Jun 10, 2014

4 - ஹாரர், திகில், பயம் - 70களின் எழுச்சி



முந்தைய பகுதி

இதற்கு முந்தைய பகுதியில் Night of the Living Dead படத்தின் இயக்குனர் ஜார்ஜ் ரொமீரோ பற்றிப் பார்த்தோம். அந்தப்படத்தின் மூலம் சோம்பி படங்களுக்குப் புத்துயிர் கொடுத்த அவரால், அதைவைத்து நாலு காசு பார்க்க முடியாமல் போயிற்று. அது ஏனென்று கேட்டு அதற்குரிய க்ளூவையும் முந்தைய பகுதியிலேயே கொடுத்திருந்தோம். அதைப்பற்றி இன்று விரிவாகக் காண்போம்.

இதுவரை வந்த அத்தனை சோம்பி படங்களுக்கும் மூலமாக அமைந்த படம் Night of the Living Dead தான். அப்படியென்றால் சோம்பி கேரக்டருக்குக் காப்பிரைட் முதன்முதலில் வாங்கியது இந்தப்படமாகத்தானே இருக்கும். அப்படி வாங்கியிருந்தால், அதன்பிறகு வந்த அத்தனை சோம்பி படங்களும் ஜார்ஜ் ரொமீரோவுக்குக் கப்பம் கட்ட வேண்டியிருந்திருக்குமே. அதன்மூலம் ஜாலியாகக் கால் மேல் கால் போட்டு, உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதித்திருப்பார் இல்லையா ? ஆனால் இங்கே தான் விதி விளையாடிவிட்டது.

அவருடைய Night of the Living Dead (1968) படம் காப்பிரைட்டில் பதிவாகாமல் பொதுச்சொத்தாகி (public domain) விட்டது. அதன்மூலம் யார் வேண்டுமானாலும் சோம்பி படங்களை எடுக்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஜார்ஜுக்கு ஒரு கம்மர்கட்டு கூட வாங்கித்தர வேண்டியதில்லை என்றாகிவிட்டது. கூடவே சோம்பி கேரக்டர் மட்டுமின்றி, Night of the Living Dead படமுமே கூடப் பொதுச்சொத்தாகி விட்டதால் யார் வேண்டுமானாலும் அதை ரிலீஸ் செய்யலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இதனாலேயே அல்லு சில்லுகளெல்லாம் கூட டைரக்டர் கட், எடிட்டர் கட், எக்ஸ்டெண்டடு கட், கலர் கட், கேமராமேன் கட், லைட்பாய் கட், இது உங்கள் சொத்து என ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பிரிண்டை ரிலீஸ் செய்தனர். இந்தப்படத்தின் டிவிடி, ப்ளூரே என எந்தப் பிரிண்ட் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் ரிலீஸ் செய்து சம்பாதித்துக்கொள்ளலாம்.

இப்படி ஒரு நிலைமைக்கு ஜார்ஜ் வரக்காரணம் என்ன தெரியுமா ? அந்தப்படத்தின் பெயர் தான். முதலில் அந்தப்படத்திற்கு Night of the Flesh Eaters என்று தான் பெயர் வைத்தனர் என்பதைப் போன பதிவிலேயே பார்த்தோம். எந்த டிஸ்ட்ரிப்யூட்டரும் படத்தை வாங்க முன்வராத நிலையில் Walter Reade Organization என்ற நிறுவனம் மட்டும் படத்தை வெளியிட ஒத்துக்கொண்டு வாங்கியது. ஆனால் Night of the Flesh Eaters என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வந்திருப்பதால் இந்தப்படத்தின் பெயரை Night of the Living Dead என மாற்றினர்.

அப்படி மாற்றும்போது படத்தில் காப்பிரைட் சம்பந்தமான நோட்டிசை இணைக்க மறந்துவிட்டனர். அந்தக்காலத்தில் காப்பிரைட் நோட்டிஸ் படத்தில் இல்லாவிட்டால் உடனடியாக அந்தப்படம் பொதுச்சொத்தாகிவிடும். தற்போது அந்த நிலை இல்லை. Copyright Act of 1976 படி நோட்டிஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் க்ரியேட்டருக்கே படத்தின் உரிமை சென்று சேரும். ஆனால் இந்தப்படம் 1968ல் வந்தபோது அப்படி எந்தவொரு சட்டமும் இல்லாதலால், காப்பிரைட் நோட்டிஸ் இல்லாத காரணத்தைக் கொண்டு உடனடியாகப் பொதுச்சொத்தாகி விட்டது. அதன்மூலம் இந்தப்படத்திலிருந்து எந்த ஒரு வருமானத்தையும் ஜார்ஜால் பெற முடியாமல் போனது.

ஒரு டிஸ்ட்ரிபியூட்டரின் மிகச்சிறிய கவனக்குறைவால், ஜார்ஜுக்கு எத்தனை பெரிய நட்டமாகிவிட்டது பாருங்கள். ஆனால் இதனால் விளைந்த ஒரு நன்மையும் உண்டு. யார் வேண்டுமானாலும் சோம்பி படங்களை எடுக்கலாம் என்ற நிலைமை இருந்ததால் சோம்பி வகைப்படங்கள் மென்மேலும் நன்றாக வளர்ச்சி அடைந்தன. ஒருவேளை ஜார்ஜ் காப்பிரைட் வாங்கி வைத்திருந்தால் அவர் மட்டுமே சோம்பி படங்களை எடுத்திருப்பார். அல்லது அவருக்குக் கப்பம் கட்டும் கம்பெனிகள் மட்டுமே எடுத்திருக்க முடியும். அதனால் நமக்கு வெரைட்டியான சோம்பி படங்கள் கிடைத்திருக்காது. ஜார்ஜ் காப்பிரைட் மூலம் கொஞ்சம் பணத்தை இழந்திருந்தாலும், இந்தப்படத்தின் மூலம் கிடைத்த புகழால் இன்னும் பல சோம்பி படங்களை எடுத்து நிறையவே சம்பாதித்து விட்டார். அதன்மூலம் இழந்த பணம் ஓரளவேனும் ஈடுகட்டப்பட்டிருக்கும்.

சரி நம்முடைய ஹாரர் வரலாற்றிலிருந்து பதிவு தடம் மாற ஆரம்பித்திருப்பதால், இத்தோடு சோம்பி படங்களை முடித்துக்கொண்டு ஹாரர் படங்களின் வரலாற்றில் அடுத்தப் பொற்காலமான 1970-களுக்கு நகர்வோம். நாம் இன்று பார்க்கும் பெரும்பாலான ரீமேக் ஹாரர் படங்களின் ஒரிஜினல்கள் வந்த காலகட்டம் 1970கள் தான். இந்தக்காலக் கட்டங்களில் வந்த ஹாரர் படங்களில் முக்கியமான சில படங்களைப் பற்றி மட்டும் நாம் இங்கே பார்க்கலாம்.

The Exorcist (1973)



இன்றைக்குப் பார்க்கும்போது சற்றே சிரிப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் படம் வெளிவந்த காலத்தில் பயங்கரமான சர்ச்சையைக் கிளப்பி, எல்லோரையும் பீதியில் ஆழ்த்திய படங்களில் இதுவும் ஒன்று. இன்றுவரை, பேய் ஓட்டுவதைப் பற்றிய படங்களில் முதன்மையாகத் திகழ்வது இந்தப்படம் தான். போன மாதம் தான் இந்தப்படத்தை முழுமையாகப் பார்ப்பதற்கு வாய்ப்புக் கிட்டியது. எப்போதுமே பேயை எதிர்பார்த்து, அந்தக் கண நேர பயத்தை, திகிலை எதிர்பார்த்து தான் படம் பார்க்க ஆரம்பிப்போம். பெரும்பாலான பேய்ப்படங்கள் திடீர் திடீரென வரும் பேய்களை நம்பியும், அதற்கேற்றாற் போல வரும் ஒலியமைப்பையும் நம்பியுமே படம் பார்க்கும் ரசிகனை ஏமாற்றுவதற்குத் தயாராகும். ஆனால் இந்தப்படம் அப்படியான படமில்லை. படம் முழுவதுமே கொஞ்சம் கொஞ்சமாகத் திகிலுணர்வு ஊட்டப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு நொடி பயத்தை மட்டும் கொடுத்துவிட்டு அடுத்த நொடியே மறந்துபோகச் செய்யாமல், படம் முழுவதுமே ஒருவித அமானுஷ்யத்தை உணரவைக்கும் படம் இது.

இந்தப்படத்தில் பேய்பிடித்த சிறுமி ரீகனாக நடித்த லிண்டா ப்ளைர் நடிப்பில் மிரட்டியிருப்பார். ஆரம்பத்தில் சாதுவான பெண்ணாக மனம் கவரும் இவர், பிற்பாடு பேய் பிடித்தபிறகு நடந்துகொள்ளும் முறையிலேயே நம்மைப் பதறவைத்துத் திகிலில் ஆழ்த்திவிடுவார். கிரிஸ்துவத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் பல சர்ச்சையான காட்சிகள் இருந்ததால் பலத்த எதிர்ப்பையும் பெற்ற படம். இதுபோகப் படம் எடுக்கப்பட்ட போது, படத்தில் பணியாற்றிய பலர் இறந்தது வேறு சர்ச்சையைக் கிளப்பியது. இத்தனையும் போதாதென்று இது ஒரு உண்மைச்சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்பது வேறு படத்திற்கு இன்னும் விளம்பரத்தைத் தேடித்தந்தது.

படத்தில் பேய்பிடித்த சிறுமி 180 டிகிரியில் தலையைச் சுழற்றும் காட்சியும், சிலந்தி போலத் தலைகீழாகப் படிக்கட்டில் நடந்துவரும் காட்சியும், பாதிரியார்கள் இருவரும் சேர்ந்து பேயோட்டும் காட்சிகளும் நம்மைப் படத்தில் அப்படியே ஒன்றச்செய்து திகிலை உணரவைக்கும் காட்சிகள். பேயோட்டுவது பற்றிய படங்களனைத்துக்கும் உதாரணப்படமாக இருந்த இந்தப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது. வார்னர் பிரதர்சின் படங்களிலேயே (பணவீக்கத்தை ஈடுசெய்தால்) அதிகமாக வசூலான படம் இதுதான். அதுமட்டுமில்லாமல் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு முதன்முறையாகப் பரிந்துரைக்கப்பட்ட ஹாரர் படமும் இதுதான். இதுவரை இந்தப்படத்தை இன்னும் பார்க்காமல் இருந்தால் உடனடியாகப் பாருங்கள்.

அதற்குப் பிறகு இதே பெயரில் Exorcist-2,3 எனச் சில பல சீக்வல்களும் வெளிவந்தன. ஆனால் வழக்கம்போல அவையெல்லாம் உப்புக்குச் சப்பாணியாகவே அமைந்துவிட்டன.

The Texas Chainsaw Massacre (1974)



ஓர் உண்மையைச் சொன்னால், பேய்ப்படங்கள் எனக்கு அந்தளவு பயத்தைத் தருவதில்லை. பேய் என்பது பொய்யென்று மனதில் ஆழப்பதிந்து விட்டதால் ஓரளவுக்குத் தான் பயம் வரும். ஆனால் எனக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தக்கூடிய படங்கள் சைக்கோ கொலைகாரர்களைப் பற்றிய படங்கள் தான். அதிலும் படம் உண்மைச்சம்பங்களைப் பற்றியதாக இருந்தால் அவ்வளவுதான் தொலைந்தேன். முதுகுத்தண்டு சில்லிட, திகிலை ஆற அமர மெதுவாக உணர்ந்து, இரவு தூக்கத்தைத் தொலைக்கும் நிலையெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அப்படித் தூக்கத்தைத் தொலைத்த படங்களில் இதுவும் இன்று.

இந்தப்படத்தைப் பார்க்கும்போது உண்மைக்கதையென்று யாரோ ஒருவன் சொல்லிவிட்டுப்போக, படம் முடியும் வரை திகிலடைந்து கிடந்தேன். பிறகு இது உண்மைக்கதையல்ல என்று தெரிந்தபிறகு தான் நிம்மதியடைந்தேன். அந்தளவு பாதிப்பை இந்தப்படம் ஏற்படுத்தியது. (நான் பார்த்தது 2003ல் வெளிவந்த ரீமேக் தான்) வெறும் 3 லட்சம் டாலர்களில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வசூலித்த மொத்த தொகை 30 மில்லியன் டாலர்களுக்கும் மேல். Slasher வகை ஹாரர் படங்களுக்குப் புத்துயிர் கொடுத்த படம். படத்தில் இருந்த கோரத்தைப் பார்த்துவிட்டு பல நாடுகளில் இந்தப்படத்தைத் தடைசெய்துவிட்டார்கள். மிகுந்த சர்ச்சைக்குள்ளான படங்களுள் இதுவும் ஒன்று.

இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே சைக்கோ கொலைகாரனை வைத்துச் சீக்வல்கள், ப்ரீக்வல்கள், ரீமேக்குகள், காமிக்ஸ், வீடியோ கேம்ஸ் எனப் பலவகைகளிலும் காசு பார்த்துவிட்டார்கள். இந்தப்படத்தின் பாதிப்பிலிருந்து வெளிவந்த மற்ற ஹாரர் படங்கள் ஏராளம். தொடரில் போகும் வழியில் அவற்றையும் பார்த்துக்கொண்டே செல்வோம்.

அடுத்து நாம் பார்க்க இருக்கும் படம்,

1970களின் மிக முக்கியமான ஹாரர் படங்களுள் ஒன்று. மான்ஸ்டர் அல்லது ஜந்துக்களை வைத்து எடுக்கப்பட்ட ஹாரர் படங்களுள் முக்கியமான படம். அமெரிக்கர்களின் வாழ்க்கைமுறையையே ஒருசில மாதங்களுக்கு மாற்றிய அந்தப்படத்தை இயக்கியவர் எனக்கு மிகப்பிடித்த இயக்குனர்களில் ஒருவர்.

அந்தப்படம்,

அடுத்தபகுதி

-தொடரும்

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 1970களின் மிக முக்கியமான ஹாரர் படங்களுள் ஒன்று. மான்ஸ்டர் அல்லது ஜந்துக்களை வைத்து எடுக்கப்பட்ட ஹாரர் படங்களுள் முக்கியமான படம். அமெரிக்கர்களின் வாழ்க்கைமுறையையே ஒருசில மாதங்களுக்கு மாற்றிய அந்தப்படத்தை இயக்கியவர் எனக்கு மிகப்பிடித்த இயக்குனர்களில் ஒருவர்.

    அந்தப்படம்,.....Jaws?

    ReplyDelete
  3. ஆச்சிரியம் நீங்கள் கூறிய இந்த படங்களை பார்த்து இருக்கின்றேன் .... நல்லா எழுதி இருக்கீங்க வழக்கம் போல :)

    ReplyDelete
  4. நல்ல பதிவு..
    70 ஆம் ஆண்டுகள் ஹாரர் வரலாற்றின் பொற்காலம் எனலாம்..அதுவும் என்னோன ஃபேவரைட் THE EXORCIST..15 முறைகளாவது பார்த்திருப்பேன்..THE INNOCENTS மற்றும் THE HAUNTED படங்களையும் மறக்க முடியாது..கண்டிப்பாக நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..நன்றி

    ReplyDelete
  5. நல்ல பதிவு..
    70 ஆம் ஆண்டுகள் ஹாரர் வரலாற்றின் பொற்காலம் எனலாம்..அதுவும் என்னோன ஃபேவரைட் THE EXORCIST..15 முறைகளாவது பார்த்திருப்பேன்..THE INNOCENTS மற்றும் THE HAUNTED படங்களையும் மறக்க முடியாது..கண்டிப்பாக நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..நன்றி

    ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *