Oct 18, 2013

2 - வேற்று கிரகவாசிகளும் சினிமாவும்


முந்தைய பகுதி
அடுத்த பகுதி

இந்தத் தொடரின் முதல் பகுதியில் பெர்முடா முக்கோணம் பற்றியும், அதில் ஏலியன்களின் இருப்பு பற்றி தியரியையும் பார்த்தோம். இன்று அதைவிட பல மர்மங்கள் நிறைந்த இன்னொரு இடத்தைப் பற்றிப் பேசுவோம். உண்மையில் இந்த இடத்தைப் பற்றி சொல்வதற்காக தான் இந்த பதிவையே ஆரம்பித்தேன். ஆனால் அது தொடராக நீண்டு விட்டது. ஏலியன்களுக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி சொல்றேன்னுட்டு இந்த மாதிரி பெர்முடா முக்கோணம், மர்மப்பகுதி என்று குழப்புகிறானேனு பாக்கறீங்களா ? இல்லை. கண்டிப்பாக தொடர்பு இருக்கிறது. பல ஏலியன் சினிமாப் படங்கள் பார்த்தவர்கள், நான் எந்த இடத்தைப் பற்றி சொல்லப்போகிறேன் என்பதை இந்நேரம் கணித்திருப்பீர்கள். அப்படி என்ன மர்மமான இடம் அது ?

அதைப் பார்ப்பதற்கு முன்னால் ஏலியன்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழ்வதற்கு சாத்தியம் உண்டா என்பதைப் பார்ப்போம். என்னைக் கேட்டால் சத்தியமாக சாத்தியம் இருக்கிறது என்றே கூறுவேன். எப்படி ? எதை வைத்து இப்படி சொல்றே ? என்பவர்களுக்கு ஒரு விடயத்தை சொல்லியே ஆக வேண்டும். இந்த பிரபஞ்சம் தோன்றியது பிக் பாங்க் தியரி எனப்படும் பெருவெடிப்பினால் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆரம்பத்தில் ஒரு சிறு புள்ளியாக இருந்த இந்த பிரபஞ்சம் அந்த பெருவெடிப்பின் காரணமாக வெடித்து சிதறி பெரிதாகிக்கொண்டே போனதன் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது. வேறு பல தியரிகளும் இருந்தாலும் இதுதான் பலராலும் நம்பப்படுகிறது.

அப்படி பெரிதாகிக்கொண்டே சென்ற பிரபஞ்சம் இன்னும் தன் எல்லைகளை விரித்துக்கொண்டே செல்கிறதாம். சற்றும் வேகம் குறையாமல் இன்னும் அதிக வேகத்துடன் விரிவடைவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கானவை. அதில் ஒரு சிறு நட்சத்திரமான சூரியக்குடும்பத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஏலியன் விடயத்தில் சூரியக் குடும்பத்தையே தாண்டி நம்மால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு நட்சத்திரக் கூட்டத்தில், ஏதோ ஒரு கிரகத்தில் மனிதனை விட சக்தி வாய்ந்த இனமோ, அல்லது சக்தி குறைந்த இனமோ வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். 

நம்மை விட பல மடங்கு சக்தி வாய்ந்த இனங்கள் இருந்தாலும் கூட அவையும் இயற்கைக்கு கட்டுப்பட்டே இருக்கும் என்று தோன்றுகிறது. அவற்றாலும் இயற்கையின் மகிமையைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. அப்படி பல கிரகங்களில் பலவிதமான இனங்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம். இது முழுக்க முழுக்க அறிவியலின் மேல் உள்ள நம்பிக்கையால் எனக்கு உருவான கருத்து. இதுவரை ஏலியன்கள் பற்றியும் அவற்றின் இருப்பை உறுதி செய்யும் நோக்கில் வந்த பறக்கும் தட்டுக்களைப் பற்றியும் வரலாற்றில் என்னவெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது ? அரசு இதைக் கண்டுபிடிப்பதற்கென எடுத்த முயற்சிகள் என்னென்ன ? என்பதையெல்லாம் இந்தப்பதிவில் பார்க்கலாம் என்று போன பதிவின் இறுதியில் சொல்லியிருந்தேன் அல்லவா. அதைப்பற்றிய ஒரு உதாரணத்தை இப்போது பார்ப்போம்.

இங்கே நான் சொல்லப்போகும் விடயம் எந்தளவுக்கு உண்மையானது என்று எனக்கு தெரியாது. இணையத்தில் ஏலியன் வருகை சம்பந்தமாக தேடிக்கொண்டிருக்கையில் எனக்கு கிடைத்த சில சுவாரசியமான சம்பவங்களை மட்டுமே இங்கே அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன். பகுத்தறிந்து இதை நம்புவதெல்லாம் உங்கள் வேலை. ஏலியன் வருகை தொடர்பான பல சம்பவங்கள் வரலாற்றில் பதியப்பட்டிருந்தாலும் மிக மிக்கியமான ஒரு சம்பவம் மட்டுமே பல்வேறு விவாதங்களுக்கு ஆளாகி, பல ஹாலிவுட் சினிமாக்களுக்கும் கதைப்பொருளாக அமைந்தது. அப்படி என்ன பொல்லாத சம்பவம் அது ?

ராஸ்வெல் (Roswell) - இந்தப் பெயர் உங்களுக்கு தெரியும் என்றால் நீங்கள் மேற்கொண்டு படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த ஊரின் பெயர் தெரிந்திருந்தால் 1947ல் நடந்த அந்த சம்பவமும் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். பறக்கும் தட்டு பூமியில் வந்து மோதிய நாள். ஒன்றல்ல, இரண்டு பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்து ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு மோதி சிதறிய நாள். வேற்றுகிரகவாசிகளை உயிரோடு பிடித்து ஆராய்ச்சிக்கு வித்திட்ட சம்பவம் அது. அப்படியா என்று வாய்பிளக்க வைக்கிறதா ? அது உண்மைதானா இல்லையா என்று நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள். இப்போ அந்த சம்பவம் எப்படி நடந்தது என்று பார்ப்போம்.

1947, ஜூலை மாதத்தின் முதல் வாரம், நியூ மெக்ஸிகோ அருகே உள்ள ராஸ்வெல் என்ற சிறிய ஊரில் வாழ்ந்து வந்தவர் வில்லியம் ப்ரேசல் (William Brazel). ஒரு நாள் மிகப்பெரிய இடியுடன் மழை பெய்ய, அடுத்த நாள் காலையில் தன்னுடைய செம்மறியாட்டுக் கூட்டத்தை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போதுதான் பறக்கும் தட்டின் வெடித்து சிதறிய பாகங்களைப் பார்க்கிறார். அந்தப் பகுதி முழுவதும் சிதறிக்கிடந்த அந்த பாகங்கள் எதுவுமே அவருக்கு பரீட்சயமானதாக இல்லை. இது ஏதோ புதிதாக இருக்கிறதே என்று சந்தேகத்துடன் தொடர்ந்து சென்றவர் ஒரு பெரிய பள்ளம் ஒன்று நிலத்தில் ஏற்பட்டுள்ளதைப் பார்க்கிறார். இது எல்லாம் ஏதோ விவகாரமாகத் தெரிய உடனே அதில் சில பாகங்களைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு தன் பக்கத்து வீட்டாரிடம் காண்பிக்கிறார்.

ப்ராக்டர்(Proctor) குடும்பம் அதைப் பார்த்துவிட்டு இது ஏலியன் வந்த பறக்கும் தட்டின் பாகங்களாக இருக்கலாம் என்று சந்தேகப்பட, உடனே தன்னுடைய குதிரையை எடுத்துக்கொண்டு கவுண்டி ஷெரீப் ஜார்ஜ் வில்காக்ஸ்(County Sheriff George Wilcox) வீட்டிற்கு சென்று காண்பிக்கிறார். ஏலியன் விவகாரம் என்பதால் ஜார்ஜ் உடனே அங்கிருந்த அரசு ராணுவப்படைக்கு (Roswell Army Air Field) சென்று மேஜர் ஜெஸ்ஸி மார்சலிடம் (Maj. Jesse Marcel) தெரிவிக்கிறார். கொண்டுவந்த பாகங்களைப் பரிசோதித்த மார்சல், உடனே இன்னும் சில ஆபிசர்களை அழைத்துக்கொண்டு சம்பவம் நடந்த பண்ணைக்கு செல்கிறார்.

அன்று இரவு ப்ரேசல் வீட்டில் அனைவரும் தங்கி, அங்கிருந்த பாகங்களைப் பரிசோதித்துப் பார்க்கின்றனர். அடுத்த நாள் காலை (ஜூலை 7ம் தேதி) சம்பவம் நடந்த அந்த இடத்தை நன்றாகப் பார்வை இடுகின்றனர். கிட்டத்தட்ட முக்கால் மைல் தூரத்துக்கு மெட்டல் பொருட்களும், இன்னவென இனம் கண்டறிய முடியாத பாகங்களும் பரவிக்கிடந்தன. இதற்கு முன்னால் இப்படிப்பட்ட பாகங்களைப் பார்த்தேயிராத மார்சல் உடனடியாக தன்னுடைய கார் முழுவதும் சிதறிக்கிடந்த பாகங்களை அள்ளி எடுத்துக்கொண்டு ராணுவ தளத்துக்கு செல்கிறார். போகும் வழியில் தன்னுடைய வீட்டிற்கும் சென்று மனைவி குழந்தைகளிடம் காண்பித்து விட்டு செல்கிறார்.

தான் கண்டுபிடித்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு தனது உயரதிகாரியான வில்லியம் ப்ளான்கார்டிடம் (William H. Blanchard) கொடுத்து, விவரங்களை சொல்கிறார்.

இது நடந்துகொண்டிருந்த அதே நேரம், க்ளென் டென்னிஸ் (Glenn Dennis) என்னும் சவப்பெட்டி சுமப்பவருக்கு ராணுவதள பிணவறையிலிருந்து (RAAF morgue) ஒரு அழைப்பு வருகிறது. அங்கிருந்த ராணுவதள பிணவறை அதிகாரி க்ளென்னை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்துகிறார். இறந்து பல நாட்கள் ஆன உடலைப் பாதுகாப்பது எப்படி என்ற தகவலை மட்டும் கேட்டுப் பெற்றுக்கொண்டு அவரை விரட்டி அடிக்கின்றனர். ஏதோ விசித்திரமாக இருப்பதை உணர்ந்த க்ளென் அங்கே தனக்கு தெரிந்த நர்ஸ் ஒருத்தியிடம் என்ன விடயம் என்று கேட்கிறார். அந்த நர்ஸ் இப்போது எந்த விடயத்தையும் பேச முடியாது என்று கூறி, பிறகு சந்திப்பதாக சொல்லிவிட்டு போய்விடுகிறாள். நர்ஸ் மிகவும் பதட்டமாக இருப்பதை உணர்ந்த க்ளென் அதற்கு மேல எதுவும் சொல்லாமல் கிளம்பி விடுகிறார்.

அடுத்த நாள் நர்ஸ் சொன்ன இடத்திற்கு வந்து அவளை சந்திக்கிறார். சமீபத்தில் நடந்த விபத்து ஒன்றில் அடிபட்டு இறந்துபோன உடம்புகளை ராணுவ தளம் எடுத்து பராமரிப்பதாகக் கூறிய அவள், இதுபோன்ற உடம்புகளை இதற்கு முன்னால் பார்த்ததே இல்லை என்றும் கூறுகிறாள். தான் பார்த்த உடல்களின் உருவத்தை மருந்து எழுதித்தரும் தாளில் (prescription pad) வரைந்து காட்டுகிறாள். அதைப்பார்த்த க்ளென் அதிர்ந்துவிடுகிறார். அது மனித உடலே கிடையாது, ஏலியன்கள் என்று உணர்ந்துகொள்கிறார். இந்த விடயத்தை வெளியே சொல்லாதீர்கள் என்று சொல்லிவிட்டுப் போன அந்த நர்ஸ் அதற்குப் பிறகு அவரை சந்திக்கவே இல்லையாம். சில நாட்களில் இங்கிலாந்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட நர்சின் இருப்பு பற்றி அதற்குப் பிறகு தெரியவே இல்லையாம்.



ஜூலை 8, 1947 காலை 11 மணிக்கு கலோனல் வில்லியம் ப்ளான்கார்டு ஒரு அறிக்கை விடுக்கிறார். ஏலியன்கள் வந்த பறக்கும் தட்டு ஒன்று வெடித்து சிதறியது என்றும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் செய்தியறிக்கை வெளியிடுகிறார். இந்த செய்தி கொஞ்ச நேரத்திற்குள் தீயாய்ப் பரவுகிறது. பல இடங்களிலிருந்தும் ராணுவத் தளத்துக்கு அழைப்பு வருகிறது. தலைமை ராணுவத் தளத்திற்கும் இந்த விடயம் தெரிய வருகிறது.

உடனே ஜெஸ்ஸி மார்சல் பறக்கும் தட்டின் பாகங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு  ராணுவ பிரிகேடியர் ஜெனரல் ரோஜர் ராமியை (Brig. Gen. Roger M. Ramey) சந்திக்கிறார். அந்த பாகங்களை எல்லாம் ரோஜரின் மேசையில் வைத்துவிட்டு இருவரும் சம்பவம் நடந்த இடத்துக்கு வருகின்றனர். அதற்குள் ராணுவம் அந்த இடத்தை முற்றுகையிட்டு யாரையும் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்துகிறது. உடனடியாக சிதறிக்கிடந்த அத்தனை பொருட்களும் அப்புறப்படுத்தப் படுகின்றன. ரோஜரும் மார்சலும் திரும்பி வந்தபோது ரோஜரின் மேஜையில் முன்பு வைக்கப்பட்ட பறக்கும் தட்டின் பாகங்கள் மாயமாய் மறைந்திருந்தன. அதற்குப் பதிலாக ஏதோ ஒரு காற்றடைக்கப்பட்ட வெதர் பலூனின் பாகங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதிர்ச்சியடைந்த மார்சலிடம், இந்த பொருட்களைத்தான் நீ பார்த்தாய் இதைத்தான் நீ பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று ரோஜர் ராமி அறிவுறுத்தினார். நீ பார்த்தது ஏலியன் வந்த பறக்கும் தட்டு அல்ல அது சோதனைக்காக வைக்கப்பட்டிருந்த வெதர் பலூனின் பாகங்கள் என்று கூறினார். அதையே எல்லாரிடமும் சொல்லவேண்டும் என்றும் அழுத்தமாகக் கூறினார்.

அடுத்த நாள் காலை ஜூலை 9, 1947 மறுபடியும் பத்திரிகையாளர் கூட்டம் கூட்டப்பட்டு, தவறுதலாக பறக்கும் தட்டின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று செய்தி வெளியிடப்பட்டுவிட்டது. அது ராணுவத்தின் ஆராய்ச்சியில் இருந்த வெதர் பலூனின் பாகங்களே என்று மறுஅறிக்கை விடப்பட்டது. ப்ரேசலும் மார்சலும் தங்களது வாழ்நாள் முடியும் வரை இந்த செய்தியை வெளியே சொல்லக்கூடாது என்று ராணுவ அதிகாரிகளால் மிரட்டப்பட்டனர்.

ஆனால் வெடித்து சிதறியது பறக்கும் தட்டுதான் என்று மார்சலும், ப்ரேசலும் உறுதியாக நம்பினர். இது ஒருபக்கம் என்றால் சம்பவம் நடந்த அன்று, நியூ மெக்சிகோவில் உள்ள சான் அகஸ்டின் என்ற ஊரில் வசித்த பார்னி பார்னெட் (Barney Barnett) என்பவர் இன்னொரு காட்சியைப் பார்த்தார். அது சாட்சாத் ஏலியன்கள் பயணிக்கும் பறக்கும் தட்டே தான். சற்றே அடிப்பட்டிருந்த அந்த பறக்கும் தட்டில் மொத்தம் 4 ஏலியன்கள் இருப்பதைப் பார்த்தார். அதில் 3 இறந்துவிட்டிருந்தன. மீதியுள்ள ஒரு ஏலியன் மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. அவர் மட்டுமல்லாமல் அந்த வழியாகச் சென்ற வேறு சிலரும் அந்த காட்சியைப் பார்த்து மிரண்டனர்.

அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தபோது ராணுவ அதிகாரிகள் பலர் அந்த இடத்தை சூழ்ந்துவிட்டனராம். அங்கிருந்த பொதுமக்கள் அனைவரையும் உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு பாதுகாப்பாக பறக்கும் தட்டையும், 4 ஏலியன்களையும் எடுத்து சென்றுவிட்டனராம். அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ராணுவத்தால் இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டப்பட்டனராம்.

அப்படி அரசால் எடுத்துச்செல்லப்பட்ட பறக்கும் தட்டும், ஏலியன்களும் எங்கிருக்கின்றன என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு ஏன் ராணுவத்தின் பிற தளங்களால் கூட அதைப் பற்றி தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த பறக்கும் தட்டும், ப்ரேசலும் மார்சலும் கண்டுபிடித்த பறக்கும் தட்டின் பாகங்களும் என்ன ஆனது ? ராணுவம் அவற்றை எங்கு வைத்திருக்கிறது ? எதற்காக அவற்றை மக்களிடமிருந்து மறைத்து ரகசியமாக வைத்திருக்கிறது ? இப்படி பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தன.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அரசு பல மழுப்பல் பதில்களைச் சொல்லி சமாளித்தாலும், பொதுமக்களுக்கு சந்தேகம் தீரவேயில்லை. அவர்கள் ஏலியன் இருப்பதாக முழுவதுமாக நம்பினர். இந்தக்கேள்விகள் தீவிரமடையவும், இந்த சம்பவத்தை நம்புவதற்கும் ஏற்றாற் போல இன்னொரு விடயமும் அவர்களுக்கு சிக்கியது.

இந்த சம்பவத்தில் எடுத்துச் செல்லப்பட்ட பறக்கும் தட்டும், மற்றொரு பறக்கும் தட்டின் பாகங்களும், ஏலியன்களும் அரசால் எங்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று சில வேற்றுகிரக ஆராய்ச்சி ஆர்வலர்கள் தீவிரமாக ஆராயும்போது தான் அவர்களுக்கு ஒரு திடுக்கிடும் செய்தி கிடைத்தது. அரசாங்கம் இவற்றை எல்லாம், பொதுமக்கள் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் வைத்து ஆராய்ச்சி செய்வதாகவும் தெரிய வந்தது. இன்னும் சிலரோ ஏலியன்கள் சிலர் அந்த இடத்தில் தற்போதும் உயிரோடு வாழ்ந்து வருவதாகக் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலேயே யாருக்கும் தெரியாமல் மர்மமான ஒரு இடத்தை, அரசாங்கமே பராமரித்து வருகிறது என்றால் சந்தேகம் வராதா பின்னே..!! அந்த இடம் தான் 1947 சம்பவத்தை நம்புவதற்கும் காரணமாக அமைகிறது.

பதிவின் ஆரம்பத்தில் நான் கூறிய மர்ம இடமும் அதுதான். அப்படி என்ன பொல்லாத இடம் அது ? அதற்குப் பெயர் இல்லையா என்று கேட்டால் இருக்கிறது. ஏரியா 51 என்பதுதான் அதன் பெயர். அந்த இடத்தைப் பற்றியும் அங்கு நடைபெறும் ஆராய்ச்சிகளைப் பற்றியும், அதன் மர்மத்தைப் பற்றியும் அடுத்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம் நண்பர்களே.

பின்குறிப்புகள்:
1. இந்தப்பதிவின் பெரும்பான்மைப் பகுதியை எழுத உதவியது ராஜ்சிவாவின் கட்டுரைகளே.
2. http://www.roswellufomuseum.com/incident.html இந்த லிங்க்கில் சென்றால் நான் இங்கே கூறிய சம்பவத்தை இன்னும் விரிவாகப் படித்து தெரிந்துகொள்ளலாம். நான் சொல்லாமல் விட்ட பல விடயங்கள் இங்கே முழுதாக இருக்கின்றன. கண்டிப்பாகப் படியுங்கள்.
3. இன்னும் ஏலியன் சினிமா பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்று ஆதங்கப்படுபவர்களுக்கு, அடுத்த பதிவிலிருந்து ஆரம்பிக்கப்படும் என்று பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த பகுதி
தொடரும்-

4 comments:

  1. மர்மமாகவே இருக்கு...! இணைப்பில் பார்க்கிறேன்...!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்ணா..!!

      Delete
  2. துளியும் எனக்கு பரிட்சியம் இல்லாத ஒரு கட்டுரையை ஆரம்பித்து நிறுத்தாமல் ஆர்வத்தோடு படிக்க வைத்தது உங்கள் எழுத்து , மிக அருமை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தல் புரிய வைத்தல் எளிது. அப்புறம் பல மர்மங்களை சொல்லிடே போறீங்க எனக்கு எல்லாமே புதுசு போனதடவ சொன்னது போலவே உங்களை தொடர்கிறேன் உடன் சேர்த்து தெரிந்து கொல்கிறேன். வாழ்த்துகள் பிரபல பதிவர் ஆகி கொண்டு இருக்கும் தங்களுக்கு :) :)

    ReplyDelete
    Replies
    1. இதுபோக இன்னும் ஏகப்பட்ட மர்மங்கள் இருக்கு.. இதைப்பத்தி தேடத்தேட ஏகப்பட்ட விஷயங்கள் வந்துகினே இருக்கு..!! அடுத்த பகுதியில் எல்லாத்தையும் சொல்ல ட்ரை பண்றேன்..
      //பிரபல பதிவர் ஆகி கொண்டு இருக்கும்// ஆல்ரெடி பிரபலமான ஒரு பதிவரைப் பாத்து இப்படி சொல்லி கலாய்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..ஹிஹி.. :) :P

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *