Feb 10, 2014

The Hunt (2012) 18+


2006-07 அப்போது நான் 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். Zoology பாடத்திற்கு வாரம் 3 பீரியட்கள் இருக்கும். அதில் 1 பீரியட் தியரியாகவும், 2 பீரியட்கள் ப்ராக்டிகலாகவும் இருக்கும். எங்களுக்கு வந்த ஆசிரியர் ரொம்ப நல்லவர். பாடம் நடத்துவதிலும் வல்லவர். பொதுவாகவே பள்ளிக்கூடத்தில் நான் ரொம்ப குறும்பு பிடித்தவனாக இருந்தேன். ஏதாவது செய்து ஆசிரியர்களுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பது வழக்கம். ஆனால் நான் நன்றாகப் படிக்கக்கூடியவன் (சத்தியமாங்க) என்பதால் என்னைப்பற்றித் தெரிந்த ஆசிரியர்கள் அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்.


ஆனால் 11ம் வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் புதியவர்கள் என்பதால் அவர்களுக்கு என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள சில காலம் பிடித்தது. என்னதான் குறும்பு செய்தாலும் அடிப்படையில் நான் ரொம்ப அப்பாவி (வேற யாரும் வெளில சொல்லமாட்டறாங்க.. அதான் நானே சொல்லிக்கறேன்..ஹிஹி).  அதனால் Zoology ஆசிரியர் ஆரம்பகாலத்தில் என்னைப்பற்றித் தப்பான அபிப்ராயமே வைத்திருந்தார். வகுப்பிலேயே உருப்படாத பையன்னா அது நான்தான் என்பது அவர் எண்ணமாக இருந்தது. பல தடவை என்னை வகுப்பிலிருந்து வெளியே அனுப்பி வாசலில் நிற்க வைத்திருக்கிறார். நானும் ஏதோ பெரிதாகச் சாதித்தது போல, ஜாலியாக சென்று நின்றுகொள்வேன்.

இந்த சமயத்தில் ப்ராஜக்டுக்காக ஒரு Zoology ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அதற்கு பாடம் சம்பந்தமான ஏதாவது ஒரு டாபிக்கை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டும். நான் இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு பல புத்தகங்களைப் படித்தும், இன்டர்னெட் சென்டர் சென்று தகவல்கள் திரட்டியும் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் இதற்கென்றே ஒரு டெம்ப்ளேட் கட்டுரை இருக்கிறதென்பதும், பெரும்பாலான மாணவர்கள் அதையே ஜெராக்ஸ் எடுத்து சமர்ப்பித்துள்ளனர் என்பதும் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. ஆசிரியரும் இதெல்லாம் சகஜம் என்பதுபோல கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரை நான் தகவல்கள் சேகரித்து என் கையாலாயே எழுதி, ஒருவழியாக முடித்துவிட்டேன். அன்றைக்குக் கடைசி நாள். எல்லோரும் Zoology வகுப்பிற்கு சென்றோம். "ப்ராஜக்ட் சப்மிட் பண்ணாதவங்கலாம் பண்ணுங்க. இன்னும் ரெடி பண்ணாதவங்கலாம் வெளில நில்லுங்க" என்றார் ஆசிரியர். சரி சமர்ப்பிக்கலாம் என்று என் பையில் கையை விடுகிறேன். ப்ராஜக்ட் ஃபைலைக் காணவில்லை. என் உயிரே போய்விட்டது. ஒரு மாதம் கஷ்டப்பட்டு எழுதின அனைத்தும் காணாமல் போய்விட்டது என்றால் எப்படி இருக்கும் ?

பயந்துகொண்டே வெளியில் போய் நின்றேன். வழக்கம்போல துணைக்கு என் நண்பர்கள் சிலரும் நின்றனர். ஆசிரியருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. "உங்களுக்கு இவ்ளோ நாள் டைம் கொடுத்தும், ஒரு ப்ராஜக்ட உங்களால ஜெராக்ஸ் எடுத்து வைக்க முடியலைல.. நோகாம நொங்கு திங்கிறதுக்கு உங்களுக்கு வலிக்குது ?" என்றவாறே பிரம்பை எடுத்து விளாசி விட்டார். எனக்கும் வெகுவாக வெகுமதி கிடைத்தது. என்னை அடித்துக்கொண்டிருக்கும் போதே நான் அவரிடம் "சார் ஒரு நிமிசம் நான் சொல்றத கேளுங்க சார்" என்று கெஞ்சினேன். ஆத்திரம் தீர அடித்தவுடன் என்னவெனக் கேட்டார்.

நான் என் நிலைமையைச் சொன்னேன்.
"உண்மையிலேயே நான் கஷ்டப்பட்டு என் கையாலயே எழுதினேன் சார். மறந்துபோய் வீட்டில் வச்சுட்டு வந்துட்டேன் சார். ப்ளீஸ் சார் என்னை நம்புங்க"
என்று கெஞ்சினேன். நான் நன்றாகக் கதை விடுவதாக நினைத்துவிட்டார். அவர் என்னை அடித்தது கூட எனக்கு வலிக்கவில்லை. அவர் என்னை நம்பாமல் போனதுதான் மிகவும் வலித்தது.
"ஏண்டா பொய் சொல்ற.. நாளைக்கு எடுத்துட்டு வர்றேன்னு சொல்லுவ.. இந்தப்பொய்ய மறைக்கறதுக்காக நைட்டு ஃபுல்லா உக்காந்து எழுதிட்டு வருவ.. இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்.. யாரை ஏமாத்தப் பாக்குற.. உன்னை மாதிரி எத்தனை பேரைப் பாத்திருப்பேன்"
 என்று என்னை ஒருதுளி கூட நம்பவில்லை.
"இல்ல சார்.. ஒரு 10 நிமிசம் டைம் கொடுத்தீங்கன்னா நான் இப்பவே வீட்டுக்கு ஓடிப்போய் எடுத்திட்டு வந்துருவேன் சார்.. அப்டி மட்டும் இல்லைனா நீங்க எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க சார்.. ப்ளீஸ் சார் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார்.. நம்புங்க சார்"
என்று சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்துவிட்டது. மறந்துபோய் வீட்டில் வைத்துவிட்டு வந்ததால், அந்தச் சிறிய தவறால், செய்யாத ஒரு குற்றத்திற்குப் பழிசுமத்தியதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உண்மையிலேயே நான் எதுவும் எழுதாமல் வந்து, அன்றைக்கு தண்டனை பெற்றிருந்தால் அடுத்த சில நிமிடங்களிலேயே அதை நான் மறந்திருப்பேன். ஆனால் இன்றுவரை அதை என்னால் மறக்க முடியாததற்குக் காரணம் செய்யாத தப்பிற்குப் பழிகிடைத்தது தான்.

என்னை அந்தமாதிரி அழுது பார்த்திராத அந்த ஆசிரியர் பிறகு சற்று மனமிறங்கி வந்தார். அதன்பிறகு என்னை நம்பின அவர் அடுத்த நாள் கொண்டு வந்து கொடுத்தால் போதுமானது என்று சொல்லிவிட்டார். 12ம் வகுப்பு முடியும்போது நானும் அவரும் நல்ல நண்பர்கள் போல ஆகிவிட்டோம் என்பது வேறு கதை.


இந்தக்கதைக்கும் படத்தின் மையக்கதைக்கும் ஒரு தொடர்பு உண்டு. தெரியாமல் சொல்லப்பட்ட ஒரு சிறிய பொய்யினால், ஒருவரின் வாழ்க்கை எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது. அதனால் செய்யாத ஒரு குற்றத்திற்காகத் தண்டனை பெற்று அதனால் சமூகத்தில் கெட்டபெயர் எடுத்து வாழ்க்கையில் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதே கதை. செய்த குற்றத்திற்காகத் தண்டனை பெறுவது சாதாரண விஷயம். ஆனால் செய்யாத குற்றத்திற்காக பழி சுமத்துவதை மட்டும் யாராலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அதை மையமாக வைத்து திரைக்கதையில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.

லூகாஸ் என்பவன் சிறுகுழந்தைகள் விளையாடும் கிண்டர்கார்டனில் ஆசிரியராகப் பணிபுரிகிறான். மனைவியுடன் டைவர்ஸ் ஆனதால் தனியாளாக வாழ்ந்துவருகிறான். அவர்களது ஒரே பையனும் லூகாசின் மனைவியுடன் வாழ்ந்துவருகிறான். இப்படி குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் லூகாஸ். குழந்தைகள் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல குழந்தைகளுக்கும் லூகாஸ் என்றால் மிகவும் பிடிக்கும். கிண்டர் கார்டனில் குழந்தைகளுடன் சந்தோஷமாக விளையாடுவதே அவனுக்கு வேலை.

இப்படி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அவன் மீது ஒரு பழி விழுகிறது. அந்த கிண்டர்கார்டனில் இருக்கும் ஒரு குழந்தையை பாலியல் ரீதியாகத் தூண்டியதாக குற்றம் சாட்டப்படுகிறான். அதன்பிறகு அவன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது ? அந்தக்குற்றத்தில் இருந்து தப்பித்தானா ? உண்மையில் என்ன நடந்தது ? என்பது தான் மீதிக்கதை.

இப்படி ஒரு ட்ராமா படம் இந்தளவு த்ரில்லாக சென்று நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருக்கிறார்கள். சிறிது நேரமே வரும் கதாபாத்திரமாக இருந்தாலும் மனதில் நிற்கும்படி திரைக்கதையைச் செதுக்கியிருக்கிறார்கள். லூகாஸ், லூகாசின் மகன் மார்க்கஸ், சிறுமி க்ளாரா, க்ளாராவின் தந்தை தியோ, லூகாசின் கேர்ள்ஃப்ரண்ட் நாட்ஜா, கிண்டர்கார்டனின் ஓனர் க்ரெத் என அத்தனை கேரக்டர்களும் படம் முடிந்தும் நம் நினைவிலேயே நிற்கின்றனர்.

ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தின் குணத்தை அறிந்து அதற்கேற்றாற்போல வாழ்ந்துள்ளனர். லூகாஸாக நடித்துள்ள Mads Mikkelsen தனது யதார்த்தமான நடிப்பாலும், அப்பாவியான கதாபாத்திரத்தாலும் மனதைக் கொள்ளை கொள்கிறார். படம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மையும் அந்தக் கதைக்குள் ஈர்த்து, காட்சிக்கேற்ப நம்மையும் உணர்ச்சிவசப்பட வைத்து விட்டார்கள். நாம் பார்த்துக்கொண்டிருப்பது படம் தான் என்பதைத் தாண்டி, நாம் எப்போது உணர்ச்சிவசப்படுகிறோமோ அப்பொழுதே படம் மாபெரும் வெற்றிதான்.

படத்தின் எந்த ஒரு இடத்திலும், அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று டாக்குமெண்டரித்தனமாக செல்லவில்லை. ஆனால் அதற்குரிய வாய்ப்புகள் பல இருந்தும் அதைத்தவிர்த்து ஒரு அற்புதமான சினிமாவாகவே இதைப் படைத்துள்ளார்கள். சொல்லவந்த விஷயத்தை ஆணித்தரமாகச் சொல்வதுடன், பல படிப்பினைகளையும் போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்கிறது படம். அதேபோல பல குறியீடுகளையும் கொண்ட படம். குறியீடுகளில் ஆர்மிருப்பவர்கள் அலசியெடுத்து அதையும் ரசிக்கலாம்.


க்ளாராவாக நடித்துள்ள அந்தக்குட்டிச் சிறுமியின் நடிப்பை என்னவென்று சொல்லுவது ? இத்தனை மெச்சூரான நடிப்பை இப்படி ஒரு குழந்தையிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. அவள்தான் படத்தின் மையப்பிரச்சனைக்குக் காரணம் என்றாலும், அதைப் புரிந்துகொள்ளக்கூடிய வயதும், பக்குவமும் அவளுக்கு இல்லை என்பது தெரிந்து பரிதாபமே ஏற்படுகிறது. படம் பார்க்கும் எவரும் அந்த அழகிய குழந்தைக்கும், அவளின் நடிப்புக்கும் மனதைப் பறிகொடுக்கப்போவது உறுதி.

இன்றைய பெண்கள் மற்றும் ஆண்களில் பலர் தங்களுடைய சிறுவயதில் ஏதோ ஒரு வகையில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் தான் என்று பல ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். குழந்தைகளிடம் ஆபாச விஷயங்களைப் பேசுவது, மறைவிடங்களைக் காண்பிப்பது, ஆபாசப் படங்களைக் காண்பிப்பது, உடம்பைத் தொட்டுப்பேசுவது என்று பலவிதமாக இக்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பெரும்பாலான கேஸ்களில் இதைச் செய்வது நெருங்கிய உறவினர்களாகவோ, குடும்ப நண்பர்களாகவோ, அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களாகவோ தான் இருக்கிறார்கள். இன்னும் சில கேஸ்களில் குழந்தையின் பெற்றோரே குற்றமிழைத்த கதையும் இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வாகவும் இந்தப்படம் இருக்கிறது.

படத்தின் இயக்குனர் Thomas Vinterberg மிகவும் பிரபலமானவர். இவர் இயக்கிய The Celebration (1998) என்ற படம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதுதான் Dogme_95 விதிகளின்படி எடுக்கப்பட்ட முதல் படம். கேமராவைக் கையால் மட்டும் தான் தூக்கவேண்டும், படத்தில் டைரக்டர் பெயர் போடக்கூடாது, லைவ் சவுண்டு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிகளை உள்ளடக்கியது தான் Dogme_95. அதன்படி எடுக்கப்பட்ட The Celebration (1998) படமும் கான்ட்ரவர்சியான டார்க் தீமை அடிப்படையாகக் கொண்டது தான். அதேபோல The Hunt படத்தையும் மிக அருமையாக இயக்கியுள்ளார்.

படம் இந்த வருடத்திற்கான, மிகச்சிறந்த ஃபாரின் படத்திற்கான ஆஸ்கார் நாமினேஷனைப் பெற்றுள்ளது. விருது பெற்றுவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ள படம். கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று. மிஸ் செய்துவிடாதீர்கள்.

"The world is full of evil.. but if we hold on to each other, it goes away"
The Hunt "Jagten" (2012) - The lie is spreading.

பி.கு:
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் கண்டிப்பாக மனதைப் பாதிக்கக்கூடிய ஒன்று. சிம்பிளான க்ளைமாக்ஸ் தான் என்றாலும் சில நாட்களுக்காவது நம்மை மறக்கச்செய்யாமல் நினைவுக்கு வந்து டிஸ்டர்ப் ஆகும். அதைப்பற்றித் தனியாக ஸ்பாய்லர் அலெர்ட்டுடன் இன்னொரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன். விரைவில் அதையும் வெளியிடுகிறேன்.

9 comments:

  1. சூப்பர் பதிவு தல நம் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களோடு தொடர்பு செய்து படத்தின் கருவை அருமையாக விளக்குவது நன்கு கொண்டு சேர்க்கும் பலரிடத்தில், அதுவும் உங்களை பற்றி நீங்கள் கூறியது அதன் வலியை படிக்கும் போது உணர முடிந்த இடத்தில் நீங்கள் தேர்ந்த பதிவர் என்று நிரூபணம் ஆகின்றது, ஒவ்வொரு பதிவிலும் மேன்மை ஆகிக்கொண்டே இருக்கின்றது உங்கள் எழுத்து. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் கூடுகிறது. நிச்சயம் பார்த்துவிடுகிறேன் நண்பா :)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க தல..!! உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

      //நீங்கள் தேர்ந்த பதிவர் என்று நிரூபணம் ஆகின்றது//
      என்ன வச்சி காமெடி கீமடி பண்ணலியே ?? அவ்வ்வ்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நல்லபதிவு... அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..!!

      Delete
  4. ஆண்டி செம 😍 😍 😍

    ReplyDelete
  5. Kovai flim society உதவியால் பார்த்த படம். படம் பார்த்த பிறகு நடந்த கலந்துரையாடல் மிக அருமை....

    ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *