Mar 28, 2013

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் Steven Spielberg The Legend - 2




இதன் முதல் பாகத்தைப் படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க நண்பர்களே.


கமல் “இந்தியன்” படத்தில் குறிப்பிடுகிற, நான் மொக்கயா இருக்கும்னு நினச்சு பார்த்தபிறகு ஃபீல் பண்ணிய, பார்த்தவர்களைக் கலங்க வைக்கிற அந்தப் படம்




இதுவரை இவர் எடுத்துள்ள படங்களில் சிறந்த படம் எதுவென்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு இந்தப் படத்தைச் சொல்லிவிடலாம். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் ஜெர்மானியப் படைகள் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்க, ஒரு ஜெர்மானிய வியாபாரி 1100 யூதர்களைக் காப்பாற்ற முயன்றது தான் கதை. இதுவரை வெளிவந்த இரண்டாம் உலகப் போர் படங்களிலேயே சிறந்த படமும் இதுதான்.

இந்தப் படம் இயக்கும் வாய்ப்பு முதலில் மார்ட்டின் ஸ்கார்சசியிடம் சென்றது. அவர் இதை ஒரு யூதர் இயக்கினால்தான் நன்றாக இருக்கும் என்று மறுத்துவிட பின்பு ரோமன் பொலான்ஸ்கியிடம் சென்றது. அவர் உண்மையிலேயே சிறுவயதில் ஜெர்மானியப் படைகளிடம் சிக்கி கொடுமையை அனுபவித்து, தப்பித்து வந்தவராதலால் அதை இன்னும் மறக்க முடியவில்லை என்று மறுத்துவிட்டார். (பின்பு இவரே 2002ல் “The Pianist (2002)” படத்தை இயக்கி ஆஸ்காரும் பெற்றார்) பின்பு பில்லி வைல்டர் எனும் பழம்பெரும் இயக்குனரின் (இவரும் இரண்டாம் உலகப் போரால் பல உறவினர்களைப் பலி கொடுத்தவர்தான். திரைக்கதையிலும் உதவியிருக்கிறார்.) வேண்டுகோளுக்கிணங்க ஸ்டீவனே இயக்குனர் பொறுப்பை ஏற்றார்.

தன் இனம் அழிந்த வரலாற்றைப் படமாக எடுப்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும் போதும் மனதுடைந்து போய் அழ ஆரம்பித்துவிடுவாராம். பின்பு வில்லியம் ராபின்ஸன் கால் பண்ணி சமாதானப் படுத்துவாராம். தன் இனம் அழிந்த வரலாற்றை கலர்ப் படமாக எடுக்காமல் கருப்பு வெள்ளையில் எடுத்தார். அதனாலேயே அந்தப் படத்தின் காட்சிகளில், கொடூரம் குறைந்து தாக்கம் அதிகமாகியது.

இந்தப் படத்தைப்பற்றி இணையத்தில் நிறையப் பேர் எழுதித் தீர்த்து விட்டதால் ஒன்றிரண்டு சீன்களைச் சொல்லி முடித்துவிடுகிறேன்.

1.ஒரு கை மட்டுமே உள்ள தாத்தாவை “நீ எதற்கும் லாயக்கில்லை” என்று கூறி சுட்டுக் கொல்லும் காட்சி.

2.ஜெர்மானியர்களிடமிருந்து தப்பிக்க ஒரு யூத சிறுவன் மலக்குழியில் விழுந்து தப்பிக்கும் காட்சி.

3.அமான் கோத் காலையில் எழுந்ததும் சோம்பல் முறித்துக் கொண்டே யூதர்களைச் சுடும் காட்சி.

4.ஷிண்ட்லர் மனம் திருந்தும் காட்சி.

5.அமான் கோத் ஒரு யூதனை சுட துப்பாக்கியை அழுத்த, அது வேலை செய்யாமல் போகும் காட்சி.

6.விஷ வாயு சேம்பருக்குள் அனைவரும் சென்றவுடன் விஷ வாயுவுக்குப் பதில் தண்ணீர் திறந்து விடப்பட அனைவரும் ஹோ-வென அலறும் காட்சி.

7.ஷிண்ட்லரும் இஷ்டக் ஸ்டெதர்னும் சேர்ந்து லிஸ்ட் தயாரிக்கும் காட்சி.

8.ரயிலில் அடைக்கப்பட்டுள்ள யூதர்களுக்கு ஜன்னல் வழியாக தண்ணீர் பாய்ச்சும் காட்சி.

9.ஷிண்ட்லரும் அமான் கோத்தும் சீட்டாடும் காட்சி.

10.”இந்த மோதிரத்தை வைத்து இன்னும் இரண்டு யூதர்களையாவது காப்பாற்றியிருக்கலாம்..சுயநலமாக இருந்து விட்டேனே” 
என்று ஷிண்ட்லர் உருகும் அந்தக் கடைசிக் காட்சி.

கிட்டத்தட்ட ஒரு இனப்படுகொலையின் அத்தனை கொடூரங்களையும், வேதனைகளையும் சொல்லி, பார்த்தவர்கள் அனைவரையும் கண்ணீரோடு திருப்பி அனுப்பியது இப்படம். ஹாலிவுட் வரலாற்றின் சிறந்த படங்களின் வரிசையில் இப்படத்துக்கு என்றுமே ஒரு தனியிடம் உண்டு. 7 ஆஸ்கார்களை அள்ளியதோடு சிறந்த இயக்குனருக்கான விருதையும் ஸ்டீவனுக்குப் பெற்றுத்தந்தது. அத்தனை நாட்கள் ஒரு பிரமாண்ட, கமர்சியல் இயக்குனராகப் பெயர்பெற்று புகழோடு இருந்த ஸ்டீவன், ஒரு நல்ல இயக்குனராகப் பெயர் பெற்றது இந்தப் படத்தின் மூலம் தான். இவரின் காலம் முழுதும் இந்த ஒரு படமே போதும் பெருமை பேசுவதற்கு.

இந்தப் படத்திற்குப் பிறகு ஜுராசிக் பார்க்கின் இரண்டாம் பாகமான The Lost World: Jurassic Park(1997) படத்தை இயக்கினார். மற்றொரு மெகா ஹிட் அது. கூடவே அதே வருடம் Amistad(1997) என்ற படமும் ரிலீஸ் ஆகியது. அமெரிக்காவின் கருப்பின மக்களைப் பற்றிய வரலாற்றுப் படம். இதை இன்னும் நான் பார்க்கவில்லை.

இதற்கப்புறம் வந்த படம் தான் இவரை என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர வைத்தது. போர் பற்றிய படங்களின் மேல் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட காரணம் இந்தப் படம்தான். என்னைக் கேட்டால் குப்ரிக்கின் Full Metal Jacket(1987) படத்தை விட ஸ்டீவனின் Saving Private Ryan(1998) சிறந்த படமென்று கூறுவேன். (குப்ரிக்கின் ரசிகர்கள் பொறுத்தருள வேண்டுகிறேன்.) இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கமும் அளவில்லாதது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள் போரில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அதில் ஒரே நாளில் 3 பேர் கொல்லப்பட்ட செய்தி தாய்க்கு சொல்லப்படுகிறது. மீதி இருக்கும் இன்னொரு பிள்ளையும் போரில் எதிரியின் நாட்டில், தன் சகோதரர்கள் இறந்தது கூட தெரியாமல் போரிட்டுக் கொண்டிருக்கிறான். அந்தக் குடும்பத்தில் அவன் ஒருவனையாவது காப்பாற்ற வேண்டுமென அரசு முடிவு செய்து 8 பேர் கொண்ட குழு ஒன்றை அனுப்புகிறது. டாம் ஹேங்க்ஸ் தலைமையிலான அந்தக் குழு பல போராட்டங்கள், சோதனைகளுக்குப் பிறகு அவனை கண்டுபிடிக்கும்போது எதிரிகள் படை சுற்றி வளைத்து விடுகிறது. எதிரிகளிடமிருந்து தங்கள் உயிரைக் கொடுத்து ‘ப்ரைவேட் ஜேம்ஸ் ரையனை’ (மேட் டாமன்) எப்படி காப்பாற்றினர் என்பதை பதைபதைப்போடு சொல்லியிருப்பார் ஸ்டீவன். இந்தப் படத்தை இவரை விட்டால் வேறு யாரும் இந்த அளவுக்கு எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே..?

படத்தின் ஆரம்பத்திலிருந்து போரின் அழிவுகளையும், அதன் கொடூரத்தையும், அதனால் பாதிக்கப்படும் வீர்ர்களின் மனநிலையையும் தெளிவாக சொல்லியிருப்பார். போரினால் கிடைக்கும் வெற்றியின் களிப்பை விட அதனால் உண்டாகும் சேதங்களே அதிகம் என்பதை ஆணித்தரமாக உணரவைக்கும் மற்றுமொரு படம் இது. டாம் ஹேங்க்ஸ் தான் ஒரு நடிப்புப் புலி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருப்பார். சாகும் தருவாயிலும் நம்பிக்கையை இழக்காமல் போராடும் அவரது குணம் நிச்சயம் நம்மை கவர்ந்திழுக்கும்.

கடைசி 45 நிமிடங்கள், நாம் உண்மையிலேயே ஒரு போர் நடக்கும் இடத்தில் இருக்கிறோமோ என சந்தேகப்பட வைத்து விடுவார். அந்தளவுக்கு காட்சியமைப்புகள் இருக்கும். எதிரிகள் படை நெருங்கி வரும்போது “க்க்ர்ர்ர்ர்ர்” என்று மெலிதான அதிரவைக்கும் பிண்ணனி இசை வரும். அது நம் மனதில் ஏற்படுத்தும் அதிர்வை படம் பார்த்தால் தான் உணர முடியும். படம் முடியும் வரை நம் மனதில் அந்த அதிர்வு இருந்து கொண்டே இருக்கும். போரின் சில காட்சிகள் வன்முறை மிகுந்தது என்பதால் இது ஒரு 18+ படம்தான். ஒளிப்பதிவு, எடிட்டிங்க், இசை, இயக்கம் என சினிமாவின் அத்தனை டிபார்ட்மெண்ட்களும் சரியாக அமைந்த படம் இது என்றால் மிகையே இல்லை. சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை இரண்டாவது முறையாகப் பெற்றார் ஸ்டீவன். படம் மொத்தமாக 5 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது.

இதன்பிறகு A.I. Artificial Intelligence(2001) படத்தை இயக்கினார். இந்தப் படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது ஸ்டேன்லி குப்ரிக். 12 வருடங்கள் இதற்காக திரைக்கதையில் கவனம் செலுத்தியும் கடைசியில் ஸ்டீவனே இயக்கட்டும் என்று கூறி விட்டார். ஸ்டீவனின் உணர்வுகள் தன்னுடன் ஒத்துப் போவதாகக் கூறி, தான் இறப்பதற்கு முன் படத்திற்கு தேவையான நிறைய கருத்துக்களைக் கூறினாராம். ஒரு 8 வயது(??!!) ரோபோ பையன், தான் உண்மையான மனிதனாக மாறினால் தான், தன்னுடைய ரியல் தாயின் அன்பைப் பெற முடியும் என்று எண்ணி, ரியலாக மாறுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியே படம்.

படம் எதிர்காலம், ரோபோ, சயின்ஸ்பிக்ஷன் என பயணித்தாலும் மனித உணர்வுகளையே அது பெரும்பாலும் அலசுகிறது. அன்புக்காக ஏங்கித் தவிக்கும் அந்த சிறுவனின் முடிவைக் கண்டு கண்கலங்காதோர் யாரும் இருக்க முடியாது. படம் முடியும் போது, நம்மிடம் பல கேள்விகளை எழுப்புகிறது. மனிதன், மனித வாழ்வின் அடிப்படையான அன்பை விட்டு விட்டு, பணம், ஆசை, பொறாமை, வன்முறை என்று ரோபோ மாதிரி வாழ்ந்து எங்கே சென்று கொண்டிருக்கிறான், என்ன சாதிக்கப் போகிறான் என்பதை படம் மூலமாகக் கேட்கிறார்கள் குப்ரிக்கும் ஸ்டீவனும். அதனால் தான் படத்தில் கூட, மனித உணர்வில்லாத ரோபோ அன்பைத் தேடி அலைவதாகக் காட்டியிருக்கிறார்.

படத்தில் ரோபோவாக நடித்த சிறுவனின் நடிப்பு, இங்கே தமிழில் பெரிய நடிகர்கள் என்று கூறிக் கொள்ளும் பழந்தின்னு கொட்டை போட்டவர்களை விட அற்புதமாக இருக்கும். ஓவர் ஆக்டிங்க் செய்யும் பல பெரிய தமிழ் நடிகர்கள் இந்தப் பையனின் நடிப்பை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். என்னடா ஓவரா பேசுறானே-ன்னு நினைக்காதிங்க. உண்மையிலேயே அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பான் Haley Joel Osment என்ற அந்த சிறுவன்.

படம் சிறிய படம் தான். ஆனால் நம்மை ரோபோக்கள் வாழும் உலகுக்கு அழைத்துச் சென்று பல வருடங்கள் வாழ்ந்த அனுபவத்தைத் தந்திருப்பார் ஸ்டீவன். படம் கொஞ்சம் (கொஞ்சம் என்ன..நிறையவே) ஸ்லோ தான். 2 ½ மணி நேரப்படம் நமக்கு 5 மணி நேரம் பார்த்த மாதிரி தெரியும். ஆனால் அது நமக்கு எரிச்சலைத் தராது. மாறாக இன்னும் கொஞ்ச நேரம் இருக்கக் கூடாதா என்றே எண்ண வைக்கும். ஸ்லோவா போற படங்கள் பிடிக்காதவர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும்.

இன்னும் அவருடைய 8 படங்கள் பாக்கி இருக்கு. இந்தப் பதிவிலேயே எல்லாப் படங்களைப் பற்றியும் சொல்லிவிட நினைத்தேன். ஆனால் பதிவு நீளமாகி விட்டதால் வேறு வழியில்லை. ஆனால் அடுத்த பதிவில் கண்டிப்பாக முடித்து விடுகிறேன். படிச்சுட்டு தங்களின் பொன்னான கருத்துக்களையும், என் தவறுகளையும் பின்னூட்டமா போட்டுட்டுப் போங்க. 

அடுத்த பதிவில் சந்திப்போம்.

1 comment:

  1. சிறந்த பதிவு..எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்..வாழ்த்துக்கள்

    ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *