Jan 11, 2014

வீரம் (2014) - தல பொங்கல்டா


பொதுவாக அஜித், ரஜினி படங்களுக்கு விமர்சனம் என்ற பெயரில் எதையாவது கிறுக்குவது இல்லை என்பது நான் ப்ளாக் ஆரம்பித்த புதிதில் எடுத்த முடிவு. ஆனால் இன்றைக்கு இந்தப்படத்தைப் பற்றி எழுதியே தீரவேண்டும் என்று என்னுடைய ஆல்டர் ஈகோ சொன்னதால் இதோ இந்தப்பதிவு. படத்துக்குக் கிளம்பிய கதையே தனிக்கதையாக இருப்பதால் அதைப்பற்றி முதலில் சொல்லிவிட்டு பிறகு படத்துக்குள் போகலாம். பிடிக்காதவர்கள் அடுத்த 4 பத்திகளை அப்படியே அலேக்காக தாண்டி 5வது பத்திக்கு வாருங்கள்.

பொதுவாக நான் லேட்டாக தூங்கி லேட்டாக எழுந்திரிக்கும் பழக்கமுள்ளவன். வழக்கமாக காலை 8 மணிக்கு எழுந்திரிக்க அலாரம் வைத்திருப்பேன். வீரம் படத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு முதல் ஷோ டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். அதற்கு முந்தின நாள் 2:30 மணிக்கு மேல் தான் தூக்கமே வந்தது. வீரம் ஷோ 11 மணிக்குதான் என்பதால், எப்போதும் உள்ள 8 மணி அலாரத்தை மாற்றி 9:30 மணிக்கு வைத்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலை 9:30 மணிக்கு அலாரம் அடித்தது.

என்ன ஞாபகத்தில் இருந்தேனோ தெரியவில்லை, அப்படியே அலாரத்தை அமர்த்திவிட்டு மறுபடியும் தூங்கிவிட்டேன். பிறகு படபடவென கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து கதவைத் திறந்தால், அங்கே டிக்கெட் புக் பண்ணிய நண்பன் கிளம்பி ரெடியாக இருந்தான். என்னடா இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கற என்று சில பல ஆன்மீக வார்த்தைகளை அள்ளிவிட அப்போது தான் எனக்கு உறைத்தது. உடனே மொபைலை எடுத்து நேரம் என்னவென்று பார்த்தால் காலை மணி 10:36. இன்னும் 24 நிமிடங்களில் படம் ஆரம்பித்துவிடும். என்னைப்போலவே இன்னொரு நண்பனும் (தினேஷ்) காலை 6 மணிக்கு மேல்தான் தூங்கியதால் அவனும் அப்போதுதான் எழுந்தான்.

நாங்கள் படம் புக் பண்ணிய தியேட்டர் எங்கள் இருப்பிடத்திலிருந்து அட்லீஸ்ட் 5 கி.மீ. தொலைவாவது இருக்கும். அதில் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடக்கவே 15 நிமிடங்கள் ஆகும். தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் படத்தை மிஸ் பண்ணக்கூடாது என்ற வெறி இருந்ததால், அடுத்த 2 நிமிடத்தில் ரெடி ஆனேன். கையில் கிடைத்த சட்டை, பேன்ட்டை போட்டுக்கொண்டு முகம் கழுவி, வாய் கொப்பளித்து செருப்பை மாட்டிக்கொள்ள மொத்தமாக இரண்டே நிமிடங்கள் தான் ஆனது. தினேசும் அதே 2 நிமிடத்தில் கிளம்பினான். பொம்பளைங்க ரெடியாக 2 மணி நேரம் ஆம்பளைங்க ரெடியாக ரெண்டே நிமிஷம் எனப் படத்தில்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதை உண்மையிலேயே இன்று செய்துகாட்டினோம். (பல் விளக்கவில்லையா என்று கேட்பவர்களுக்கு - சிங்கம், சிறுத்தை எல்லாம் பல்லா விளக்குது).

அப்படியே டிக்கெட் புக் பண்ணிய நண்பனின் பைக்கில் நாங்களிருவரும் ஏறிக்கொள்ள, 3 பேரும் ட்ரிப்புள்ஸாக பஸ் ஸ்டாண்ட் வரை செல்ல 2 நிமிடங்கள் ஆனது. இப்போது மணி 10:40 பைக்கில் இருந்து இறங்கிய அடுத்த நொடியிலேயே ஒரு பஸ் வந்தது. அடுத்த பத்தாவது நிமிடம் தியேட்டர் இருந்த மாலில் இருக்கிறோம். 10:55-க்கெல்லாம் தியேட்டருக்குள் நுழைந்து இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அமர்ந்துவிட்டோம். 5 நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு படத்தை முதல் சீனிலிருந்தே பார்க்க தொடங்கியவுடன் தான் நிம்மதியே வந்தது. (எங்களின் இந்த வீரதீர செயலைப் பாராட்டி எங்களுக்கு பரிசில் கொடுக்க விரும்புவோர் ஃபேஸ்புக்கில் தொடர்பு கொள்ளவும்)

படத்தைப் பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் தெறி மாஸ். இப்படி ஒரு என்டெர்டெயினருக்காக தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம். இந்த மாதிரி ஒரு வில்லேஜ் சப்ஜெக்டில் வெள்ளை வேஷ்டி சட்டையில் அஜித்தைப் பார்ப்பதே மரண மாஸாக இருந்தது. தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடித்துக்கொண்டு இருந்த அஜித் இந்தப்படத்தில் டோட்டலாக வேறு மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டார் என்றால் அதில் மிகையே இல்லை.

படத்தின் கதையைப் பற்றியெல்லாம் எதுவும் சொல்லப்போவதில்லை. புதிய கதை என்று எதுவும் கிடையாது. நமக்கு எல்லோருக்கும் பரிட்சயமான கதை தான். ஹீரோ, ஹீரோயின், வில்லன், அடிதடி, காமெடி, சென்டிமெண்ட் என தமிழ் சினிமாவின் கமர்சியல் இலக்கணத்தின் ஒரு இன்ச் கூட மாறாமல் வந்திருக்கும் படம் தான் இது. சொல்லப்போனால் இதே மாதிரி கதை வேறு பல படங்களில் (குறிப்பாக பழைய ரஜினி படங்களில்) நாம் பார்த்த கதை தான். ஆனாலும் படத்தை வேறுபடுத்திக் காட்டுவது அதன் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் அஜித்.
முதல் பாதியில் கதையின் பேக்ரவுண்ட் சொல்லப்படுகிறது. சந்தானம் முதல் பாதி முழுக்க ரவுண்டு கட்டி ரவுசு பண்ணுகிறார். எனக்குத் தெரிந்து நீண்ட நாட்கள் கழித்து சந்தானம் காமெடிக்கு வாய்விட்டு சிரித்தேன் என்றால் அது இந்தப்படம் தான். தனது பழைய ஃபார்முக்கு மீண்டுவிட்டார் என்றே தோணியது.

அஜித் பாசக்கார அண்ணனாக இந்தப்படத்தில் பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. கடந்த சில படங்களாக கெட்ட வார்த்தை பேசுவது, முரட்டுத்தனமான காட்சிகளில் நடிப்பது, சின்னக்குழந்தையின் மேல் அயர்ன் பாக்ஸ் வைத்து மிரட்டுவது எனப் பெண்களுக்கு முக்கியமாக தாய்மார்களுக்குப் பிடிக்காத சீன்களாக நடித்துக்கொண்டிருந்த தல இந்தப்படத்தில் எல்லோருக்கும் பிடித்த ஒரு ஆளாக நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு அப்புறம், மீண்டும் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோவாக அவரது இமேஜ் உயரும் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்கேற்றாற்போல பல சென்டிமெண்ட் காட்சிகளும் படத்தில் உள்ளன.

முழுப்படத்தையும் அஜித் ஒற்றை ஆளாகத் தோளில் தாங்குகிறார். அஜித்துக்கென்றே ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியையுமே மாஸாக, கெத்தாக எடுத்திருக்கிறார்கள். சாதாரண காட்சியைக் கூட ஒளிப்பதிவு, எடிட்டிங்கின் மூலம் கெத்தாக எடுத்து புல்லரிக்க வைக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அஜித்துக்கு இப்படி ஒரே படத்தில் இத்தனை கெத்து சீன்கள் வைத்திருப்பது இந்தப்படத்தில் தான் என்று நினைக்கிறேன். மங்காத்தாவில் கூட இந்தளவு கெத்து இல்லை.

இயக்குனர் சிவா சண்டைக்காட்சிகளைத் தத்ரூபமாக எடுப்பதில் வல்லவர். இந்தப்படத்திலும் சண்டைக்காட்சிகளைப் புல்லரிக்கும் விதத்தில் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு சண்டைக்காட்சியின் போதும் நமக்கு உற்சாகமாகி, வெறி ஏறுவது போல எடுத்திருக்கிறார். அதற்கேற்றாற்போல டி.எஸ்.பி.யின் பிண்ணனி இசை வேறு. ஒரு சில இடங்களில் அந்தப் பிண்ணனி இசை சற்றே தலைவலியைக் கொடுத்தாலும் பெரும்பாலான இடங்களில் காட்சியின் பிரமாண்டத்தைக் கூட்டியே காண்பிக்கிறது.

படத்தில் வழக்கமாகப் பேசப்படும் பன்ச் டயலாக்குகள் எதுவும் இல்லை. ஆனால் சாதாரணமாகப் பேசும் டயலாக்கே செம்மயாக இருந்தது. உதாரணத்துக்கு நிறைய வசனங்களைச் சொல்லலாம்.
நம்ம கூட இருக்கறவங்கள நாம பாத்துக்கிட்டா நமக்கு மேல இருக்கறவன் நம்மள பாத்துக்குவான்
எதிரியா இருந்தாலும் அவன் முதுகுல குத்தக்கூடாதுடா தம்பி. திருப்பிவிட்டு நெஞ்சுல குத்து
இதைப்போல ஒவ்வொரு வசனமும் வெறித்தனம் தான். தியேட்டரில் ஒவ்வொரு  வசனத்துக்கும் விசிலும், சப்தமும் காதைப் பிளந்தது.

முதல் பாதி நல்ல விறுவிறுப்பாக சென்றது. இரண்டாம் பாதியும் நல்ல விறுவிறுப்புதான். ஆனால் அதில் ஒரே ஒரு குறை கதையின் போக்கை நம்மால் யூகிக்க முடிவது தான். அதுபோக மொத்தப்படத்திலும் எனக்குக் குறையாகப் பட்டது டூயட் பாடல்களும், சில சென்டிமெண்ட் காட்சிகளும் தான். தல-க்கு டான்ஸ் ஆடத்தெரியாது என்பது ஒன்றும் புதிய விஷயமில்லை. அதனால் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

தமன்னா அழகுப்பெண்ணாக வந்து மனம் கவர்கிறார். பாடல் காட்சிகளில் தேவையான அளவு கவர்ச்சி காண்பிக்கிறார். அதைத்தவிர அவருக்கு கதையில் தேவையான அளவுக்கு முக்கியத்துவமும் தரப்பட்டிருக்கிறது. அஜித்தின் தம்பிகளாக நடித்துள்ள 4 பேரும் சரியான சாய்ஸ். நன்றாக நடித்துள்ளனர். இரண்டாம் பாதியில் வரும் தம்பி ராமையாவும் தன் பங்குக்கு காமெடியில் கலக்கியிருக்கிறார். ஒருசில டபுள் மீனிங் காமெடிகள் இருந்தாலும் முகம் சுளிக்க வைக்கிற அளவுக்கு இல்லை. ரசிக்கிற விதத்திலேயே இருந்தது.

வில்லன் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு முக்கிய திருப்பம் பற்றியும் சொல்ல வேண்டுமென்பதால் சொல்லாமல் தவிர்க்கிறேன். மொத்தத்தில் டூயட் பாடல்களை மட்டும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பக்கா கமர்சியல் என்டெர்டெயினர் இந்தப்படம். இயக்குனர் சிவா ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்றாக அறிந்து வைத்துள்ளார். எந்தெந்த இடத்தில் எப்படி சீன் வைக்க வேண்டும் என்று நன்றாக அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல வைத்து அனைவரையும் கவரும் வகையில் படமெடுத்துள்ளார்.

வீரம் - தல ரசிகர்களுக்கு மட்டுமல்ல. பொதுவான கமர்சியல் படங்களின் ரசிகர்களுக்கும், குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் ரசிகர்களுக்கும் தான்.

பி.கு:
1.மங்காத்தாவை விட ஒரு படி மேல் என்றே இந்தப்படம் எனக்குத் தோன்றியது.
2.இந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஆகப்போவது உறுதி.
3.அஜித்தை இந்தப்படத்திலிருந்து இன்னும் அதிகமாகப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏன் என்று படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
4.தல அஜித் இனிமேல் அண்ணன் அஜித் ஆக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

8 comments:

  1. சூப்பர் தல...நல்ல கும்பல் உள்ள தியேட்டர்ல பார்த்தால சாதாரன காட்சி கூட மாஸா தெரியும்... :-)
    சாதாரண படத்தை வெற்றி படமாக்கியது அஜித் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் மட்டுமே...ஜில்லா பார்த்துடீங்களா அதை பத்தியும் உங்க கருத்தை சொல்லுங்க.. :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல.. உங்க விமர்சனத்தயும் பாத்தேன். 100% ஒரே மாதிரி கருத்த தான் ரெண்டு பேரும் சொல்லியிருக்கோம். :)
      ஜில்லா இன்னும் பாக்கல தல. போலாம்னு ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனா போயிட்டு வந்தவய்ங்க நிலைமையப் பாத்துட்டு கேன்சல் பண்ணிட்டோம். ஆனாலும் கொஞ்ச நாள்ல பாத்துருவோம்னு தான் நினைக்கறேன்.

      Delete
  2. இந்தப் பொங்கல் 'தல' க்கு மட்டும் தான் போல...!

    ReplyDelete
    Replies
    1. அப்டித்தான் தெரியுது. தீபாவளியைத் தொடர்ந்து பொங்கல் ரேசிலும் தல ஜெயித்துள்ளார். தளபதிக்கு இந்தப் பொங்கல் கொஞ்சம் கஷ்டம் தான்.

      Delete
  3. தல என்ன எழுதனும்னு நினைச்சானோ அதையே எழுதிடீங்க ரொம்ப ரசிச்சு பார்த்தேன் 3 தடவ பார்த்துட்டேன் , ரொம்ப நாள் ஆச்சு தலைய இப்படி பார்த்து அதுவும் இல்லாம ஆரம்பம் & வீரம் தொடர் வெற்றி எத்தனை வருஷம் ஆச்சு இப்படி வந்து கிட்டத்தட்ட தீனா & சிட்டிசன் அப்புறம்.// அஜித்தை இந்தப்படத்திலிருந்து இன்னும் அதிகமாகப் பிடிக்கத் தொடங்கியுள்ளது// எனக்கும் அப்படியே 100% நண்பா

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரிதான் தல. அடுத்தப்படத்துலயாவது பெப்பர் & சால்ட் ஹேர்ஸ்டைல் இல்லாம நார்மலா வந்தா நல்லாருக்கும். அதே கெட்டப்ல பாத்து பாத்து போரடிச்சுருச்சி. மங்காத்தா, ஆரம்பம், வீரம்னு 3 படத்துல இந்த கெட்டப்ல வந்துட்டாரு. அடுத்து ஒரு சேஞ்சுக்கு பழைய மாதிரி வந்தா மாஸா இருக்கும்.

      Delete
  4. I agree with you boss..
    Even I don't like thala's salt and pepper hair style.
    Anyhow, being a thala follower we can like him even if he comes with bald head..
    That's thala..

    ReplyDelete
    Replies
    1. அது என்னவோ உண்மைதான்

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *