Dec 30, 2013

டாப் 10 மொக்கை தமிழ்ப்படங்கள் 2013

நண்பர்களே,

இந்த வருடம் தோராயமாக 150 நேரடித் தமிழ்ப்படங்கள் வெளியாகி உள்ளன. கிட்டத்தட்ட வாரத்துக்கு 3 படம் என்ற ரீதியில் ஒவ்வொரு வாரமும் படங்கள் வெளியாகி தமிழ் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போட்டுள்ளன. இதில் நான் 50-60 படங்கள் பார்த்துள்ளேன். பார்த்த படங்களில் நல்ல படங்களை விட மொக்கைப் படங்களே அதிகமாக உள்ளது வருத்தத்துக்குரிய விடயம். அதனால் இந்த வருடம் நான் பார்த்து நொந்துபோன படங்களின் லிஸ்ட்டை, முதலில் தருகிறேன். பிடித்த படங்களின் லிஸ்ட் அடுத்த பதிவில் தனியாகத் தருகிறேன். இந்த லிஸ்ட், படங்கள் வெளியான தேதியின் ஆர்டரில் உள்ளது.

1.அலெக்ஸ் பாண்டியன்

இந்தப்படத்தைப் பற்றி முன்பே நன்றாகத் தெரிந்திருந்ததால் தியேட்டருக்கு சென்று பார்க்கவில்லை. ஒரு நாள் பஸ்ஸில் நீண்ட தூரப் பயணம்  (8 மணி நேரம்) செல்லும்போது, இந்தப்படத்தைப் போட்டார்கள். ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும். அதிலேயே படம் எப்படிப்பட்டது என்று எல்லோருக்கும் விளங்கிவிட்டது. கார்த்தியின் மேல் இருந்த நல்ல அபிப்ராயம் குறைந்த முதல் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பாதிப்படம் வரை கூட பார்க்க முடியவில்லை. பஸ்ஸில் இருந்த சிலர் எழுந்து தயவுசெய்து படத்தை மாற்றுங்கள் அல்லது டிவியை அணைத்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அதற்குப்பிறகு டிவியை அணைத்தே விட்டார்கள். அதிலும் என் அருகில் அமர்ந்திருந்தவர் ஒரு நடுத்தர வயதைச் சேர்ந்த பாமரர் போலத் தெரிந்தார். அவரே என்னிடம் "என்னாயா படம் எடுக்குறாய்ங்க.. இதெல்லாம் படம்னு எப்படி ரிலீஸ் பண்றாய்ங்க" என்று வருத்தப்பட்டுக்கொண்டார். இதற்கு மேல் இதைப்பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.

2.கண்ணா லட்டு தின்ன ஆசையா

"இன்று போய் நாளை வா" படத்தின் அப்பட்டமான காப்பியைக் கதையாக வைத்து அங்கங்கே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, போறாததுக்கு சிம்புவை வேறு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து வந்த படம். காமெடி என்ற பெயரில் எதையோ செய்திருப்பார்கள். சந்தானம் சொல்லுவது போல 'கோவம் வர்ற மாதிரி காமெடி' காட்சிகளாக படம் முழுவதும் அள்ளித் தெளித்து கோவத்தின் உச்சிக்கே ஏற்றிய படம் இது. சிரிப்பு கொஞ்சம் கூட வராத காமெடிப் படம். ஆனால் வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. பவர் ஸ்டாரைப் பெரியாளாக்கியதில் இந்தப்படத்துக்கு முக்கியப் பங்குண்டு. ஏண்டா இந்தப்படத்தைப் பார்த்தோம் என நொந்துபோக வைத்த படங்களில் இதுவும் முக்கியமான ஒரு படம்.


3.கேடி பில்லா கில்லாடி ரங்கா

இயக்குனர் பாண்டிராஜ் வசனத்துக்காக தேசிய விருது வாங்கிய ஒரு ஆள். அவரிடமிருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவே இல்லை. காமெடி என்ற பெயரில் மொக்கையைப் போட்டு கோவத்தை ஏற்படுத்திய மற்றுமொரு படம். நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தபோது ஒருசிலர் சிரித்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, எனக்கோ ரொம்ப ஆச்சரியம். எப்படி இந்தப்படத்தை ரசிக்க முடிகிறது ஒருவேளை எனக்குத்தான் ரசனை இல்லையோ என்று குழப்பமாகி விட்டது. அதற்கேற்றாற்போல வசூலிலும் சாதனை படைத்த படம் இது. ஆனால் இந்த வருடத்தில் எனக்கு சுத்தமாகப் பிடிக்காத படங்களில் இதற்கு முக்கியப் பங்குண்டு. நமது வலைத்தளத்திற்கு "கில்லாடி ரங்கா" என்று பெயர் வைத்ததற்காக ரொம்பவே வருத்தப்பட வைத்துவிட்டது இந்தப்படம்.



4.குட்டிப்புலி

யாராவது சசிக்குமாரிடம் "தயவுசெய்து படம் இயக்குவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். நடிக்கிறேன் பேர்வழி என்று தமிழ் ரசிகர்களைக் கொல்லாதீர்கள்" என்று எடுத்துச் சொன்னால் பரவாயில்லை. சுந்தரபாண்டியன் வெற்றி பெற்றதன் விளைவு இந்தப்படம். சாதீயம் பேசி அதை வைத்து காசுபார்க்கத் துடிக்கும் இம்மாதிரிப் படங்கள் என்றைக்குமே ஆபத்தானவை. அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. சசிக்குமாருக்கு மாடர்ன் ட்ரெஸ் மாட்டி விட்டு நமது கண்களையும் காயப்படுத்தினால் என்ன செய்வது ? (சசி.. சுப்ரமண்யபுரம் என்ற ஒரே ஒரு படத்துக்காக உங்கள் மீது மானாவாரியாக மரியாதை வைத்திருக்கும் என்னைப்போன்ற ரசிகர்களுக்காகவாது இம்மாதிரிப் படங்களில் நடிப்பதைத் தவிருங்கள். ப்ளீஸ்.. முடியல)


5.தில்லு முல்லு

இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் என்பதை இன்றளவும் என்னால் நம்பவே முடியவில்லை. க்ளாசிக் காமெடிப் படங்களில் முக்கியமான ஒரு படம் ரஜினி நடித்த பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட "தில்லு முல்லு" படம். அதை ரீமேக் செய்யவேண்டும் என்று நினைத்ததே மகாபெரிய பாவம். அதையும் கர்ண கொடூரமாக ரீமேக் செய்து இன்னும் பாவத்தை அள்ளிக் கட்டிக்கொண்டனர் என்றால் அதில் மிகையே இல்லை. என் நண்பன் ஒருவனின் கட்டாயத்தால் வேறுவழியே இன்றி பார்த்த படம். ஏண்டா பார்த்தோம் என்று ஃபீல் பண்ண வைத்த படம். இழந்துபோன அந்த 2 மணி நேரம் மறுபடியும் கிடைக்காதே என்று ரூம் போட்டு அழவைத்த படம் இது.





6.சிங்கம் 2

இந்தப்படத்தைப் பற்றி சொல்ல வேண்டியதெல்லாம் இந்தப்பதிவில் முன்பே சொல்லிவிட்டேன். ஒரு காலத்தில் நல்ல கதைகளாகத் தேடித்தேடி நடித்துக் கொண்டிருந்த ஆள், இப்படி ஆ ஊ-னு கத்த ஆரம்பிச்சிட்டாரேனு ஃபீல் பண்ண வைத்த படம். ஹரியின் ஆரம்ப காலப் படங்கள் எனக்குப் பிடித்த படங்கள். ஆனால் சமீபகாலமாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். மறுபடியும் பழைய மாதிரி எப்போது வருவார் என்று தெரியவில்லை.









7.மரியான்

இந்தப்படத்தைப் பற்றியும் விரிவாக இந்தப்பதிவில் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்தப்படம் இந்த லிஸ்ட்டில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணம், படம் வெளிவருவதற்கு முன்பு இதன் மீதி இருந்த அதீத எதிர்பார்ப்பே. ஏ.ஆர். ரகுமானின் இசையையும், பார்வதியின் க்ளிவேஜையும் தவிர எரிச்சலூட்டிய படம். தனுஷ் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகப் போனதில் அவரை விட எனக்கு மிகுந்த வருத்தம்.





8.தலைவா

போனவருடம் நண்பன், துப்பாக்கி என இரண்டு ப்ளாக்பஸ்டர்களைக் கொடுத்து உச்சத்துக்குப் போன டாக்டர் தளபதி ஒரே படத்தில் அவரின் ரசிகர்களாலேயே கழுவி ஊற்றப்படும் நிலைக்குப் போனதை என்னவென சொல்லுவது. போறாத குறைக்கு 'அம்மா'வோடு டைட்டில் பிரச்சனை வேறு. இயக்குனர் விஜய் எப்படியும் மொக்கைதான் போடப்போகிறார் என்று முன்பே தெரிந்திருந்தாலும் 3 மணி நேரத்த்துக்கு கேப்பே விடாமல் மாறி மாறி மொக்கை போட்டு ரசிகர்களை பரலோகத்துக்கு அனுப்பியதில் அவரை மிஞ்ச ஆள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருந்த விஜய் மீண்டும் சரிவுப்பாதையில் அடியெடுத்து வைத்த படம். இனியாவது திருந்துவாரா ?
(டேய்.. நீ அஜீத் ஃபேன்தானே.. நீ வேற எப்டி சொல்லுவே.. போடாங்.. என்ற ரீதியில் வரும் ஆன்மீகக் கமெண்டுகளை எதிர்பார்க்கிறேன். ;) )

9.நையாண்டி

தனுசிற்கு இந்த வருடம் மிகவும் மோசமான வருடம் போலிருக்கிறது. வெளிவந்த அத்தனை படங்களுமே அவரைக் கைகழுவி விட்டன. அம்பிகாபதி, மரியான், நையாண்டி மூன்றுமே ரசிகர்களைத் திருப்திப் படுத்த வில்லை. தனுஷ் எனக்கு மிகப்பிடித்த ஒரு நடிகர் என்பதால், அவருடைய இரண்டு படங்கள் இந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தையே தருகிறது. நானும் எவ்வளவோ முயற்சி செய்தும், முக்கால் மணி நேரத்துக்கு மேல் என்னால் இந்தப்படத்தைப் பார்க்க முடியவில்லை. குளிர்காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் தெரிந்தவுடன் தான், அதற்குமேல் பார்த்தால் ஜன்னி வந்துவிடும் என்று பயந்து வேறு வழியே இல்லாமல் மேற்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தேன். நஸ்ரியாவின் தொப்புளை வைத்து ரசிகர்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஆனால் அவர்கள் 'அது டூப்புதாண்டோய்' என்று தெரிந்துகொண்டு சுதாரித்துக்கொண்டனர்.

10.ஆல் இன் ஆல் அழகுராஜா

நய்யாண்டியாவது முக்கால் மணி நேரம் வரை பார்த்தேன். ஆனால் இந்தப்படத்தை 20 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. படம் முதல் நாள் ரிலீசின்போது 2 மணி 45 நிமிடங்கள் நீளமாம். ஆனால் அடுத்த நாளே 30 நிமிடங்கள் வரை கட் செய்திருக்கிறார்கள். அப்படியும் படம் படுமோசம். ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து இந்தப்படத்தை புறக்கணித்து விட்டார்கள். என்னைக் கேட்டால், 30 நிமிடங்கள் கட் பண்ணியதற்குப் பதிலாக, மொத்தப்படத்தையே கட் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆல் இன் ஆல் அழகுராஜா பட்டம் ஒருவருக்குத்தான். அது தலைவர் கவுண்டமணிக்கு மட்டும் தான். இந்த வருடம் தனுசிற்குப் போட்டியாக நானும் 'உலகப்' படங்களைத் தருவேன் என்று கார்த்தி சூளுரைத்துள்ளார் போலிருக்கிறது. இவரது 2 படங்களும் இந்த லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது.

இங்கே ஒரு விஷயத்தை நன்றாகக் கவனித்துப் பார்த்தால், ஒரு விடயம் புலப்படுவதை அறியலாம். வருடத்தின் ஆரம்பத்தில் வந்த காமெடிப்படங்களான "கண்ணா லட்டு தின்ன ஆசையா", "கேடி பில்லா கில்லாடி ரங்கா" போன்ற படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. ஆனால் அதே சமயம் வருடத்தின் இறுதியில் வெளியான காமெடிப்படங்களான "நய்யாண்டி", "ஆல் இன் ஆல் அழகுராஜா" போன்ற படங்கள் படுதோல்வி. இதிலிருந்தே இந்த காமெடி ஜானர் இந்த வருடம் பட்ட பாட்டை நன்றாக அறிந்துகொள்ளலாம். தமிழ் ரசிகர்கள் வருடத்தின் இறுதியிலாவது 'காமெடிப்படம்' எடுப்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்டினார்களே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

இந்த லிஸ்டில் இருப்பவை போக சில படங்களை பார்க்காமல் எனது நேரத்தையும், பணத்தையும் வீணாக்காமல் தப்பித்தேன். அப்படிப்பட்ட படங்கள் கீழே,

1.ஒன்பதுல குரு
2.திருமதி தமிழ்
3.யாருடா மகேஷ்
4.அன்னக்கொடியும் கொடிவீரனும்
5.பட்டத்து யானை
6.சொன்னா புரியாது
7.ஆர்யா சூர்யா
8.யா யா
9.சுட்ட கதை
10.தேசிங்கு ராஜா

இந்தப்படங்களில் ஏதாவது, ஒருமுறையாவது பார்க்கும்படி இருந்தால், பார்த்த நண்பர்கள் பரிந்துரைக்கவும். பார்க்க முயற்சி செய்கிறேன். இதுதான் சமயமென்று பழி வாங்கிவிடாதீர்கள் நண்பர்களே. அப்படியே முடிந்தால் உங்களுடைய டாப் 10 மொக்கைகளையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

அடுத்த பதிவில் பிடித்த டாப் 10 தமிழ்ப்படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

18 comments:

  1. Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..!! :)

      Delete
  2. இந்த வருடம் வெளியான 150 படங்களில் ஒரு பத்து படமாவது தேறுமா? சந்தேகம்தான்.

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பிடித்த 10 படங்களைத் தேர்ந்தெடுக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.. உண்மைலயே கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.. பேசாம பிடிச்ச 5 படங்கள்னு மாத்திரலாமானு யோசனை..!!

      உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      Delete
  3. அருமையா அலசிட்டீங்க கேடி பில்லா கில்லாடி ரங்கா தப்பிச்சது அந்த படத்தின் இறுதி 15 நிமிடங்கள் பின் யுவனின் இசை நண்பா , ஏறக்குறைய என்னோட லிஸ்ட் இது தான் கே.பி.கே.ஆர் லாஸ்ட் 15நிமிடம் தவிர.

    ReplyDelete
    Replies
    1. நண்பா அப்புறம் மறந்துட்டேன் முக்கியமான மேட்டர் 150 படங்கள் வாரம் 3 என்ற ரீதியில் வெளியாகி இருக்கும் என்று கணித்து உள்ளீர்கள் அதுல ஒரு வாரத்தை கழிச்சிடுங்க நவம்பர் 8ஆம் தேதி வெள்ளிகிழமை ஒரு தமிழ் படம் கூட வெளியாகவில்லை. இந்த வருடத்திலேயே தமிழ் படம் வெளியாகாத வெள்ளிகிழமை என்ற சிறப்பு அந்நாளையே சேரும். :)

      Delete
  4. 1. கடல்
    2.விஸ்வரூபம்
    3.டேவிட்
    4.ஆதிபகவான்
    5.பரதேசி
    6.வத்திகுச்சி
    7.சேட்டை
    8.கௌரவம்
    9.உதயம் என்.ஹெச் 4
    10.நான் ராஜாவாக போகிறேன்
    11.குட்டி புலி
    12.மரியான்
    13.தலைவா
    14.நய்யாண்டி
    15.வணக்கம் சென்னை
    16.சுட்ட கதை

    ReplyDelete
    Replies
    1. உங்க லிஸ்டுல விஸ்வரூபம், பரதேசி, வத்திகுச்சி தவிர்த்து மீதி எல்லாம் அப்படியே அக்சப்டு..!! அந்த மூணு படமும் ஆவரேஜ் ரகத்தில் வந்துவிடும். ரொம்ப மோசமில்லைங்கறது என் கருத்து.

      Delete
  5. எல்லாமே நல்ல செலேக்சன் ...அண்ணேன்
    நான் தெரியாம நிறைய காச வீனடிச்சிட்டேன்...
    அடுத்த வருடமாவது படம் எப்படி எடுக்கிராயிங்க..?
    நல்ல படம் எடுப்பாயிங்களா..? அல்லது நல்ல பாம்பு மாதிரி படம் எடுப்பாயிங்களா...?

    ReplyDelete
    Replies
    1. அண்ணேனா?? சரியாப் போச்சு போங்க..!! நான் தான் உங்கள அப்டி கூப்பிட வேண்டியிருக்கும்.. ரொம்ப சின்னப்பையன்னே நானு..!! :) :)

      அடுத்த வருசம் நல்ல படங்கள் நிறைய வரும்னு நம்புவோம். உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!!

      Delete
  6. Nice to see a rare bad comments for Kanna Lattu Thinna Asaiya at least now , still scratching my head why that film got this much success , enakkennamo namakkuthan rasikka theriyalayonu thonirichi... nice to have some companions :-)

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்.. அதானே.. அந்தப்படத்துல ரசிக்கறதுக்கு என்ன இருக்குதுனு எனக்கும் இன்ன வரைக்கும் புரியல..!! இதச்சொன்னா, "ஆமா.. இவரு பெரிய புடிங்கி.. உலகப்படங்கள மட்டும் தான் ரசிப்பாராக்கும்"னு திட்டுறாய்ங்க. கமர்சியல் படமானாலும் ரசிக்கற மாதிரி இருக்கனும்ல. அரத மொக்கைய எடுத்துட்டு சிரிடான்னா எப்டி சிரிக்கறது ??

      ஒரே கருத்துடைய உங்கள சந்திச்சதுல எனக்கும் மகிழ்ச்சிதான். உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!! :) (அடுத்த தடவை வரும்போது உங்க ஒரிஜினல் பேர்ல வந்தா நல்லாருக்கும்)

      Delete
  7. Replies
    1. மொக்கனு சொல்ற அளவுக்கெல்லாம் அது இல்லபா.. சுமார் ரகத்திலயாச்சும் சேர்ந்துடும்..!!

      Delete
  8. அட்டகாசம்!!! ஒவ்வொரு படத்திருக்கும் நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கத்தை படித்து நானும் என் நண்பனும் விழுந்து விழுந்து சிரித்தோம். இன்னும் உங்களிடும் இருந்து நிறையா எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்போ நீங்களும் இந்தப் படங்களால பாதிக்கப்பட்டிருக்கீங்கனு சொல்லுங்க.. :) :)

      Delete
  9. G NAMMEA THRUTHALA NADICHA YALLA PADEAMUM SUPPER POLEA AVARU SONTHAMA NADECHA SELF PUBLICITY FILM A UM SEARTHUTHAN KEAKKAN PONGA G POOI AVARUKKU JALRA PODUREATHA NEPPATUNGA ORU NADUNELAI RASIHALA TEAVANNA REVIEW PANNUNGA ILLATI TAMIL FILM A PATHI REVIEW PANNATEENGA

    ReplyDelete
    Replies
    1. முதல்ல ஒரிஜினல் ஐடில வாங்க ஜி.. அப்றமா பேசலாம்...!!

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *