Feb 13, 2014

6174 அறிவியல் புனைவு நாவல் - புத்தக விமர்சனம்


நான்கே நான்கு எண்களை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரு நாவலைப் படைத்திட முடியுமா ? அதிலும் அதை ஒரு அறிவியல் புனைவாக எழுதிட முடியுமா ? என்றால், முடியும் என உறுதிகொண்டு 6174 என்ற நான்கு எண்களை வைத்துக்கொண்டு ஒரு நாவலை எழுதிவிட்டார் சுதாகர் எனும் புதிய எழுத்தாளர் ஒருவர்.

பொதுவாகவே சயின்ஸ் பிக்சன் என்றால் அதில் எனக்கு மிகுந்த விருப்பமுண்டு. திரைப்படங்களிலும் கூட சயின்ஸ்பிக்சன் வகைப்படங்களில் கூடுதல் ஆர்வம். சுமாரான கான்செப்ட் தான் என்றாலும் கூட அந்தப்படத்தை நான் பார்த்துவிடுவேன். அந்தளவு பிடித்தமான ஒரு ஜானராக சயின்ஸ் பிக்சன் இருந்து வருகிறது. தமிழில் சயின்ஸ்பிக்சன் திரைப்படங்கள் வெகு வெகு அரிதாக இருந்துவரும் நிலையில், எனக்குத் தெரிந்து தமிழில் சயின்ஸ்பிக்சன் நாவல்களும் அவ்வளவாக வெளிவருவதில்லை. என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, நில்லுங்கள் ராசாவே என வெகுசில நாவல்களே ஞாபகத்திற்கு வருகின்றன. அத்தனையும் சுஜாதா எழுதியவை. சுஜாதாவைத் தவிர்த்து வேறு ஒருவருடைய சயின்ஸ் பிக்சன் நாவலைப் படித்ததாக எனக்கு நினைவில்லை.

கல்லூரிக் காலத்தின் போதும், அதற்குப் பிறகும் வாசிப்பின் மீதான ஆர்வம் சற்றே தொய்வடைந்து போயிருந்தது (புத்தகத்திலிருந்து ஈபுக்காய் மாறிய சோகம்). வாசிப்பிற்குண்டான நேரத்திற்கும் சேர்த்து படங்களாகப் பார்த்துத் தள்ளிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த நாவலைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நீண்டகாலத்திற்குப் பிறகு தமிழில் ஒரு சயின்ஸ்பிக்சன், அட்வெஞ்சர் நாவல் என்று தெரிந்தவுடன் உடனடியாக ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கிவிட்டேன். கூடவே நீண்ட நாட்களாக வாங்கவேண்டும் என்று நினைத்திருந்த "பொன்னியின் செல்வன்" 5 பாகங்கள் அடங்கிய செட்டையும் வாங்கினேன்.


இந்த நாவல் தான் திரு.சுதாகர் அவர்களது முதல் நாவலாம். உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. தமிழில் இப்படியான ஒரு முழு சயின்ஸ் பிக்சன் நாவலை நான் இதுவரை படித்ததில்லை எனலாம். அப்படி பல அறிவியல் மர்மங்களை உள்ளடக்கி அருமையான ஒரு நாவலாக நமக்குத் தந்துள்ளார்.

லெமூரியாக்கண்டம்
லெமூரியா சீட் க்ரிஸ்டல்
பிரமிட்
எண்கணிதத்தில் கருஞ்சுழிச் சூத்திரம் (6174)
கோலங்களில் உள்ள ஆச்சரியங்கள்
கட்டி முடிக்கப்படாத பகோடா (கோவில்)
சீலகந்த் மீன்கள்
லோனார் விண்கல் தாக்கிய இடம்
ஓலைச்சுவடிகளிலுள்ள பழைய தமிழ்ப்பாடல்கள்
பண்டையகால மர்மங்கள்
க்ரிஸ்டலோக்ராபி

இம்மாதிரிப் பலப்பல அறிவியல் புதிர்களை எல்லாம் ஒன்றிணைத்து அதில் அனந்த்-ஜானகி, சடகோபன், தேவராஜ், சம்பத், ரவி என கதாபாத்திரங்களை உலாவவிட்டு அருமையான சயின்ஸ்பிக்சன்/அட்வெஞ்சர் நாவல் ஒன்றைத் தந்துள்ளார். நாவல் முழுவதும் பல அறிவியல் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. வியர்வையை வைத்து ஒரு ஆளை இனம் காணுதல், விண்கல்லை வைத்து கப்பலை எரியச் செய்தல் என பலப்பல ஆச்சரியமான அறிவியல் விந்தைகள் நாவல் முழுவதும் வருகின்றன.

கதைச்சுருக்கம் : லெமூரியா காலத்தில் கதை ஆரம்பிக்கிறது. ஒரு சக்திவாய்ந்த பிரமிட்டை இரண்டாக உடைத்து பூமியின் வெவ்வேறு இடங்களில் புதைக்கிறார்கள். பிறகு அந்த உலகம் அழிய ஆரம்பிக்கிறது. மற்ற எல்லா லெமூரியர்களும் தப்பித்து மேலுலகம் செல்ல, ஒரு லெமூரியன் மட்டும் இங்கேயே தங்கிவிடுகிறான். (லெமூரியர்களுக்கு ஆண்/பெண் இனவேறுபாடு கிடையாது) மனிதர்களின் கையில் அந்த பிரமிட் கிடைத்தால் ஒரு மாபெரும் அழிவு உண்டாகும் என்பதால் அதை அவர்களிடமிருந்து காப்பதற்கு அந்த லெமூரியன் பூமியிலேயே தங்கிவிடுகிறான்.

அங்கிருந்து நிகழ்காலத்துக்கு வரும் கதை முதல் 50 பக்கங்களுக்குள் நம் தலையைச் சுற்ற வைக்கிறது. வேறு வேறு காலங்களில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பைக் கொடுத்து கதைக்கான அஸ்திவாரத்தை ஆரம்பித்துவிடுகிறார். அத்தனையும் போகப்போகத்தான் விளங்கும் என்பதால் நாம் பொறுமையாகப் படிக்க வேண்டியிருக்கிறது.

அதன்பிறகு அந்த பிரமிட்டைத் தேடி அனந்த், ஜானகி, சடகோபன் என நல்லவர்கள் க்ரூப் ஒன்றும், கிழக்கு(பெயரே அதுதான்), ரவி என கெட்டவர்கள் க்ரூப் ஒன்றும் அலைகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், வானத்தில், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஒரு விண்கல் வந்து உடைந்து இரண்டு பாகங்களாகி சுற்றுகிறது. அந்த பிரமிடின் சக்தியைக் கொண்டு, விண்கல்லை வைத்து, மூன்றாம் உலகப்போருக்குத் திட்டமிடுகிறது தீயவர்கள் க்ரூப். அதற்குப்பிறகு அதைவிட பயங்கரமான ஒரு முடிவிற்கும் திட்டமிடுகிறது.

நல்லவர்கள் க்ரூப் அந்த கெட்டவர்களின் முயற்சியை எப்படி தடுத்து நிறுத்தினார்கள் என்பதைச் சுவாரசியம் குறையாமல் சொல்லியுள்ளார் ஆசிரியர். இதில் இந்தியா, பர்மா, தென்கொரியா, அமெரிக்கா, ரஸ்யா எனப்பல நாடுகளும் வந்துபோகின்றன.

இந்த நாவலில் எனக்குப் பிடித்த ஒரு விஷயமென்றால் அது பழைய தமிழ்ப்பாடல்களின் வழியாக புதிர்களை அமைத்தது தான். அந்தப்பாடல்களை எல்லாம் சுதாகர் அவர்களே எழுதியிருக்கிறார் என்றால் அது மிகவும் பாராட்டத்தக்கது. அந்தப்பாடல்களின் வழியே பலப் புதிர் முடிச்சுகளை அமைத்து, பின்பு ஒவ்வொன்றாக புதிர்களுக்கான விடைகளைக் கண்டறியும் இடங்களெல்லாம் மிகவும் சுவாரசியமான பகுதிகள்.

ஒவ்வொரு பக்கத்திலும் பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகிறார். இந்த நாவலின் பலமும் பலவீனமும் அதுதான். இவ்வளவு தகவல்களைப் பெற்று அதை ஒரு நாவலில் கொண்டுவருவதற்கு எவ்வளவு தேடல், உழைப்பு இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அதே சமயம் அந்த தகவல்கள் கொஞ்சம் ஓவர் டோசாகி விட்டதோ எனச் சில இடங்களில் சந்தேகிக்கவும் வைக்கிறது.

நாவலில் அனந்த்-ஜானகி ஜோடியின் காதலை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாமோ என்றும் தோன்றியது. அவர்களுக்கிடையிலான காட்சிகளை இன்னும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கலாம். அதேபோல படத்தின் முக்கியக் கதாபாத்திரமான ரவியின் அறிமுகம் பாதி நாவலுக்கு மேல்தான் வருகிறது. அதனால் அதன் முழுத் தாக்கமும் நமக்குக் கிடைப்பதில்லை. அவனைப்பற்றிய அறிமுகம் நாவலின் ஆரம்பத்திலேயே வந்திருக்க வேண்டும்.

மற்றபடி நாவலின் க்ளைமாக்சை இன்னும் கொஞ்சம் பலமாக, ஹீரோயிசத்தனமாக வைத்திருக்கலாமோ என்று எனது கமர்சியல் வாசக உள்ளம் எண்ணியது. ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் சாதாரணமாகவே முடித்துவிட்டார். நாவல் முழுதும் நல்ல எளிமையான தமிழில் இருப்பதால் வாசிக்கும்போது மனதுக்கு நெருக்கமாக உணரமுடிகிறது.

நாவலை வாசிக்கும்போது வரும் பல சயின்டிஃபிக் மிஸ்டரிகளை நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், அதற்குப்பிறகு அதைப்பற்றிய தேடலுக்கு வழிவகுக்கிறது. அதுவே இந்த நாவலின் வெற்றி. பல அறிவியல் விந்தைகளைத் தெரிந்துகொண்ட மன நிறைவு பெறலாம்.

முதன்முறை படிக்கும்போது பல விடயங்களைத் தவறவிட்டிருப்போம். அதனால் இரண்டாவது முறையும் படிக்க வேண்டும். அப்போதுதான் கதையின் பரிணாமங்களை முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும். அம்மாதிரியான கதை சொல்லலைக் கையாண்டிருக்கிறார்.

கடைசியாக,
நாவல் சில குறைகளைக் கொண்டிருந்தாலும் நாம் வரவேற்றுக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாவல் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் நாவல் என்பதைச் சற்றும் நம்ப முடியாத அளவுக்கு இருப்பதால், அடுத்தடுத்து அவர் எழுதுவதற்குரிய உற்சாகத்தை, இந்த தமிழ் கூறும் நல்லுலகம் தான் கொடுக்க வேண்டும். அதன்மூலம் இன்னும் பல அருமையான சயின்ஸ்பிக்சன் நாவல்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

6174 - தமிழில் வந்த ஹாலிவுட்(!?) சயின்ஸ்பிக்சன் நாவல்

10 comments:

  1. ஆழ்ந்த விமர்சனம்... நன்றி...

    இனிய நண்பரின் விமர்சனமும் இங்கே : http://vasagarkoodam.blogspot.com/2014/02/6174.html

    ReplyDelete
    Replies
    1. லிங்குக்கு மிக்க நன்றி.. :) நண்பரின் விமர்சனம் அருமை..!!

      Delete
  2. கில்லாடி ரங்கா சொன்ன பின்னாடி அப்பீல் ஏது? தோ... நாளைக்கே வாங்கிடறேன். யேற்கனவே சரண் குமாரும் இதை படிக்கச் சொல்லி ரெஃபர் செஞ்சிருந்தாரு. நாந்தான் மிஸ் பண்ணிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. நோ அப்பீல்.. உடனடி சரண்டர் ஒன்லி.. :) :) கண்டிப்பா படிங்க..!!

      Delete
  3. நல்ல விமர்சனம் நண்பரே!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தல..!! :)

      Delete
  4. நல்ல விமர்சனம் தல , புத்தகம் என் கைக்கு வந்துவிட்டது விரைவில் படிக்க தொடங்குவேன்

    ReplyDelete
    Replies
    1. படிங்க.. படிச்சுட்டு உங்க கருத்துக்களையும் சொல்லுங்க..!! :)

      Delete
    2. http://subadhraspeaks.blogspot.in/2014/05/6174.html

      Delete
  5. தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?

    ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *