Oct 20, 2013

Band of Brothers (2001) Mini Series


இரண்டாம் உலகப்போர் பற்றிய படங்களும், டிவி சீரிஸ்களும் கணக்கிலடங்காதவை. அதிலும் முக்கியமாக ஹாலிவுட்டில் இருந்து வந்த படங்கள் தான் அதிகம். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த, மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் Saving Private Ryan (1998). தலைவர் Steven Spielberg இயக்கிய இந்தப்படத்துக்கு நிகராக இன்னும் வேறு எந்தப்படமும் வரவில்லை என்றே சொல்லுவேன். அந்தளவு நுணுக்கமாகவும், திறமையாகவும் எடுத்திருப்பார். பொதுவாகவே இம்மாதிரி போர் பற்றிய படங்கள் என்றால் பின்னி பெடலெடுப்பது தலைவரின் வழக்கம். (உதாரணம் - Empire of the Sun , Schindler's List , Saving Private Ryan , War Horse ) அப்படி 2001ல் வெளிவந்து சக்கைப்போடு போட்ட, இரண்டாம் உலகப்போரைப் பற்றிய இந்த மினிசீரிசும் தலைவரின் தயாரிப்பில் வந்ததுதான்.

ஸ்டீவனும், டாம் ஹேங்க்சும் இணைந்து தயாரித்த இந்த மினி சீரிசின் ஒரு எபிசோடை டாம் ஹேங்க்ஸ் இயக்கவும் செய்திருப்பார். Stephen E. Ambrose என்பவர் இரண்டாம் உலகப்போரின் போது நடந்த உண்மைச் சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு எழுதிய Band of Brothers என்ற புத்தகம் தான் இந்த சீரிசுக்கும் அடிப்படை. அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த Easy Company இரண்டாம் உலகப்போருக்கு தயாராவதிலிருந்து, போர்முடியும் வரை நடக்கும் சம்பவங்களே இந்த சீரிஸ்.

போர்பற்றி எத்தனை ஆயிரக்கணக்கான படங்கள் வந்தாலும் அதன் முழுமையான தாக்கத்தை ஒரு சாதாரணக் குடிமகனால் உணர்ந்து கொள்ளவே முடியாது. போரினால் ஏற்படும் பாதிப்புகளில் ஒருசிலவற்றையே நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். எதிரியின் கையால் எப்போது சாவோம் என்று தெரியாமல் போர்க்களத்தில் போரிடும் வீரர்களின் மனநிலையை அவர்களைத் தவிர வேறு யாருமே புரிந்துகொள்ள முடியாது. மேற்கொண்டு இதைப்பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் தயவுசெய்து கீழே இருக்கும் வீடியோவை ஒருமுறை முழுமையாகப் பார்த்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். (பலர் முன்பே பார்த்திருக்கலாம். இருந்தாலும் இன்னொரு முறை பார்க்குமாறு வேண்டுகிறேன்)


இதைப் பார்த்தவர்கள் அந்த ராணுவ வீரர்களின் நிலையைப் பற்றி சற்றேனும் சிந்தித்து இருப்பர். திரும்ப உயிரோடு வந்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கே இந்த ஃபீலிங்க்ச காட்டறியே அவங்களால் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தான் நாட்டு அப்பாவி மக்களைக் கொஞ்சமாவது நினைச்சுப்பாத்தியா என்று கேட்பவர்களும் இருப்பார்கள். என்னைக் கேட்டால் அதற்கு காரணம் இந்த வீரர்கள் அல்ல. அவர்களுக்குப் பின்னால் இயங்கும் அரசியல்வாதிகளும், அரசுப் பொறுப்புகளில் இருக்கும் பெரிய பெரிய அதிகாரிகளும்தான். வீரர்கள் வெறும் அம்புகளே. அது மட்டுமின்றி இறந்துபோன அரேபிய நாட்டு மக்களுக்கும் சேர்த்து தான் இந்த வீடியோ. விலைமதிப்பற்ற அன்பு இருக்கையில் போர் தேவையா என இந்த வீடியோ மறைமுகமாகக் கேட்கிறது.

இந்த சீரிசைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் அமெரிக்க ராணுவத்தின் ஸ்ட்ரக்சரை முதலில் தெரிந்துகொள்வோம். கீழே இருக்கும் இந்த சார்ட்டைப் பார்த்தால் ஓரளவு புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ராணுவத்தில் ஸ்க்வாட் தான் இருப்பதிலேயே மிகச்சிறிய யூனிட். அதில் 4-10 வீரர்கள் இருப்பார்கள். சார்ஜண்ட் அல்லது கார்ப்பொரல் ரேங்கில் இருப்பவர் இதனை வழிநடத்துவார். இதுபோல ஸ்க்வாடில் இருந்து ஃபீல்டு ஆர்மி வரை உள்ள ஸ்ட்ரக்சரையும் அதற்குரிய கமாண்ட் லெவலையும் இந்த சார்ட்டிலிருந்து எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். சீரிஸ் பார்ப்பதற்கு முன்னால் இந்த ஸ்ட்ரக்சரை ஒருமுறை புரிந்துகொண்டு பார்த்தால் படத்தோடு நன்றாக ஒன்றிப்பார்க்க முடியும்.


இந்த சீரிசின் முதல் எபிசோடு, Easy Company போருக்குப் போவதற்கு முன்னால் பயிற்சியில் ஈடுபடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது. ராணுவப் பயிற்சி பற்றி பல படங்களில் காட்டி இருந்தாலும் அதை மிகவும் நுணுக்கமாகவும், உண்மைக்கு நிகராகவும் காட்டிய படங்கள் வெகு சிலவே. குப்ரிக்கின் Full Metal Jacket அந்த வகையில் ராணுவப்பயிற்சியை வெகு யாதார்த்தமாகக் காட்டிய படம். படத்தின் முதல் பகுதி முழுக்க ராணுவ வீரர்கள் பயிற்சி எடுப்பதை மட்டுமே காட்டியிருப்பார். இந்த சீரிசிலும் முதல் எபிசோடு முழுக்க ராணுவப்பயிற்சி மட்டுமே காண்பிக்கப்படுகிறது. காலேஜில் படித்தபோது முதல் இரண்டு வருடங்கள் நான் NCC யில் இருந்ததால், ராணுவப்பயிற்சி பற்றிய முதல் எபிசோடை உணர்வு ரீதியாகப் பார்க்க முடிந்தது. என்.சி.சி பயிற்சிக்கும் ராணுவப் பயிற்சிக்கும் உள்ள வித்தியாசம், எறும்புக்கும் ஏரோப்ளேனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது என்றாலும் என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

இன்னும் சொல்லப்போனால் என்.சி.சி. யில் இருந்ததால் தான் ஒழுக்கம், நேர்மை. அறம் என்று ஒருசில பண்புகள் மெருகேறின. உடல்ரீதியாக ஸ்டாமினா கொடுத்ததும் இந்த என்.சி.சி. தான். சனிக்கிழமை காலை 5 மணிக்கு எழுந்து கிளம்ப வேண்டியிருக்கும். அப்போ ஆரம்பிக்கற பயிற்சி காலை 10 மணிக்கு தான் முடியும். பிறகு காலை உணவாக 2 பூரி மட்டும் கொடுப்பார்கள். சாப்பிட்டு முடித்த உடன் மறுபடியும் தியரி க்ளாஸ் இருக்கும். மதியம் 1:30 அல்லது 2 மணிக்கு தான் முடியும். இப்படி ஒவ்வொரு வாரமும் இருக்கும். இதில் உடற்பயிற்சியின் போது முடியவில்லை என்றெல்லாம் சொல்லமுடியாது. அப்படி சொன்னால் இன்னும் அதிகமாகப் பயிற்சி கொடுப்பார்கள். அல்லது மிகவும் கேவலமாக திட்டுவார்கள். அந்த ரோஷத்துக்காகவே எல்லாரும் முடிந்தவரை, முடியாது என்று சொல்வதைத் தவிர்ப்பார்கள். இதுபோக வருடத்துக்கு ஒருமுறை 10 நாள் கேம்ப் வெளியிடத்தில் நடக்கும். அங்கே நடக்கும் கூத்துக்களையெல்லாம் எழுதினால் இந்தப் பதிவு பத்தாது. இதுபோக அவ்வப்போது ரைஃபிள் பயிற்சியும் இருந்தது. (ரொம்ப லெங்க்த்துங்கறதால இங்கே முற்றுப்புள்ளி வைக்கறேன்)

இந்த சீரிசில் மொத்தம் 10 எபிசோடுகள். ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு அத்தியாயம் போன்று எடுக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு எபிசோடு ஆரம்பிப்பதற்கும் முன்னால், தற்போது உயிர்வாழும் ஈசி கம்பெனி வீரர்களின் சிறிய பேட்டி இருக்கும். நேரில் என்ன நடந்தது என்று சம்பந்தப்பட்ட அவர்கள் வாயாலாயே சொல்லக் கேட்பது இந்த சீரிசுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. அதுபோல ஒவ்வொரு எபிசோடு முடிந்தவுடனும், அந்தந்த எபிசோடுக்குத் தேவையான மேலதிகத் தகவல்கள் எண்ட் க்ரெடிட்டாக போடப்படுகிறது.

ஆர்ட் டைரக்சன், உடையலங்காரம், நடிப்பு, இசை, இயக்கம், கேமரா, எடிட்டிங்க், ஸிஜி என அத்தனை துறைகளும் மிகச்சரியாக அமைந்த சீரிஸ் இது. அதிலும் 1940களுக்கு நம்மை அழைத்துச்செல்கிற செட்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். படத்துக்கான பட்ஜட்டில் செட்டுக்கு மட்டுமே ஒரு கணிசமான அளவு செலவு செய்திருக்கிறார்கள். மொத்த செலவு 125 மில்லியன் டாலர்ஸ். இந்த சீரிஸ் வெளியானபோது, இதுதான் இருந்ததிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட சீரிசாம். அதற்கேற்றாற்போல வசூலையும் அள்ளிக்குவித்து விட்டது. டிவிடி கலக்சன் மட்டுமே 250 மில்லியன் டாலர்ஸ். அதுபோக ப்ளூரே வெளியிட்டபோதும் வேறெந்த சீரிசுக்கும் கிடைக்காத மாபெரும் வரவேற்பு.

நடிப்பைப்பற்றி கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மிகச்சரியான ஆளாய் தேடிப்பிடித்துப் போட்டிருக்கிறார்கள். கதை முதன்மைக் கதாபாத்திரமான ரிச்சர்ட் வின்டர்ஸ் பார்வையில் நகர்கிறது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த Damian Lewis பிரித்துவிட்டார். அதுபோக ஈசி கம்பனியின் ஒவ்வொரு வீரனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு எபிசோடாக பார்க்க பார்க்க, நாமும் ஈசி கம்பெனியில் ஒரு வீரனாகி விடுகிறோம். அந்த வீரர்கள் அடையும் அதே உணர்வுகளை நாமும் பெறுகிறோம். ஏதாவது ஒரு சண்டையில் யாராவது ஒரு வீரன் இறக்க நேரிட்டால் நம்மையும் துடிக்க வைக்கிறார்கள்.

போர்க்களம் இப்படித்தான் இருக்கும் என நம் கண்முன்னே யதார்த்தமாக காண்பிக்கிறார்கள். வெறும் சண்டைக்காட்சிகளின் தொகுப்பாக இல்லாமல், வீரர்களின் மனநிலையையும் யதார்த்தமாகக் காண்பிக்கிறார்கள். எதிரிகளின் இடத்தை வேவு பார்ப்பது எப்படி, ஒரு சண்டைக்குப் போவதற்கு முன் தயாராவது எப்படி, திடீரென நாம் திட்டமிட்டபடி சண்டையின் போக்கு போகாமல் நமக்கெதிராய் போய்க்கொண்டிருந்தால் சமாளிப்பது எப்படி, எதிரிகளை அழிப்பதற்கு ப்ளான் போடுவது எப்படி என்று போரின் அத்தனை விஷயங்களையும் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் சித்தரித்துள்ளனர். அனைத்து எபிசோடுகளும் பார்த்து முடிக்கும்போது நமக்கே ராணுவத்தின் பல விஷயங்கள் அத்துபடியாகும் அளவுக்கு காட்சிகள் இருக்கின்றன.

ஏழாவது எபிசோடு ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு வீரர் (தாத்தா) கொடுக்கும் பேட்டியை மட்டும் இங்கே கொடுத்துவிட்டு முடித்துக்கொள்கிறேன்.
"You don't have a chance, when your friends go down. . .. . .to really take care of them as you might. And especially if you're under attack, moving or whatever, and. . . .l withstood it well. . .. . .but l had a lot of trouble in later life. . .. . .because those events would come back. . .. . .and you never forget them."
கடைசியாக, இதுவரை இந்த சீரிசை இன்னும் பார்க்கவில்லை என்றால் உடனடியாகப் பார்க்க ஆரம்பியுங்கள். இரண்டாம் உலகப்போரை உங்கள் கண் முன்னால் மீண்டும் பார்க்கும் தருணத்தை இழந்துவிடாதீர்கள். One of the best series of all time.

Band of Brothers (2001) - Ordinary men. Extraordinary times

6 comments:

  1. அருமையான அலசல்... நான் Band of Brothers பார்த்து 4 வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆனால் இன்னமும் "போர்" சம்பந்தப்பட்ட படங்கள் பற்றிய பேச்சு வரும்பொழுதெல்லாம், இந்த சீரீஸ் பற்றி பேசாமல் இருப்பதில்லை...
    தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல,
      இந்த சீரிஸ் ரொம்ப நாளா பாக்கனும் பாக்கனும்னு நினைச்சு இப்போதான் ரீசண்டா பாத்தேன். போர் பற்றிய படங்கள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுனால இந்த சீரிசும் எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. உங்களுக்கும் இது புடிக்கும்னு தெரிஞ்சதுல சந்தோஷம்.
      உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல..!!

      Delete
  2. இப்படியே ஏதேதோ சொல்லி சொல்லி என்னையும் சீரிஸ்லாம் பார்க்க வச்சிடுவீங்க போல, போர் காட்சிகள் போர்க்களம் என்றாலே ஒரு ஆர்வம் நிச்சயம் இருக்கும் , அவர்களின் உணர்வுகளை எதார்த்தமாக எடுக்கும்பட்ச்சம் அது நிச்சயம் வெற்றி தான் , அப்படியே இருக்கு உங்களோட கருத்தும் அதனால பார்ப்போம். :) :) (எப்போ 3வது பார்ட் ??? ) ;)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா தவறவிடவே கூடாத சீரிஸ் இது. மொத்தமே 10 எபிசோடு தான். முடிஞ்சா டவுன்லோடு பண்ணி பாத்துடுங்க..!! (3வது பார்ட் கூடிய சீக்கிரமே வெளியிட முயற்சி பண்ணுறேன்.. அவ்ளோ ஆர்வமா..அவ்வ்வ்வ்)

      Delete
  3. இந்த மினிசீரீஸ் பற்றிய விமர்சனம் மற்றும் இல்லாமல் - போரின் பாதிப்புகளையும் - உங்கள் NCC அனுபவங்களையும் பற்றி சொல்லியது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. இப்பொழுதே டவுன்லோட் செய்து விடுகிறேன், நமக்கும் War படங்கள்’நா (மினிசீரிசும் தான்) ரொம்ப பிடிக்கும் பாஸ். :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா,
      வார் படங்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. இந்த சீரிஸ் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுத்துச்சு. அதனால நீங்களும் மறக்காம இந்த சீரிஸ் பாத்துடுங்க.. உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.. பாத்துட்டு சொல்லுங்க எப்டி இருந்துச்சுனு..!!

      உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..!!

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *