றால் அதற்குக் காரணம் இந்த பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸ் தான். இதே போல மற்றொரு உதாரணம் "Bill & Ted's Excellent Adventure (1989)" படத்தைச் சொல்லலாம். நல்ல ஜாலியான அட்வெஞ்சர் டைம் ட்ராவல் படம் இது. இதில் பல பாகங்கள் வந்துள்ளன. அவற்றைப் பற்றி பிறகு விரிவாகக் காண்போம். இந்தப்படத்தில் மேலே நான் சொல்லியுள்ள ஸ்பூன் உதாரணம் போல ஒரு காட்சி வரும். ஸ்பூனுக்குப் பதில் கதாநாயகனுக்கு ஒரு கதவின் சாவி தேவைப்படும். அதை இந்த பாரடாக்ஸ் மூலம் உருவாக்கி உபயோகிப்பான்.

அதே போல டெர்மினேட்டர் படத்தின் முதல் பாகத்தில் எதிர்காலத்திலிருந்து ஒரு டெர்மினேட்டரை 1984க்கு அனுப்பி சாரா கானரைக் கொல்ல முயற்சிப்பார்கள். அதில் இறந்து(!) போகிற டெர்மினேட்டரின் கைப்பாகம் மட்டும் ஸ்கைநெட்டுக்குக்(Skynet) கிடைக்கும். அதை வைத்துதான் தானாக இயங்கும் மெஷின்களை ஸ்கைநெட் தயாரிக்கும். அதன் மூலமாகத்தான் மனிதர்களுக்கும் மெஷின்களுக்கும் இடையே போர் தொடங்கும். இதில் ஜான் கானர் மனித இனத்துக்குத் தலைமை தாங்கிப் போரை நடத்துவதால் அவனைப் பிறப்பதற்கு முன்பே கொல்லுவதற்காக மெஷின்கள் ஒரு டெர்மினேட்டரைத் தயாரித்து 1984க்கு அனுப்பும். ஜான் கானர் சார்பில் கைல் ரீஸ் என்ற மனிதன் சாரா கானரைக் காப்பாற்றுவதற்காக அனுப்பப்படுவான்.

இதில் அந்த டெர்மினேட்டர் உருவாக்கப்படுவதற்காக டிசைன் மற்றும் ஐடியா இந்த பாரடாக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டது தான். ஒருவேளை அந்த டெர்மினேட்டர் 1984க்கு அனுப்பப்படவில்லை எனில் ஸ்கைநெட்டுக்கு அந்த டெர்மினேட்டரின் பாகம் கிடைத்து இருக்காது. அதன் மூலம் தானாக இயங்கக்கூடிய மெஷின்கள் தயாரிக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கும். அதனால் போரும் நடந்திருக்காது. அதனால் பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸ் இங்கே ஒரு முக்கியப்பங்கை வகிக்கிறது.

இதைத்தவிர வேறுசில பாரடாக்ஸ்களும் உள்ளன. அவற்றையெல்லாம் அடுத்த பதிவில் மொத்தமாகப் பார்த்து விடலாம். இப்போது போன பதிவில் சொல்லிய கடந்தகாலப் பயணத்துக்குரிய ஆதாரத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.


Charlie Chaplin படமான The Kid(1928)ல் தான் அந்த ஆதாரம் பதிவாகியுள்ளது என்று அந்தப்படத்தைக் கூர்ந்து கவனித்த ஒர் ஆள் சொல்லி இருக்கிறார். இந்த செய்தி கொஞ்சம் பழைய செய்திதான். கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் போன பதிவில் இதைப்பற்றி பில்டப் விட்டிருந்தேன். பதிவு வெளியிட்ட பத்தாவது நிமிடத்திலேயே முகநூல் நண்பர் அண்ணன் சிவராஜ் அவர்கள் தொடர்புகொண்டு, இந்தப் படத்தைப் பற்றிதானே சொன்னாய் என்று வெகு எளிதாகக் கண்டுபிடித்து சொல்லிவிட்டார். ஆனால் இது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் கீழே உள்ள வீடியோவை நன்றாகப் பாருங்கள். அதில் ஒரு பெண்மணி செல்போன் பேசிக்கொண்டு செல்வதைப் பார்க்கலாம்.

 

செல்போன்களே கண்டுபிடிக்கப்படாத 1928ல் எப்படி அந்தப் பெண்மணி கையில் செல்போன் வந்தது என்பதுதான் டைம் ட்ராவலை ஆதரிப்பவர்களின் வாதம். அந்தப் பெண்மணி எதிர்காலத்திலிருந்து டைம் ட்ராவல் செய்து 1928க்குச் சென்றிருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் டைம் ட்ராவல் சாத்தியமில்லை என்று கூறுவோர் "அது செல்போனே அல்ல. வாக்கி டாக்கியாக இருக்கலாம். அல்லது ஹியரிங் எய்டாக இருக்கலாம்" என்று பதில் வாதம் செய்கின்றனர். "அதுபோக அப்படியே அது செல்போனாகவே இருந்தாலும் எந்த டவரும் இல்லாத அந்தக்காலத்தில் அது எப்படி வேலை செய்யும்" என்பதும் டைம் ட்ராவலை சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.

"டைம் ட்ராவலையே அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தால், டவரே இல்லாமல் பேசக்கூடிய நவீன செல்போன்களை ஏன் கண்டுபிடித்திருக்கக் கூடாது" என்று இவர்கள் மறுவாதம் செய்ய, அப்படியே இரு சாராருக்குமிடையே வாதங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. டைம் ட்ராவலில் நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அந்த விவாதங்களைப் படிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இணையத்தில் இதுபற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். பார்க்காதவர்கள் படித்து இன்புறுங்கள்.

கடைசியாக ஒரு கேள்வி. டைம் ட்ராவல் பற்றி முதல்முறையாகக் கதை எழுதியது யார் என்றால் பெரும்பாலானோரின் பதில் "H.G.Wells" என்பதாகத்தான் இருக்கும். ஏனெனில் இவரின் பல நாவல்கள் டைம் ட்ராவலைப் பற்றியும், விஞ்ஞானத்தைப் பற்றியதுமானது. பல நாவல்கள் திரைப்படங்களாகவும் உருவெடுத்துள்ளன. ஆனால் பதில் தவறு. இந்தியாவில்தான் டைம்ட்ராவலைப் பற்றிய முதல் கதை பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன கதை அது ? யார் எழுதியது ? என்று தெரிய வேண்டுமா அடுத்த பதிவு வரை காத்திருங்கள் அல்லது கூகுளாண்டவரை அணுகுங்கள். :)

வெகு சீக்கிரமே அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

அடுத்த பகுதி
தொடரும்-

10 comments:

  1. இப்போ பார்த்திங்கனா நான் இப்போ ஒரு வாரம் முன்ன போயி நீங்க பதிவிட்ட அடுத்த பதிவுகள எடுத்து வந்து இங்கன கமெண்ட்ல போடணும் போல இருக்கு, புதிர் வைத்து முடிப்பதில் தல பி.ஹெச்டி பண்ணி இருப்பீங்க போல அருமை!!! அப்புறம் யாரு பாஸ் அவரு உள்டபில தட்டிவுடுங்க :) ;)

    ReplyDelete
    Replies
    1. உள்டபில தட்டற அளவுக்குப் பெரிய சஸ்பென்ஸ்லாம் இல்ல தல..!! சும்மா ஆர்வத்தக் கெளப்பி விடுறதுக்கு தான் அந்த ட்ரிக்கு.. ஆனா ஒர்க் ஆவுதா இல்லியானு தெரில.. :) அடுத்த பதிவோட ஆரம்பத்துல பதில் தருகிறேன்.

      Delete
  2. Replies
    1. ஆல் இன் ஆல் அழகுராஜானா அது நீங்க தான் :)

      Delete
  3. டைம் ட்ராவல் மாதிரியே திருப்ப திருப்ப படிக்க வச்சிட்டியே அருண்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு தடவை தான திருப்ப படிச்சீங்க.. அப்டியே கொஞ்சம் பொறுத்துக்கங்க.. ஏழட்டு தடவை படிச்சாலும் புரியாதபடிக்கு அடுத்தடுத்த பாகங்களைப் போடறேன்.. :)

      Delete
  4. உண்மையிலேயே டைம் ட்ராவல்ல இவ்வளவு தியரிகள் இருக்குன்றது இப்ப தான் தெரியும்...
    கிரு கிருன்னு வருது... சீக்கிரம் முடிங்க

    ReplyDelete
    Replies
    1. டைம் ட்ராவல்ல இன்னும் நிறைய இருக்கு தல.. அதுக்குள்ள சீக்கிரம் முடிக்கச் சொன்னா எப்டி ? கிரு கிருனு வந்து மயக்கம் போட்டாலும் விடறதாயில்ல :P

      Delete
  5. Replies
    1. Coming soon.. :)
      Thanks for the visit and comment..!!

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *