Dec 16, 2013

The Lost Room (2006) - TV Mini-Series


சமீப காலமாக ஒரே மாதிரியான படங்களைப் பார்த்து, கார்கள் பறப்பதும், கட்டிடங்கள் இடிந்து விழுவதும் மாதிரியான அதிரடி ஆக்சன் காட்சிகளாகப் பார்த்து போரடித்திருந்த நிலையில், ஏதாவது வித்தியாசமாகப் பார்த்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. மெலோட்ராமா வகைப் படங்கள் பார்க்கவும் விருப்பமில்லை. சரி அப்போ ஃபேண்டசி அல்லது சயின்ஸ் பிக்சன் வகைப் படங்கள் பார்க்கலாம் அதிலும் ஆக்சன் அதிகமில்லாத கதையம்சம் அதிகமுள்ள படத்தைப் பார்க்கலாம் என்று வெறிகொண்டு தேடிக்கொண்டிருந்த நிலையில் இந்த மினிசீரிஸ் பற்றிய தகவல் கிடைத்தது. அடடா.. இம்மாதிரியான கதையம்சமுள்ள படத்தை எப்படி இத்தனை நாளாய் பார்க்காமல் தவறவிட்டேன் என்று வருத்தமாக இருந்தது..!!

நான் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று மனதில் வைத்துத் தேடிக்கொண்டிருந்தேனோ அப்படியே வந்தமைந்துவிட்டது இந்த மினிசீரிஸ். என்னுடைய எதிர்பார்ப்பை 110% பூர்த்தி செய்தது என்றால் அதில் மிகையில்லை. சயின்ஸ்பிக்சன் பாதி, ஃபேண்டசி மீதியென அற்புதக் கலவையில் அமைந்து அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. மொத்தமே 3 எபிசோடுகள் தான். ஒவ்வொரு எபிசோடும் 1:30 மணி நேரம். நான் பார்த்த டிவிடி ரிப்பில் 45 நிமிட எபிசோடாக மொத்தம் 6 எபிசோடுகளாக இருந்தது.

முதல் எபிசோடு முதல் சீன். இரவு நேரம் ஒரு அடகுக்கடை, உள்ளே மொத்தம் மூன்று பேர். இருட்டு நிறைந்த அந்த அறையில் ஒருவன் அந்தக்கடைக்கார சிப்பந்திபோல தென்பட, மற்ற இருவரும் அவன் முன்னால் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். கடைக்காரன் ஏதோ ஒரு காரணத்துக்காக வேர்த்து விறுவிறுத்துப்போய் இருக்கிறான். படபடப்போடு தன்னிடமிருக்கும் ஒரு சூட்கேசை எடுத்துத் திறந்து காட்டுகிறான். உள்ளே ஒரு கீ (சாவி) இருக்கிறது. அதன்மேல் ரூம் நம்பர் 10 என எழுதப்பட்டிருக்கிறது.

எதிரில் இருந்த இருவரில் ஒருவன், தான் கொண்டுவந்திருந்த சூட்கேசை எடுத்துத் திறக்கிறான். அதில் மரத்தாலான ஒரு சிறிய கதவு இருக்கிறது. அதை வெளியில் எடுத்து அதில் பூட்டைப் பொருத்துகிறான். அடுத்து கடைக்காரனின் சூட்கேஸ் மேல் கை வைக்கப்போகும்போது கடைக்காரன் கோபமாகி துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறான். பதிலுக்கு அந்த இருவரில் மற்றொருவன் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து நீட்ட, முதலாமவன் கடைக்காரனிடம் "நான் இதைப் பரிசோதித்துப் பார்க்கனும்" என்கிறான். சரியென்று கடைக்காரன் தன்னுடைய துப்பாக்கியைத் தளர்த்த, அவன் அந்த சாவியை எடுத்து அந்தக்கதவில் பொருத்தி திறக்கிறான்.

கதவைத் திறந்தவுடன், கண்ணைப் பறிக்கும் ஒளி அந்த வழியாக வந்து அந்த இருண்ட அறையில் பரவுகிறது. ஆச்சரியத்தில் வாய்பிளக்கும் அவன் உடனே தன்னுடைய மொபைலை எடுத்து "என்னிடம் அது இருக்கிறது. அது உண்மைதான்" என்று கூறுகிறான். கடைக்காரன் உடனே சாவியைப் பிடிங்கிக்கொண்டு "முதலில் பணம்" என்று சொல்ல, எதிரில் இருப்பவன் 2 மில்லியன் டாலர் பணத்தை உடனே ஆன்லைனில் ட்ரான்ஸ்ஃபர் செய்கிறான். திருப்தியடைந்த கடைக்காரன் சாவியை கொடுத்துவிட்டு வெளியேறும்போது திடீரென மூன்று பேர் உள்ளே நுழைகின்றனர்.

அந்த மூவரில் தலைவன் போலிருந்தவனின் பெயர் வீசல். அவன் சாவியை வாங்கியவனிடம், "எனக்கு சொந்தமான பொருளை இவன் உன்னிடம் விற்றிருக்கிறான் போலிருக்கிறது. அது எனக்கு வேண்டும்" என்று சொல்ல, சாவியை வாங்கியவனோ கடுப்பாகி "வெளியே போ" என்கிறான். வீசல் உடனே தன் பாக்கெட்டிலிருந்து ஒரு பட்டன் வைத்த பேனாவை எடுத்து அவன் முகத்துக்கருகே வைத்து கிளிக்கிக்கொண்டே இருக்கிறான். எதிரில் இருப்பவன் துப்பாக்கியை வைத்து மிரட்டிக்கொண்டிருக்க, வீசல் பேனாவை எதிரில் நீட்டி மிரட்டிக்கொண்டிருக்கிறான். கொஞ்ச நேரத்தில் தீப்பொறி பறக்க, வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

சிறிது நேரம் கழித்து போலிஸ் அந்த இடத்தைச் சூழ, அங்கே இரண்டு பேரின் எரிந்த நிலையிலுள்ள  பிணங்கள் கிடக்கின்றன. ஒன்று சாவியை விற்றவன். மற்றவன் சாவியை வாங்கியவன். மூன்றாவது ஆள் அந்த சாவியுடன் எஸ்கேப் ஆகியிருக்க, வீசலும் அவனது ஆட்களும் வெறிகொண்டு அவனைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். அப்படி அந்த சாவியில் என்னதான் மர்மம் உள்ளது ? அந்த பேனாவை வைத்து எப்படி இரண்டு பேரும் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர் ?

இப்படி முதல் சீனிலேயே மர்மத்தை விதைத்து, படம் எதைப்பற்றியது என்பதைத் தெளிவாகச் சொல்லி விடுகிறார்கள். முதல் எபிசோடிலேயே ஏகப்பட்ட ஆச்சரியங்களை அள்ளித் தெளித்திருந்தார்கள். மேட் டாமன் நடிப்பில் 2011ல் வெளிவந்த The Adjustment Bureau என்ற சயின்ஸ்பிக்சன் படத்தை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அந்தப்படத்தின் ஒரு முக்கியமான அம்சமாக கதவு இருக்கும். படத்தைப் பார்த்தவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். அந்தப் படத்தில் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு உலகிலுள்ள எந்தக் கதவையும் திறக்கும் சக்தி இருக்கும். ஒரு தொப்பியை அணிந்தவுடன் அந்த சக்தி வந்துவிடும். அதன் மூலம் ஏதாவது ஒரு கதவைத் திறந்து, உலகின் எந்தமூலைக்கும் அவர்களால் சென்றுவிடமுடியும். கிட்டத்தட்ட வார்ம்ஹோல் (WormHole) போன்ற ஒரு கான்சப்ட்.

இன்னும் தெளிவாகச் சொன்னால், நமது வீட்டு பாத்ரூம் கதவைத் திறந்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள பெட்ரூம் கதவின் வழியாக அங்கே செல்லலாம். (அல்லது விருப்பப்பட்டால் தங்களுக்குப் பிடித்த நடிகையரின் பாத்ரூமிற்கும் செல்லலாம்). அந்த மாதிரி ஒரு சக்தி அந்தத் தொப்பியை அணிந்தவுடன் அவர்களுக்குக் கிடைக்கும். அந்தப்படம் மிகவும் வித்தியாசமான கதையமைப்பைக் கொண்டு சுவாரசியமாக அமைக்கப்பட்டிருக்கும். அந்தப்படத்தின் அந்தக் கதவு கான்சப்டுக்கு முன்னோடி இந்த சீரிஸ். அந்தப் படத்தில் தொப்பி என்றால், இங்கே இந்த சீரிசில் சாவி. அதன் மூலம் உலகின் எந்தக்கதவையும் திறந்து எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவ்வளவுதானா ? இந்த சாவியின் சக்தியைப் பற்றித்தானா மொத்த சீரிசும் என்றால் அங்கேதான் ஆச்சரியம் காத்திருக்கிறது.

அந்த சாவிக்கு அந்தளவு சக்தி எப்படி கிடைத்தது ? அதேபோல அந்தப்பேனாவுக்கும் ஏதோ ஒரு சக்தி இருந்ததே அது என்ன ? இதைத்தவிர வேறு ஏதாவது பொருட்களுக்கு இந்தமாதிரியான வித்தியாசமான சக்திகள் இருக்கிறதா ? என்று தேடும்போது தான் உலகில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இந்த மாதிரியான வித்தியாசமான சக்தி இருக்கிறது என்று தெரியவருகிறது. அவையெல்லாம் என்ன ? அவற்றுக்குரிய சக்திகள் என்ன ? அவற்றுக்கு அந்த சக்திகள் எப்படி கிடைத்தது ? காரணம் என்ன ? அந்தப் பொருட்களை அடைய, அவற்றைப்பற்றித் தெரிந்த உலகின் பல்வேறு மக்களும் எப்படியெல்லாம் சண்டையிட்டுக் கொள்கின்றனர் ? அதனால் ஏற்படும் விபரீதங்கள் என்னென்ன ?

இவற்றுக்கெல்லாம் நமது கதாநாயகனின் பார்வையிலிருந்து கதையைச் சொல்வதுதான் இந்த சீரிஸ். அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கும். அதெல்லாமே மிகுந்த சுவாரசியம் நிறைந்த காட்சிகள். சீரிசைப் பார்க்கும்போது சுவாரசியம் தவறிவிடக்கூடாது என்பதற்காக அவற்றையெல்லாம் இங்கே சொல்லாமல் தவிர்க்கிறேன். இருந்தாலும் அவற்றில் ஒரு ஆப்ஜெக்ட், எனக்குப் பிடித்த ஒரு சக்தி பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

சீப்பு. அதை வைத்து காலத்தை உறைய (Freeze) வைக்கலாம். அதாவது அந்த சீப்பை எடுத்து தலைசீவினால் ஒரு 10 நொடிகளுக்கு காலம் அப்படியே உறைந்துவிடும் அந்த சீப்பை வைத்திருப்பவர்களைத்தவிர. உதாரணத்திற்கு நீங்கள் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த, நீங்கள் உருகி உருகி (ஒருதலையாகக்) காதலிக்கும் பெண் எதிர்வரிசையில் அமர்ந்திருக்கிறாள். இன்றைக்கென்று பார்த்து புதுத்துணியெல்லாம் உடுத்தி, மேக்கப் போட்டு மிகவும் அழகாக இருக்கிறாள். இதுநாள் வரையில் அவளிடம் பேசியதே இல்லை. பேசுவதற்கு மிகவும் கூச்சம், பயம். அவளுடைய அழகை ரசித்துக்கொண்டே இருக்கிறீர்கள். உடனே சீப்பை எடுத்து தலைசீவினால் காலம் உறைந்துவிடும். அதாவது உங்களைத் தவிர மற்ற எல்லோரும் எந்த நிலையில் இருந்தார்களோ அப்படியே உறைந்து விடுவார்கள். நீங்கள் அப்படியே அந்த 10 நொடிகளுக்குள் வேகமாக ஓடிப்போய் அந்தப்பெண்ணருகே சென்று படக்கென்று நெற்றியிலோ, கன்னத்திலோ (அல்லது கொஞ்சம் கில்லாடியான ஆளாக இருந்தால் உதட்டிலோ) முத்தமிட்டுவிட்டு திரும்பி ஓடி வந்து உங்கள் இடத்தில் அமர்ந்து விடலாம். அந்த 10வது நொடி உறைந்துபோன காலம் மறுபடியும் நகரத் தொடங்கும். நீங்கள் முத்தமிட்டதையே அறியாமல் அந்தப்பெண்ணும், மற்றவர்களும் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள்.

எப்படி இந்த சக்தி ? சுவாரசியமாக இருக்கிறதா ? இந்த சீரிசிலும் எனக்குப் பிடித்த சக்தி வாய்ந்த ஆப்ஜெக்ட் இந்த சீப்புதான். (நேரத்துடன் தொடர்புடைய எந்த ஒரு விஷயமும் எனக்குப் பிடித்ததே..!!) ஆனால் இந்த சீப்பை விட சக்தி வாய்ந்த பல ஆப்ஜெக்டுகள் இந்த சீரிசில் வரும். காலத்தை உறையவைக்கும் இந்த சீப்பு எத்தனை பேருக்கு வேண்டும் சொல்லுங்கள் ? :) :) காலம் உறைவதைப் பற்றி இன்னும் விளக்கமாகப் புரியவேண்டுமென்றால் இந்த வீடியோவைப் பாருங்கள்.


படம் வெறும் இந்தமாதிரியான சக்திகளைப் பற்றி மட்டுமே இருந்திருந்தால் சிறிது நேரத்தில் போரடித்திருக்கும். ஆனால் இந்த சக்திகளையெல்லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டு, அருமையான கதையொன்றை அதன்மேல் வைத்திருந்ததால் தான் சுவாரசியமாக இருந்தது. 

பெரும்பாலான சயின்ஸ்பிக்சன் படங்களிலும், சீரிஸ்களிலும் க்ராபிக்ஸ் என்பது இன்றியமையாதது. அது இல்லாமல் சயின்ஸ்பிக்சன் படங்கள் இல்லை. ஆனால் இந்த சீரிசில் அந்தளவுக்கு க்ராபிக்ஸ் இருந்தமாதிரி தெரியவில்லை. முழுவதும் கதையை மையமாக வைத்தே சயின்ஸ்பிக்சன் இருக்கிறது. இந்த சீரிசில் நடித்துள்ளவர்கள் யாரையும் இதற்கு முன்பு பார்த்துள்ளதாக நினைவே இல்லை. அந்தளவுக்கு பிரபலமில்லாதவர்கள். இருந்தாலும் நடிப்பில் பட்டையைக் கிளப்பி விட்டனர்.

ஒவ்வொரு எபிசோடுமே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற திரில்லைக் கொடுக்கிறது. ஒரு சில சீரிஸ்களில், ஒவ்வொரு எபிசோடு முடியப்போகும் சமயத்தில்தான் ஏதாவது ஒரு சஸ்பென்சை வைத்து முடிப்பார்கள். அடுத்த எபிசோடு ஆரம்பிக்கும்போது அது ஒரு சப்பையான சஸ்பென்சாக இருக்கும். அதுபோக திரில்லும் அந்த எபிசோடு ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் முடிந்துவிடும். மறுபடியும் அந்த எபிசோடு முடியும்போது தான் அடுத்த சஸ்பென்ஸ் எலிமெண்ட் வரும். ஆனால் இந்த சீரிஸ் அப்படி இல்லாமல், சஸ்பென்சும், திரில்லும் ஒரே சீராக எல்லா எபிசோட்களிலும் பரவி உள்ளது. சீரிசைப் பார்க்கும்போது அதை நீங்களே உணரலாம்.

சீரிஸ் முடிவில், கதையின் ஒரு முக்கியமான சம்பவத்தை பார்வையாளர்களின் கற்பனைக்கே விட்டுவிட்டது ஒன்றுதான் ஒரு சிறிய குறையாகத் தெரிகிறது. அதுகூட ஒரு கோணத்தில் யோசித்தால் சரியென்றே தோன்றுகிறது. அல்லது இரண்டாவது சீசன் எடுக்க நினைத்து அதில் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ. ஆனால் இவ்வளவு நல்ல சீரிஸ், ஏன் தொடரப்படாமல் ஒரு சீசனுடனேயே முடிந்துவிட்டது என்பது தான் தெரியவில்லை. இரண்டாவது சீசன் எடுக்க அத்தனை வாய்ப்புகள் இருந்தும் ஏனோ அப்படியே விட்டுவிட்டார்கள்.

இதற்குமேலும் எதையாவது சொல்லி ஸ்பாய்லராக்க விரும்பவில்லை. சயின்ஸ்பிக்சன், ஃபேன்டசி பிடிக்குமென்றால் நம்பிப் பாருங்கள். தேவையான அளவுக்கு ஆக்சனும் உள்ளது. மொத்தம் 4 1/2 மணி நேரம் என்டெர்டெயின்மெண்டுக்கு நான் கேரண்டி. எஞ்சாய்.

The Lost Room (2006) - Some doors are better left closed.

(சீரிஸ் பார்த்து முடித்தபிறகு இதற்குப் பதிலளியுங்கள் - உங்களுக்கு இந்த மாதிரி சக்தியுள்ள ஆப்ஜெக்டுகள் வாங்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த ஆப்ஜெக்டை வாங்குவீர்கள் ? சீப்பு எனக்கு சொந்தமாகிவிட்டது என்பது நினைவிலிருக்கட்டும். ஹிஹி!!)


4 comments:

  1. எனக்கும் சீப்புத்தான் பாஸ்... இங்க செய்து முடிக்கவேண்டிய சில கடமைகள் பாக்கி இருக்கு :P

    //அல்லது கொஞ்சம் கில்லாடியான ஆளாக இருந்தால் உதட்டிலோ// நாங்கெல்லாம் பலே கில்லாடி பாஸ்.. அதனால.. ... சரி அதை விடுங்க.சீரிஸை இப்பவே டவுன்லோட் போட்டுடுறேன் :D

    ReplyDelete
    Replies
    1. //நாங்கெல்லாம் பலே கில்லாடி பாஸ்.. அதனால.. ..//
      மக்களே நல்லா பாத்துக்கங்க.. இதுதான் பாக்கியராஜுக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் உள்ள Difference.. :P

      சீப்பு தவிர இன்னும் ஏகப்பட்ட ஆப்ஜெக்ட்ஸ் இருக்கு.. அதனால சீரிஸ் பாத்து முடிச்சுட்டு சூஸ் பண்ணுங்க.. இன்ஃபாக்ட் அந்த சீப்பு ஒரு ஃபன்னியான ஆப்ஜெக்டாதான் சீரிஸ்ல காமிச்சுருப்பாங்க.. அதவிட சக்தி வாய்ந்த ஆப்ஜெக்ட்ஸ்லாம் இருக்கு..!! :)

      Delete
  2. அருமையான அறிமுகம். பதிவை முழுதாக படிக்கவில்லை. விரைவில் இந்த சீரீசைப் பார்த்து விட்டு முழுதாகப் படிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க-ண்ணா..!! உங்களுக்குப் பிடிக்கும்..!!
      பதிவுல சொல்லிருக்கற கதை சீரிஸ்ல முதல் 5 நிமிசம் மட்டுமே.. தைரியமா படிக்கலாம்.. :)

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *