Aug 24, 2013

The Stoning of Soraya M. (2008) - இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் ?



இந்தப்படம் பார்த்ததிலிருந்தே பல்வேறுவிதமான சிந்தனைகள் என்னை ஆட்கொண்டிருக்கின்றன. இந்த 21ம் நூற்றாண்டில் பெண்களுக்கு அவர்கள் விரும்பிய சுதந்திரம் கிடைத்ததா ? தங்கள் உரிமைகளை அவர்கள் பெறுவதற்கு இந்த சமூகம் வழிவகை செய்திருக்கிறதா ? உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மதத்தை சார்ந்த பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது ?


1979ல் ஈரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்கு பின்னர், அந்த நாடு இஸ்லாமியக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஷாவின் அரசுக்கு எதிராக நடந்த அந்த புரட்சிக்கு பின்னர், மதத்தின் பெயரில் பல சட்டங்கள் இயற்றப்பட்டு கடுமையாகப் பின்பற்றப்பட்டன. குற்றங்களுக்கு எதிரான தண்டனைகள் மிகவும் கடுமையாக இருந்தன. திருட்டுக்கு கையை வெட்டுதல், தகாத உறவுக்கு கல்லால் எறிந்து கொல்லுதல் போன்ற மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.

இந்த இஸ்லாமிய சட்டம், ஷரியா சட்டம் என்றழைக்கப்படுகிறது. இதன் உண்மையான அர்த்தத்தை பலரும் மறந்து, தங்களின் வசதிக்கேற்ப துர்பிரயோகப்படுத்தினர் என்பதே உண்மை. உண்மையில் இந்த சட்டம் முன்பிருந்த கொடுமைகளுக்கு பதிலாக சில உரிமைகளை வழங்குகிறது என்று முஸ்லீம் நண்பர் ஒருவர் கூறினார். முன்பு, ஒரு கணவன் தன்னுடைய மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவு கொண்டதாக குற்றம் சாட்டினால், அந்த மனைவியை கல்லால் எறிந்து கொல்லுவதே தண்டனையாக இருந்தது.

ஆனால், ஷரியா சட்டத்தில் அந்த மனைவிக்கு தன்னை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த குற்றத்தை பார்த்த 4 சாட்சிகள் கண்டிப்பாக தேவைப்படுகின்றனர். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது. இதெல்லாம் அந்த நண்பர் கூறியது.

என்னதான் குற்றமாக இருந்தாலும் கல்லால் எறிந்து கொல்லுவது என்பது எவ்வளவு பெரிய பாவம் ? மரண தண்டனையையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று போராடி வரும் இந்தக் காலத்தில் கல்லால் எறிந்து கொல்லுவது போன்ற தண்டனைகள் இன்னும் இருப்பது வேதனைக்குரிய விடயம். இதுபோன்ற தண்டனைகள் பெண்களுக்கு எதிராக தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது அதை விட வேதனை தரக்கூடிய விடயம்.

ஒருசில வருடங்களுக்கு முன்னால் ஈரானை சேர்ந்த Marzieh Vafamehr என்ற நடிகைக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனையும், 90 கசையடிகளும் தண்டனையாகத் தரப்பட்டன. இவர் செய்த குற்றம் என்ன தெரியுமா ? My Tehran for Sale என்ற படத்தில் முக்காடு போடாமல் நடித்ததே காரணம். இது பரவாயில்லை. சென்ற வருடம் அமைதிக்கான விருது வாங்கிய பாகிஸ்தானை சேர்ந்த மலாலா என்ற 14 வயது சிறுமியின் மீது தாலிபான் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இவள் செய்த குற்றம், பெண்களுக்கு கல்வி உரிமை வேண்டும் எனப்பேசியது தான்.

இப்படி உலகம் முழுக்கவே பெண்களுக்கு எதிரான உரிமைகள் மறுக்கப்படுவது, ஒடுக்கப்படுவது மதத்தின் பெயரால் நடந்துகொண்டிருக்கிறது. இதில் போன வாரம் ஒரு அதிர்ச்சியான கட்டுரையை படிக்க நேரிட்டது. கருப்பினத்தை சேர்ந்த மாடல் பெண்ணான வாரிஸ் டேரியின் இந்த வாழ்க்கை சம்பவத்தை படித்து விட்டு வாருங்கள். பெண்ணானவள் எவ்வாறெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறாள் எனப் புரிந்து கொள்ள முடியும்.


இஸ்லாமிய மதத்தில் மட்டுமல்ல இந்து, கிறிஸ்தவ, யூத மதம் என அனைத்து மதங்களிலும் பெண்ணடிமைத்தனம் என்பது பன்னெடுங்காலத்திலிருந்து இருந்து வருகிறது. உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், விதவைகளுக்கு மறுமணம் மறுக்கப்படுதல் என பல்வேறு அடிமைத்தனங்கள் இந்து மதத்திலும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. மனு தர்மம் என்ற பெயரால் பெண்கள் மட்டுமல்ல, சிறுபான்மையினரும், ஒடுக்கப்பட்ட மக்களும் பலவாறு அடிமைப்படுத்தப்பட்டனர்.

சாதியின் பெயரை சொல்லி அடிமைப்படுத்தியதை நினைத்தால் ரத்தக்கண்ணீர் வடிக்கலாம். அவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளன. ஆனால் விடயம் என்னவெனில், அந்த கொடுமைகள் எல்லாம் இன்னும் நடக்கின்றனவா என்பது தான். முழுவதுமாக குறையாவிட்டாலும் பெரும்பாலும் குறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஆனால் பெண்களுக்குண்டான உரிமைகள் இன்னும் அவர்களுக்கு தரப்படவே இல்லை.

பெண்களுக்கு சம உரிமை என்று வாய்கிழிய பேசும் அரசியல்வாதிகள் 33% பாராளுமன்ற உரிமையை மட்டும் கொடுப்பதே கிடையாது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், எந்த ஒரு கட்சியுமே 33% பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பது கிடையாது. உண்மையில் அத்தனை கட்சிகளுமே இந்த மசோதாவை ஆதரிக்கவே செய்கின்றன. ஆனாலும் இன்னும் இது நிறைவேற்றப்படவே இல்லை. என்னவொரு காலக்கொடுமை கடவுளே..?!!

இப்படி அனைத்து மதம், சாதி, நாடுகளிலும், பெண்களுக்கு எதிரான உரிமை பறிப்புகளும், வன்முறைகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இருந்தாலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகமாக நடக்கிறதோ என்ற ஐயப்பாடு இந்தப்படத்தை பார்த்ததிலிருந்து  எழுகிறது. அல்லது மதவாதிகளுக்கும், வன்முறையாளர்களுக்கும் வசதி ஏற்படுத்தித்தரும் வகையில் இஸ்லாமிய சட்டங்களில் ஓட்டை உள்ளதா என்றும் தோன்றுகிறது. இஸ்லாமிய நண்பர்கள் இதைத் தெளிவு படுத்த வேண்டும்.

படம் 1986களில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. Freidoune Sahebjam என்ற பத்திரிகை ஆசிரியர் ஈரான் நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த போது கார் பழுதாகி விடுகிறது. Kuhpayeh என்ற கிராமத்தில் சரிபார்க்க கொடுத்துவிட்டு ஓய்வெடுக்கும்போது அங்குள்ள சாரா என்ற பெண்மணியை சந்திக்க நேரிடுகிறது. அவள் தன்னுடைய உறவுக்கார (Niece) பெண்ணான சோராயாவுக்கு நடந்த கொடுமைகளை எடுத்து சொல்ல ஆரம்பிக்கிறாள்.

சோராயாவை கல்லால் அடித்து கொன்றது ஏன் என அதிர்ச்சி கலந்த சம்பவங்களை சாரா அந்த பத்திரிகையாளருக்கு சொல்ல, அதை அவர் இந்த உலகம் முழுவதும் சொல்ல வேண்டும் என்று எண்ணி 1990ல் புத்தகமாக எழுதுகிறார். இவ்வளவுதான் படம்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட அந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்துதான் இந்தப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்புத்தகமும், படமும் வந்தபின் உலகம் முழுக்க இந்த தண்டனைக்கெதிராக ஆதரவு பெருகியது. ஈரான் நாட்டில் இந்தப்புத்தகமும், படமும் தடை செய்யப்பட்டுவிட்டன.

படம் எப்படிப்பட்டது, எதைப்பற்றியது என்று எந்த விடயமும் தெரியாமல் இந்தப்படத்தைப் பார்த்தேன். ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. சோராயாவாக நடித்த அந்த நடிகையின் முகபாவங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. கல்லால் அடித்துக்கொல்லப்படப் போகிறோம் எனத்தெரிந்ததும் அதன் தீவிரத்தை தன் முகத்தில் உணர்ச்சிகளாலேயே நமக்கு உணர்த்தி விடுகிறார். சாராவாக நடித்திருக்கும் பெண்மணியும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

ஆர்ட் டைரக்சனையும், ஒளிப்பதிவையும் இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒரு ஈரானிய கிராமத்தையே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். படம் முழுவதும் அந்த ஈரானிய உலகிலேயே நம்மையும் வாழவைக்கின்றனர். கடைசியாக கல்லெறியும் போது சோராயாவின் பார்வையில் கேமரா கோணம் இருக்க, அனைவரும் கல்லெறியும்போது நம்மீதே விழுவது போன்ற ஒரு உணர்வு.

சோராயாவின் மனநிலையை உணர்த்துவதில் இசைக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. கல்லெறிவதற்கு தயார்படுத்தும்போது சோராயாவின் பயத்தையும், மக்களின் மகிழ்ச்சியையும் ஒருசேர உணர்த்துவது போல அமைந்தது பிண்ணனி இசை.

நமக்கு இந்தளவு பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி அங்கே சர்வ சாதாரணம் எனும்போது தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பெண்கள் பண்ணிய பாவத்தை துடைப்பதற்காகவே இந்த தண்டனைகள் தரப்படுகிறதாம்.. புடலங்காய்.

படத்தில் ஒரு காட்சியில் பின்வரும் சட்டம் சொல்லப்பட்டிருக்கும். "ஒரு ஆண் தன் மனைவியின் மீது எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டினால், அந்த பெண்தான் தான் குற்றமற்றவள் என நிரூபிக்க வேண்டும். மீறினால் கல்லால் அடிக்கப்பட்டு கொல்லப்படுவாள். அதே ஒரு பெண் தனது கணவன் மீது குற்றம் சாட்டினால், மீண்டும் அந்த பெண்ணே தான் தனது கணவன் குற்றமுள்ளவன் என நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க தவறினால் அந்த பெண் தண்டிக்கப்படுவாள். அந்த கணவன் எதுவும் செய்ய வேண்டியதில்லை"

இந்த சட்டத்திற்கும், சட்டத்தை ஆதரிக்கும் மதவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும், எனது இரு கைகளின் நடுவிரல்களை உயர்த்திப் பிடித்து காண்பித்துக்கொள்கிறேன்.


 The Stoning of Soraya M. - இளகிய மனதுடையவர்களுக்கு அல்ல.

6 comments:

  1. Very good post,keep writing like this,fgm is terrible curse for afro arab women,un tried a lot,the admit finally,we can't stop fgm,but can reduce the percentage of fgm victims by endless campaign

    ReplyDelete
    Replies
    1. Female genital mutilation (fgm) கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டிய விடயம். அட்லீஸ்ட் நம்மால் இயன்றவரை அதற்கு எதிராக பலமாகக் குரல் கொடுக்க வேண்டும்.

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிண்ணா..!!

      Delete
  2. தல, அட்டகாசமாய் எழுதி இருக்கீங்க. பதிவை படிச்சே மனசு கொஞ்சம் கணம் ஆகிருச்சு.
    மரண தண்டனையை எதிர் நோக்கி இருப்பவரோட கடைசி நிமிஷங்களை நினைச்சு பார்த்தாலே மனசு பத பதைக்குது. அவங்க மேல கல் எரிய போற மனித மிருகங்களை நினைச்சு பார்த்தேன், எப்படி பட்ட சைக்கோ மனநினையில் அவங்க இருப்பாங்க..?? அவங்க மனநிலை மாறணும்.

    ReplyDelete
    Replies
    1. கல்லால் எறிந்து கொல்லப்படும் தண்டனைக்கு எதிரான தேதியாக 2011 ஜுன் 11ம் தேதி அறிவிக்கப்பட்டு உலகமக்கள் அனைவரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஆன்லைனில் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு ஈரான் அரசுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் இன்னும் இந்த தண்டனை அமலில் இருக்கிறது. ஈரானில் மட்டுமில்லாமல், ஈராக், ஆஃப்கானிஸ்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் ஈரானை விடவும் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறை அதிகமாக உள்ளது.

      இந்தப்படத்தை கண்டிப்பாக பாருங்கள் தல. நிச்சயம் உருக வைக்கும். இந்த தண்டனையை இல்லாமல் செய்ய வேண்டும் என தோண வைக்கும்.

      Delete
  3. சினிமா விமர்சனத்தில் பெண்கள் உரிமையை கொண்டுவந்து ஆக்கபூர்வமா எழுதியது அருமை.வசதி கிடைச்சா இந்த படம் பார்ப்பேன்.
    //இந்த இஸ்லாமிய சட்டம் ஷரியா சட்டம் என்றழைக்கப்படுகிறது. இதன் உண்மையான அர்த்தத்தை பலரும் மறந்து தங்களின் வசதிக்கேற்ப துர்பிரயோகப்படுத்தினர் என்பதே உண்மை.//
    அப்படி அவங்க துஷ்பிரயோகம் செய்யாட்டா கூட ஷரியாவில் என்ன உண்மையான அர்த்தம் இருக்கு? எக்காரணத்தை கொண்டும் பெண்களை மனிதர்களை கல் எறிந்து கொல்வது காண்டுமிராண்டிதனம்.மதசட்டம் என்ற காரணத்தாலே மதவாதிகளால் இந்த சட்டம் போற்றபடுகிறது.
    ஷரியாவின் முறைகள் காலத்துக்கு உதவாது என்பதை சில நல்ல இஸ்லாமியர்கள் துணிந்து கருத்து தெரிவித்தும் உள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. வேகநரி,

      கண்டிப்பா படம் பாருங்க. அரபு நாட்டுப்பெண்களின் நிலைமையை யதார்த்தமா சொல்லிருப்பாங்க.

      அடுத்து அந்த ஷரியா சட்டம் பற்றிய கருத்து. நீங்க அதுக்கு அடுத்த வரியையும் சேத்து படிக்கனும்.
      //"இதன் உண்மையான அர்த்தத்தை பலரும் மறந்து, தங்களின் வசதிக்கேற்ப துர்பிரயோகப்படுத்தினர் என்பதே உண்மை. உண்மையில் இந்த சட்டம் முன்பிருந்த கொடுமைகளுக்கு பதிலாக சில உரிமைகளை வழங்குகிறது" என்று முஸ்லீம் நண்பர் ஒருவர் கூறினார்.//
      இது நண்பர் ஒருவர் சொன்னது. மனு தர்மம் எப்படி கொடுமையானதோ அதுபோல இந்த ஷரியா சட்டமும் கொடுமையானதே. இந்த மடமைவாத, பழமைவாத சட்டம் ஒழிக்கப்பட வேண்டும்கறதுல மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *