Jan 15, 2014

Rush (2013) - பரபர விறுவிறு ரேஸ்


Men love women, but even more than that, men love cars.
பெண்களைப் பிடிக்காத ஆண்களைக் கூடப் பார்த்துவிடலாம். ஆனால் கார்கள் அல்லது பைக்குகள் பிடிக்காத ஆண்களைப் பார்க்க முடியாது. மேலே உள்ள வசனம் இந்தப்படத்தில் வரும் ஒரு வசனம் தான். அது உண்மையும் கூட. பெரும்பாலான ஆண்களுக்கு, ஏதாவது ஒரு குறிப்பிட்ட பைக் அல்லது கார் வாங்குவது தங்களின் வாழ்நாள் லட்சியங்களுள் ஒன்றாக இருக்கும். கேர்ள்ஃப்ரண்ட் கிடைப்பதைப் பற்றி கவலைப் படுகிறானோ இல்லையோ நிச்சயமாக தனது முதல் பைக் அல்லது கார் எதுவாக இருக்கவேண்டும் என்பதைப் பற்றி நிறைய கவலைப்படுவான். பெண்களுக்கு, தங்களைவிட கார்கள் தான் ஆண்களை அதிகம் கவர்கிறது என்கிற கசப்பான உண்மை தெரிகிறதாலேயோ என்னவோ அவர்கள் அதைப்பற்றி அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் பல பெண்கள் கார்களை வெறுக்கவும் செய்கின்றனர். (அப்படி என்ன நம்மிடம் இல்லாத ஒன்று அந்த மெஷின்களிடம் இருக்கிறது என்கிற பொஸசிவ்னெஸ் கூடக் காரணமாக இருக்கலாம்)

இந்தப்படம் 1970களில் நடைபெற்ற, ஃபார்முலா 1 கார் ரேஸ்களில் மோதிக்கொண்ட இரண்டு போட்டியாளர்களைப் பற்றிய உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஜேம்ஸ் ஹன்ட் (Chris Hemsworth) மற்றும் நிக்கி லௌடா (Daniel Brühl) என்ற இரண்டு ஃபார்முலா 1 ட்ரைவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு, என்ற ஒற்றை வார்த்தையில் இந்தப்படத்தை அடக்கிவிட முடியாது. படம் இரண்டு மணி நேரம் என்றாலும், கொஞ்சம் கூட போரடிக்காமல் சென்ற திரைக்கதை தான் இந்தப்படத்தின் சிறப்பு.

ஜேம்ஸ் ஹன்ட் - ப்ளேபாய். பார்க்கும் பெண்களை எல்லாம் தன்வசப்படுத்தும் வசீகரம் உள்ளவன். கொஞ்சம் முரடனும் கூட. ஃபார்முலா 1 ரேசில் வெற்றிபெற்று உலகப்புகழ் பெறுவது இவனது குறிக்கோள். நிக்கி லௌடா - பணக்கார குடும்பத்தில் பிறந்து, குடும்பத்தினரின் ஆதரவில்லாததால் தனித்து நின்று ஃபார்முலா 1 ரேசில் வெல்ல போராடுபவன். ரொம்ப ரொம்பவே பொறுமைசாலி. புத்திசாலியும் கூட.

இப்படி முற்றிலும் மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்கள் மோதிக்கொள்ளுவது தான் படம். 1970களின் ஆரம்பத்தில் ஃபார்முலா 3 ரேஸ்களில் ஆரம்பிக்கும் மோதல் 1976ல் நடக்கும் ஃபார்முலா 1 ரேஸ்வரை எப்படி தொடர்கிறது யார் ஜெயித்தார்கள் என்பதைப் பரபரப்பாக சொல்லியிருக்கிறார் ரான் ஹோவர்டு. இருவரும் ரேசில் மோதிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் மிகவும் மதிக்கின்றனர். இருவருக்குமிடையே நடப்பது போட்டிதானே ஒழிய பொறாமை இல்லை என்பதை உணர்த்தும் காட்சிகள் அட்டகாசம்.

வெறும் ரேஸ்களை மட்டுமே வைத்து ஒப்பேற்றாமல் இருவரின் மனவோட்டங்களைக் காண்பிக்கும் விதமான காட்சிகள் வைத்ததும் சிறப்பான விடயம். பொதுவாகவே எனக்கு இந்தமாதிரியான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஸ்பீல்பெர்க்கின் பல படங்கள், A Beautiful Mind, The Pursuit of Happyness, Changeling, The Social Network, The King's Speech, Into the Wild, The Pianist என இந்த லிஸ்ட் மிகப்பெரியது. தமிழிலும் கூட இருவர், குரு போன்ற மணிரத்னம் படங்களும், பாரதி, காந்தி, பெரியார் போன்ற படங்களும் பிடிக்கும்.

உண்மைச் சம்பவங்கள் அல்லது பயோகிராபி படங்களை எடுப்பதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் எந்தெந்த காட்சிகளை எல்லாம் வைப்பது என்பதுதான். அதில் குழப்பம் வந்தால் கதாபாத்திரங்களின் தன்மையே மாறிப்போய்விட வாய்ப்புகள் உண்டு. அதேசமயம் உண்மைச் சம்பவங்களைத் திரித்துவிடாமல் அப்படியே சொல்ல வேண்டும். இதை எல்லாம் சரியாகச் செய்தாலும் கடைசியில் படம் ஒரு டாகுமெண்டரியாக மாறிவிட நிறைய வாய்ப்பிருக்கிறது. தமிழில் அந்தமாதிரி உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் டாகுமெண்டரியாக மாறிப்போனது துரதிருஷ்டம் தான்.

என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது சினிமாத்தனமாகத்தான் இருக்க வேண்டும். யதார்த்த சினிமா என்ற பெயரில் பேன் பார்ப்பதிலிருந்து, ரிப்பன் கட்டுவது வரை 10 நிமிடம் காட்சிப்படுத்தி, இதுதாண்டா உலக சினிமா இதைத்தான் எல்லோரும் ரசிக்க வேண்டும், இதுதான் உயர்ந்த ரசனை என்றால் அப்படிப்பட்ட ரசனையே தேவையில்லை என்றுதான் கூறுவேன். அதற்கென்று மெதுவாக நகரும் படங்களே எனக்குப் பிடிக்காது என்று கூறவில்லை. யதார்த்தத்தைக் காண்பிக்கிறேன் என்ற ரீதியில் வரும் போலி உலக சினிமாக்களைத்தான் நான் எதிர்க்கிறேன்.

பயோகிராபி படங்களிலும் இந்த யதார்த்தப் பிரச்சனை உள்ளது. யதார்த்தத்தைக் காண்பித்தால் அதற்குப் பெயர் சினிமாவே அல்ல. வேண்டுமானால் டாகுமெண்டரி என்று சொல்லலாம். அதே காட்சிகளை சற்று சினிமாத்தனமாகக் காட்சிப்படுத்தி சுவாரசியத்தைக் கூட்டுவதில் எந்தவிதத் தவறும் இல்லை என்பதே என் கருத்து. அப்படி சினிமாத்தனமாகப் பரபரப்பான காட்சிகளுடன், அதேசமயம் உள்ளதை உள்ளதுபடியே காட்சிப்படுத்திய மற்றொரு நல்ல படமே இந்தப்படம்.

இந்தப்படத்தின் வசனங்கள் இன்னும் பலவருடங்களுக்கு மக்கள் மத்தியில் ரெஃபரன்சாக உபயோகிக்கப்படப் போகிறது. அப்படி ஒவ்வொரு வசனமும் செதுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு நிக்கி லௌடா பேசும் இந்த வசனம்,
Niki Lauda: A wise man can learn more from his enemies than a fool from his friends.
ஜேம்ஸ் பேசும் இந்த வசனம்,
James Hunt: The closer you are to death, the more alive you feel. It's a wonderful way to live. It's the only way to drive. 
நிக்கி பேசும் இந்த வசனம்,
Niki Lauda: Happiness is your biggest enemy. It weakens you. Puts doubts in your mind. Suddenly you have something to lose.
ஒரு ரேசில் 'நிக்கி விபத்தில் சிக்கி' (என்னா ஒரு ரைமிங்) படுகாயங்களுடன் உயிர் தப்புவார். அதற்குப் பிறகு ஒரு சில ரேஸ்களில் பங்கேற்க முடியாமல் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பார். அந்த சமயத்தில் ஜேம்ஸ் ஹன்ட் வெற்றியடைந்துகொண்டிருப்பார். அதைப் பார்த்துவிட்டு முழுசிகிச்சையும் குணமடையாத நிலையில் மீண்டும் ரேசில் பங்கேற்க நிக்கி வரும்போது,
James Hunt: So in many ways, I feel responsible for what happened, and...
Niki Lauda: You were.
[pause]
Niki Lauda: But trust me... watching you win those races while I was fighting for my life, you were equally responsible for getting me back in the car.
இரண்டு பேருக்குமிடையே இருக்கும் போட்டியின் தீவிரத்தை உணர்த்தும், நிக்கியின் உத்வேகத்தை உணர்த்தும் இந்த சீனெல்லாம் சும்மா அதகளம் தான். இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கின்றனர். க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த்-க்கு இந்தளவு நடிக்கத் தெரியுமா என ஆச்சரியப்படுத்தி விட்டார். ஜாலியான, ரகளையான ஜேம்ஸ் ஹன்ட் கதாபாத்திரத்தை அனாயசமாகச் செய்திருக்கிறார். ஆனால் அவரைவிடவும் நிக்கி லௌடாவாக நடித்த டேனியல் பிரமாதப்படுத்தி விட்டார். இந்த வருடத்தின் அகாடமி விருதுகளுக்கான போட்டியில் இவர்கள் இருவரின் பங்கும் கண்டிப்பாக இருக்கும்.

ஸி.ஜி.க்களைக் குறைத்துக்கொண்டு உண்மையான ரேஸ் கார்களையே படத்திலும் பயன்படுத்தி உள்ளனர். ஃபார்முலா 1 கார்களில் உண்மையிலேயே 180 மைல்/மணி வேகத்தில் செல்லவிட்டுப் படமாக்கி உள்ளனர். க்ரிஸ், டேனியல் இரண்டு பேருக்கும் ஃபார்முலா 1 கார்களை ஓட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஃபார்முலா 3 கார்களைப் பயன்படுத்தி உள்ளனர். அதன் வெளிப்புறத்தை மட்டும்ஃபார்முலா 1 கார்களைப் போன்று மாற்றி இருவரும் ஓட்டியுள்ளனர்.

படத்தின் மற்ற அம்சங்களான ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. இசை எப்போதும் போல ரான் ஹோவர்டின் ஆஸ்தான இசையமைப்பாளரான Hans Zimmer. எப்போதும் போலப் பிண்ணனி இசையில் கலக்கி உள்ளார். ஃபார்முலா 1 ரேஸ் நடக்கும்போது வரும் பிண்ணனி இசை அதன் வீரியத்தை பலமடங்கு எடுத்துக்காட்டுகிறது.

ரான் ஹோவர்ட் மற்றுமொரு மாஸ்டர்பீசைக் கொடுத்துள்ளார். இவரைப் பற்றித் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்த வருடம் நடக்கப்போகும் அகாடமி விருது வழங்கும்விழா சொல்லும். அவ்வளவுதான். படத்தில் ஒன்றிரண்டு நிர்வாணக் காட்சிகள் இருப்பதால் R ரேட்டிங் பெற்றிருக்கிறது. அதனால் குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பதற்கு உகந்தது இல்லை. ஆனால் வயதுவந்தோர் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

Rush (2013) - Everyone's driven by something.

5 comments:

  1. மொத்தத்தில் திருப்தி இல்லை...! நன்றி...

    ReplyDelete
  2. உண்மை சம்பவங்களை/ யதார்த்தமான விஷயங்களை தொகுத்து திரைப்படங்களாக பார்ப்பது எனக்கு மிக பிடித்த ஒன்று , ஏற்கனவே நீங்க ஒரு படம் disconnect என்று நினைக்கின்றேன் அப்படி பரிந்துரைத்து பார்த்தது மிக பிடித்தது. இந்த படத்தையும் அவ்வாறே நினைத்து பார்க்க போகின்றேன். உங்களுடைய எழுத்து நடை நாள் ஆக ஆக மேன்மை ஆகி கொண்டே போகுது தல வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. disconnect வேற மாதிரிப்படம் தல. இது வேற மாதிரி. படம் போற ஸ்பீடே தெரியாம அவ்ளோ விறுவிறுப்பா இருக்கும். கண்டிப்பா பாருங்க. உங்களுக்குப் பிடிக்கும்

      Delete
  3. I never seen many Tamil bloggers written review for this movie. I love this movie so is any F1 fans.

    A nice review and still i like Niki Lauda and his comments. eventhough I am a Fan of Ayrton Senna. If possible Please write a review about the Documentary named Ayron Senna

    ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *