Nov 15, 2018

எனக்கு மிகப்பிடித்த தமிழ் இயக்குனர்

டிஸ்கி: 2015ம் ஆண்டு இறுதிவாக்கில் எனக்குப் பிடித்த இயக்குனர் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டி ஒரு நண்பரிடம் இருந்து வேண்டுகோள் வந்தது. அதை எழுதி முடித்த பின், அப்போதே படித்துப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் நன்றாக எழுத வேண்டும், எடிட் செய்ய வேண்டும் என்று தோன்றியதால் அப்படியே ட்ராஃப்டில் போட்டு விட்ட கட்டுரை இது. இன்று எதேச்சையாக அதை மீண்டும் படிக்க நேர்ந்தது. இனிமேல் எடிட் செய்ய முடியாது என்று தோன்றியதால் அப்படியே போஸ்ட் செய்கிறேன். எழுத்துப்பிழை இருக்கும். மன்னிக்கவும்.

அந்தக்கட்டுரை,

1992ம் ஆண்டு.

சென்னை ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படிக்கும் அந்த இரண்டு மாணவர்களும் பள்ளியின் கிரிக்கெட் அணி வீரர்கள். இருவருக்குமே மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்களாக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அன்றைய கிரிக்கெட் வலைப்பயிற்சியை முடித்துக்கொண்டு இரண்டு பேரும் அப்படியே திரைப்படம் பார்க்கச் செல்லலாம் என்று முடிவெடுத்தனர். மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் அலங்கார் திரையரங்கில் சென்று பார்க்கலாம் என்பது அவர்களின் திட்டம். கடைசி நேரத்தில் அரக்கப்பரக்கப் பேருந்தில் அலங்கார் திரையரங்குக்குச் சென்று, டிக்கெட் வாங்கி உள்ளே செல்வதற்கு சற்று முன்பு தான், தங்களின் கிரிக்கெட் பையை மறந்து பேருந்திலேயே விட்டுவிட்டது தெரியவந்தது. திரும்பிச்சென்று பேருந்தைத் தேடிக்கண்டுபிடித்து பையை மீட்கலாம் என ஒருவன் சொல்ல, அவனுடைய நண்பன் அதை மறுத்தான். இன்னும் 10 நிமிடங்களில் படம் ஆரம்பித்துவிடும், அதற்குள் போய்வர முடியாது, அதைவிட இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பது முக்கியம் என அவன் வரமறுத்தான். பொறுப்பில்லாதவன் என அவன் நண்பன் திட்டுவதைக்கூட பொருட்படுத்தாமல் தியேட்டருக்குள் நுழைந்தான்.

1990களின் இறுதிப்பகுதி.

தன்னைத் தீவிரமாகக் காதலிக்கும் அந்தப்பெண்ணைச் சந்திக்க வந்தான் அந்தக்கல்லூரி இளைஞன். தனக்கு சினிமாவின் மீது ஆர்வம் இருப்பதாகவும், ஒரு படம் இயக்கி அது வெளியான பிறகு தான் திருமணத்தைப் பற்றியே யோசிக்க முடியும் என்றும் அந்தப்பெண்ணிடம் சொன்னான். தற்போதுதான் உதவி இயக்குனராக ஒருவரிடம் சேர்ந்திருப்பதால் தனியாகப் படம் இயக்குவதற்குக் குறைந்தபட்சம் 10 வருடங்களாவது ஆகும், அவ்வளவு நாள் உன்னைக் காத்திருக்கச் சொல்வதில் நியாயமே இல்லை என்பதால் வேறு யாரையாவது திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இரு என்றும் வாழ்த்தினான். ஆனால் அவனைப் பற்றி நன்கு அறிந்த அந்தப்பெண், அவன் மேலுள்ள காதலால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்திருக்கத் தயார் என்றாள்.

ஆண்டுகள் உருண்டோட, தற்போது 2000களின் பிற்பகுதி.

சொன்னது போலவே உதவி இயக்குனராக வேலை பார்க்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 வருடங்களுப் பிறகு தான் அவரின் முதல் படம் வெளியானது. அந்த ஆண்டு பல முக்கியமான படங்கள் பெரிய இயக்குனர்களிடமிருந்து வந்திருந்தது. அவர்களுடன் அறிமுக இயக்குனராக இவரின் படமும் வந்திருந்தது. ஒரு பிரபல தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில், அந்தப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அந்த விருதை வழங்குவதற்காக தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவர் வரவழைக்கப்பட்டார். அவர் நமது அறிமுக இயக்குனரின் ஆசான் என்பது கூடுதல் தகவல்.

நமது அறிமுக இயக்குனரோ விருது கிடைக்கும் என்ற எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் விருது விழாவில் அமர்ந்திருக்க, எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அவருக்கே அந்த விருது கிடைக்கிறது. தன் ஆசானின் பாதம் பணிந்து அவரிடமிருந்து அந்த விருதைப் பெற்றுக்கொண்டவரிடம், “கடுமையான போட்டிக்கு மத்தியில் இந்த விருதைப் பெற்றிருக்கிறீர்கள், இந்தப்படத்தைப் பற்றிய உங்கள் கணிப்பு வெற்றியடைந்ததா ? நீங்கள் நினைத்தது போல நடந்ததா ?” என்று விழாக்குழு கேள்வி கேட்க, அவர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“எல்லாமே அதுக்கு மேல தான் நடந்திருக்குது. ஆக்சுவலா படம் பண்ணிட்டு கடைசியா காப்பி பாத்தப்போ நாங்க எல்லாருமே என்ன நினைச்சோம்னா, ஒரு மினிமம் கேரண்ட்டி படம் பண்ணியிருக்கோம். ஒரு மூணு வாரம் ஓடும். எல்லாருமே பாதுகாப்பாகிடுவோம். எல்லாருக்குமே ஒரு நல்ல பேரு கிடைக்கும் அப்டினு தான் நினைச்சேன். இந்தப்படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதுல எனக்கு மகிழ்ச்சி. ஓக்கே, பரிந்துரை பண்ணிருக்காங்க அப்டினு தான் இருந்தது. ஆனா சிறந்த இயக்குனர் விருது அப்டினும் போது, ரொம்ப தயக்கத்தோடும், கூச்சத்தோடும் தான் இதை வாங்கிக்கனும்னு நான் நினைக்கறேன். ஏன்னா, எங்க படத்தோட லிமிட்டேஷன் என்னன்னு எனக்குத் தெரியும், என்னோட லிமிட்டேஷன், இந்தப்படத்துல என்னன்றதும் எனக்குத் தெரியும். இத விட நல்ல படத்தை, இதவிட நல்லா கொடுத்தவங்க இருக்கறதா தனிப்பட்ட முறையில எனக்கு தோணுச்சு. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. ஆனா, இந்த இடத்துல நான் இப்போ நிக்கிறது, ஒருவேளை எதிர்காலத்துல, கொஞ்சம் நம்பிக்கையோட இதுமாதிரி ஒரு விருது வந்து வாங்குறதுக்கு உதவி பண்ணும்னு நான் நினைக்கறேன்.”

விருது வாங்குகிற ஒவ்வொருவரும் பண்ணுகிற அலப்பறையைப் பார்த்து சோர்ந்துபோயிருந்த தமிழ்சினிமா ரசிகர்களுக்கு அன்றைய தினம் அவருடைய பேச்சு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் படங்களுள் ஒன்றாகத் தன்னுடைய படம் இருந்தும், ‘தான் யார், தன்னுடைய படைப்பு என்ன, அதன் தகுதி என்ன’ என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, கொஞ்சம் கூட கர்வமே இல்லாமல் மிகுந்த பணிவடக்கத்துடன் அவர் பேசிய அந்தப் பண்பு தான் அவரின் இரண்டாவது படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வாங்கச்செய்தது என்றால் அதில் மிகையில்லை.

ஆம். அந்த இயக்குனர் வேறு யாருமல்ல, திரு. வெற்றிமாறன் அவர்கள் தான். விஜய் தொலைக்காட்சியின் 2007ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் பொல்லாதவன் படத்துக்காக சிறந்த இயக்குனர் விருதைப் பெற்றுக்கொண்ட போது அவர் பேசிய பேச்சு தான் மேலே நீங்கள் படித்தது. அந்த விருதோடு சேர்த்து மொத்தம் 4 விருதுகள் அந்தப்படத்துக்குக் கிடைத்தன.

8 ஆண்டுகளில் இதுவரை இயக்கி வெளியான படங்களின் எண்ணிக்கை மொத்தம் இரண்டு. அதில் ஆடுகளம் படத்துக்கு சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை உட்பட மொத்தம் ஆறு தேசிய விருதுகள் மற்றும் சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது, சிறந்த இயக்குனருக்கான சைமா (SIIMA) விருது, சிறந்த இயக்குனருக்கான விஜய்டிவி விருது உட்பட பல விருதுகளை அள்ளிக்குவித்துவிட்டார். தற்போது மூன்றாவதாக “விசாரணை” என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப்படம் திரையரங்குகளில் வெளிவருவதற்காகக் காத்திருக்கும் போதே விருது வாங்கிவிட்டது. 72வது வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்குத் தேர்வான முதல் தமிழ் படமாக ‘விசாரணை’ அமைந்தது மட்டுமல்லாமல், Amnesty International Italy “Cinema for Human Rights” என்ற விருதையும் வென்றிருக்கிறது. அங்கே விருது வாங்குகிற முதல் இந்தியப்படமாம். ஒரு தமிழனாகப் பெருமைப்பட வேண்டிய நேரம் இது.



பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் இரண்டுமே விருதுகளை மட்டுமல்ல, வசூலையும் வாரிக்குவித்தன என்பது தான் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம். வணிக சினிமாவுக்கான களத்தில், தான் நினைத்த எதார்த்த சினிமாவைப் புகுத்தி வெற்றி பெற்ற வெகுசிலரில் வெற்றிமாறனும் ஒருவர். தான் எடுக்கும் படம் நேர்த்தியாகவும், எதார்த்தமாகவும் அதே சமயம் ரசிகர்களுக்குப் பிடித்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அவரது குறிக்கோளாக இருந்துகொண்டிருக்கிறது.

அவரின் படங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், அவரின் கடந்தகால வாழ்க்கையைச் சற்றே புரட்டிப் பார்த்தால் அதுவும் அவரின் படங்களைப் போலவே அவ்வளவு சுவாரசியமானதாய் இருக்கிறது. வெற்றிமாறனுக்கு சிறு வயதில் அவ்வளவாகப் படிப்பில் நாட்டமில்லை. 13 வயதிலிருந்தே சிகரெட் பழக்கம் வேறு. அவர் குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் மிக நன்றாகப் படித்து நல்ல நிலையில் உள்ளவர்கள் என்பதால் குறைந்தபட்சம் ஒரு எஞ்சினியராவது ஆகிவிடு என்பதே அவரின் அப்பாவின் வேண்டுகோளாக இருந்தது. நாளாக நாளாக அதுவே வெற்றிமாறனுக்கு வெறுப்பாகி அது படிப்பிலும் எதிரொலிக்க, பத்தாம் வகுப்புத் தேர்வை பார்டரில் பாஸ் செய்ய வேண்டிய நிலைமை.

மகனை எப்படியாவது ஒரு எஞ்சினியராக்கிப் பார்க்க வேண்டும் என்று விரும்பிய அந்தத் தந்தை, மனம் தளராமல் எங்கெங்கோ அலைந்து திரிந்து வெற்றிமாறனை கணிதப்பாடம் உள்ள க்ரூப்பில் சேர்த்துவிட்டார். ஆனால் அது எந்த வகையிலும் வெற்றிமாறனை படிப்பை நோக்கி உந்தித் தள்ளுவதற்கு உதவவில்லை. மாறாகப் பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டுவிட்டு தியேட்டருக்குச் சென்று படங்கள் பார்ப்பதற்கு மட்டுமே உதவியது. அந்த வருடம் முழுவதும் மொத்தமாக 18 நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றதால், பள்ளியில் பரீட்சை எழுத அனுமதிக்கவில்லை. இதை எப்படி வீட்டில் சொல்லுவது என்று பயந்துபோன வெற்றிமாறன், அம்மாவிடமிருந்து கொஞ்சம் பணத்தைத் திருடிக்கொண்டு, லட்சாதிபதி ஆனபிறகு தான் வீட்டிற்குத் திரும்புவது என்று உறுதிகொண்டு வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.

ஆனால் அந்த லட்சியத்திற்கு ஆயுள் இரண்டே நாட்கள் தான். திருடிய பணம் இரண்டு நாட்களில் செலவாகிவிட திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் அந்த சம்பவம் அவரின் பெற்றோர்களிடம் சில மாறுதல்களை ஏற்படுத்தியது. அவர்களின் கனவுகளை மகனிடம் திணிப்பதில் உள்ள சிக்கல்களை உணர்ந்தனர். திரும்பி வந்த மகனிடம், உனக்கு வேறு என்னதான் ஆகவேண்டுமென ஆசை என்று பொறுமையாகக் கேட்டார் தந்தை. கிரிக்கெட்டர் ஆகவேண்டும் என்பது தான் என் ஆசை என அப்போதைக்கு சமாளித்தார் வெற்றிமாறன். அதனாலேயே விளையாட்டிற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் சேர்த்துவிடப்பட்டார். ஆனால் அங்கே கிரிக்கெட் அணியே இல்லை என்பது அங்கே சேர்ந்தபிறகு தான் தெரிய வந்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட கிரிக்கெட் அணியும் மோசமாக இருக்க, அதில் ஒரு ஆளாகச் சேர்ந்துகொண்ட வெற்றிமாறன் படிப்பில் நாட்டமே இல்லாமல் இருந்தார். ராணிப்பேட்டை என்கிற சிறுநகரத்திலிருந்து சென்னை போன்ற பெருநகரத்திற்கு மாறிய பிரமிப்பால் நன்றாக ஊர் சுற்றக்கற்றுக்கொண்டார். இப்படியே ஊர்சுற்றிக்கொண்டிருந்ததால் 16 வயதுக்குட்பட்ட மாநில கிரிக்கெட் அணித்தேர்வு வந்தபோது அதில் தேர்வாகவில்லை. நிராகரிக்கப்பட்டதால் வந்த வெறுப்பு, குழப்பங்களுடன் இருந்த வெற்றிமாறனுக்கு ஒரு விடயம் மட்டும் நன்றாக உறைத்தது.

கிரிக்கெட் தன்னுடைய வாழ்க்கையில் பொழுதுபோக்காக மட்டுமே இருக்க முடியும், தொழிலாக முடியாது என்பதை உணர்ந்துகொண்டார். தான் நினைத்த மாதிரி கிரிக்கெட் தன்னால் விளையாடமுடியவில்லையே, ஆனால் எதற்காக தந்தையிடம் கிரிக்கெட்டராக வேண்டுமென சொன்னோம் என யோசித்தார். தந்தையினுடைய வற்புறுத்தலில் இருந்து சமாளிப்பதற்காக, தனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, தன்னால் கிரிக்கெட்டில் எந்தளவிற்கு ஜொலிக்க முடியும் என்பதை யோசிக்காமல் அப்படி சொல்லியிருப்பதை உணர்ந்தார்.

கிரிக்கெட்டராகும் முயற்சியும் தோல்வியடைந்ததால் வெற்றிமாறனது ஆர்வம் வக்கீலாவதில் திரும்பியது. குடும்பத்தில் முக்கால்வாசிப்பேர் வக்கீல்களாக இருந்தது அதற்கு முக்கியக்காரணம். அதையும் வெளிநாட்டில் ஏதாவதொரு பெரிய பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், அதற்கு முன்னர் ஆங்கில இலக்கியம் படிப்பது வக்கீலாவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று சென்னை லயோலாவில் ஆங்கில இலக்கியம் படிக்கச் சேர்ந்தார்.

அங்கே சேர்ந்த மூன்றே மாதங்களில் அவரது வக்கீலாகும் ஆசையும் முற்றிலும் வடிந்துபோனது. முழுக்க முழுக்க இலக்கியத்தில் மூழ்கினார். சரி இவ்வளவு ஆர்வம் இருக்கிறதே ஒருவேளை இலக்கியப் பேராசிரியராக வாய்ப்பிருக்கிறதோ என்று அந்த ஆசையைத் தன் பெற்றோரிடம் சொன்னார். மகனின் வெவ்வேறு காலகட்ட ஆசைகளைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன அவர்கள், வாழ்க்கையில் ஏதாவதொரு விஷயத்தில் என்னமாகவாவது வந்தால் சரிதான் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

லயோலாவில் படிக்கும்போது விசுவல் கம்யூனிகேஷனில் ஆறு மாதப்பயிற்சி ஒன்றில் சேர்ந்தார். அந்தப்பயிற்சியின் முடிவில் ஒரு ஆவணப்படமோ அல்லது குறும்படமோ சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக வெற்றிமாறன், டென்னிஸ் விளையாட்டில் பந்து பொறுக்கிப் போடும் சிறுவர்களைப் பற்றி ‘லாடம்’ என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் எடுத்தார். அந்தப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது தான், இலக்கியம் உட்பட வேறெந்த ஆசைகளை விடவும் சினிமாவின் மீதான ஆர்வம் அதிகமாக இருப்பதை உணர்ந்தார். தன் வாழ்க்கையில் சிறுவயதிலிருந்தே சினிமா மீது ஒரு ஆர்வம் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதற்கான சரியான சந்தர்ப்பம் அதுவரை அமையாததே அதைக்கண்டுகொள்ளாததற்குக் காரணம் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார். முதல் பத்தியில் சொன்னதுபோல, கிரிக்கெட் பையைத் தேடுவதை விட திரைப்படம் பார்ப்பது அவருக்கு முக்கியமானதாய் இருந்திருக்கிறது. பள்ளிக்காலத்திலிருந்து அவரை அறியாமலே சினிமா மீதான ஆர்வம் உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்ததை உணர்ந்தார்.

சினிமாதான் தனது வாழ்க்கை என்பதை முடிவு செய்துகொண்டு அதைப்பற்றிய தேடலைத் தொடர்ந்தார். நூலகங்களுக்குச் சென்று நிறையப் படிக்க ஆரம்பித்தார். திரைக்கதை எழுதுவது, அதைப்பற்றி நண்பர்களுடன் விவாதிப்பது என தொடர்ந்துகொண்டிருந்த சமயத்தில் அதே கல்லூரியில் மேற்படிப்பிற்கும் விண்ணப்பித்தார். அந்தக் காலகட்டத்தில் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் லயோலா கல்லூரிக்கு அவ்வப்போது வந்து சினிமா சம்பந்தமாக கருத்தரங்கு நடத்துவது வழக்கமாக இருந்தது. அப்படி இரண்டு நாட்கள் நடந்த ஒரு கருத்தரங்கில் வெற்றிமாறனும் கலந்துகொண்டார். அதில், சினிமாவை மிக எளிமைப்படுத்தி எல்லோருக்கும் புரிகிற வகையில் பாலுமகேந்திரா பேசிய பேச்சைக் கேட்ட வெற்றிமாறன், சினிமாவைக் கற்றுக்கொள்வதென்றால் அது இவரிடம் தான் என முடிவெடுத்தார்.

தனது கல்லூரிப் பேராசிரியர் ராஜநாயகம் என்பவரது உதவியால் பாலுமகேந்திராவிடம் அறிமுகம் பெற்று அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய திறமையால் அவரிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். அந்தச்சமயத்தில் தான் ஆர்த்தி என்ற பெண்ணின் மீது காதலிலும் விழுந்தார். காதல் ஒருபக்கம், மேற்படிப்பு ஒருபக்கம், பாலுமகேந்திரா பட்டறையில் கதை விவாதம் ஒருபக்கம் என சென்ற சமயத்தில், பாலுமகேந்திரா அவர்கள் ‘கதை நேரம்’ என்ற தொலைக்காட்சித் தொடர் எடுக்கத் தீர்மானித்தார். அதே சமயம் அவருக்கு கல்லூரியில் முழுப்பரீட்சைகள் நடக்க இருந்தது. பரீட்சையா, உதவி இயக்குனர் வேலையா எனத் தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலை. கல்லூரி முதல்வர் வெற்றிமாறனைக் கூப்பிட்டு, ‘ஒருவேளை சினிமாவில் காலூன்ற முடியாமல் போய்விட்டால் இந்தப்படிப்பு உனக்குக் கைகொடுக்கும், அதனால் பரீட்சை எழுது’ என்று அறிவுரை சொன்னார். ஆனால் அந்தக்கணமே கொஞ்சம் கூட யோசிக்காமல், பாலுமகேந்திராவுடன் கதை நேரத்தில் வேலை செய்வது என்று முடிவெடுத்தார்.

தான் என்னவாக ஆவது என்பதைப்பற்றி ஒரு முடிவெடுத்த பின், பரீட்சை எழுதிக் கிடைக்கும் கல்லூரிப்பட்டம் தனக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை என அவர் தீர்மானித்ததே காரணம். சொல்லப்போனால் அந்தக்கல்லூரியிலிருந்து, அவருடைய பள்ளிச்சான்றிதழ்களைக் கூட இன்னும் திரும்பப்பெறவில்லையாம். அதே நேரத்தில் தான், கட்டுரையின் இரண்டாவது பத்தியில் சொன்ன சம்பவம் நடந்தது. தன்னுடைய சினிமா ஆசைக்காகக் காதலைக்கூட துறப்பதற்குத் தயாராக இருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆர்த்தி-வெற்றிமாறன் ஜோடியின் காதல், பொல்லாதவன் படத்தயாரிப்பின்போது திருமணத்தில் முடிந்தது.

கதை நேரம் தொடரிலும் (வாரம் ஒரு குறும்படம் என மொத்தம் 52 வாரங்கள் தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பானது) மற்றும் ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம் என்ற இரண்டு படங்களிலும் பாலுமகேந்திரா அவர்களிடம் வெற்றிமாறன் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். இடையில் இயக்குனர் கதிர் அவர்களிடம் ‘காதல் வைரஸ்’ என்ற படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார்.

தனியாகப் படம் பண்ண வேண்டும் என முடிவெடுத்து 2004ம் ஆண்டுவாக்கில் ‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற தலைப்பில் ஒரு திரைக்கதையை தனுஷிற்காக எழுதினார். ஆனால் சிலபல காரணங்களால் அந்தப்படம் ஓரிரு நாட்கள் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. (இதே கதை வெற்றிமாறனின் உதவியாளரான மணிமாறன் இயக்கத்தில் உதயம் NH4 என்ற பெயரில் 2013ல் வெளிவந்தது) பிறகு தான் பொல்லாதவன் படத்தை ஆரம்பித்தார். அந்தப்படமும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டது. ஒருவழியாக அனைத்துப் பிரச்சனைகளும் முடிந்து 2007ல் பொல்லாதவன் படம் வெளிவந்ததும், அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களுள் ஒன்றாக ஆனதும் மக்கள் கண்ட வரலாறு. அந்தப்படத்திற்காக பல விருதுகளை வாங்கிய அதே சமயத்தில் ‘இது பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் காப்பி/இன்ஸ்பிரேஷன்’ என சில ரசிகர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற்றார்.

காப்பி/இன்ஸ்பிரேஷன் என்கிற விடயம் பெரும்பாலான தமிழ் இயக்குனர்கள் மீது காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு விமர்சனம் தான். ஆனால் அதை எதிர்கொள்வதில் வெற்றிமாறனுக்கு இருக்கும் நேர்மையைப் போல வேறு எவரிடமும் கண்டதில்லை. பொல்லாதவன் படம் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் இன்ஸ்பிரேஷனா என்கிற கேள்விக்கு வெற்றிமாறன் சொல்லும் பதில் இதோ,

“என்னோட நண்பர் ஆண்ட்ரூ-னு ஒருத்தர் என்னோடு சேர்ந்து கதிர்-கிட்ட உதவி இயக்குனரா வேலை பார்த்துக்கிட்டிருந்தார். அப்போ அவர் பயன்படுத்திட்டு இருந்த கைனடிக் சேலஞ்சர் பைக் தொலைஞ்சு போச்சு. அவர் எண்ணூரைச் சேர்ந்தவர். தொலைஞ்சு போன அந்த பைக்கை அவருடைய நண்பர்கள் சிலபேரு மூலமா அவரே தேடிப்போனார். அந்த அனுபவங்களை எல்லாம் ஒவ்வொரு நாளும் வந்து என்கிட்ட சொல்லிட்டு இருப்பார். என்னென்ன ஆச்சுனு நிறைய சம்பவங்கள் சொல்லிட்டே இருப்பார். எனக்கு பயங்கர எக்ஸைட்டிங்கா இருந்துச்சு. இது ரொம்ப சுவாரசியமா இருக்கே, இதை ஒரு கதையா பண்ணா நல்லாயிருக்குமேனு எனக்குத் தோணுச்சு. இந்தக்கதையை எழுத ஆரம்பிக்கும்போதே இது பைசைக்கிள் தீவ்ஸ் ஓட காப்பினு எல்லாரும் சொல்லுவாங்கனு தெரியும். பைசைக்கிள் தீவ்ஸ்லருந்து சுட்டுட்டான் இவன், அல்லது கண்ணியமா சொல்லனும்னா இன்ஸ்பிரேஷன்னு சொல்லுவாங்க அப்டினு எங்களுக்குத் தெரியும். ஆனால் அதை எப்டி எதிர்கொள்றதுனும் எங்களுக்குத் தெரியும். முதல்லருந்தே திரும்பித் திரும்பி நான் அதையே தான் சொல்லிட்டு இருக்கறேன். பொல்லாதவனை பைசைக்கிள் தீவ்ஸ் கூட ஒப்பிடறது பைசைக்கிள் தீவ்ஸ்-க்கு அவமானம். பைசைக்கிள் தீவ்ஸை சரியா தெரிஞ்சவங்க கண்டிப்பா பொல்லாதவனை அந்தப்படத்தோட ஒப்பிட மாட்டாங்க. பொல்லாதவன் ஒரு சாதாரண வணிக சினிமா. அதாவது எப்படியாச்சும் படம் பண்ணனும்னு துடிச்சிட்டு இருக்கற ஒரு உதவி இயக்குனர் தப்பிக்கறதுக்காக பண்ற படம் தான் பொல்லாதவன். அதே சமயம் பைசைக்கிள் தீவ்ஸ் படம் வந்து ஒரு க்ளாஸிக். இன்னும் 100 வருஷம் ஆனாலும் சரி, 200 வருஷம் ஆனாலும் சரி, மனித இனம் சினிமாவைப் பத்திரப்படுத்திப் பாத்துட்டுருக்கற வரைக்கும் அந்தப்படம் வந்து ஒரு டெக்ஸ்ட்டா இருக்கும். அதனால் இதையும் அதையும் கம்பேர் பண்றதே தப்பு.”



தன்னுடைய படத்தைக் காப்பி என்று விமர்சிக்கிறவர்களிடம் இவ்வளவு தெளிவான ஒரு பதிலை வெற்றிமாறனைத் தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது. அதிலும் தன் படத்தைக் கீழ்ப்படுத்தி அதை மற்றொரு க்ளாஸிக் படத்துடன் ஒப்பிடுவதே தவறு என்று சொல்லுவது அவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது. இம்மாதிரி பொல்லாதவன் படத்துக்காக விமர்சகர்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லியே களைத்துப்போன வெற்றிமாறன், ஆடுகளம் படத்தின் க்ரெடிட்ஸில் எந்தெந்தப் படத்திலிருந்தெல்லாம் தான் இன்ஸ்பிரேஷன் ஆனேன் என்கிற பட்டியலையே வெளியிட்டுவிட்டார்.

பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த பிறகும் கூட அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அதே போல ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது கூட அவரை எந்தளவுக்கும் பாதிக்கவில்லை. விருது என்பது அந்த விருதுக்குழுவிலிருக்கும் ஜூரிகளின் விருப்பு வெறுப்பு மற்றும் அந்த ஆண்டில் வெளியான மற்ற போட்டிப்படங்கள் போன்ற விடயங்களைச் சார்ந்தது மட்டுமே என்பதை உறுதியாக நம்புகிறார். மற்றபடி விருதுக்காக படம் எடுப்பது என்பதையே முற்றிலுமாக மறுக்கிறார்.

தன்னுடைய படங்கள் எதார்த்தமாகவும், அதே சமயம் வணிக ரீதியான அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதே அவர் ஆசை. ஒருவகையில் அவர் சொல்லுவதும் உண்மைதான். பொல்லாதவன், ஆடுகளம் இரண்டுமே முழுக்க முழுக்க வணிக சமரசங்களுக்குட்பட்டு எடுக்கப்பட்ட சாதாரண படங்கள் தான். ஆனால் மிக நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாக, எதார்த்தத்திற்கு மிக அருகில் எடுக்கப்பட்ட விதமே அப்படங்கள் ரசிகர்களிடம் வெற்றியையும், விருதுக்குழுவினரிடம் விருதுகளையும் அள்ளியதற்குக் காரணம்.

பொல்லாதவன் படத்தில் வடசென்னையின் நிழல் உலகத்தைக் கண்முன் நிறுத்தியவர், ஆடுகளம் படத்தில் மதுரை சேவற்சண்டையை ஆவணமாக்கிவிட்டார். இரண்டு படங்களிலுமே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விடயம் ஒலியமைப்பு. தமிழ் சினிமாவில் ஒலியமைப்பை மிகத் தத்ரூபமாகப் பயன்படுத்தக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். ஒவ்வொரு காட்சியையும் நாமே நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு மிக நேர்த்தியான ஒலிப்பதிவை அளித்திருப்பார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஆடுகளம் படத்தின் இடைவேளைக்கு முந்தைய அயூப் நினைவுக்கோப்பை சேவற்சண்டைப் போட்டியைச் சொல்லலாம். அதில் பிண்ணனியில் வரும் ஒவ்வொரு ஒலியும் படத்தை நிஜமாக்கும்.

ஆடுகளம் படத்தின் சிறப்புகளைச் சொல்லத் தனிக்கட்டுரையே எழுத வேண்டும். கதாபாத்திர வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வதற்கு ஆடுகளம் படம் ஒரு பாடம். அந்தளவுக்கு சின்னச் சின்னதாக நிறைய விவரங்களுக்கு மெனக்கெட்டிருப்பார். ஆடுகளம் கதை உண்மையிலேயே மதுரையின் வீதிகளில் நடந்துகொண்டிருப்பதாகவும், அதை மறைந்திருந்து வெற்றிமாறன் படம்பிடித்துக் காட்டுவதாகவும் தோணுமளவுக்கு அவ்வளவு துல்லியமான கதாபாத்திர உருவாக்கத்தைக் காணலாம். திரையில் சில நொடிகளே தோன்றும் கதாபாத்திரங்களுக்குக் கூட மிகப்பெரிய பின்புலத்தை அமைத்திருப்பார். பேட்டைக்காரனின் மனைவி, நிக்கோலஸ், ஐரீனை ஒருதலையாகக் காதலிக்கும் தினேஷ், கருப்புவின் நண்பன் ஊளை, ஊளையின் காதலி நாகவள்ளி, ரத்னசாமியின் தாயார், அயூப், ஐரீனின் பாட்டி, அரமண்டையன், அயூப் நினைவுப் போட்டியை நடத்தும் ஆள் என சின்னச் சின்னக் கதாபாத்திரங்களுக்குக் கூட பெரிதாக மெனக்கெட்டிருப்பார்.

அதிலும் நாகவள்ளி கதாபாத்திரம் திரையில் நமக்குக் காண்பிக்கப்படவே மாட்டாது. வசனம் கூட கிடையாது. மற்ற கதாபாத்திரங்கள் நாகவள்ளியைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்கள் மட்டும் தான். இருந்தாலும் நாகவள்ளி கதாபாத்திரமும் படம் முடியும் போது நம் நினைவில் தங்கிவிடும். ‘ஒத்த சொல்லால’ பாட்டில் கருப்புவும், ஊளையும் கூட்டத்தோடு சேர்ந்து ஆடிப்பாடிக்கொண்டே வருவர். அப்போது பிண்ணனியில் யாரோ ஒரு பெண் ‘நாகவள்ளியக்கா, இங்க பாரேன்’ என்று சொல்ல, அதைக்கேட்டு ஊளை வெக்கப்பட்டுக்கொண்டே ஒதுங்கிவிடுவான். படம் போகும் வேகத்தில் நாம் இதையெல்லாம் கவனிப்போமா இல்லையா என்பதே சந்தேகம் தான். ஆனால் வெற்றிமாறன் அவ்வளவு தூரம் மெனக்கெட்டிருப்பார்.

சென்னைக்காரரான வெற்றிமாறன் மதுரை பாஷையை இவ்வளவு துல்லியமாகக் காட்டியது மற்றொரு ஆச்சரியம். காதலியை டைவா என்றழைப்பது முதற்கொண்டு அட்சர சுத்தமான மதுரை பாஷை. மற்றொரு குறிப்பிடப்பட வேண்டிய ஆச்சரியம் இசை. அதிலும் மதுரை லோக்கலில் நடக்கிற ஒரு கதையின் இடையில் ‘வாழ்க்கை ஒரு போர்க்களம்’ என ராப் பாடலை ஒலிக்க விடும் தைரியமெல்லாம் வெற்றிமாறனுக்கே சாத்தியம். அதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம், அந்தப்பாடல் படத்தின் ஓட்டத்தை எந்தவிதத்திலும் பாதிக்காமல், படத்தின் அப்போதைய உணர்வை அப்படியே பிரதிபலித்து நம்மையும் உணரவைப்பது தான்.

ஆடுகளம் படத்தில் சொல்லப்படாத உணர்வுகளே கிடையாது எனலாம். பொறாமை, அதிலும் ஒரு குரு தன்னுடைய சிஷ்யன் மீது கொள்ளும் பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக வஞ்சமாக மாறிப் பழிவாங்கும் வரை, ரசிகர்களையும் உணரவைத்திருப்பார். உணர்வுகள் கதாபாத்திரங்களாக மாறி நடமாடும் அதிசயத்தை இந்தப்படத்தில் மட்டுமே பார்க்கலாம். உதாரணத்திற்கு, பேட்டைக்காரனுக்கும் அவரது சிஷ்யர்களில் ஒருவரான துரைக்கும் சின்ன மனக்கசப்பு ஏற்படுகிறது. இருவரும் மனதுக்குள் பொருமிக்கொள்கின்றனர். இந்த நிலையில் துரை பேட்டைக்காரனை சந்திக்க அவர் வீட்டுக்கு வருகிறார். மிகக் குறைவான வசனங்களுடன் வரும் இந்தக்காட்சி ஒரு அற்புதம்.

அதே போல மற்றொரு காட்சி. அயூப் இறந்தபிறகு அவரின் பெயரில் சேவல் பந்தயம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு பேட்டைக்காரன் போலிஸ் ஸ்டேஷன் செல்லுவார். அப்போது, ‘பெர்மிஷன்லாம் கொடுக்க முடியாது’ என அதிகார தோரணையுடன் ரத்தினசாமி பதில் சொல்லுவார். ‘போட்டி நடத்தி காசு சம்பாதிக்க ப்ளான் போட்றியா’ என்று பேட்டைக்காரனை அவமானப்படுத்துவார். ஆத்திரத்தில் சத்தம் போட்டு அப்படியே மேசையில் ஓங்கி அடித்து எழுந்து நிற்பார் பேட்டைக்காரன். பார்க்கிற நமக்கு மனசு பதற, இப்போது கேமரா அந்த அறைக்கு வெளியே காண்பிக்கும். ஒரு போலிஸ்காரர் பேட்டைக்காரனும், ரத்தினசாமியும் பேசிக்கொண்டிருக்கும் அறைக்குச் செல்லுவதும், பிறகு சிறிது நேரத்தில் கையைத் தேய்த்துக்கொண்டே வெளிவருவதும் காண்பித்த பிறகு, மெதுவாக கேமரா அந்த அறைக்குள் செல்லும். உள்ளே நாற்காலிகள் கலைந்திருப்பதும், அதைத் தொடர்ந்து பேட்டைக்காரன் கீழே விழுந்திருக்கும் தனது துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு தடுமாறியபடியே எழுந்து நிற்பதையும் காண்பிக்கும். வசனமே இல்லாமல் வரும் இந்த ஒரு காட்சி போதும் ஆடுகளம் படம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படம் என கட்டியம் கூறுவதற்கு.



மற்றொரு காட்சியில் கருப்புவும், துரையும் ஒரு சின்ன ஈகோவினால் சேவற்சண்டை விடவேண்டுமென போட்டி போடுவார்கள். திடீரென்று கருப்புவின் அம்மா இறந்துபோனதால் அந்தப்போட்டி நின்றுவிடும். அந்த மோதலை மனதில் வைத்துக்கொள்ளாமல், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள, துரை ஒரு பெரிய மாலையோடு வருவார். அது பிடிக்காமல், கருப்புவும் துரையும் அடித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், ‘சாவு வீட்டில் எப்படி தோரணையோடு வர்றான் பாத்தியா’ என்று வேண்டுமென்றே பேட்டைக்காரன் அருகில் இருப்பவனிடம் சொல்லுவார். பிறகு துரையிடம் பேசும்போது அவரது ஈகோவை மெள்ள மெள்ளத் தூண்டி விடுவார். ‘சப்போஸ் இந்தப்போட்டி நடந்து, சப்போஸ் நீ தோத்திருந்தா அசிங்கம்தான?’ என்று சொல்லியபடி துரையின் நெஞ்சில் தன் சுட்டுவிரலால் லேசாகக் குத்துவார். ஒரு மனிதனின் ஈகோவைத் தூண்டிவிட இதைவிட வேறென்ன வேண்டும். அந்தவிரலைப் பார்த்தபடியே, அதுவரை கனிவான மனநிலையில் இருந்த துரை இப்போது கருப்புவுக்கு எதிராகச் சீற ஆரம்பிப்பார்.

இறுதிக்காட்சி. தன்னுடைய சிஷ்யனுக்கு எதிராக பச்சைத் துரோகத்தைச் செய்துவிட்டு, கையும் களவுமாகப் பிடிபட்டுக் கலங்கிப் போயிருக்கும் பேட்டைக்காரனிடம் கருப்பு, ‘எனக்கு அப்பன் இல்லனு கூட கவலப்பட்டதில்ல. உன்னதாண்ணே..’ என்று முடிப்பதற்குள் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொள்வார். இந்தக்காட்சியில் பேட்டைக்காரன் எதுவும் பேசாமல் தற்கொலை செய்துகொண்டது போல காண்பித்தது இந்தக்காட்சியின் பன்முகத்தன்மையைக் காண்பிக்கிறது. அதாவது, உண்மையிலேயே குற்ற உணர்ச்சி மேலிட்டு அதனைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டாரா ? அல்லது, வஞ்சம் இன்னும் உச்சமடைந்து தான் செத்தபிறகும் கூட கருப்பு துரையிடமும், போலிஸிடமும் மாட்டிக்கொண்டு கஷ்டப்பட வேண்டும் என்ற நினைப்பில் தற்கொலை செய்துகொண்டாரா ? ஆனால் முதல் காரணம் தான் இங்கே சரியானது. இருந்தாலும் வசனமின்றி அமைத்த அந்தக்காட்சி பன்முகத்தன்மையுடன் அமைந்தது சிறப்பு.

இப்படி ஒரு வணிக சினிமாவில் மிக நேர்த்தியாகக் கலையம்சங்களைப் புகுத்துவதற்கு இலக்கியப் பரிச்சயம் மிக முக்கியக் காரணம் என்பதை உறுதியாகச் சொல்லலாம். வெற்றிமாறன் இலக்கிய வாசிப்பு அதிகம் உள்ளவர். ஜியாங் ரோங் எழுதிய Wolf Totem, அலெக்ஸ் ஹேலி எழுதிய Roots: The Saga of an American Family, மரியோ வர்கஸ் யோஸா எழுதிய The Feast of the Goat போன்ற புத்தகங்கள் அவரது வாழ்க்கையை வடிவமைத்தவையாகக் குறிப்பிடுகிறார். அதிலும் Wolf Totem நாவலைப் படித்து அதனைத் தமிழர்கள் அனைவரும் படித்தே ஆகவேண்டுமென, தமிழில் மொழிபெயர்ப்பதற்காகவே ‘அதிர்வு’ என்ற பதிப்பகத்தை ஆரம்பித்தார் என்றால் இலக்கியத்தின் மீது எந்தளவு ஆர்வமுள்ளவர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். சி.மோகன் மொழிபெயர்க்க அந்த நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’ என்ற பெயரில் வெளியானது. அதேபோல ஆடுகளம் படத்தின் சேவற்சண்டைக்கான இன்ஸ்பிரேஷன் Roots நாவலில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். அமரோஸ் பெரோஸ் படத்தின் நாய்ச்சண்டை மூலமாக அச்சமூகத்தின் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். அது தான் நம் மண்ணின் அடையாளத்தை சேவற்சண்டை வழியாகச் சொல்லும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது என்றும் கூறுகிறார்.

தற்போது ‘விசாரணை’ படத்தை ‘லாக்கப்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுத்திருக்கிறார். திரைப்பட விழாவில் படம் பார்த்த அனைவரும் மிரண்டு போயிருக்கின்றனர். ப்ரீவியூ பார்த்த தமிழ் இயக்குனர்கள் அனைவரும் சேர்ந்து, தமிழ் சினிமாவைப் பெருமைப்பட வைத்துவிட்டாய் என உணர்ச்சிவசப்பட்டு ஒரு பாராட்டுவிழாவே நடத்தியிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் இன்னும் வெற்றிமாறன் தன்னை ஒரு முழுமையான இயக்குனராகக் கருதவில்லை. ஒரு நல்ல படத்தை எடுத்து முழு இயக்குனர் ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறேன். அதற்கான பயணத்தில் இருப்பதாகவே உணர்கிறேன் என்கிறார். இந்தப் பணிவு இருக்கும் வரை வெற்றிமாறனிடமிருந்து மிகச்சிறந்த படைப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்.

அப்படிப்பட்ட மிகச்சிறந்த படங்கள் இன்னும் பலவற்றைக் கொடுத்துத் தமிழ் சினிமாவின் ரசனையை மென்மேலும் உயர்த்துவதற்கு வெற்றிமாறனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

டிஸ்கி:
1.இது விசாரணை படம் வெளிவருவதற்கு சில நாட்கள் முன்னால் எழுதப்பட்ட கட்டுரை.
2.ஆடுகளம் படம் பற்றி கட்டுரையில் இருக்கும் ஒரு சில பாராக்கள் அண்ணன் சித்தார்த் கந்தசாமியின் பேஸ்புக் போஸ்ட். அவரிடம் அப்போதே அனுமதி கேட்டுவிட்டுத்தான் இந்தக்கட்டுரையில் இணைத்திருந்தேன்.

1 comment:

  1. விரிவான ஆவணம்... இப்பத்தான் முடிச்சேன்... சூப்பர்...

    ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *