Oct 29, 2024

பனித்துளி

"ஃப்ளைட்ல பாப்பா என்னடா பண்ணுச்சு, அழுகாம இருந்துச்சா. சமாளிக்க முடிஞ்சுதா எந்த பிரச்சனையும் இல்லைல்ல?"

என் மனைவி கமலியையும், பிறந்து 8 மாதங்களே ஆன எங்கள் குழந்தை இனியாவையும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைத்து விட்டு நான் மட்டும் அமெரிக்காவிலேயே தங்கி விட்டேன். அவர்களை முதலில் அனுப்பி வைத்துவிட்டு, ஒரு மாதம் கழித்து நானும் இந்தியாவுக்கு வருவதாக திட்டம். நான் வேலை பார்க்கும் கம்பெனியில் மொத்தமாக 3 மாதங்கள் லீவு கிடைத்திருந்தது.

முதலில் எல்லோரும் ஒன்றாக இந்தியாவுக்குச் செல்லலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கமலி அவள் அம்மா வீட்டில் போய் ஒரு சில வாரங்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவள் பிரசவத்தின் போது கூட ஊரில் இருந்து யாரும் வரமுடியவில்லை. எங்களாலும் இந்தியாவுக்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை. அதனால் அமெரிக்காவிலேயே கணவன் மனைவி நாங்கள் இருவரும் மட்டும் எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

அவளுக்கு இது முதல் பிரசவம். எவ்வளவு பயமாக இருந்திருக்கும் என்று என்னால் யோசிக்கக் கூட முடியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு தைரியமாக இருந்தாள். எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது, ஆனால் தனியாக சமாளித்துக் கொள்ளலாம் என்கிற தைரியமும் கொஞ்சம் இருந்தது. எனக்கிருந்த தைரியத்தைப் பார்த்து அவளுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கலாம். அந்த நம்பிக்கை பொய்க்காமல் எந்தப் பெரிய பிரச்சனைகளும் இல்லாமல் சுகப்பிரசவம் ஆனது.

அமெரிக்காவில் பிரசவ அறைக்குள், கர்ப்பிணிப் பெண்ணோடு யாராவது ஒருவர் உடன் இருக்கலாம், அது பெரும்பாலும் கணவர்களாகத்தான் இருப்பார்கள். இந்தியாவிலும் இந்தப் பழக்கம் இப்போது பரவி வருவதாகக் கேள்விப்பட்டேன். நல்ல விஷயம். கமலிக்குப் பிரசவம் நடந்த போது நான் தான் உடனிருந்தேன்.

அவள் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்வடைந்து இருந்த ஒரு நேரத்தில் அவள் கையைப் பிடித்துக்கொண்டு ஆதரவாக நிற்க எனக்குக் கிடைத்த வாய்ப்பு அது. இரண்டு நாட்களாக சரியாகத் தூங்காமல், பிரசவ வலியில் அழுத கண்களுடன் இரத்த கோலத்தில் கிடந்த கமலியின் முகம் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த முகம் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அவள் என்றைக்கும் இல்லாத அளவுக்கு இரண்டு மடங்கு அழகாகத் தெரிந்தது அன்று தான்.

எங்களுக்குப் பிறக்கப் போவது பெண் குழந்தை தான் என்று எங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது. இந்த விவரத்தை அமெரிக்காவில் முன்பே சொல்லிவிடுவார்கள். அதனால் முன்னாடியே குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று குடும்பமாக எல்லோருடனும் கலந்தாலோசித்து இனியா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தோம். பெயர் தமிழில் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையுடன் நாங்கள் தேர்ந்தெடுத்த பெயர் அது.

இனியா இந்த உலகுக்குள் பிரசவித்த அந்த முதல் நொடி, அவள் முகத்தைப் பார்த்த போது ஒரு அப்பாவாக என்னுடைய முதல் "ரியாக்சன்" ஆச்சரியம் தான். குழந்தைகள் பிறக்கும் போது அழுதுகொண்டே தான் பிறப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். திரைப்படங்களிலும் அப்படித்தான் காட்டுகிறார்கள். ஆனால் இனியா பிறந்த போது அமைதியாகத்தான் இருந்தாள்.

எனக்கு ஒரே ஆச்சரியம். கூடவே குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனையோ என்று சற்று பயம் வேறு வந்தது. அது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு ஒரு தவளைக்குட்டி மாதிரி குட்டியாக வேறு இருந்தாள்.

குழந்தையை எடுத்து அருகிலேயே இருந்த ஒரு மேசையில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நான் கமலியைப் பார்த்தேன், அவளுடைய சோர்வான கண்கள் சற்றே கலங்கியிருந்தன. ஆனந்தக் கண்ணீர். அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டேன். பிறகு எழுந்து இனியாவுக்கு அருகில் சென்றேன்.

இனியாவை சுத்தம் செய்து கொண்டிருந்த செவிலியரிடம் குழந்தை ஏன் எந்த சத்தமும் கொடுக்க மாட்டேன் என்கிறது, என்ன பிரச்சினை என்று பாருங்கள் என்று சொன்னேன். குழந்தையின் உணவுக்குழாயில் பனிக்குட நீர் தேங்கியிருக்கும் என்று அதைச் சரி செய்வதற்காக ஒரு சின்ன வேக்யூம் டியூபை இனியா வாயில் நுழைத்தார். ஏதேனும் உணவுக்குழாயில் அடைத்திருந்தால் அது வெளியே உறிஞ்சப்பட்டு சரியாகிவிடும்.

இனியாவுக்கு அது சற்று எரிச்சலூட்டியிருக்கும் போல, லேசாகக் கண்களைத் திறந்து முனகிவிட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டாள். அந்த செவிலியர், "குழந்தைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, அது நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது பிறந்திருக்கிறது அதனால் தான் அழுகவில்லை. ஒரு சில குழந்தைகள் இப்படித்தான் பிறக்கும் போது அழாமல் பிறக்கும். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இது நார்மல் தான்" என்று ஆறுதல் சொன்னார். அதைக் கேட்ட பிறகு தான் எனக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனாலும் அதெப்படி ஒரு குழந்தை அழாமல் பிறக்கும் என்ற ஆச்சரியம் மட்டும் அடங்கவே இல்லை. குழந்தையைப் பார்க்க வீட்டுக்கு நண்பர்கள் வந்த போதெல்லாம் என் பிள்ளை பிறக்கும் போது அழவே இல்லையாக்கும் என்று பெருமை பேசிக்கொண்டிருந்தேன்.

யோசித்துப் பார்த்தால் எனக்கும் அழுகைக்குமே தூரம் ரொம்ப அதிகம். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் அழுவதற்கான எத்தனையோ சூழ்நிலைகளைக் கடந்து வந்திருந்த போதும் அழுகை மட்டும் வந்ததே இல்லை. அதே பழக்கம் இனியாவுக்கு பிறக்கும் போதே வந்துவிட்டது போல.

------------------------------------------------------------------------------------------------------------------

கமலி சென்னை சென்று இறங்கிய உடனேயே எனக்கு போன் பண்ணினாள்.

"இல்ல மாமா, பாப்பா அவ்ளோவா அழல. முதல் ஃப்ளைட் 16 மணி நேரம்ல. அதுல ஜாலியா விளாடிட்டு தான் இருந்துச்சு. ரெண்டாவது ஃப்ளைட்ல தான் கொஞ்சம் தூங்க முடியாம கஷ்டப்பட்டுச்சு. எப்படியோ ஒருவழியா சமாளிச்சு வந்து இறங்கிட்டோம்"

"ம்ம். முதல் ஃப்ளைட்ல பாப்பா கொஞ்ச நேரமாச்சும் தூங்குச்சா"

"ஆமா மாமா. கொஞ்ச நேரம் தூங்குச்சு. பக்கத்து சீட்லயும் ஒரு குழந்தை தான். அவங்க அம்மா அப்பாவோட இருந்தது. அது அப்பப்போ சத்தமா கத்திட்டே இருந்தது. அது மட்டும் பாப்பாவுக்கு டிஸ்டர்பிங்கா இருந்துச்சு"

"ம்ம். உள்ள அவளோ மக்களை ஒரே நேரத்துல பக்கத்துல பார்த்து பாப்பா எப்படி ரியாக்ட் பண்ணுச்சு"

"அது ஜாலியா தான் இருந்துச்சு. போற வாற எல்லார்கிட்டயும் கூப்பிட்டு ஏதோ பேச ட்ரை பண்ணிட்டே இருந்துச்சு. எல்லார்ட்டயும் ஃப்ரண்ட்ஸ் ஆகிருச்சு. இடைல கொஞ்ச நேரம் பக்கத்துல இருந்த குழந்தைய அவங்கப்பா தூக்கி வச்சு விளாடிட்டு இருந்தாரு. நீங்க பாப்பாவை தலைக்கு மேல தூக்கி வச்சு விளையாடுவீங்கள்ல, அதே மாதிரி. பாப்பாவுக்கு என்ன தோணுச்சோ, இல்ல ஞாபகம் வந்துச்சோ தெரியல. கொஞ்சம் நேரம் அமைதியா அதை பாத்துட்டு இருந்துச்சு"

இதைக் கேட்டதும் துணுக்கென என் கண்கள் கலங்க ஆரம்பித்தது. ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட பிறகு உள்ளுக்குள் எங்கிருந்தோ இருந்து வந்த ஒரு சக்தி அந்த அழுகையைக் கட்டுப்படுத்தியது.

இனியா பிறந்த பிறகு, இப்படி கண்கள் கலங்க ஆரம்பிப்பது இது இரண்டாவது தடவை. முதல்முறை இனியா மூன்று மாதக்குழந்தையாக இருக்கும் போது நடந்தது.

என்னுடைய குழந்தை என்பதற்காகச் இதைச் சொல்லவில்லை, ஆனாலும் இயல்பிலேயே இனியா ஒரு சமத்துப் பிள்ளை. எங்களுக்கு எந்தவித சிரமும் கொடுத்ததே இல்லை. தேவையில்லாமல் அழுததே இல்லை. பசிக்கும் போதும், தூக்கம் வரும் போதும் மட்டும் கொஞ்சம் சிணுங்குவாள். மற்ற நேரங்களில் எந்நேரமும் சிரித்த முகமாகவே இருப்பாள். இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையிலேயே நாக்கைச் சுழற்றி மழலைக் குரலில் ஏதேதோ பேச ஆரம்பித்து விட்டாள். குழந்தை வளர்ப்பு நாங்கள் நினைத்த மாதிரி எந்த பெரிய சிரமங்களும் இல்லாமல், ஒரு கொண்டாட்டமாகத்தான் எங்களுக்கு இருந்தது.

ஒரு நாள் மாலை நேரம் அவளுக்குப் பசி எடுத்ததால் சிணுங்க ஆரம்பித்தாள். கமலி ஏதோ ஒரு வேலையாக உள்ளே இருந்தாள். இனியா பிறக்கும் போது எடை குறைவாக இருந்ததால், நேரடியாகப் பால் கொடுப்பது போக, பம்ப் பண்ணி பாட்டில் வழியாகவும் கொடுத்துக் கொண்டிருந்தோம். பாட்டில் வழியாகக் கொடுக்கும் போது குறைந்த நேரத்தில் அதிகப் பால் குடிக்க முடியும், அதனால் எடை அதிகரிக்கும் என்று இனியாவுடைய டாக்டர் பரிந்துரை செய்திருந்தார்.

இனியாவுக்குக் கொடுத்தது போக மீதிப் பாலை பம்ப் பண்ணி ஃப்ரீசரில் சேமித்து வைத்து விடுவோம். பிறகு தேவைப்படும் போது சூடு பண்ணிக் கொடுப்போம். பெரும்பாலும் நான்தான் பாட்டில் பாலை கொடுப்பேன்.

அன்று வழக்கத்துக்கு மாறாக இனியா அதிகமாகவே சிணுங்க ஆரம்பித்து, கொஞ்ச நேரத்தில் அழுகவும் ஆரம்பித்து விட்டாள். சத்தம் அதிகமாக வர ஆரம்பித்தது. கமலி ஃபிரீசரில் இருந்து ஒரு பாக்கெட் பாலை எடுத்து சூடு பண்ணிக் கொண்டிருந்தாள். அது சூடாவதற்கு ஒரு சில நிமிடங்கள் ஆகும். அதற்குள் இனியா கத்தி ஓய்ந்து விட்டாள். பிறகு ஒரு வழியாக சூடான பாலை பாட்டிலில் ஊத்திக்கொண்டு வந்து என்னிடம் கொடுக்க, நான் இனியாவுக்கு அதைக் கொடுக்க ஆரம்பித்தேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். பிறந்த குழந்தைகளுக்கு கண்ணீர் சுரப்பி சரியாக வளர்ந்திருக்காது, அதனால் அவர்கள் அழும் போது கண்ணீரே வராது என்பார்கள். ஆனால் மூன்று மாதக் குழந்தையான இனியா அந்தப் பாலைக் குடித்துக் கொண்டிருக்கும் போது, என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய ஒரு கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

முதன் முதலில் இனியாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைப் பார்த்த எனக்கு நெஞ்சே அடைத்து விட்டது. அய்யோ என் பிள்ளையை அழுக வைத்து விட்டேனே என்று எனக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

கமலி கமலி, இங்கே வந்து பாருடி, பிள்ளை அழுகுதே என்று அலறினேன். ஓடி வந்து பார்த்த கமலிக்கும் அதிர்ச்சி. என் கண்களிலும் கண்ணீர் முட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த கமலி, எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு என் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டாள். பிறகு எங்கிருந்தோ உள்ளுக்குள் இருந்து வந்த ஒரு சக்தி என்னுடைய அழுகையை அடக்கியது.

எனக்கும் கண்ணீருக்கும் சம்பந்தமே இல்லை. யாராவது அழுவதைப் பார்த்தால் கூட எனக்கு என்னவோ போல இருக்கும். அந்த இடத்தில் இருந்து எப்படியாவது தப்பித்து ஓடிவிட வேண்டும் என்றே தோன்றும்.

பல வருடங்களுக்கு முன்பு, என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவன் தன்னுடைய அம்மா, அப்பா இருவரையுமே அடுத்தடுத்து பறிகொடுத்து, என்ன செய்வதென்றே தெரியாமல், ஓவென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்த போது என்னால் அவனுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை. மற்ற நண்பர்கள் அவனைச் சூழ்ந்து நின்று கொண்டு, அவனுடைய சோகத்தில் பங்கு கொண்டு அவனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் மட்டும் அவனுடைய அழுகையைப் பார்த்து, என்ன சொல்வதென்று தெரியாமல் தயக்கத்துடன் சற்று விலகி நின்றேன்.

ஆனால் அதற்காகவெல்லாம் என்னை உணர்ச்சிகளே இல்லாத இறுக்கமான ஆள் என்று நினைத்து விடாதீர்கள். எனக்குள்ளும் சோகம் இருக்கும். ஆனால் அழுகை மட்டும் வராது. அழுபவர்களைப் பார்த்தாலும் அசெளகரியமாக இருக்கும்.

சிறுவயதில் இருந்தே அப்படித்தான். இப்போது யோசித்துப் பார்த்தால் அழுகையை பலவீனத்தின் ஒரு குறியீடாகப் பார்த்திருக்கிறேனோ என்று கூட தோன்றுகிறது.

ஆனால் நான் அதிகம் வெளிப்படுத்திய மற்றொரு உணர்ச்சி உண்டு. அது கோபம். சிறு வயதிலிருந்தே அப்படித்தான். ஆனால் அந்த கோபம் நிலையானதாக மாறிய நாள் இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

------------------------------------------------------------------------------------------------------------------

அப்போது நான் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்றைக்கு கடைசி வகுப்பாக, விளையாட்டு வகுப்பு இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து வகுப்பிலிருந்து மைதானத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். போகும் வழியில் பக்கத்து வீட்டு அக்கா ஒருவர் தலைமையாசிரியர் அலுவலகத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். இந்தக்கா ஏன் இங்கே நிற்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே மைதானத்துக்கு விளையாடச் சென்று விட்டேன்.

சற்று நேரம் கழித்து என் வகுப்புத் தோழன் ஒருவன் ஓடி வந்து, விளையாடிக்கொண்டிருந்த என்னிடம், உன்னை தலைமையாசிரியர் அலுவலகத்துக்கு அவசரமாக அழைக்கிறார்கள் உடனே வா என்றான்.

நான் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன் தான் என்றாலும், நிறைய சேட்டைகளும் செய்யக்கூடிய ஆள். அதனால் இந்த முறை ஏதேனும் சேட்டை செய்து பெரியளவில் மாட்டிக் கொண்டேனா என்று யோசித்தபடியே பயத்துடன் சென்றேன். போகும் வழியில் அந்த வகுப்புத் தோழன் எங்களது வகுப்பறைக்கு அழைத்துச் சென்று புத்தகப்பையை எடுத்துக்கொள்ளச் சொன்னான்.

என்னவென்று கேட்டதற்கு எனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தான். குழப்பத்துடன் எனது பையை எடுத்துக்கொண்டு தலைமையாசிரியர் அலவலகத்துக்குச் சென்றேன்.

அங்கே அவர் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக உட்கார்ந்திருந்தார். நான் உள்ளே சென்றவுடன், நீ வீட்டுக்குப் போகலாம், உன்னை அழைத்துச் செல்வதற்காக இந்த பெண்மணி வந்திருக்கிறார் என்று கூறிவிட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

அவரிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பக்கத்து வீட்டு அக்காவுடன் சேர்ந்து பள்ளிக்கு வெளியே வந்து விட்டேன்.

"என்னக்கா ஆச்சு, நீங்க ஏன் வந்திருக்கீங்க. எதுனா பிரச்சனையா" என்று நான் கேட்டதற்கு என் முகத்தைப் பார்க்காமலேயே பதில் சொன்னார்.

"ஒன்னுல்லப்பா. வீட்லருந்து உன்னை அவசரமா கூட்டிட்டு வர சொன்னாங்க. வா போகலாம்"

அதற்கு மேல் அவர் எதுவும் பேசும் மனநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் வேறேதும் கேள்விகள் கேட்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். பள்ளியிலிருந்து என் வீட்டிற்கு பத்து நிமிட நடை. தினமும் நடந்து தான் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்தேன்.

இன்றைக்கு அந்தக்கா சற்று வேகமாக நடக்க, அவருடன் போட்டி போட்டு நானும் நடக்க பத்து நிமிடங்களுக்கு முன்பே வீட்டுக்கு அருகில் வந்துவிட்டோம்.

அப்போது நாங்கள் ஒரு சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தோம். ஒரு வீடு, நடுவில் ஒரு குட்டி ஹால், அந்த ஹாலைச் சுற்றி நான்கு பக்கமும் நான்கு போர்ஷன்கள். ஒவ்வொரு போர்ஷனிலும் ஒரு குட்டி பெட்ரூம் மற்றும் ஒரு குட்டி கிச்சன் ரூம். இந்த நான்கு போர்ஷன்களிலும் நான்கு குடும்பங்கள் தங்கியிருந்தன. வீட்டுக்கு வெளியே இந்த நான்கு போர்ஷன்களுக்கும் சேர்த்து பொதுவான இரண்டு குளியலறைகள் மற்றும் இரண்டு கழிப்பறைகளும் உண்டு. அந்த நான்கு போர்ஷன்களில் ஒன்றில் தான் எங்கள் குடும்பமும் தங்கியிருந்தது.

வீட்டுக்கு வெளியே நான்கைந்து பேர் நின்று கொண்டு அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். ஒரு போர்ஷனில் தங்கியிருந்த குடும்பம் ஒன்று அவசர அவசரமாக கதவைப் பூட்டி எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்கள். என் தாத்தா ஹாலில் இருந்த கட்டிலில் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார். என் அம்மா அந்த ஹாலில் ஒரு ஓரமாக சாய்ந்து உட்கார்ந்திருக்க, அருகில் ஒரு பெண்மணி என் அம்மாவை தாங்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அம்மா அழுதுகொண்டே ஏதோ என்னிடம் சொன்ன மாதிரி இருந்தது. எனக்குப் புரியவில்லை.

அப்பாவ எங்கே காணோம் என்று கேட்டுக்கொண்டே பெட்ரூமுக்குள் சென்றேன். அங்கே கட்டிலில் அவர் படுத்திருந்தார். அப்பாவைத் தட்டி எழுப்பினேன். அவர் எழுந்திரிக்கவில்லை.

அம்மா வெளியில் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்த சத்தம் கேட்டது. "காலையில நல்லாத்தான இருந்தாரு. மத்தியானம் சாப்பாடு கேட்டாருனு நானே ஊட்டி விட்டனே. நல்லாத்தான பேசிட்டு இருந்தாரு. சத்த நேரம் தூங்கி எந்திருக்கிறேன்னாரு. எந்திரிக்கவே இல்லயே. என் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்லுவேன். அய்யோ" என்று அலறிய சத்தம் இப்போது கொஞ்சம் தெளிவாகக் கேட்டது.

அப்பாவின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். பார்த்தால் தூங்கிக் கொண்டிருப்பது போலவே இருந்தது. ஒருவேளை இறந்து விட்டார் என்று தவறாக முடிவு செய்து விட்டார்களோ என்று சந்தேகம் வந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து எடுத்து வந்த பையை ஓரமாக வைத்துவிட்டு மறுபடியும் வந்து தட்டி எழுப்பினேன்.

இரண்டு கன்னத்தையும் தட்டினேன். உடலை உலுக்கிப் பார்த்தேன். தலை முடியைக் கோதி அப்பா அப்பா என்று கூப்பிட்டுப் பார்த்தேன். எந்த சலனமும் இல்லை. அவர் இறந்து விட்டார் என்று புரியவே வெகுநேரம் ஆனது. அவர் இனிமேல் எழுந்திருக்க மாட்டார் என்று உறுதியாகத் தெரிந்தவுடன் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் உடலை வேகமாக உலுக்கி அப்பா அப்பா என்று கத்தினேன். வேறெதுவும் பேச்சு வரவில்லை. அவர் நெஞ்சிலேயே ஓங்கி ஒரு அடி அடிக்கலாமா என்று ஆத்திரமாக வந்தது. ஹாலில் இருந்து வேகமாக வந்த என் அம்மா என்னைப் பிடித்துக்கொண்டு அழுது கொண்டே ஏதோ சொல்ல முயற்சி செய்தது.

அம்மாவைப் பிடித்துக் கீழே தள்ளினேன். வெளியிலிருந்து உள்ளே வந்த ஒருசில பெண்கள் அம்மாவைப் பிடித்துக் கொண்டனர். அவர்கள் எல்லோரையும் அடிக்கலாமா என்று ஒரு கணம் தோன்றியது. ஜன்னல் வழியாக ஒரு சில ஆட்கள் உள்ளே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஏதோ சொல்ல முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஹாலில் இன்னும் சிலர் வந்துவிட்டிருந்தனர். என் நண்பர்கள் ஒரு சிலர் என் வீட்டுக்கு வருவது ஜன்னல் வழியாகத் தெரிந்தது.

அத்தனையும் பார்க்க பார்க்க இன்னும் இன்னும் அதிகமாகக் கோபம் வந்தது. ஆத்திரம் தலைக்கேறி தலை வலிக்க ஆரம்பித்தது. கிச்சனில் பீரோவுக்குப் பின்னால் ஒரு அடி அகல இடத்தில் ஒரு சிறிய பலகை போட்டு அதில் சாமி போட்டோ அம்மா வைத்திருந்தது. அதுதான் எங்கள் வீட்டின் பூஜையறை. ஐந்தாறு சாமிகள் ஒன்றாகக் காட்சியளிக்கும் போட்டோ அது. அதற்கு பூ போட்டு, விளக்கு ஏற்றப்பட்டிருந்தது.

அதைப் பார்த்ததும் இன்னும் அதிகமாகக் கோபம் வந்தது. ஓடிச் சென்று அந்த போட்டோவைக் கையில் எடுத்து ஒரே அடியில் சுக்கு நூறாக உடைத்தேன். அப்படியும் ஆத்திரம் தாங்காமல் உடைந்த அந்த போட்டோவை சுவற்றிலும் பலகையிலும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டே இருந்தேன். அங்கிருந்த விளக்கு, எண்ணெய், திருநூறு மற்ற பூசைச் சாமான்கள் என எல்லாமே உடைந்து சிதறி நாலாபக்கமும் பறந்தன. திருநூறு தூசி தூசியாக அறை முழுக்கப் பறந்தது. போட்டோவில் இருந்த கண்ணாடி நொறுங்கிக் கையில் கிழித்து ரத்தம் வர ஆரம்பித்தது.

வெளியில் இருந்து ஓடி வந்த அம்மா என்னைக் கையில் இறுகப் பிடித்துக்கொண்டு என்னிடம் ஏதோ சொல்ல முயற்சி செய்தது. எனக்கு எதுவும் கேக்கவில்லை. இன்னும் சிலர் வந்து என்னைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றனர்.

வெளியில் இருந்த திண்ணையில் உட்கார வைக்கப்பட்டேன். அம்மா சற்று நேரம் என் பக்கத்திலேயே உட்கார்ந்து, என் கையைப் பிடித்துக்கொண்டே அழுது கொண்டிருந்தது. இடையிடையே புலம்பிக்கொண்டே தைரியமும் சொன்னது. பிறகு நிறைய ஆட்கள் வர ஆரம்பித்தவுடன் வீட்டுக்குள்ளே சென்று விட்டது.

ஆக வேண்டிய காரியங்களைப் பார்ப்பதற்காக யார் யாரோ ஏதேதோ பேசிக்கொண்டும், செய்து கொண்டும் பரபரப்பாக இருந்தனர். நான் திண்ணையிலேயே வெகு நேரம் உட்கார்ந்திருந்தேன். என் பள்ளிக்கூடத்தில் இருந்து நிறைய நண்பர்களும் வந்திருந்தனர். யார் பேசுவதும் எனக்குக் கேட்கவில்லை. யாரைப் பார்த்தாலும் கோபம் மட்டுமே வந்தது. நான் யார் முகத்தையும் பார்க்க விரும்பாமல் தலையைக் குனிந்து கொண்டேன்.

பக்கத்து வீட்டுக்கு முன் இருந்த காலியிடத்தில் என் ஏழு வயது தங்கையும், மூன்று வயது தம்பியும் விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. எழுந்து அவர்கள் அருகில் சென்றேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எதுவும் தெரியாமல், புரியாமல் சிரித்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள். ஒரே ஒரு கணம் மட்டும் கோபம் மறைந்து சோகம் மனசுக்குள் பரவியது. தங்கையைக் கையில் பிடித்து அருகில் இழுத்தேன். அவள் சிணுங்கிக்கொண்டே "கையை விடுண்ணா" என்று கையை உதறிவிட்டு சிரித்துக்கொண்டே தம்பியைத் துரத்த ஆரம்பித்தாள்.

வெறித்த கண்களோடு அவர்கள் இருவரையும் ஓரிரு நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு திரும்பி வந்து திண்ணையிலேயே அமர்ந்து விட்டேன். என் நெருங்கிய நண்பன் ஒருவன் என் அருகில் வந்தமர்ந்து என் கையை இறுகப் பற்றிக்கொண்டான். அதுதான் எனக்குக் கடைசியாக நினைவில் இருக்கிறது. அதற்கப்புறம் இரண்டு நாட்கள் என்னென்னவோ நடந்தது, என் நினைவில் எதுவும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. என் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. அன்று மட்டும் இல்லை. அதற்கப்புறம் பல வருடங்களுக்குக் கண்ணீரே எனக்கு வந்ததில்லை.

அடுத்த நாள் காரியம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது கை கால்களை கழுவிக்கொண்டு உலக்கையைத் தாண்டி வரச் சொன்னார்கள். உள்ளே வந்தவுடன் அம்மாவைப் பார்த்து பசிக்குது சாப்பாடு இருக்கா என்று கேட்டேன். அம்மா அழுதுகொண்டே வா சாமி என்று கூப்பிட்டு இலையில் சோறு போட்டதும் நான் சாப்பிட்டதும் நினைவிருக்கிறது.

அதற்கப்புறம் எனக்கு நினைவிருந்ததெல்லாம் கோபம் கோபம் கோபம் மட்டுமே. யாரைப் பார்த்தாலும் கோபம், எதற்கெடுத்தாலும் கோபம், சில சமயங்களில் என் மேலேயே எனக்கு அளவு கடந்த கோபம். பெரும்பாலும் வெளிக்காட்ட முடியாத கோபம், என்னவென்று வெளியில் சொல்ல முடியாத, உணர முடியாத கோபம். வாழ்க்கை அப்படியே ஓடி விட்டது.

எனக்கு நானே ஒரு உள்வட்டத்தைப் போட்டுக்கொண்டு அதற்குள் யாரையும் அனுமதிக்காமல் தனியாகவே இருந்து விட்டேன். அதையும் மீறி ஒரு சிலர் என்னிடம் நெருங்கிப் பழகி அந்த உள்வட்டத்தைத் தாண்ட முயற்சித்திருக்கின்றனர். அப்போதெல்லாம், நானே ஏதாவது ஒரு சூழ்நிலையை உருவாக்கி அவர்களை விலகச் செய்திருக்கிறேன். யாரேனும் அந்த உள்வட்டத்தை நெருங்கும் போதெல்லாம் பதட்டப்பட்டு, பயந்து, கோபத்தை வெளிக்காட்டி, அவர்களை விரட்டியிருக்கிறேன். தனிமையே எனக்குப் பிடித்தமானதாக மாறிப் போனது. கோபமே என்னைப் பாதுகாக்கும் தற்காப்புக் கவசமாகவும் ஆனது.

ஆனால் இவ்வளவு கோபத்திலும் நான் எந்தவொரு தீய எண்ணங்களுக்கும் பலியாகவில்லை. கோபத்தின் மூலம் என் அகம் தான் கரையான் மாதிரி அரித்துக் கரைந்து கொண்டிருந்ததே தவிர புறம் அப்படியே தான் இருந்தது. பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல கஷ்டங்களுக்கு இடையே பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு எல்லாவற்றையும் நன்றாகப் படித்து முடித்து, அதன் பிறகு ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, அதில் படிப்படியாக முன்னேறி, இப்போது அமெரிக்காவுக்கு வந்து, குடும்பத்தின் பொருளாதாரத்தை பெருமளவு உயர்த்தி, அனைவரையும் நல்ல நிலையில் வைத்திருக்கிறேன்.

கோபம் மட்டும் அப்படியே மிஞ்சி விட்டது. சுற்றியிருந்த மனிதர்கள் மேல் இருந்த கோபம் கூட கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விட்டது. ஆனால் என் அப்பா மேல் இருந்த கோபம் மட்டும் குறையவே இல்லை. அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆகியும், நானே ஒரு அப்பாவாக ஆன பிறகும் கூட, அவர் இறந்ததை என்னால் மறக்கவும் முடியவில்லை. அதற்காக அவரை என்னால் மன்னிக்கவும் முடியவில்லை.

------------------------------------------------------------------------------------------------------------------

மறுபடியும் போன் அடித்த போது பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தேன். கமலிதான் பேசினாள். இனியாவை வீடியோ காலில் காண்பித்தாள். ஆனால் போனைப் பார்த்துப் பேச இன்னும் குழந்தைக்குத் தெரியவில்லை. அது பாட்டுக்கு சிரித்து விளையாடிக்கொண்டு இருந்தது. தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவு தூங்கப் போவதற்கு முன்பும் கமலிக்கு வீடியோ கால் பண்ணி இனியாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போது ஒரு மாதம் முடியும் என்று ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டிருந்தேன்.

என் அப்பா அவருடைய சிறு வயதிலேயே தாயை இழந்தவர். என் தாத்தாவின் வளர்ப்பில் கிராமத்தில் வளர்ந்தவர். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் பணத்தட்டுப்பாடு நிறைந்த சூழ்நிலை. ஒரு நாளைக்கு இருவேளை சாப்பாடு என்பதே அதிகம். அந்த மாதிரி சூழ்நிலையில் மிகுந்த சிரமத்துக்கிடையில்தான் படித்தார். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் படிப்பை மட்டும் அவர் கைவிட வில்லை. படிப்பிலும் மிகுந்த கெட்டிக்காரர். பியூசி முடித்த பிறகு அடுத்ததாக கல்லூரியில் சேர முயற்சி செய்தார். பணம் நிறைய செலவாகும் என்பதால் தனது மற்ற தேவைகளைக் குறைத்துக் கொண்டார்.

B.Sc கெமிஸ்ட்ரி மூன்று வருடங்கள் எவ்வளவு கஷ்டங்களுக்கிடையில் படித்தார் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. தினமும் ஒரு வேளை தான் சாப்பாடு. இரவு தூங்குவதற்கு முன்பு வயிறு நிறைய தண்ணீர் குடித்து விட்டு தூங்குவார். சில நாட்கள் உறவினர் ஒருவரது வீட்டில் இருந்து படிப்பைத் தொடர்ந்தார். ஆனால் உறவினர்கள் மிகவும் தரக்குறைவாக ஏளனமாக நடத்தியதால், ஒரு வேளை சாப்பிட்டாலும் சுய மரியாதையே பெரிது என்று அங்கிருந்து விலகி, பிறகு அரசு நடத்திய ஒரு விடுதியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.

ஒரே ஒரு சட்டை பேன்ட் மட்டுமே வைத்திருந்தார். அதையும் துவைத்து துவைத்துப் பயன்படுத்தியதால் கிழிந்த நிலையில் இருக்கும். புத்தகங்களை கல்லூரியில் இருக்கும் நூலகத்தில் இருந்து எடுத்துப் படிப்பார். தேர்வு நேரங்களில் தேவையான புத்தகங்கள் கிடைப்பது கடினம். அதனால் ஸ்காலர்ஷிப் பணம் கிடைக்கும் போது, அதை அப்படியே புத்தகங்களுக்கு செலவிட்டு விடுவார். எப்படியோ நண்பர்களின் உதவியுடன் தான் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

ஒரு மனிதனுக்கு எந்தளவுக்கு படித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறி இருந்தால் சாப்பாடு, பணம், வெளித்தோற்றம், உறவினர்களின் ஏளனம் எல்லாவற்றையும் துச்சமாக எண்ணி இந்த சூழ்நிலையிலும் படிக்க ஆசைப்படுவான். என் அப்பா அப்படித்தான் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று உயர்ந்த எண்ணங்களுடன் வாழ்க்கையில் முன்னேறினார். அதற்கப்புறம் B.Ed-ம் மூன்று வருடங்கள் படித்தார்.

இவ்வளவு கஷ்டப்பட்டதாலோ என்னவோ என் அப்பா நிறைய பக்குவப்பட்டிருந்தார். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் பெற்றிருந்தார். யாருக்காகவும் தன் தன்மானத்தை விட்டுக் கொடுத்ததே இல்லை. கல்லூரிக்கு கிட்டத்தட்ட கிழிந்த நிலையில் இருக்கும் ஒரே ஒரு சட்டை பேன்ட் மட்டுமே போட்டுச் சென்று பலரின் ஏளனத்திற்கு ஆளான போதும் கூட தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர். ஆனால் அதே சமயம் அன்போடு பழகுபவர்கள் யாராக இருந்தாலும் நட்பு பாராட்டுவார்.

புகை, குடி என எந்தவொரு தீய பழக்கங்களுக்கும் தன்னை ஆட்படுத்திக்கொண்டதில்லை. எனக்குத் தெரிந்து சூயிங்கம் கூட அவர் மென்றதில்லை. பசிக்கும் போது அளவு வைத்துக்கொள்ளாமல் நன்றாகச் சாப்பிடுவார். அவ்வளவுதான்.

எங்களது கிராமத்தில் அப்போது படித்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. விவரம் தெரிந்தவர்களும் மிகக் குறைவு. அதனால் பள்ளிப்படிப்பு படித்த நிறைய பேருக்கு அடுத்ததாக என்ன படிக்க வேண்டும் என்பதே தெரியாது. அந்த வகையில் படிப்பின் உன்னதம் அறிந்த என் அப்பா நிறைய பேருக்கு உதவியிருக்கிறார். வழி காட்டி இருக்கிறார்.

கம்யூனிச சிந்தனையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். பிறப்பால் எல்லோரும் சமம், யாரும் யாருக்கும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை என்பதைப் பற்றி அடிக்கடி குழந்தைகளான எங்களிடம் சொல்லுவார். முதலாளித்துவம், தொழிலாளித்துவம் பற்றி நிறையப் பேசுவார். சமூக மாற்றங்களில் நிறைய அக்கறை காட்டுவார். தன்னுடைய கிராமத்தின் முன்னேற்றத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். ஒரு சாதாரண மனிதனாக இருந்து கொண்டு தன்னால் ஆன மட்டும் பாடுபட்டிருக்கிறார். பொது மக்களை ஒன்று திரட்டி பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்தே நான் பிறந்தேன். தவமிருந்து பெத்த பிள்ளை என்று தாலாட்டி, சீராட்டி வளர்த்தார்கள். நான் சிறு வயதில் இருந்தே அப்பாவைப் பார்த்தே வளர்ந்தேன். பின்னாடி என் அப்பா போலவே வர வேண்டும் என்ற ஆசையோடே வளர்ந்தேன்.

தினமும் இரவு என் அப்பாவிடம் கதை கேட்காவிட்டால் எனக்கு தூக்கமே வராது. கற்பனை கதைகள் மட்டுமல்லாமல் கருத்துக்களை உணர்த்தும் சமூகக் கதைகளையும் சுவாரசியமாகச் சொல்லுவார். கதை முடிந்த பிறகு அதிலிருந்து நிறைய கேள்விகளையும் கேட்பார். ஒவ்வொரு கதையும் உணர்த்தும் நீதி என்ன என்று என்னுடன் விவாதிப்பார். சாப்பாடு ஊட்டுவார். இரவு என் அப்பா வீட்டுக்கு வர எவ்வளவு நேரமானாலும் தூக்கக் கலக்கத்துடன் காத்திருந்து என் அப்பா கையால் சாப்பாடு ஊட்டச்சொல்லி சாப்பிட்டால் தான் பசியே தீரூம்.

பள்ளிக்கூட பாடங்களை அவர் சொல்லித் தரும் அழகே தனி. அதனாலேயே என்னவோ எனக்கு பள்ளிப்படிப்பு இனித்தது என்று கூட சொல்லலாம். அவருக்கு நேரம் கிடைக்கும் போது பள்ளிக்கூடத்துக்கு வந்து மற்றவர்களுக்கும் பாடம் நடத்துவார். அவர் வாத்தியார் இல்லைதான். ஆனால் அதைச் செய்யுமளவுக்கு பள்ளியிலும் ஊரிலும் அவருக்கு செல்வாக்கு இருந்தது.

அவர் பள்ளிப்படிப்பை மட்டும் எனக்கு சொல்லிக்கொடுக்கவில்லை. அதோடு சேர்த்து புத்தக வாசிப்பையும் அவர் தான் அறிமுகப் படுத்தினார். இலக்கியங்கள் முதற்கொண்டு உலக நடப்பு வரை பல வாசிப்புகளுக்கு அவர் தான் என்னைப் பழக்கப்படுத்தினார். நானும் அவரும் விவாதிக்காத உலக விஷயங்களே இல்லை எனலாம். அவ்வளவு பேசுவோம்.

நான் செய்யும் சிறு சிறு முயற்சிகளையும் பாராட்டி என்னை ஊக்குவித்து எப்போதும் நேர்மறைச் சிந்தனைகளிலேயே வைத்திருந்தார்.

எனக்கு பத்து வயது இருக்கும் போது அவருக்கு வனத்துறையில் வேலை கிடைத்தது. அதனால் கிராமத்தில் இருந்து குடும்பத்தோடு டவுனுக்கு குடிபெயர்ந்தோம். லஞ்சம் மலிந்து கிடக்கிற அந்தத்துறையில், என் அப்பா கடைசி வரை லஞ்சம் வாங்கியதே இல்லை. நேர்மையாகவே இருந்து விட்டார். அப்படித்தான் இருக்கவேண்டும் என எங்களிடமும் சொல்லியுள்ளார். நேர்மையான வழியிலேயே குடும்பத்தை முன்னேற்றினார்.

தோளுக்குமேல் வளர்ந்தபிறகு என்னைத் தோழனாகவே நடத்தினார். ஒருவரை ஒருவர் தோழரே என்றெல்லாம் கூப்பிட்டு இருக்கிறோம். மூட நம்பிக்கைகளை எதிர்க்கிற ஒரு முற்போக்குவதியாக இருந்தார். அப்படியே எங்களையும் வளர்த்தார். சாதி மத ஏற்றத் தாழ்வுகளை கடுமையாக எதிர்த்தார். அனைவரிடமும் சரி சமமாக அன்புடனும் மரியாதையுடனும் பழகுவார்.

எனக்கும் அப்பாவுக்கும் சில சமயம் கருத்து வேறுபாடுகளும் வருவதுண்டு. ஆனால் அது மிக ஆரோக்கியமான ஒரு விவாதமாக இருக்கும். வயதில் பெரியவர் என்ற காரணத்துக்காக தான் சொல்வது தான் சரி என்றும், தனது கருத்தை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும் ஒரு நாளும் என்னை வற்புறுத்தியதில்லை. அவரது பக்க நியாயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டு, முடிவை என் கையில் விட்டு விடுவார்.

அப்பாவுக்கு மிகப்பிடித்த ஒரு விஷயம் சினிமா. நிறைய திரைப்படங்களுக்கு எங்களை அழைத்துச் சென்றிருக்கிறார். படம் முடிந்து வீடு திரும்பும் போது அந்தப் படத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டே வருவது எங்கள் வழக்கம்.

இப்படி எல்லாமே மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் தான் திடீரென அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. எந்தவொரு கெட்ட பழக்கங்களும் இல்லாத அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் பழுதானது. மூன்று வருடங்களுக்கு மேல் அந்த நோயுடன் போராடினார். மாதச் சம்பளம் மட்டுமே வாங்குகிற மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு அது ஒரு பணக்கார நோய். உடல் நலத்துடன் சேர்ந்து பொருளாதாரமும் சீர்குலைந்து போனது.

கம்பீரமாக வலம் வந்துகொண்டிருந்த என் அப்பா என் கண் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சிறுநீரக அரக்கனால் உருக்குலைந்து போனார். மறுபடியும் போராட்ட சூழ்நிலை. ஆனால் அப்போதும் நம்பிக்கையை மட்டும் அவர் கைவிடவே இல்லை.

இறப்பதற்கு முந்தின நாள் கூட என்னிடம் எதிர்கால திட்டங்கள் பற்றிப் பேசினார். கல்லூரியில் என்ன படிப்பது, அதற்கு எவ்வளவு செலவாகும், என்ன பண்ணலாம் என நம்பிக்கையுடன் பேசிக்கொண்டிருந்தார்.

தனது வாழ்நாள் முழுக்க அன்பே கடவுள், அதைத் தாண்டியது வேறொன்றுமில்லை என்று அன்பின் மொத்த உருவமாய் வாழ்ந்து, நம்பிக்கையையும் நல்ல எண்ணங்களையும் எப்போதும் போதித்த அவர், எங்கள் நம்பிக்கைகளை மட்டும் பாழாக்கிவிட்டு இறந்து போனதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்.

வாழ்க்கையில் கஷ்டகாலங்களையே அதிகம் பார்த்திருந்த அவருக்கு, நான் நன்றாகப் படித்து வளர்ந்து, சம்பாதிக்க ஆரம்பித்த பிறகாவது ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டவரை எப்படி என்னால் மன்னிக்க முடியும்?

அந்தக் கோபத்துக்கு பதிலே இதுவரை கிடைத்ததில்லை. அவரை மன்னிக்கும் அளவுக்கு குணமும் வாய்க்கவில்லை. அதனால் மனதுக்குள்ளேயே அந்த உணர்வுகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு இவ்வளவு காலங்களையும் ஓட்டி விட்டேன்.

------------------------------------------------------------------------------------------------------------------

கமலியையும் இனியாவையும் பிரிந்து ஒரு மாதம் ஓடி விட்டது. அடுத்த மூன்று மாதம் லீவு. ஃப்ளைட் பிடித்து நானும் இந்தியாவுக்கு வந்தேன். வீட்டுக்கு வந்த அதே நாளிலேயே கமலியையும் இனியாவையும் கூட்டி வர கிராமத்துக்குச் சென்றேன். போகும் போது எனக்கு ஒரே படபடப்பாகத் தான் இருந்தது. ஒரு மாதம் கழித்து குழந்தையைப் பார்க்க போகிறேன், என்னை ஞாபகம் வைத்திருக்குமா, என்னிடம் அருகில் வருமா என்ற யோசனை தான் அடிக்கடி வந்துகொண்டே இருந்தது.

ஒருவழியாக கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். காரை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். வாசலிலேயே கமலியும் இனியாவும் என்னை வரவேற்கக் காத்திருந்தனர். கூடவே அவளது வீட்டினரும் ஒரு சில குழந்தைகளும் இருந்தன. கமலி குளித்து, சேலை அணிந்து, பூ வைத்துத் தயாராகி லட்சணமாக அழகாக இருந்தாள். அதே மாதிரி இனியாவையும் தயார்ப்படுத்தி இருந்தாள்.

என் கண்களுக்கு இனியாவைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. குழந்தை கொஞ்சம் வளர்ந்திருந்தது. தவழ ஆரம்பித்திருந்ததால் கொழு கொழுவென்று இருந்த கன்னம் குறைந்திருந்தது, உடலும் சற்று ஒல்லியான மாதிரி தெரிந்தது. நிறைய மனிதர்களை ஒரு சேரப் பார்க்கவும் இனியா சற்று மிரட்சியடைந்தாள்.

நான் கையை நீட்டி பாப்புக்குட்டி வாடா தங்கம் என்று இனியாவைத் தூக்க முயற்சித்தேன். அவளுக்கு என்னைக் கொஞ்சம் கூட ஞாபகமே இல்லை. யாரோ புது ஆள் போலிருக்கிறது என்று இன்னும் மிரட்சியடைந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு, கமலியை இறுகப் பற்றிக்கொண்டாள். நானும் விடாமல் அவளைத் தூக்க, ஓவென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

நானும் ஏதேதோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். "பாப்புக்குட்டி அப்பாடா, நான் தான் தங்கம்.. ஏன் அழுவுறீங்க.. அப்புக்குட்டில" என்றெல்லாம் கொஞ்சினேன். எந்த பிரயோசனமும் இல்லை. அவள் கண்ணில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. மனசெல்லாம் ரணமாக வலித்தது. வேறு வழியின்றி இனியாவை கமலியிடமே கொடுத்தேன்.

"இருங்க மாமா. கொஞ்ச நேரத்துல பாப்பாவே சரியாகி உங்ககிட்ட வரும். அதுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க" என்று கமலி எனக்கு சமாதானம் சொன்னாள். எல்லோரும் அங்கேயே தரையில் அமர்ந்தோம்.

இனியா சற்று நேரத்தில் அழுகையை நிறுத்தினாள். கீழே விட்ட பிறகு அங்கிருந்த விளையாட்டு சாமான்களை எடுத்து விளையாட ஆரம்பித்தாள். நான் இனியாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னை விட்டு ஒரு மாதம் பிரிந்து இருந்தாய் அல்லவா, அதனால் உன்னிடம் இனிமேல் நான் வர மாட்டேன் என்று இனியா என்னிடம் கோபித்துக்கொண்டது போல எனக்குள் தோன்றியது. கண்கள் முழுக்க கோபத்துடன் சாமி போட்டோவைத் தூக்கி அடித்த என் சிறுவயது முகம் நினைவில் வந்து போனது. மனசுக்குள்ளேயே இனியாவிடம் மன்னிப்பு கேட்டேன்.

அவளோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் இனியா சகஜமாகி விட்டாள். பிறகு அவளை அழ வைக்காமல் மெல்ல மெல்ல கெஞ்சி கொஞ்சி கையில் தூக்கி வைத்துக் கொண்டேன். நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவள் முகம் முழுக்க முத்தங்களை அள்ளித் தெளித்தேன்.

அவள் இந்தமுறை அழவில்லையே தவிர, என்னை இன்னும் முழுதாக அடையாளம் கண்டுகொண்டது போல தெரியவில்லை. சரி இப்போதைக்கு இதுவே போதும் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

அந்த நாள் முழுக்க அங்கேயே இருந்துவிட்டு, பிறகு கமலியையும், இனியாவையும் கூட்டிக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்து விட்டோம். இரண்டு நாட்கள் இனியாவுடன் அதிக நேரம் செலவழித்து விளையாடிக் கொண்டிருந்தேன்.

மூன்றாவது நாள் அவளுக்கு என்னை நன்றாக ஞாபகம் வந்து விட்டது போல தெரிந்தது. அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது சிரித்துக்கொண்டே ப்பா ப்பா என்று மழலை மொழியில் கூப்பிட்டாள். இந்த முறை அவள் கண்களில் எந்தவொரு மிரட்சியும் இல்லை. யாரோ ஒரு மூன்றாம் மனிதனுடன் பழகும் பாவனை இல்லை. ஆறு மாதமாக நன்றாகப் பழகிய, கூடவே இருந்த அப்பாவுடன் தான் விளையாடுகிறோம் என்ற ஞாபகம் அவளுக்கு வந்துவிட்டதாக எனக்குத் தோன்றியது.

என் மேல் அவளுக்கு இருந்த கோபத்தை அவள் மறந்து விட்டாள், என்னை மன்னித்து விட்டாள் என்று தோன்றியது. மனசுக்குள் இருந்த ஒரு மிகப்பெரிய பாரம் குறைந்து, மனசு லேசானது மாதிரி உணர்ந்தேன். போதும் இவ்வளவு நாள் தூக்கிச் சுமந்த பாரம், இனியும் சுமக்க வேண்டாம் என்று இனியா என்னிடம் கண்கள் வழியாகப் பேசினாள். திடீரென அவள் முன்னால் பதினைந்து வயது சிறுவனாக மாறிப் போனேன். அவளின் கண்கள் மன்னிப்பின் மகத்துவத்தை அந்தச் சிறுவனுக்கு உணர்த்தின. அந்தச் சிறுவனின் கோபமெல்லாம் பனித்துளி போலக் கரைந்தது. பல காலம் சிறையில் அடைபட்டிருந்த ஆயுள் கைதிக்கு விடுதலை கிடைத்தது.

மடை திறந்த வெள்ளம் போல உள்ளுக்குள்ளிருந்து ஒரு அழுகை வெடித்துச் சிதறியது. ஆனால் அதை அடக்குவதற்கு இந்த முறை எந்தவொரு சக்தியும் வேலை செய்யவில்லை. இனியாவை இறுகக் கட்டிக்கொண்டேன். அவள் உடல் முழுக்க என் கண்ணீர் பாய்ந்தோடியது.

Post Comments

No comments:

Post a Comment

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *