Feb 25, 2013

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் Steven Spielberg The Legend - 1



ஆண்டு 2001.

எனக்கு வயது 10. ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்த நான் அதுவரையிலும் எந்தவொரு ஆங்கிலப்படத்தையும் தியேட்டரில் பார்த்தது கிடையாது. ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம். நானும் என் அப்பாவும் மட்டும் கெளம்பி ஷான் (இப்போ விஜய் தியேட்டர்னு பேரு மாத்திட்டாங்க) தியேட்டருக்கு சென்றோம். என் வாழ்க்கையில் நான் முதல் முதலாகப் பார்த்து பரவசமடைந்து, இன்னும் சிலாகித்துக்கொண்டிருக்கும் அந்தப்படம்...



ஜுராசிக் பார்க்-III வருவதற்கு இன்னும் சில நாட்கள் இருந்த நிலையில் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன்னாடி(1997) வந்த ஜுராசிக் பார்க்-2 தமிழில் தியேட்டரில் போட்டிருந்தார்கள். நீண்ட நாட்களுக்கு என் மனதை விட்டு அகலாத ஒரு படமாக அது இருந்தது. இப்படி டைனோசர் மூலமாதான் ஆங்கில சினிமா எனக்கு அறிமுகமாகியது. அன்றைக்கு எனக்கு தெரியாது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் யாருன்னு. இப்படியாக யாரென்றே தெரியாமல் ஆரம்பித்த அந்த உறவு, இன்று அவரது படங்களைத் தேடி தேடி பார்க்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

டிசம்பர் 18, 1946 இல் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே சினிமாவின் மீது அப்படியொரு ஈர்ப்பு. கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு படம் எடுக்க வந்து விட்டார். 16 வயதிலேயே யுனிவெர்சல் ஸ்டுடியோவுடன் ஒப்பந்தம் போட்டு படம் இயக்கிய ஒரே இயக்குனர். நிறைய குறும்படங்களை இயக்கி பலரது கவனத்தைப் பெற்றாலும் அவரது DUEL(1971) என்ற படம்தான் முதன்முதலாக பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப்படம் டைரக்டர் பிரபு சாலமன் மூலம்தான் எனக்கு தெரிய வந்தது. மைனா படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டார். தான் சினிமாவுக்கு வருவதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்ததே இந்தப் படம் தான் என்று கூறியிருந்தார். உடனேயே டவுன்லோட் செய்து பார்த்துவிட்டேன். ஒரு டேங்கர் லாரியில் பயணிக்கும் வில்லனுக்கும் காரில் பயணிக்கும் ஹீரோக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை. இதில் வில்லனின் முகத்தையே காண்பிக்காமல் நமது இதயத்துடிப்பை எகிற வைத்திருப்பார். கேமரா கோணங்கள் நாமே காரோட்டுவது போன்ற ஒரு உணர்வைத்தரும். இப்படி ஆரம்பித்த அவரது திரையுலகப் பயணம் இன்று வரை ஏறுமுகம் தான்.

இதற்கப்புறம் தான் முழுநீளத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. SUGARLAND EXPRESS(1974). உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இதையும் நான் பார்த்திருக்கிறேன். ஒரு இளம் தம்பதிக்கும் போலிசுக்கும் நடக்கும் சேசிங்க் தான் கதை. இளம்பெண் ஒருத்தி தன்னுடைய கணவனை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்து, இருவரும் சேர்ந்து, வலுக்கட்டாயமாக தத்துக் கொடுக்கப்பட்ட தன் குழந்தையைத் தேடி செல்லும் போது ஒரு போலிஸை பணயக்கைதியாக கூட்டிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். போலிஸ் துரத்த, இவர்கள் ஓட கடைசியில் குழந்தையை மீட்டார்களா இல்லையா என்பதை சற்றே உருக்கமாக சொல்லியிருப்பார்.

இதற்கப்புறம் இயக்கிய படம்தான் இவர் புகழை உலகெங்கும் பரப்பியது. இதற்கு முன் அப்படியொரு வெற்றியை எந்தவொரு படமும் பெற்றதில்லை.மூன்று ஆஸ்கர் விருதுகளையும் அள்ளியது. கமர்சியல் சினிமாவுக்கு ஒரு அஸ்திவாரமாய் அந்தப்படம் அமைந்தது. அது..

JAWS(1975)  சுறாவைப்பற்றிய (விசயோட சுறா இல்லீங்க) ஒரு நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம். தொழில்நுட்பத்திலேயும், வசூலிலும் புதிய சாதனை படைத்து, சாதாரண இயக்குனரை சூப்பர்ஸ்டார் இயக்குனராக மாற்றியது. இதற்கப்புறம் CLOSE ENCOUNTERS OF THIRD KIND (1977) என்ற படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் கதை நம் இந்திய இயக்குனராகிய சத்யஜித்ரே-வுடையது என்று ஒரு சர்ச்சை உள்ளது. ஏலியன்களை நல்லவர்களாகக் காட்டி ஒரு புதுமையான முறையில் எடுத்திருப்பார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் சிறந்த இயக்குனர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். ஆனா அதற்குப் பதிலா ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்-க்கு விருது கிடைத்தது.


கமர்சியல்,சயன்ஸ்பிக்ஷன்,உண்மை சம்பவங்கள், நாவல்களை அடிப்படையாகக் கொண்ட கதை,ஆக்க்ஷன்,அட்வெஞ்சர் என அவர் இயக்காத படங்களே இல்லை. அந்த வகையில் அவர் இயக்கிய முதல் ஆக்க்ஷன், அட்வெஞ்சர் திரைப்படம் RAIDERS OF THE LOST ARK 1981. ஹாரிசன் ஃபோர்ட் நடித்து, ஸ்டீவனின் நெருங்கிய நண்பர் ஜார்ஜ் லுகாஸ் கதையெழுதி, ஸ்டீவன் இயக்கினார். அவர்களது நட்பு இன்று வரை தொடர்கிறது. ஹாலிவுட்டில் ரொம்ப பிரபலமான ஒரு நட்பு இவர்களுடையது. ஜார்ஜ் லுகாஸ், ஸ்டார் வார்ஸ் படங்களுக்காகவே தனது வாழ்க்கையை தியாகம் செய்த ஒரு ஆள். இவரைப்பற்றி தனியாகவே ஒரு பதிவு எழுதலாம்.அவ்வளவு விஷயங்கள் இருக்கு.

தான் வசூல் சக்கரவர்த்தி என மீண்டும் ஒரு முறை நிரூபித்த படம் தான் RAIDERSOF THE LOST ARK. இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பு, வசூலில் பெரும் சாதனை என அடுத்த லெவலுக்கு சென்றார். INDIANA JONES மந்திர வார்த்தை ஆனது. இதற்கப்புறம் 3 படம் என மொத்தம் 4 INDIANA JONES படங்கள் இதுவரை வந்துள்ளன. அட்வெஞ்சர் படமென்றால் இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று இளம் இயக்குனர்கள் பார்த்து கற்றுக்கொள்ளும் பாடமாகவே மாறின இந்தப் படங்கள். அட்வெஞ்சர் ரசிகர்கள் தவறவே விடக்கூடாத அந்த மீதி மூன்று படங்கள்,

1982ல் வந்த E.T.THE EXTRA-TERRESTRIAL அதுவரை வந்த அத்தனை படங்களின் வசூல் சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்தது. (படத்தின் பட்ஜெட் $25 மில்லியன். வசூல் $793 மில்லியன்) மனிதனுக்கும் ஏலியனுக்கும் இடையே உருவாகும் அன்பினை உணர்ச்சிப்பூர்வமாகக் காட்டிய காவியம். இன்று வரை உலகப்படங்களில் ஒன்றாக வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்தப்படத்தைப் பற்றி தனியே பதிவே எழுத வேண்டும்.

THE COLOR PURPLE(1985)- 1900ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ஆஃப்ரிக்க, அமெரிக்கப் பெண்கள் அனுபவித்த வறுமை, இனவெறி, பாலியல் கஷ்டங்களைத் தாண்டி வெற்றிபெரும் ஒரு பெண்ணின் கதை. உணர்வுபூர்வமாக பூந்து விளையாடியிருப்பார் மனுஷன். நாவலைக் கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருதைப் பெற்றுத்தந்தது. ஆனால் இயக்குனர் விருது மட்டும் கிடைக்கவில்லை.

EMPIRE OF THE SUN(1987)- இந்தப் படம் என் மனதைப் பாதித்த படங்களுள் ஒன்று. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் மாட்டிக்கொண்ட ஒரு அமெரிக்க சிறுவனின் போராட்டங்களை சொல்லும் இந்தப் படமும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான். சவாலான அந்த சிறுவன் கதாபாத்திரத்தை அனாயசமாக பண்ணிய அந்த சிறுவனின் பெயர் CHRISTIAN BALE. (நம்ம பேட்மேனே தாங்க..அப்ப இருந்தே நடிப்புல பின்ன ஆரம்பிச்சுட்டாரு). இதற்கப்புறம் ALWAYS(1989), HOOK(1991) படங்கள் வந்தன. இவற்றை நான் பார்த்தது இல்லை.

1993ம் ஆண்டு உலகையே ஒரு கலக்கு கலக்கிய, வசூலில் மாபெரும் சாதனை புரிந்த அந்தப் படம் ரிலீஸ் ஆகியது. தமிழ்நாட்டிலும் கூட ரிலீஸ் ஆகி ஆங்கில படங்களையே பார்க்காதவர்களையும் பார்க்க வைத்தது அந்தப் படம். $63 மில்லியன் பட்ஜெட். வசூல் $914 மில்லியன். இந்தப் படத்துக்காக PG-13 என ஒரு புதிய ரேட்டிங்க்-கையே தனது செல்வாக்கால் கொண்டு வந்தார். (இந்த தகவலை ஹாலிவுட் பாலா அவர்களின் வலைத்தளத்திலிருந்து தெரிந்து கொண்டேன்) தொழில்நுட்பத்திலும் ஒரு புதிய மைல்கல். இதற்கப்புறம் டைட்டானிக் தான் அந்த வசூல் சாதனைகளை சமன் செய்தது. அந்தப் படம், JURASSIC PARK (1993) கமர்சியல் படங்களில் இன்று வரையிலும் இது ஒரு மாஸ்டர்பீஸ். 1990களில் பிறந்த குழந்தைகளுக்கு ஃபேவரிட்டாக என்றுமே மனதில் இருக்கும் இந்தப் படம். இந்தப் படத்தைப் பற்றி தெரியாத ஆளே இருக்க முடியாது என்பது உறுதி.

அப்போது, திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அவர் படத்தில் நடித்தவர்களுக்கும், டெக்னீசியன்களுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்தபோதும், அவருக்கு மட்டும் ஆஸ்கர் சிறந்த இயக்குனர் விருது கிடைக்காமலிருந்தது. அந்த கனவு நனவாகிய வருடம் 1993. ஜுராசிக் பார்க் ரிலீஸ் ஆகிய அதே வருடம். முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்ஷன் அட்வெஞ்சரான ஜுராசிக் பார்க்-க்கு அப்படியே எதிராய் உணர்வுகளின் கலவையாய் ஒரு மாபெரும் காவியத்தைப் படைத்தார். அந்தத் திறமை அவருக்கு மட்டுமே உண்டு. இந்தப் படத்தை இயக்குவதற்கு அவர் சம்பளமே வாங்க வில்லை. 

இந்தப் படத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று இந்தியன் படத்தில் வரும். கமலஹாசன் ஹீரோயினியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இந்தப் படத்தின் பேரைச் சொல்லி இந்தப் படம் தியேட்டர்ல போட்டுருக்கான்..3 மணி நேரம்..மொத்தமே 10 பேரு கூட இருக்க மாட்டாய்ங்க..நமக்கு ரொம்ப வசதி..வர்ரியா போலாம் என்பார். அதன் மூலம் தான் இந்தப் படமே எனக்கு தெரிய வந்தது. சரி மொக்கயா இருக்கும் போலனு நினச்சு ரொம்ப நாளா பாக்காமலயே வச்சிருந்தேன். ஆனா அது எவ்ளோ பெரிய தப்புனு படம் பாக்கும் போது தான் உணர்ந்தேன். ஸ்பீல்பெர்க் தன் வாழ்நாளில் எடுத்த படங்களிலேயே மிகச்சிறந்த படம்னா (நான் நினைப்பது) இது தான். பார்த்தவர்களை கலங்க வைக்கும் அந்தப் படம்....

(இந்தப் பதிவு ரொம்ப பெரிதாகிவிட்டது. அதனால் அடுத்த பதிவில் முடித்து விடுகிறேன்.)

இதன் அடுத்த பாகத்தைப் படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க நண்பர்களே.

No comments:

Post a Comment

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *