Dec 20, 2013

5 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை


முந்தைய பகுதியில் மகாபாரத்தில் உள்ள டைம் ட்ராவல் கதையைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அதில் ஐன்ஸ்டீனின் கருத்துக்கள் ஒத்துப்போவதைப் பற்றி என்னவென்றும் கேட்டிருந்தோம். அதேபோல ஒரு பாரடாக்சை வைத்து உலகையே ஆளும் சக்தியையும், அழிக்கும் சக்தியையும் பெறலாம் எனவும் பார்த்தோம். இந்தப்பகுதியில் அந்தப் பாரடாக்சைப் பற்றி சற்றுப் பார்த்துவிட்டு பிறகு ஐன்ஸ்டீனுக்குப் போகலாம். வாருங்கள்.

3.The Self-Visitation Paradox:

இதுதான் அந்த பாரடாக்ஸ். ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த பாரடாக்சும், க்ராண்ட் ஃபாதர் பாரடாக்சும் ஒன்றுபோலவே தோணும். ஆனால் வித்தியாசம் இருக்கிறது. ஒருவன் இறந்தகாலத்துக்கோ அல்லது எதிர்காலத்துக்கோ சென்று தன்னையே சந்தித்துக்கொள்ள முடியுமா ? என்பதுதான் இந்த பாரடாக்ஸ் முன்வைக்கும் கேள்வி. க்ராண்ட் ஃபாதர் பாரடாக்சில் வரும் அதே சந்தேகம் இங்கேயும் வரும். அதாவது எதிர்காலத்திலிருந்து இறந்தகாலத்துக்கு செல்லும் ஒருவன் அவனையே கொல்ல முடியுமா ? அப்படி கொன்றால் அவனது எதிர்கால வெர்ஷன் என்ன ஆகும் ?

க்ராண்ட் ஃபாதர் பாரடாக்சுக்கு சொன்ன அதே தீர்வுகள் தான் இந்த பாரடாக்சுக்கும். அந்தப்பகுதியை மறந்திருந்தால் இங்கே க்ளிக் செய்து படித்துவிட்டு வரலாம். சரி. இது ஒரு முக்கியமான பாரடாக்ஸ் தான். இதை வைத்து எப்படி உலகை நம் கைக்குள் கொண்டு வருவது ? நேரடியாக அது சாத்தியமில்லாத ஒரு விஷயம் தான். ஆனால் கொஞ்சம் யோசித்தால் வேறு வழியில் அது சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது ? எப்படி ?

அதற்கு முன்னால் தன்னையே சந்தித்துக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப்பற்றிப் பார்ப்போம். அருண் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு எழுந்திருக்கிறான். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி ஆபிசுக்கு செல்ல வேண்டும். ஆனால் மிகவும் அலுப்பாக இருக்கிறது. கிளம்புவதற்கு மனமே இல்லை. ரிலாக்ஸ் ஆகவேண்டும் என்று அவனது மனம் ஆசைப்படுகிறது. அவனது இந்த சோம்பேறித்தனத்துக்கு டைம் ட்ராவலை உபயோகித்துக்கொள்ளலாம் என்று யோசிக்கிறான். ஒரு இரண்டு மணி நேரம் வரைக்கும் ஓய்வெடுத்து விட்டு பிறகு ஆபிசுக்குப் போகலாம் என முடிவெடுக்கிறான்.

அதனால் 9 மணி வரை நன்றாக போர்வையை இழுத்துப் போர்த்தி தூங்கிவிட்டு மெதுவாக எழுந்திருக்கிறான். 10 மணி வரைக்கும் கிளம்புவதற்கான ஆயத்தங்களை எடுத்து 10:30 மணிக்கு ரெடி ஆகிறான். பிறகு தன்னிடம் இருக்கும் டைம் மெஷினை உபயோகப்படுத்து இரண்டு மணி நேரம் முன்னதாக 8:30 மணிக்குச் செல்கிறான். அங்கே அருண்(1) தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான் அருண்(2). கிச்சனுக்கு சென்று அரை மணி நேரத்தில் சாப்பாடு எல்லாவற்றையும் செய்துவிட்டு, சூடாக ஒரு டீ போட்டுக்கொண்டு பெட்ரூமுக்கு வருகிறான். மணி 9. அருண்(1)-ஐ எழுப்பி டீயைத் தருகிறான். பிறகு கிளம்பி ஆபிசுக்குச் செல்கிறான்.

இதில் அருண்(1), அருண்(2) இரண்டு பேரும் சந்தித்துக்கொள்ளும் விஷயம் தான் இந்த பாரடாக்ஸ். அருண்(2) அருண்(1)-க்கு டீ தரும் நிகழ்ச்சி ஆல்ரெடி நடந்த ஒரு விஷயம் தான். அதாவது நிகழ்ச்சி ஒருமுறை தான் நடக்கிறது. ஆனால் அருண் இரண்டு முறை, வெவ்வேறு நேரங்களில் அந்த நிகழ்ச்சியில் பங்குகொள்கிறான். ஒருமுறை டீ குடிப்பவனாகவும், இன்னொருமுறை டீ கொடுப்பவனாகவும் பங்குகொள்கிறான். தனக்கு தானே டீ போட்டு குடித்துக்கொள்கிறான். அவ்வளவுதான். இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் எந்த ஒரு வேலையையும் பொறுமையாகச் செய்துகொள்ளலாம். அவசரமே படவேண்டியதில்லை.

இன்னும் சொல்லப்போனால் உங்களின் இன்னொரு வெர்ஷனை உருவாக்கி அவனையே உங்களின் வேலையாளாகவும் வைத்துக்கொள்ளலாம். நீங்கள் சொன்ன நேரத்தில் டீ, பிஸ்கட் கொண்டு வந்து தருவான். அசதியாக இருந்தால் கை,கால் அமுக்கிவிடுவான். ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு டைம் ட்ராவல் செய்து இறந்தகாலத்துக்குச் சென்று அந்த வேலையாளாக மாறவேண்டும். அப்பொழுதுதான் உங்களின் இறந்தகால வெர்ஷன் உங்களிடம் வேலை வாங்க முடியும்.

அல்லது கொஞ்சம் சோம்பேறித்தனப்பட்டுவிட்டு, அதுதான் நமக்கு வேலை முடிந்துவிட்டதே என்று இறந்தகாலத்துக்கு செல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் ? இங்கேதான் பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸ் வருகிறது. செல்ஃப் விசிட்டேஷன் பாரடாக்சும், பூட்ஸ்ட்ராப் பாரடாக்சும் இணைந்து ஒரு மிகப்பெரிய கேள்வியை நம்முன் வைக்கிறது, ஆனால அதற்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி.

சரி இதை வைத்து உலகத்துக்கு எப்படி அழிவை ஏற்படுத்தலாம். இந்த பாரடாக்சையே கொஞ்சம் பிரமாண்டமாக யோசித்துப் பார்த்தால் அதற்கும் வழிகிடைத்துவிடும். உங்களின் ஒரே ஒரு எதிர்கால வெர்ஷனுக்குப் பதிலாக ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் உங்களின் எதிர்கால வெர்ஷன்கள் ஒரே நேரத்தில் இருந்தால் ??!! கொஞ்சம் தலை சுற்றுகிறதா ? அது எப்படி சாத்தியம் என்று குழம்புகிறதா ? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அல்லது ஒரு டீ சாப்பிட்டு ரிலாக்ஸ் பண்ணிவிட்டு அடுத்த பாராவுக்கு வாருங்கள்.

ஒரு மனிதனுடைய சராசரி ஆயுட்காலம் 80 என்று வைத்துக்கொள்வோம். அருண் 20 வயதில் அந்த பிரமாண்டமான டைம்ட்ராவலை நடத்த திட்டமிட்டிருக்கிறான் என்றும் வைத்துக்கொள்வோம். 20 வயதிலிருந்து 80 வயது வரை உள்ள கால இடைவெளி 60 ஆண்டுகள்.
60 ஆண்டுகள் = 21900 நாட்கள் (365*60 தோராயமாக)
21900 நாட்கள் = 5,25,600 மணி நேரம் (21900*24)

மொத்த வாழ்நாளில் குளிப்பது, பல்விளக்குவது, தூங்குவது, காதலிக்கு முத்தம் கொடுப்பது போன்ற விஷயங்களுக்கு ஒரு நாளில் 12 மணி நேரங்கள் போய்விட்டால் மீதியுள்ள நேரம் 2,62,800 மணி நேரம். இதில் 2,50,000 மணி நேரத்தை மட்டும் இப்போது எடுத்துக்கொள்வோம். டைம் மெஷின் மட்டும் இருந்தால் ஒரு மனிதனால் 2,50,000 வெர்ஷன்களை உருவாக்க முடியும்.


உதாரணத்துக்கு, அருண் 20 வது வயதில் இந்த எக்ஸ்பெரிமெண்டில் இறங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தான் கண்டுபிடித்த டைம் மெஷினில் ஏறி ஒரு மணி நேரம் இறந்தகாலத்தில் பயணம் செய்து காலை 9 மணிக்கு செல்கிறான். அங்கே ஆல்ரெடி ஒரு மணி நேரம் வயது குறைந்த அருண்(1) இருப்பான். டைம் ட்ராவல் செய்து அங்கே சென்ற அருண்(2)-க்கு அவனை விட ஒரு மணி நேரம் வயது கூடுதலாக இருக்கும். இப்போது 9 மணியிலிருந்து 10 மணி வரைக்கும் இரண்டுபேரும் ஒன்றாகவே இருப்பார்கள். கரெக்டாக 10 மணிக்கு அருண்(1) டைம் ட்ராவல் செய்து 9 மணிக்கு போகத் தயாராக இருப்பான். அப்போதுதானே அருண்(2) ஆக மாற முடியும்.

இப்போது அருண்(2) நிகழ்காலத்துக்கு வந்துவிடுவான். ஆனால் அவன் மறுபடியும் டைம் ட்ராவல் செய்து 10 மணியிலிருந்து 9 மணிக்கு செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அருண்(2) 9 மணிக்கு சென்றிருக்கும்போது அருண்(3) ஆக மாறியிருப்பான். அதனால் மொத்தம் 3 அருண்கள் அங்கே இருப்பர். இப்போது 9 மணியிலிருந்து 10 மணி வரைக்கும் மொத்தம்  3 அருண்கள் இருப்பர். ஆனால் அருண்(3)-க்கு அருண்(2)-ஐ விட ஒரு மணி நேரம் வயது கூடுதலாக இருக்கும். அதேபோல அருண்(1)-ஐ விட இரண்டு மணி நேரம் கூடுதலாக இருக்கும். இப்படியே அருண் டைம் ட்ராவல் செய்து மொத்தம் 10 அருண்களை உருவாக்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது கடைசியாக டைம் ட்ராவல் செய்து அருண்(10) ஆக உள்ளவனுக்கு மிகவும் டயர்டாக இருக்கும். ஏனென்றால் அவன் 9 மணியிலிருந்து 10 மணி வரை உள்ள ஒரு மணி நேரத்தையே 9 முறை சந்தித்திருப்பான். அதாவது அருண்(1)-ஐ விட 9 மணி நேரம் மூத்தவனாக அருண்(10) இருப்பான்.

அதனால் சோர்வடைந்த அருண்(10) ஒரு 8 மணி நேரத்துக்கு ஓய்வெடுக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அதாவது காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தூங்குகிறான். பிறகு சோர்வு நீங்கி உற்சாகமாகி, மறுபடியும் இறந்தகாலமான காலை 9 மணிக்கு டைம் ட்ராவல் ஆகி செல்கிறான். அப்போது அருண்(11) ஆக மாறியிருப்பான். மறுபடியும் ஒரு மணி நேரம் செலவிட்டபின்பு, 10 மணியிலிருந்து 9 மணிக்கு டைம் ட்ராவல் ஆகி அருண்(12) ஆக மாறுகிறான். இப்படியே இந்த சுழற்சி தொடர்ந்தால் அடுத்ததாக அருண்(20)-க்கு டயர்டாகும். அவன் வழக்கம்போல 8 மணி நேரம் தூங்கிவிட்டு மறுபடியும் காலை 9 மணிக்கு வந்துவிடுவான். இப்படியே மொத்தம் 250,000 அருண்களை உருவாக்கி விடலாம்.

அருண்(1) க்கு வயது 20. அதேசமயம் அருண்(250,000)-க்கு வயது கிட்டத்தட்ட 80 ஆகியிருக்கும். இதன்மூலம் தனது மொத்த வாழ்நாளையும் 9 மணியிலிருந்து 10 மணி வரையிலான ஒரு மணி நேரத்திலேயே வாழ்ந்து முடித்து விடலாம். 80 வயதான அருண் 20 வயதான அருணுடன் சேர்ந்துகொண்டு உலகைத் தன் கையில் கொண்டு வருவதற்கு திட்டமிடலாம். ஒரு ஆளிடமிருந்தே 250000 வெர்ஷன்களை உருவாக்கிவிட வாய்ப்பிருக்கும்போது இதை இன்னும் பிரமாண்டமாக யோசித்தால் ? யோசிங்க. இறந்தகாலத்திற்கு டைம் ட்ராவல் செய்வது மட்டும் சாத்தியமானால் ஒவ்வொரு நாடும் இம்மாதிரி எத்தனை வீரர்களை உருவாக்கும் ? ஒரே நேரத்தில் ஒருவனிடமிருந்தே 250000 வெர்ஷன்கள் என்றால், இந்திய ஜனத்தொகையான 120 கோடி மக்களிடமிருந்து எண்ணிக்கையிலடங்காத அளவுக்கு ஆட்களை உருவாக்கினால் ? இந்த பூமி தாங்குமா ?? மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

ஆனால் இதில் ஒரு மிகப்பெரிய சிக்கல் உள்ளது. அருண் 250,000 வெர்ஷன்களை வைத்து அந்த ஒரு மணி நேரத்தில் தான் நினைத்ததையெல்லாம் சாதித்துக்கொண்டிருப்பான். ஆனால் அருணின் எதிரி எவனாவது நினைத்தால், அருணின் அத்தனை வெர்ஷன்களையும் ஒரே நொடியில் அழித்துவிடலாம். எப்படி ? அருண்(1)-ஐ கொன்றுவிட்டால் தானாகவே மற்ற அனைத்து வெர்ஷன்களும் அழிந்துவிடுமல்லவா..!! அவ்வளவுதான் மேட்டரு.

இந்த செல்ஃப் விசிட் பாரடாக்சில் சொல்வதற்கு இன்னும் ஏராளமான சுவாரசியங்கள் மிகுந்து கிடக்கின்றன. அவற்றை சொல்வதற்கு முன்னால் ஒரு முன்னோட்டம் தேவையில்லையா ? அதற்காகத்தான் இந்தப்பதிவு. நான் இதுவரை படித்ததிலேயே மிகவும் சிக்கலான ஒரு டைம் ட்ராவல் கதை, இந்த செல்ஃப் விசிட் பாரடாக்சை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது தான். இந்தப்பதிவே கொஞ்சம் குழப்பமாக இருந்தால், அந்தக்கதை இன்னும் பயங்கரமாகக் குழப்பக்கூடியது. அதனால் இந்தப்பதிவு முழுவதுமாக எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகப் புரிந்துகொண்டு அடுத்த பகுதிக்கு வாருங்கள். அந்தக்கதையை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து எடுத்து விடலாம்.

பின் குறிப்புகள் :
1.ஐன்ஸ்டீனை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறேன். அடுத்த பதிவுக்கு அடுத்த பதிவில் இவரைப் பற்றிப் பார்க்கலாம். அல்லது ஜாலியாக டைம் ட்ராவல் படங்கள் சிலவற்றைப்பற்றி பார்த்துவிட்டு இவரைப் பற்றிப் பார்க்கலாம்.
2.செல்ஃப் விசிட்டை வைத்து உங்களுக்கு ஏதேனும் ஜாலியான கற்பனை தோன்றினால் தயவுசெய்து இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

அடுத்த பகுதி
 தொடரும்-

12 comments:

  1. Replies
    1. Looper - படம்..
      நான் சொல்லப்போறது (மொழிபெயர்க்கப்போறது) ஒரு கதை (உலகப்புகழ்பெற்ற டைம் ட்ராவல் பாரடாக்ஸ் கதை). மேலதிகத் தகவல்களை அடுத்த பதிவுல சொல்றேன் :)

      Delete
  2. பள்ளிக்கூட நாட்களுக்கு செல்ல வேண்டும்...!

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்குமே அந்த ஆசை உண்டு தானே..!! ஆனால் இப்போது எந்த வயதில் இருக்கிறீர்களோ அதே வயதுடன் தான் டைம் ட்ராவல் செய்ய முடியும்..!! அதே வயதுடன் தான் பள்ளிக்கூட நாட்களுக்கு செல்ல முடியும். உங்களின் சிறுவயது வெர்ஷனை சந்தித்து தேர்வைப்பற்றிக் கவலை கொள்ளாதே என்று தைரியப்படுத்தலாம். முடிந்தால் கொஸ்டின் பேப்பரையும் முன்னாலேயே கொடுத்து நிறைய மார்க் எடுக்க வைக்கலாம்.. :)

      Delete
  3. தல இந்த பதிவ ஒரு நாலு அஞ்சு தடவ படிச்சேன் அதிலும் ஒரு சில பத்திகள் அப்பப்பவே திரும்ப படிச்சேன் ச்சும்மா ஒரு ஆப் அடிச்ச எபக்ட்டு அப்படி தான் இருக்கு போங்க.... போற போக்க பார்த்தா நீங்க கால எந்திரம் தயாரிச்சிட்டு இருக்கீங்க போல :)

    ReplyDelete
    Replies
    1. //தல இந்த பதிவ ஒரு நாலு அஞ்சு தடவ படிச்சேன்//
      இந்தப் பொய்தானே வேணாம்ங்கறது.. :P :)

      ஆமாம் தல.. கால எந்திரம் தயாரிச்சவுடனே சொல்லியனுப்பறேன். வாங்க ஒரு ரவுண்டு போய்ட்டு வந்துருவோம். :) (ரவுண்டுன வுடனே ஆஃப்-ப ஞாபகத்துல வச்சுகிட்டு வந்துராதீங்க) :P

      Delete
    2. ஏப்பா செக் பண்ணி பாரு நான் நாலு அஞ்சு தடவ படிச்சத :) ஐ ஆம் பாவம் ஆப் மீன்ஸ் ஆப்பு :D :P

      Delete
    3. ஹா..ஹா..!! கவலப்படாதீங்க அடுத்த பகுதிய ஏழு எட்டு தடவ படிக்க வச்சிரலாம்.. :)

      Delete
  4. மிகவும் சுவையாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. இன்னும் சுவையான பகுதிகளைத் தர முயல்கிறேன்.
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. :)

      Delete
  5. Replies
    1. Nope..! It's not about a film. It's about a world famous time travel story. Will try to post it as soon as possible.

      Thanks for the visit and comment bro..!!
      I would appreciate, if you post your comment with an identity, when you're commenting next time :)

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *