Mar 8, 2013

எனக்குப் பிடித்த இயக்குனர்கள் - 1



ஹாய் ஃப்ரண்ட்ஸ்,
இன்னிக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச டாப் 10 டைரக்டர்ஸ் பத்தி சொல்லப்போறேன். நல்லா கேட்டுக்கங்க..என்னோட ஃபேவரிட் டாப் 10 தான்.. நாட் பெஸ்ட் டாப் 10.. ஓகே.. லெட்ஸ் கவுண்ட் டவுண்..

10. Ridley Scott

Alien, Blade Runner போன்ற படங்கள் கிறிஸ்டோஃபர் நோலனுக்கு ரொம்ப பிடித்த படங்களாம். அதன் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ரிட்லி ஸ்காட் இன்று 20ம் நூற்றாண்டின் மறக்க முடியாத இயக்குனர்களில் ஒருவராகியிருக்கிறார்.

Gladiator தான் இவரது படங்களில் முதலில் பார்த்த படம். அதன் பிறகு Black Hawk Down எனக்கு ரொம்பப் பிடித்த வார் படங்களுள் ஒன்று. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க ஆக்ஷன் மட்டுமே. Hannibal படம், ஹானிபல் சீரிஸில் 3வது படம். நல்லதொரு த்ரில்லர். அடுத்து Matchstick Men இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் யூகிக்க முடியாததொரு சஸ்பென்ஸ். டிகாப்ரியோ நடிப்பில் Body of Lies  நல்ல ஆக்ஷன் த்ரில்லர். Gladiator ஹீரோ ரஸ்ஸல் க்ரோவுடன் மீண்டும் இணைந்து Robin Hood.  பிறகு கடைசியாக Prometheus. அங்கங்கே லைட்டா ஜெர்க் அடித்தாலும், முழுதாக சோடை போகாத, நல்ல கமர்சியல் படங்களைத் தரக்கூடிய கமர்சியல் இயக்குனர்.

9. Robert Zemeckis

இவரது படங்கள் தான் என தெரியாமலே, சிறு வயதில் பார்த்த படங்கள் Back to the Future சீரிஸ். முதல் பாகம் பார்த்தவுடனேயே மற்ற இரண்டையும் தொடர்ச்சியாகப் பார்த்தேன். பிறகு கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பிறகு (!!??) பார்த்த இவரது படம் Forrest Gump இது படமே இல்லை என்னைப் பொறுத்தவரை. ஃபாரஸ்ட் கம்ப்-னுடைய வாழ்க்கை வரலாறு தான் இது. எனக்கு மிகப்பிடித்த படங்களுள் முதலிடம் என்றைக்குமே இதற்குத்தான். டாம் ஹாங்க்ஸ் எனும் மாபெரும் கலைஞனை எனக்கு அறிமுகப்படுத்திய படம். இப்படத்தில் ஃபாரஸ்ட் கம்ப்-பாகவே வாழ்ந்திருப்பார் என்பதெல்லாம் சூரியன் கிழக்கிலே உதிக்கும் என்பதைப் போல டெம்ப்ளேட் வார்த்தைகள். இந்தப் படத்திலிருந்து இன்னும் ஏதோவொன்றை கற்றுக்கொண்டே இருக்கிறேன். வாழ்வின் தடைகளால் சோர்ந்து போயிருக்கும் அனைவரும் முக்கியமாக யூத் இந்தப் படத்தை.. இல்ல.. ஃபாரஸ்ட் கம்ப்-பின் வாழ்க்கையை ஒரு முறை பார்க்குமாறு வேண்டுகிறேன். எவ்வளவு பெரிய தடையையும் தகர்த்தெரியும் நம்பிக்கையைக் கொடுக்கும். 13 பிரிவுகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு 6 பிரிவுகளில் ( சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த எடிட்டிங்க், சிறந்த திரைக்கதை, சிறந்த விசுவல் எஃபக்ட்ஸ் ) ஆஸ்கார்களை அள்ளியது. எல்லோருக்கும் இந்தப்படத்தைப் பற்றி தெரிந்திருக்கும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

இதற்குப் பிறகு பார்த்த இவரது மற்ற படங்கள் Cast Away டாம் ஹாங்க்ஸ்-டன் சேர்ந்து இன்னுமொரு அற்புதப் படைப்பு. Beowulf மற்றும் Romancing the Stone. இவருக்கும் டாம் ஹாங்க்ஸ்க்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-குக்கும் உள்ள நட்பு ஹாலிவுட் முழுக்க பிரபலம். இவரது பெரும்பாலான படங்களை ஸ்டீவன் தயாரித்திருக்கிறார்.

8. David Fincher

இவரது படங்களில் முதலில் பார்த்த படம் Fight Club. இதற்குப் பிறகு இதைப்போன்ற கதையம்சம் உள்ள படங்கள் பல வந்திருந்தாலும் இது தான் பெஸ்ட். தமிழில் கூட இதன் கதைக்கரு உபயோகிக்கப்பட்ட ஒரு படம் வந்தது. கரு பழனியப்பனின் டைரக்ஷன். பேர் மறந்து விட்டது. பிராட் பிட்-க்கு ஒரு முக்கிய மைல் கல்லாக இப்படம் அமைந்தது. Tyler Durden னை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட பாத்திரப் படைப்பு அது. க்ளைமேக்ஸை பார்க்கும் போது நாம் நிச்சயம் வாய் பிளந்து ஆச்சரியப்படுவது உறுதி.

அன்னியன் படத்தின் வித விதமான கொலைக்காட்சிகளை நாம் Se7en படத்தில் பார்க்கலாம். அவை இந்தப் படத்திலிருந்தே இன்ஸ்பைர் ஆனவை. The Curious Case of Benjamin Button இந்தப் படத்தைப் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. ஒரு கலைஞனால் எவ்வளவு வித்தியாசமாக யோசிக்க முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பிராட்பிட்-டுடன் சேர்ந்து மற்றொரு மாஸ்டர்பீஸ் இது. Facebook-ன் கதையை The Social Network என்ற பெயரில் எடுத்தார். இதன் ம்யூசிக் இன்னும் காதில் ரீங்காரமிடுகின்றன. கடைசியாக The Girl with the Dragon Tattoo.

7. Robert Rodriguez

இவரது படங்களில் நான் முதலில் பார்த்த படம் Spy Kids 3-D: Game Over நான் முதலில் பார்த்த 3-டி படம் கூட. அப்போது எனக்கு இவரைப் பற்றி தெரியாது. அதன் பிறகு மற்ற ஸ்பைகிட்ஸ் படங்களையும் பார்த்து விட்டேன். குழந்தைப் பருவத்தின் மறக்க முடியாத படங்களுள் இவையும் ஒன்று. அதன் பிறகு நான் பார்த்த படம் Planet Terror குவண்ட்டின் டாரண்ட்டினோ மூலம் தான் ரோட்ரிகய்ஸ் பற்றி தெரிய வந்தது. குவண்ட்டின் இயக்கிய டெத் ப்ரூஃப் படத்தைப் பற்றி தெரிந்துகொள்ள முற்படும்போது தான் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று தெரிந்தது. இருவரும் சேர்ந்து 1970 களில் வரும் B – கிரேட் மூவிஸ் போல இரண்டு படங்களை இயக்கி வரிசையாக 2 படங்களையும் தியேட்டரில் ரிலீஸ் செய்தனர். ஒரே டிக்கெட்-க்கு 2 படங்களையும் பார்க்கலாம். அந்தக் காலத்தில் சில பலான பட தியேட்டர்கள் இம்மாதிரி 2 படங்களை தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தன. அதைக் கிண்டலடித்து அதே மாதிரி 1970 களின் பி-கிரேட் மூவிஸ் போலவே இவர்கள் இருவரும் சேர்ந்து இயக்கினர். 2 படங்களுக்கு இடையில், இடைவேளையின் போது போடுவதற்கு இவர்களே சில டம்மி ட்ரைலர்களையும் தயார் செய்தனர். அப்படி தயாரித்த டம்மி ட்ரைலரை வைத்து பின்னாடி உண்மையிலேயே முழுநீள படத்தையும் (Machete) தயாரித்து விட்டார் ரோட்ரிகய்ஸ். இவரின் இந்த நக்கலுக்கும் ஸ்டைலான இயக்கத்துக்கும் நான் அடிமை ஆகி விட்டேன் என்று சொன்னால் அது மிகையே இல்லை.

அதன் பிறகு நான் தேடிப் பிடித்து பார்த்த இவரது இன்னொரு படம் Sin City குவண்ட்டின் இதில் கெஸ்ட் டைரக்டராக சில சீன்களை இயக்கியிருப்பார். இந்தப் படம் காமிக்ஸை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்துக்குப் பிறகு தான் இவரின் தீவிர ஃபேன் ஆகிவிட்டேன். இந்தப் படத்தின் எண்ட்கார்ட் டைட்டில் ம்யூசிக் என்னால் மறக்கவே முடியாது. ஒரு போதை மாதிரி இவரது ம்யூசிக். அந்த ம்யூசிக்கை என்னுடைய ஷார்ட் ஃபிலிமிலும் பயன்படுத்தியிருப்பேன். இவர் ஒரு இயக்குனர் மட்டுமல்ல. ஒளிப்பதிவு, எடிட்டிங்க், இயக்கம், இசை, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் என அனைத்திலும் வல்லவர். ஹாலிவுட்-டின் டிஆர். மற்றொரு படம் From Dusk Till Dawn ஃபுல் என்டர்டைனர். இவரது ஆரம்ப கால படங்களை இப்போது தான் டவுண்லோட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். Once Upon a Time in Mexico இந்தப் படத்தை அடுத்ததாக பார்க்க பிளான் போட்டிருக்கிறேன்.
மேலே படத்தில் இருப்பவர் நம்ம ராபர்ட் தான். 

6. Peter Jackson

இவரையும் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவரது The Lord of the Rings  சீரிஸ் பார்க்காதவர்கள் மிகவும் குறைவு. இவரின் இந்த சீரிஸைப் பற்றி கருந்தேள் ஒரு பெரிய தொடர்பதிவே எழுதி அதை E-book  ஆகவே ரிலீஸ் செய்து விட்டார். மற்றொரு குறிப்பிடக்கூடிய படம் King Kong. இப்போது கடைசியாக The Hobbit: An Unexpected Journey வந்தது. இது லார்ட் ஆஃப் தெ ரிங்க்ஸ் க்கு ப்ரீக்வல். இதிலும் இதைத் தொடர்ந்து இன்னும் 2 பாகங்கள் வரவிருக்கின்றன. இவரின் The Lord of the Rings படத்தைப் பார்த்து விட்டு நான் பெற்ற உணர்ச்சிகளுக்கு அளவே இல்லை. அதை விவரிக்க எனக்கும் தெரியவில்லை. அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அதை மட்டும் என்னால் கண்டிப்பாக கூற முடியும்.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் எழுதுகிறேன் நண்பர்களே.
அந்த அடுத்த பதிவப் படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க

No comments:

Post a Comment

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *